-மேகலா இராமமூர்த்தி

திரு. வாசகன் பாலசூரியனின் வண்ணப்படத்தை இவ்வாரத்தின் போட்டிப்படமாகத் தேர்வுசெய்து தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விருவருக்கும் வல்லமை இதழின் நன்றி!

 boy in a swing

’யாரிடமும் பூசலின்றிப் பிணக்கின்றி ஊசலாடி மகிழ்ந்திருந்தால் வாழ்வே பூக்கோலந்தான்!’ என்று தன் புன்னகையால் புரியவைக்கின்றான் இந்தப் பாலகன். கள்ளமற்ற அவன் காந்தப்புன்னகை உள்ளம் தொடுகின்றது!

அடுத்து, போட்டிக்கு வந்துள்ள கவிதைகளைக் கண்ணுறுவோம் வாருங்கள்!

***

ஊனமான பொம்மையும், உடைந்த ஊஞ்சலுங்கூட வஞ்சமிலா நெஞ்சு படைத்த பிஞ்சுக்குழந்தைகட்குக் குதூகலத்தையும் மகிழ்வையும் தந்துவிடுகின்றன. பெரியவராகும்போதுதான் ’போதும்’ எனும் பெருந்தனம் நம்மிடமிருந்து காணாமல் போய்விடுகின்றது என்று வருந்துகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

வஞ்சித்துவிட்டாலும் வறுமை,
வஞ்சம் கொஞ்சமுமில்லை
பிஞ்சுகள் நெஞ்சினிலே,
அதனால்
பஞ்சமில்லை சிரிப்புக்கு..

ஊனமான பொம்மையிலும்,
உடைந்த ஊஞ்சலிலும்
கிடைத்துவிடுகிறது பேரானந்தம்..

அடைத்துவிடுகிறது இந்த
அமுத நீரூற்று,
போதுமென்ற பெருந்தனம்
போய்விடுகிறது,
பிள்ளை
பெரியவன் ஆனதும்..

மாறுவானா மனிதன்
மழலையரைப் பார்த்தாவது…!

***

கற்பனைச் சிறகில் விரிகின்ற புதுஉலகினை விதைப்பது இச்சிறுவனின் முறுவலோ? என்று வியக்கிறார் திரு. கவிஜி.

இல்லாத தேசத்தில்
இரை தேடும்
பறவையொன்றின்
தொலைந்து போன
ஒரு பாதை
நீண்டு கிடப்பதான
கற்பனையில்
உதிர்க்கின்ற ஒரு இறகு
புது உலகை
விதைக்கத் தொடங்குகிறது,
அது இவன் புன்னகையாகவும்
இருக்கலாம்

***

ஆணி கழற்றிய பலகையில் ஆணிக்கையாய் ஆடுகின்றான் சிறுவன். இந்தப் பலகையின் பழுதை நீக்கி அதனைக் குழந்தைகள் ஆடுதற்கேற்ற ஆசனமாய் மாற்றிடல் வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றார் திருமிகு. வேதா இலங்காதிலகம்.

நாணிட வேண்டிய விடயம்
பேணிப் பாதுகாக்காத விளையாட்டிடம்!
ஆணி களட்டிய பலகையது
ஆணிக்கையாகத் துணிந்து ஆசனமாக்கியது.

பட சட்டத்தின் நடுவில்
அடக்கிக் கட்டி, அமர்ந்து
படபடப்பின்றி ஆடுகிறான் ஊஞ்சல்!
அடடா! ஏழைக்கேற்ற எள்ளுருண்டை!

விழுந்திடாது பிடிக்கும் உறுதியும்
வழுகும் பலகையைக் கால்களால்
அழுத்தும் சாதுரியச் சிரிப்பும்
வாழ்வின் சவாலின் ஏற்பு!

துள்ளும் மகிழ்வில் ஆடுகிறான்
உள்ளதை வள்ளிசாக அனுபவித்துப்
பிள்ளைகள் மகிழ்வாரவர் குணமது!
அள்ளும் வாழ்க்கைப் பாடமது!

பிள்ளைகள் விளையாட்டிடத்தை வளமாக
பிரிதியுடன் பராமரித்தல் அவசியம்
பிற்போக்கு நிலைமை மாறட்டும்!
பிரதான கடமை மேலிடத்திற்கு

(ஆணிக்கை – உறுதி)

***

சிறுவனின் ஊ(ஞ்)சலாட்டம் உணர்த்திடும் வாழ்வியல் உண்மைகளைப் பாங்குறப் பதிவுசெய்திருக்கும் கவிஞர்களுக்குப் பாராட்டுக்கள்!

இனி, இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தெரிவாகியிருப்பது எது, அதன் ஆசிரியர் யார் என்று காண்போம்!

கள்ளமற்ற வெள்ளை உள்ளம் பிள்ளைகளுடையது. அவர்களால் மட்டுமே சிறிய விஷயங்களில்கூடப் பெரிய இன்பத்தைக் காணமுடிகின்றது. தம் மனத்தைத் துயரின்றிப் பேணமுடிகின்றது. இந்தக்கலையை பெரியவர்களும் கற்றால் ’பேராசை’ எனும் வார்த்தையே வையத்தில் வழக்கொழிந்து போகுமே!

”இதோ ஒரு சிறுவன் உடைந்த ஆசனத்தையும் அரியாசனமாய் எண்ணி ஆடுகின்றான்! முகத்தில் மகிழ்ச்சியோ கரைபுரண்டு ஓடுகின்றது. அவன் ஊசலை உந்தி முன்னேறுவது போலவே நாமும் வாழ்வில் உந்துதலோடு முயன்றால் அனைவரையும் முந்தலாம் என்கிறது ஒரு கவிதை; தருகிறது மனத் தெளிவை!

போகி யால்
யாரோ போக்கிய
உடைந்த ஊஞ்சல்
பழைய இரும்பு
எடுப்பவனிடம் சிக்கப்
பழசானாலும்
புதிதாய்த் தெரிந்தது
அவன் மகனுக்கு
அடுத்த நாளே அதை
அரசு கட்டிலாக்கி
அரியணனை ஏறினான்
ஆனந்தமாய் வீசிவீசிஆட
தூசியாய் தெரிந்தது துயரம்
மகனின் உல்லாசம்
பெற்றவனையும்
தொற்றிக்கொண்டது
சுடுபட்ட வாழ்க்கை
விடு பட்டதுபோல்
ஊஞ்சல் ஆட்டம்
உல்லாசமானதுதான்
சிதறிக்கிடக்கும்
சீர் கெட்டவாழ்க்கை
உதறி உந்தி உந்தி ஆடி
உவகை அடைந்தான்
கிடைப்பதைக் கொண்டு
திருப்திப்படும் வாழ்க்கை
புரிந்து சகித்து
பொருந்தியே வாழும்
பாடம் எல்லோருக்கும்
பொருந்தும்தானே!

’கிடைப்பதில் நிறைவாய் வாழ்வதே வாழ்க்கை’ என்று முத்தாய்ப்பாய்த் தன் கவிதையை முடித்திருக்கும்  திருமிகு. சரஸ்வதி ராசேந்திரனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவிக்கின்றேன்.

***

’ஆண்டவன் ஆட்டுவிக்கும் ஊஞ்சலே இம்மானுட வாழ்க்கை; இதனை ஆடும் வகையில் ஆடினால் வாழ்வு பொருள்படும்; இல்லையேல் வாழ்வே இருள்படும்’ எனும் தத்துவ முத்தைத் தந்திருக்கும் கவிதையொன்று சிந்தை கவர்ந்தது.

இருப்பதைக் கொண்டு
மகிழ்வுடன் இங்கு
இருப்பதே வாழ்க்கை…..இதைக்
கருத்துடன் கூறும்
சிறுவனின் சிறுமுகம்
சிந்தனை நோக்கை.

எத்தனை துயரம்
இடரெது வரினும்
இலேசாய்க் கொண்டால்மனமே
அத்தனைத் துயரையும்
அழிந்திடச் செய்யும்
அகத்தில் குழந்தை ஆனால்.

ஊஞ்சல் என்பது
ஆடிடும் வாழ்க்கை
யார்க்கும் எளிதாய் அமைவதுஅதை
ஆடும் விதத்தில்
ஆடி மகிழ்ந்தால்
அற்புதமாகும் வாழ்வது.

சிதைந்த ஊஞ்சல்
அறுந்த சங்கிலி
சிந்தையில் காட்டும் பாடமிதுஇந்தத்
திறந்த வெளியே
பாடம் புகட்டும்
சிறந்த பள்ளிக் கூடமிது.

பூக்கள் மலரும்
குழந்தையின் சிரிப்பில்
பூங்காவாகும் நாட்கள்….கவிப்
பாக்களில் வளரும்
பருவங்கள் தோறும்
வாழ்க்கைப் புத்தகத் தாள்கள்.

எல்லாம் அறிவோம்
எதுவும் அறியோம்
என்பது தானிங்கு வாடிக்கை….இதை
எண்ணி ஒவ்வொரு
மணித்துளிஂவாழ்ந்தால்
வாழ்க்கை வாண வேடிக்கை. 

’ஊஞ்சலில் அமர்ந்து வாழ்வியலை உபதேசிக்கின்றான் இந்தச்சிறுவன். இவன் மனநிலையை நாமும் பெற்றால், வாழ்வே வண்ணம் சிந்தும் வாணவேடிக்கைதான்’ எனும் திரு. இளவல் ஹரிஹரனின் கவிதை பாராட்டுக்குரியதாய்த் தேர்வுபெறுகின்றது.

பங்குபெற்ற அனைவருக்கும் என் நன்றி!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “படக்கவிதைப் போட்டி 46-இன் முடிவுகள்

  1. என் கவிதையை சிறந்ததாக தேர்ந்தெடுத்த வல்லமைக்கு என் இதயம் கனிந்த நன்றி

    சரஸ்வதிராசேந்திரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *