-மேகலா இராமமூர்த்தி

மனிதகுலம் தோன்றிய தொடக்ககாலத்தில் மனிதர்கள் தனித்தனியாகவே வாழ்ந்தனர். காலப்போக்கில் விலங்குகளிடமிருந்தும், மழை, காற்று, தீ முதலிய இயற்கைச் சக்திகளின் இடர்களிடமிருந்தும் தம்மைக் காத்துக்கொள்வதற்காகவே அவர்கள் குழுக்களாய் வாழத்தொடங்கினர். எப்போது குழுக்கள் தோன்றினவோ அப்போதே யார் அதனை வழிநடாத்திச் செல்வது? எனும் கேள்வியும் பிறந்து, ”உடல்வன்மையும் மனத்திண்மையும் வாய்ந்தவொருவனே அதற்குத் தகுதியானவன்” என்ற தீர்வையும் அவர்கள் கண்டறிந்து அதனை நடைமுறைப்படுத்தியிருக்கவேண்டும்.

பின்னர், மாந்தகுலவளர்ச்சி காரணமாய், ஒரே இடத்தில் அனைவரும் வாழ்வதற்கு இயலாமல் மக்கள் இடம்பெயர்ந்தும், புலம்பெயர்ந்தும் குடியேறினர். அவ்வாறு அவர்கள் வாழ்ந்த இடங்களிலெல்லாம் தொழிலடிப்படையிலான பிரிவுகள் தோன்றின. அவ்வவ்விடங்களில் அவர்களைத் தம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தலைவர்களும் தோன்றலாயினர். இதுவே நாளடைவில் முடியாட்சிமுறையை முகிழ்க்கச் செய்தது எனலாம்.

தலைவன் ஒருவன்கீழ் ஏனையோர் அடங்கிவாழும் இத்தகைய ஆண்டான் அடிமைமுறைக்கு என்று கால்கோள் நடப்பட்டதோ அன்றே போரும் பூசலும் வேர்கொள்ளத்தொடங்கிவிட்டன. யார் அடுத்துத் தலைவனாகி அனைவரையும் அடக்கியாள்வது? யார் வையமனைத்தையும் தன் கையகப்படுத்துவது? என்ற போட்டியில் ஒற்றுமையும் சகிப்புத்தன்மையும் சகமனிதரையும் தன்னைப்போல் நேசிக்கும் அன்புடைமையும் மனிதர்களிடம் காணாமற்போயின. இன்றோ… பேராசையற்றவரை, உலகத்தோடு ஒட்டவொழுகும் உயர்ந்தோரை, நிபந்தனையின்றி அனைவரிடமும் அன்புபாராட்டும் நல்லுளம் கொண்டோரைத் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டியிருக்கின்றது! 

இத்தகைய சூழலில், அன்பும் அமைதியும் அறவாழ்வும் வாழ்வோரை இனிக் காணவே வாய்ப்பில்லையோ என்று நாம் கவலும் வேளையில்… ”ஏன் காணமுடியாது? இதோ நாங்கள் இருக்கிறோம்!” எனும் குரல்கள் நம் காதுகளில் அமுதத்துளிகளாய் விழுகின்றன.

ஆம்! அறத்தையும் அமைதிநெறியையும் கைக்கொண்டுவாழும் மக்கள் இன்னும் புவிப்பந்தைவிட்டு முற்றாய் அழிந்துபோய்விடவில்லை. அங்குமிங்குமாய்ச் சிலர் இன்னும் இந்நற்பண்புகளுக்கு நீர்பாய்ச்சி வளர்த்துவரவே செய்கின்றனர் என்றறியும்போது நமக்கு ஏற்படும் களிப்பு அளப்பரியது. அம்மேன்மக்கள் யார்? அவர்கள் எந்த நகரத்தில் வசிக்கின்றனர் என்று சிந்திக்கின்றீர்களா?

அவர்கள் யாரும் நகரத்தில், நவநாகரிக உலகில்வாழும் மேட்டுக்குடியினரல்லர்; கல்வியில் கரைகண்ட அறிஞர்களும் அல்லர். பின்னர் யார்?

Orang_Asliஅவர்கள் மலேசிய தீபகற்பத்திலுள்ள (Peninsular Malaysia) காடுகளில் வாழும் பழங்குடியினர்! என்ன வியப்பாயிருக்கின்றதா? அவர்கள் வாழ்க்கைமுறையை அறிந்தால் இன்னும் அதிகமான வியப்புக்கு நாம் ஆளாவோம்!

அப்பழங்குடியினரின் வாழ்க்கைமுறையை அறிந்துவருவோம்! வாருங்கள்!

’ஓரங் அஸ்லி’ (Orang Asli = Native people/Aboriginal people) என்றழைக்கப்படும் மலேசியப் பழங்குடியினரில் 18 வகைகள் (18 types of tribes) இருப்பதாய்த் தெரிகின்றது. இவர்கள் 3 பெரும் பிரிவுகளில் அடக்கப்பட்டுள்ளனர். அத்தகைய பிரிவுகளில் ஒன்று ‘செமாங்’ (Semang). இந்தச் செமாங்கின் ஓர் உட்பிரிவுவே ’பெடக்’ (Batek) என்பது. இப்பிரிவினர் மலேசிய தீபகற்பத்திலுள்ள (Peninsular Malaysia) காடுகள், தாமான் நெகாரா தேசியப்பூங்கா (Taman Negara National Park) மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வசிக்கின்றனர்.

பொருளாதாரம்: காட்டிலிருந்து வேட்டையாடியும் சேகரித்தும் கிடைக்கின்ற காடுபடுபொருள்களை விற்றும், அரிதாக, மிகச்சிறிய அளவில் பயிர்த்தொழில் செய்தும் ஈட்டும் பொருளே இம்மக்களின் வாழ்வாதாரம். பொதுவுடைமையின் தந்தையான ’கார்ல் மார்க்ஸ்’ வந்து போதிக்காமலேயே பொதுவுடைமைத் தத்துவத்தைப் பின்பற்றுவதைத் தம் கடமையாகக் கொண்டிருப்பவர்கள் இம்மக்கள். ஆம்! தனியொருவன், (இவர்கள்) அனைவருக்கும் பொதுவான நிலத்தைத் தனதென்று உரிமைகோரும் ’ஏகபோக’ முதலாளித்துவக் கொள்கையே இவர்களிடம் கிடையாது. அவ்வளவு ஏன்… அந்தச் சிந்தனையே கேலிக்குரியது எனக்கருதுபவர்கள் இம்மக்கள்! காடும், அதிலுள்ள வளங்களும் அனைவர்க்கும் பொதுவானவை என்பதே இவர்கள் சித்தாந்தம்.

Batek_girl_and_brotherநம்பிக்கைகளும் கொள்கைகளும்:  ஒரு மனிதன் இன்னொருவனிடம் எவ்வித நியாயமான காரணமுமின்றிச் சினங்கொள்வது, தம்மினத்தவருக்குக் காய்ச்சல், மூச்சுத்திணறல், உடல் பலவீனம், மனவுளைச்சல் முதலியவற்றைத் தருகின்ற ’கெஓய்’ (ke’oy) எனும் நோயைப் பரப்பும் என்று நம்புகின்றனர் இவர்கள். இந்த நோயால் பீடிக்கப்பட்ட ஒருவனை, இதனைப் பரப்பியதாய் மக்கள் நம்பும் இன்னொருவன், நாட்டுவைத்திய முறைகளைக் கையாண்டும், நோயாளியின் மார்பில் குளிர்ந்தகாற்றை ஊதியும் அவனுடலில் குடியிருக்கும் ’கெஓய்’ நோயை விரட்டவேண்டும்.

இவ்வாறு, முறையற்ற ’வெகுளி’யால் சமூகத்திற்குத் தீங்குசெய்வோர் இச்சமூகமக்களின் ஆதரவை இழப்பர். ’பெடக்’ சமூகமக்களைச் ’சமாதானச் சகவாழ்வை விரும்பும் வேட்டைச்சமூகத்தினர் – 2011’-ஆக (Batek, a peaceful foraging society – 2011) என்று அறிவித்தார் அமெரிக்காவின் நியூ ஹாம்ஷையரிலுள்ள டார்ட்மவுத் கல்லூரியின் மானுடவியல்துறையின் கவுரவப் பேராசிரியரும், (Emeritus Professor, Dept. of Anthropology, Dartmouth College, New Hampshire, U.S.A.), பழங்குடியினர் குறித்த ஆராய்ச்சியில் ஆர்வத்தோடு ஈடுபட்டுவருபவருமான பேரா. கிர்க் எண்டிகாட் (Porf. Kirk Endicott)  என்பது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது.

போரைத் தவிர்த்தலும், தீர்த்தலும்: இம்மக்களிடையே கருத்துவேற்றுமைகள் ஏற்படுவது மிகக்குறைவு. அவ்வாறு ஏற்படுமாயின், பொதுமன்றில் தங்கள் பிரச்சனை குறித்து விவாதித்துத் தம் கருத்துக்கு ஆதரவு திரட்டுவது இவ்வினத்தாரின் வழக்கம். அம்முறை வெற்றிதராதாயின், கருத்துவேற்றுமை ஏற்பட்ட குழுக்களில் ஒன்று, மற்றொரு குழுவோடு தமக்கு விளைந்த கசப்புணர்வும் அதிருப்தியும் மாறும்வரை – மறையும்வரை, சிறிதுகாலம் தம் சமூகத்தைவிட்டு வெளியேறிவிடுமாம். சிறிதுகாலம் சென்றபின்பே மீண்டும்வந்து தம் மக்களோடு இணையுமாம். ’காலமெனும் மாமருந்து… கோபத்தையும் விரோதத்தையும் ஆற்றும் அருமருந்து’ என்று கண்டறிந்து செயற்படும் இம்மக்களின் உளவியலறிவு பிரமிப்பை ஏற்படுத்துகின்றது.

சமூகத்தில் ஆண், பெண் நிலை: இக்குடியினரில், ஆடவரே பொதுவாக வேட்டைத்தொழிலைச் செய்வோராகவும், பெண்டிர் காய்கனிகளைச் சேகரிப்போராகவும் விளங்குகின்றனர். எனினும், இருவரின் உழைப்பும் சமமாகவே மதிக்கப்படுகின்றது. அரிதாக, வேட்டையில் பெண்டிரும், காய்கனி சேகரிப்பில் ஆடவரும் ஈடுபடுவதுண்டு. ’இந்தத் தொழிலை இவர்தான் செய்யவேண்டும்’ எனும் கடுமையான வரையறையோ, ஆடவரையும் பெண்டிரையும் பால் அடிப்படையில் பிரித்துப்பார்க்கும் நடைமுறையோ இவர்களிடம் இல்லை.

திருமணங்களும் ஆண், பெண் இருவரின் அன்பின் அடிப்படையிலும் அவர்களிடம் காணப்படும் ஒத்தகுணங்களின் (பொருத்தத்தின்) அடிப்படையிலுமே அமைகின்றன. சமூகத்தின் அடக்குமுறையும், ஆதிக்கமும் காதலுக்குக் குறுக்கேநின்று குந்தகம் செய்வதில்லை. ஒத்த தலைவன் தலைவியருக்கிடையே அமையவேண்டிய ’பத்துவகைப் பொருத்தங்கள்’ குறித்து ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியம் சொல்வதை இங்கே நாம் பொருத்திப்பார்க்கலாம்.

”பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டோடு
உருவு
நிறுத்த காம வாயில்
நிறையே
அருளே உணர்வொடு திருஎன

முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே” (தொல்: பொருள்: 488)

தொல்காப்பியம் அறியாத்தொல்குடியினரான இவர்கள் அந்நெறி நிற்பது வியப்பே!

இத்தகைய உளமொத்த காதல்வாழ்விலும், அத்திபூத்தாற்போல், கணவன் மனைவியரிடையேயான உறவில் விரிசல்கண்டுவிடுமானால் அவர்கள் இருவரும் மணவிலக்குப் பெறுவதையும் இச்சமூகம் அனுமதிக்கின்றது. அவ்வாறு மணவிலக்கு நிகழ்ந்துவிடும் சூழலில், மணவிலக்குப்பெற்ற பெண் தன் சுற்றத்தையும் நட்பையும் சார்ந்துவாழ வேண்டியவளாகின்றாள்.

குழந்தை வளர்ப்பு: ’பெடக்’ சமூகத்தைச்சேர்ந்த பெற்றோர் தம் Batekman1குழந்தைகளைக் கொண்டாடுவதிலும், கொஞ்சுவதிலும், அவர்களோடு நேரம் செலவழிப்பதிலும் மிக்க ஆர்வம் உடையவர்கள். இதில், ஆண்குழந்தை பெண்குழந்தை எனும் பேதமில்லை அவர்களிடம்! பெற்றோர், குழந்தைகளை அடிப்பதும் தாக்குவதும் அரிதினும் அரிது. ஏனெனில் தாக்குதல், கொல்லுதல் எனும் பொருள்களில் கையாளப்படும் ’சேகல்’ (sakel) எனும் சொல், இச்சமூகத்தினரால் கடுமையாக வெறுத்து ஒதுக்கப்பட்ட சொல்லாகும். தாக்குதல் எனும் சொல்லையே வெறுப்பவர்கள் அதனைச் செயலில்காட்ட முனைவரா? குழந்தைகள்விளையாட்டில்கூட முரட்டுத்தனமோ, வன்முறையோ ஒருவரோடு ஒருவர் போட்டியிடுவதோ கூடாது என்றெண்ணுபவர்கள் இவர்கள். இவ்வினமக்களைப் பெற்றோராகப் பெறும் பிள்ளைகள் பேறுபெற்றோரே என்று எண்ணத்தோன்றுகின்றது!

சமுதாய நடைமுறைகள்: இச்சமூகத்தினரில், ஒத்தசெயல்களில் ஆர்வம்கொண்ட பலர் ஒன்றுகூடி அச்செயல்களில் ஈடுபடுதல் வழக்கம். அவற்றிலொன்று மீன்பிடித்தல். எப்போதும் சுறுசுறுப்புடன் திகழும் இம்மக்கள் சோம்பித்திரிவதை விரும்புவதில்லை. ஏனெனில், ஒருவருடைய சோம்பல் இன்னொருவருக்கு வேலைப்பளுவைக்கூட்டும் என நினைக்கின்றனர்.

சுயமதிப்பீடு: ’கானகமே தம் உறைவிடம்’ என்றெண்ணும் இவ்வினத்தார், தம்மைக் ’கானவராய்’ அடையாளப்படுத்துவதையே விரும்புகின்றனர். காட்டில் எந்த இடத்தில் தங்க விழைகின்றனரோ அங்கே குடிசைபோட்டுத் தங்குவதைத் தம் வழக்கமாய்க்கொண்டிருக்கின்றனர். கானகவாசம் குளிர்ச்சியையும், நல்ல உடல்நலத்தையும் தமக்குத்தருவதாய்க் கருதுகின்ற இம்மக்கள், மரங்களடர்ந்த காட்டைவிட்டு, வெப்பம்மிகுந்த திறந்தவெளிகளில் தங்குவதை விரும்புவதில்லை.

பகிர்ந்துண்ணல்: ’பெடக்’ சமூகத்தைப் பொறுத்தவரை, தாங்கள் வேட்டையில் சேகரித்த உணவுப்பொருள்கள் அனைத்தையும் பகுத்துண்டுவாழும் பண்புகொண்டோராய்த் திகழ்கின்றனர். தம் இல்லங்களில் சமைக்கப்படும் உணவைத் தட்டிலிட்டு அதனைத் தம் பிள்ளைகளின் தளிர்க்கரங்களில் தந்து, மற்றவருக்கும் பகிர்ந்தளித்து உண்ணுதல் என்பது இவர்களின் வாழ்க்கைமுறையாய் இருக்கின்றது. பகுத்துண்ணலின் மகத்துவத்தைக் குழந்தைகளும் அறியவேண்டும் என்பதற்கான ஏற்பாடே இது. உணவு மட்டுமல்லாது, இவர்களுக்குப் பரிசிலாய்க் கிடைக்கும் பொருள்களையும்,  வணிகத்தின் வாயிலாய்ப் பெறும்/வாங்கும் பொருள்களையும் இவர்கள் பிறரோடு பகிர்ந்துகொள்ளத் தயங்குவதில்லை.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை
 (322) என்ற வள்ளுவத்தை இவர்கள் எங்குக் கற்றனர்?

போருக்கும் வன்முறைக்கும் எதிரான அணுகுமுறை: இத்தொல்குடி மக்கள் வன்முறைக்கு முற்றிலும் எதிரானவர்கள். யாரேனும் பகைவர் தம்மைத் தாக்கவந்தால், எதிர்த்தாக்குதல் தொடுக்காமல் அவர்களிடமிருந்து தப்பியோடிவிடுவதையே தம் வழக்கமாய் வைத்திருக்கின்றனர். இது பயத்தினால் அன்று! பகைவனுக்கும் அருளும் இவர்தம் நன்னெஞ்சில் விளைந்த பாசத்தினால்!

1988-ஆம் ஆண்டு, பெடக் மக்களை அவர்கள் வசிக்கும் காட்டுப்பகுதிக்கே சென்று சந்தித்த பேராசிரியர் எண்டிகாட், இவ்வினத்தைச்சார்ந்த மனிதன் ஒருவனிடம், “உம்முடைய முன்னோர் ஏன் தம்மைத் தாக்கியோரைத் துப்பாக்கியால் சுடவில்லை?” (“Why didn’t his ancestors shoot the attackers?”) என்று வினவியுள்ளார். அதற்கு அம்மனிதன் சற்று அதிர்ச்சியோடு, ”ஏனெனில், அவ்வாறு தாக்குவது அவர்களைக் கொன்றுவிடுமே!” (“Because it would kill them”) என்று பதிலிறுத்திருக்கின்றான். இப்பதில் அந்தப் பேராசிரியரை மட்டுமன்று…நம்மையும் திகைக்கவைக்கின்றது!

”வன்முறை, மற்றவருக்குத் துன்பமிழைத்தல், பழிவாங்குதல் போன்ற இழிகுணங்களை முற்றாய் வெறுத்தொதுக்கிய மக்கள் இவர்கள்!” என்று இவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கியிருக்கும் பேராசிரியர் எண்டிகாட், அண்டையில் வாழும் மலேசிய மக்களால் தமக்கு ஏற்படும் தொந்தரவுகளைத்தவிர்க்க இம்மக்கள் அவ்விடங்களைவிட்டு அகன்றுசெல்கின்றனரேயொழிய அவர்களை எதிர்த்துத் தாக்குதலோ, போரோ புரிவதில்லை என்று பதிவுசெய்திருக்கின்றார் (It was recorded in 1988).

வான்புகழ் வள்ளுவரின் தெய்வக்குறள் போதிக்கும் இன்னாசெய்யாமை, சான்றாண்மை, ஈகை, ஒப்புரவு, அன்புடைமை, விருந்தோம்பல் உள்ளிட்ட அனைத்து அறப்பண்புகளையும் தம் அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்கின்றனர் மலேசியக் கானகவாசிகளான பெடக் மக்கள்.

நகரங்களில் வாழ்ந்தால்தான் நாகரிகம் வளரும்; பண்பாடு மிளிரும் என்ற எண்ணத்தில் நகரங்களை நாடிச்சென்று வாழ்ந்துவரும் நாகரிக மனிதர்களிடத்தும், அனைத்து அறநூல்களையும் எழுத்தெண்ணிப் படித்துவிட்டோம் என்று தருக்கோடும் செருக்கோடும் செப்பித் திரியும் மெத்தப்படித்த மேதைகளிடத்தும் காணக்கிடைக்கா அரும்பண்புகள், ’கானவர்’ என்று தம்மைப் பெருமிதத்தோடு புகலும் படிப்பறியா, உலகின் பாடறியா இத்தொல்குடியினரிடம் நிறைந்து கிடக்கின்றது!

காட்டில் வாழ்ந்தாலும், கல்வியில் (நகர்வாழ் மக்களினும்) தாழ்ந்தாலும், நயத்தகு நாகரிகத்திலும், வியத்தகு (மாந்தப்) பண்புகளிலும் நாடுவாழ் நல்லறிஞரினும், காடுவாழ் இத்தொல்குடியினர் பன்மடங்கு உயர்ந்துநிற்கின்றனர். இத்தகையோராலேயே மானுடம் வெல்கின்றது!

*** 

கட்டுரைக்கு உதவியவை:

https://en.wikipedia.org/wiki/Orang_Asli
https://en.wikipedia.org/wiki/Batek_people
https://cas.uab.edu/peacefulsocieties/societies/batek/

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *