———சீதாம்மா————————————–

பொங்கல் திருநாள்

pongal4-25

ஒருவருக்கொருவர்  வாழ்த்துக்களைத்  தெரிவித்துக் கொள்வோம்

இயற்கையின் சீற்றத்தில் இழந்தது எத்தனை எத்தனை?!

பயிர்களும் தவித்து துவண்டதே

ஆனால் இப்பொழுது எல்லோர் முகங்களிலும் ஓர் மலர்ச்சி

மனத்தில் வாட்டமிருப்பினும் சொந்த பந்தங்களுடன் கூடியிருப்பது மகிழ்ச்சி

இதுதான் வாழ்க்கை

இது பொங்கல் வாழ்த்து மடல்மட்டுமல்ல. ஓர் மூதாட்டியின் மனக்குரலின் ஓசையும் கூட.    ஆம்   … ஓர் புதிய தொடரின் தொடக்கம்

எழுதுவதை நிறுத்தி ஏறத்தாழ இரண்டாண்டுகள்  ஆகப் போகின்றன

ஏன் இப்பொழுது எழுதத் தொடங்கினேன்?

அது ஓர் தீவு. ஏரிகள் சூழ்ந்த ஓர் திடல் அங்கு நான்கு வீடுகள்.

அத்திடலிலும் நான்கு ஏக்கர் பரப்பளவில் ஓர் பெரிய மரவீடு. அதன் பின்னும் ஓர் சின்ன ஏரி. ஓர் நீச்சல்குளமும் உண்டு. எத்தனை பறவைகள். கொக்குகள் வந்து கொஞ்சும். அணில்கள் துள்ளி விளையாடும்.  இவைகள் மட்டுமா? விதம் விதமான பாம்புகள். முதலையும் அவ்வப்பொழுது வரும்.  அந்த வீட்டில் ஒர் அறை. அதற்குள் ஒருத்தி. இயக்கங்களின் இயலாமை. உலகமெல்லாம் சுற்றிப் பறந்த ஓர் பறவை தங்கக் கூண்டில் அடைப்பு.

அப்பப்பா, கொடுமை! முதுமை இவ்வளவு கொடியதா?  வாழ்வியலில் பன்முகம் தெரிந்தவள். அவளே திணறினாள். சுருண்டாள். அழுதாள்  ஒடுங்கிப் போயிருந்த அவளை மனக்குரல் தட்டி எழுப்பியது. அனுபவங்களின் சக்தி அவள் மனச் சிமிழைத் திறந்தது.. சிறிது சிறிதாக அவளிடம் ஓர் புத்துணர்வு.  அவள் துவண்டு போக மாட்டாள்.   மரணத்தையும் வரவேற்கும் வலிமை பிறந்துவிட்டது.

முதுமையில் துணையிருப்பது நினைவுகள்

உண்மை

வாழ்வியல் தத்துவம்

முயற்சிகளில் ஒன்றாக உங்கள்முன் வந்திருக்கின்றேன். என் நினைவுகளைப் பதிகின்றேன். எந்தப் பதிவிலும் ஓர் செய்தி இருக்கும். அதை உங்கள் ஆழ்மனத்தில் வைத்து பூட்டி வையுங்கள். உங்களுக்கும் பின்னால் உதவும்.

அடிக்கடி சந்திப்போம்.

( கண்பார்வை மங்கிவிட்டது. விரல்கள் நடுங்குகின்றன எனவே எழுத்துப் பிழையைப் பொருத்தருள வேணடிக் கொள்கின்றேன்.)

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “நினைவுகளுடன் ஒருத்தி

  1. முதுமையில் தங்களுக்குத் துணையிருக்கும் அந்த நினைவுகளும், அதன் பாடங்களும் வாசகர்களுக்கு வாழ்வு முழுவதும் துணையிருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். பொங்கல் வாழ்த்துக்கள்! 

  2. முதுமை ஒளி

    முதுமை என்பது உடலுக்கு,
    உள்ளத்துக்கு
    இல்லை முதுமை !
    இளையவர்  
    முதியோ ராக விழைகிறார் !
    வயோதிகர் 
    இளையவ ராக ஏங்குவார் !
    உள்ளத்துக்கு
    இல்லை வயதும், 
    அளவு கோலும் !  
    சிறுவர் வயோதிகர் போல்
    சில சமயம்
    குருவாகிப் போதிப்பார் !
    முதியவர்
    தனிமைச் சிறையில்
    சிசுக்கள் போல்
    அழுவர், சிரிப்பர் !
    உள்ளத்துக்கு
    இல்லை உச்சமும்,
    நீச்சமும் ! 

    ++++++++

    சி. ஜெயபாரதன்

  3. அன்புள்ள அம்மா,

    உங்கள் தனித்துவமான உயிரான உள்ளத்திலிருந்து வரும் எழுத்துகளைக் கண்டு மகிழ்ந்தேன்.

    //முயற்சிகளில் ஒன்றாக உங்கள்முன் வந்திருக்கின்றேன். என் நினைவுகளைப் பதிகின்றேன். எந்தப் பதிவிலும் ஓர் செய்தி இருக்கும். அதை உங்கள் ஆழ்மனத்தில் வைத்து பூட்டி வையுங்கள். உங்களுக்கும் பின்னால் உதவும்.
    அடிக்கடி சந்திப்போம்.//

    இனிய புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துகள் அம்மா – சற்றே காலத்தாழ்ச்சியுடன் தெரிவிக்கின்றேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *