ரோஹித் வெமுலா கனவுக் குமிழிகளைத் தானே உடைத்துக் கொள்ளத் துரத்தப்பட்டவனின் மரணம் எழுப்பும் கேள்விகள்

0

எஸ் வி வேணுகோபாலன்

unnamed

புன்னகை சிந்தும் இந்த முகத்தைப் பாருங்கள். ஒளி வீசும் அந்தக் கண்களில் எத்தனை கம்பீரமும், கனவுகளும், கற்பனைகளும் பளிச்சிடுகின்றன. இந்தப் புகைப்படத்தின் எந்தச் சிறிய சதுரத்திற்குள்ளாவது அவநம்பிக்கையின் விதைகள் தெரிகின்றனவா…”எப்போதுமே ஓர் எழுத்தாளராக விரும்பினேன். கார்ல் சாகன் போன்ற ஓர் அறிவியல் எழுத்தாளராக விரும்பினேன். கடைசியில் இந்தக் கடிதத்தை மட்டுமே என்னால் எழுத முடிந்தது” என்று கண்ணீரைப் பெருக்கும் ஒரு மரண சாசனத்தை எழுதி வைத்துவிட்டுத் தூக்குக் கயிற்றை முத்தமிடவா இத்தனை பாடு எடுத்தாய் எங்கள் ரோஹித் வெமுலா ?

ஹைதராபாத் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சி மாணவரான ரோஹித் வெமுலாவை இத்தனை மன அழுத்தத்திற்கும், வலி மிகுந்த வேதனைக்கும் கொண்டு நிறுத்தியது எது?

ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, பெயர் நீக்கம் செய்து கல்லூரி வளாகத்துள் அனுமதி மறுக்கப்பட்ட ஐந்து தலித் மாணவர்களுள் ஒருவர் ரோஹித். அம்பேத்கர் மாணவர் இயக்கத்தில் செயல்பட்டதற்காக இந்தப் பரிசு அவர்களுக்கு! பின்னே, என்ன ஆணவம், ஓர் உன்னதமான பல்கலையில் அம்பேத்கர் பெயரில் ஓர் அமைப்பை இயக்குவதா? அதுவும் மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் பா ஜ க வீற்றிருக்கும்போது, சங் பரிவாரத்தின் அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் சங்கத்தின் விருப்பத்திற்கு மாறான ஒரு மாணவர் சங்கத்தை எப்படி சகிக்க முடியும்! ஜனநாயகம், சமத்துவம், சமூக நீதி இதெல்லாம் என்ன வெட்டிப் பேச்சு, பயல்களை அவரவர் இடத்தில் இருக்குமாறு தலையில் தட்டி வைத்தால்தான் எல்லாம் சரியாக இருக்கும், கொஞ்சம் விட்டால் அவ்வளவுதான், இதுதானே வலதுசாரி சாதிய வெறித்தனத்தின் வெறுப்பு அரசியல்? அந்த இழிவுபடுத்தலின் அராஜக பலிபீடத்தில் துடிதுடிக்கத் தன்னையே அழித்துக் கொண்டுவிட்ட மற்றுமோர் உயிர்தான் ரோஹித் வெமுலா.

ஒரு மாணவர் இயக்கத்தை “பயங்கரவாத சக்திகள்” என்றும், “தேச விரோத அமைப்பு” என்றும் மத்திய கல்வி அமைச்சர் ஸ்மிருதி இரானிக்குக் கடிதம் எழுதி, குறிப்பிட்ட ஐந்து மாணவர்களை பல்கலையிலிருந்து ஒழித்துக்கட்டக் கேட்டுவிட்டு எனக்கு ஒன்றுமே தெரியாது என்கிறார் மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா. சுதந்திர தேசத்தில் புகழ்பெற்ற ஒரு பல்கலைக் கழகம், இரண்டு அமைப்புகளுக்கிடையே மூண்ட மோதலின் பின்னணியைக் குறித்து எந்தக் கவலையும் இன்றி, சாதிய ஒடுக்குமுறை பார்வையோடு ஒழுங்கு நடவடிக்கைக்குத் தீர்ப்பும் எழுதி இருக்கிறது. நடவடிக்கை எடுக்கப்பட்ட மாணவர்கள் விடுதிக்குள், பல்கலைக் கழகத்தின் பிரதான கட்டிடத்திற்குள், பொதுவான பகுதிகளுக்குள் எங்கும் நுழையாமல் ஆராய்ச்சியை மட்டும் தொடரலாமாம், என்ன வெட்கக் கேடான சட்டதிட்டம் என்று கொதிக்கின்றனர் ஜனநாயக சிந்தனையாளர்கள். இந்த அநியாய, ஒருதலைப் பட்சமான நடவடிக்கைக்கு எதிராக 15 நாட்களாகத் தொடர் போராட்டத்தில் இறங்கி இருந்தது அம்பேத்கர் மாணவர் சங்கம். திரும்பியும் பாராத நிர்வாகம், காதில் போட்டுக் கொள்ளாத துணைவேந்தர், எதிரான நடவடிக்கை எடுக்கத் தூண்டிய அரசியல் இந்தச் சதுரங்க வெறுப்பு ஆட்டத்தின் ஒரு கட்டத்தில் தமது வாழ்வை முடித்துக் கொண்டுவிட்டார் ரோஹித்.

எங்களுக்கு எதுவும் தெரியாது என்று சம்பந்தப் பட்டவர்கள் யாருமே தப்பிக்க முடியாது. பல மாதங்களாக ரோஹித் புகார் எழுப்பி வந்திருக்கிறார். பேசாமல் தலித் மாணவர்களுக்கு ‘அட்மிஷன்’ நேரத்திலே உயிர்க்கொல்லி மருந்தும் சேர்த்து வழங்கி விடுங்கள், தூக்கு போட்டுக்கொள்ள வாட்டமான ஒரு கயிற்றையும் அவர்களுக்கு கொடுங்கள் என்று ஒரு கடிதம் கூட எழுதி இருந்தார்.

குடும்பத்தை உதறிவிட்டுப் போய்விட்ட தந்தை, கூலி வேலை செய்யும் அன்னை, தனக்கு கிடைக்கவேண்டிய உதவித் தொகை ஏழு மாதங்களாக நிறுத்தப் பட்டிருப்பதற்கு நீதி கேட்கவில்லை ரோஹித் – யாரையும் குற்றம் சொல்லாத அவரது இறுதிக் கடிதத்தில், ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை நிலுவையை எப்படியாவது வாங்கி என் தாயிடம் சேர்த்துவிடுங்கள் என்று சொல்லப்பட்டிருப்பது எத்தனை இரத்தம் துளிர்க்கும் சொற்கள்.

பல கோடிப் பேரின் அறிவியல் சிந்தனைகளைத் தூண்டிவிடும் புத்தகங்கள், ஆய்வுக் கட்டுரைகள், எழுத்துக்கள் என்று புகழ் வாழ்க்கை படைத்த அமெரிக்க அறிவியலாளர் கார்ல் சாகனைத் தனக்கு முன் மாதிரியாகக் கொண்டிருந்த ரோஹித் எப்படி தனது கனவுக் குமிழிகளைத் தாமே தட்டிச் சிதறடித்தார் என்பது இதயங்களை நொறுக்கிப் போடும் கேள்வி. அந்த அளவுக்கு அவரைப் புரட்டிப் போடும் வன்மமும், ஆதிக்க உணர்வும் ஒரு தாழ்த்தப்பட்ட மாணவராக உளவியலால் மிதிபட்டால்தான் புரிந்து கொள்ள முடியும் என்பதை பா ஜ க தலைவர்களில் ஒருவரான முன்னாள் மத்திய அமைச்சர் சஞ்சய் பஸ்வான் டுவீட்டரில் பிரதிபலித்திருக்கிறார். ஒரு தாழ்த்தப்பட்டவன் என்கிறவகையில் இழிவுக்கு எதிரான போராட்டம் என்ன என்பதை நான் நன்கறிவேன் என்பது அவரது பதில்.

ரோஹித் வேமுலா என்ன மாதிரி இழிவுகளை சந்தித்திருப்பார் என்பதற்கு சான்றுகளை வெளியே தேட வேண்டியதில்லை. இந்தச் செய்திக்கு ஆன் லைனில் பதில் எழுதும் உயர்சாதி ஆதிக்க மன நிலை எப்படி வெறுப்பை உமிழ்கிறது என்பதைப் படித்தாலே போதும். என்ன ஏதென்று தெரியாமலேயே மறுப்பது, படிக்க வந்தாயா போராட வந்தாயா என்று கேட்பது (வித்யார்த்தி பரிஷத்திற்கு இது பொருந்தாது போலும்! இட ஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டங்களுக்கு இது பொருந்தாது போலும்!), அது என்ன தலித் அறிவுஜீவி தனியாக முளைத்தார்களா என்று படுகேவலமாக வினவுவது என்று குவியும் பதில்களில் தெறிக்கும் மொழியில் மறைக்கமாட்டாத வெறுப்புணர்வும், சாதிய மேட்டிமைத் தனமும் கொட்டிக் கிடப்பதைப் பார்த்தாலே போதும்.

இறுதிக் கடிதத்தைக் கூட எத்தனை கவித்துவமாகவும், காழ்ப்புணர்வைக் கக்காமலும், இயற்கையின் நேயராகவும், அறிவியலின் வழிபாட்டாளராகவும், பரந்துபட்ட மனிதத் திரள் தொலைத்துக் கொண்டிருக்கும் இயல்பான வாழ்க்கை குறித்த விசனத்தோடும் எழுத முடிந்த அந்தக் கைகள் எப்படி தூக்குக் கயிற்றை முடிச்சு போட்டுக் கொடுக்கப் போயிற்று என்ற கேள்விகள் இரவு முழுக்க துரத்திக் கொண்டே இருந்தன. என் முடிவுக்கான காரணங்கள் கேட்டு என் நண்பர்களையோ, பகைவர்களையோ அழைத்துத் துளைத்தெடுக்க வேண்டாம் என்ற வரியை எழுதுகையில் இந்தப் புன்னகை ததும்பும் முகத்தோடேவா எழுதப் பட்டிருக்கும்? ஜெய் பீம் என்ற முழக்கத்தோடு முடியும் கடிதம், அந்தப் புரட்சிச் சொல்லின் பொருளைச் சுமக்க மாட்டது திணறும் அளவு வர்ணாசிரம தருமத்தின் அநீதி நம் தேசத்தின் உயர் கல்விச் சாலையில் கோலோச்சுவது எத்தனை சாபமிகுந்தது ?

தமிழகத்தில் ஒரு தலித் மரணம் அடைந்து ஐந்து நாட்கள் கழித்து, அவரது உடலைப் பொதுவழியில் எதுத்துச் சென்று புதைக்குமாறு விதிக்கப்பட்ட , நீதிமன்ற உத்தரவை காவல் துறையே கீழே போட்டு மிதித்து தனிப் பாதையில் கொண்டுசென்று புதைத்ததோடு, தட்டிக் கேட்டவர்கள் மீது தடியடியும் நடத்தியதை திருநாள் கொண்ட சேரியில் பார்த்தோம். ரோஹித் வேமுலா உடலைத் தங்களது சொந்த கிராமத்திற்கு எடுத்துச் சென்று இறுதிச் சடங்குகள் செய்ய விரும்பிய தமது எண்ணத்தைத் தடுத்து, உறவினர்கள் யாரும் வந்து சேருமுன் காவல் துறை அவசர் அவசரமாக அம்பர்பேட்டையில் எரித்துவிடுமாறு செய்துவிட்டதை ரோஹித் வேமுலாவின் தாய் ராதிகா கண்ணீர் மல்க தெரிவித்திருக்கிறார். பல்கலைக் கழகத்தின்முன் காவல் துறை குவிக்கப்பட்டிருக்கிறது. அநீதியைத் தடுக்கவோ, நியாயத்தை நிலை நாட்டவோ, நம்பிக்கையைத் துளிர்க்கச் செய்யவோ பயன்படுத்தக் கிடைக்காத அதிகாரத்தின் குவிப்பு ஆவேசமிக்க ஆர்ப்பாட்டங்களை அடக்கி ஒடுக்கவும், மிரட்டி அடக்கவும் கொண்டு வந்து நிறுத்தப் படுகிறது.

அற்புதமான அறிவியல் மேதையாக, நட்சத்திரக் கூட்டங்கள் குறித்த கதைகளைக் குழந்தைகளுக்குக் காட்சிப் படங்களாக வழங்கத் தக்க ஆசிரியராக, வல்லுனராக உருப்பெற்று இருக்க வேண்டிய பயணத்தை ரோஹித் வேமுலா துண்டித்துக் கொண்டுவிட்டது சமூகத்தின் சோகம்.

“……….நான் அறிவியலை, தாரகைகளை, இயற்கையை நேசித்தேன். மனிதர்கள் இயற்கையினின்றும் தங்களைத் துண்டித்துக் கொண்டுவிட்டதறியாது அவர்களை நேசித்தேன். நமது உணர்வுகள் இரவல் வாங்கப்பட்டவை. நமது அன்பு கட்டமைக்கப்பட்ட ஒன்று. நமது நம்பிக்கைகள் சாயம் பூசப்பட்டவை. செயற்கையான கலைகள் மூலம் நமது இயல்பான கலையை வாழ்விக்கிறோம். காயப்படாமல் அன்பு செய்ய முடிவதில்லை. மனிதர்கள் ஓர் எண்ணிக்கை, ஒரு ஒட்டு, ஒரு பொருள் என்ற ஏதோவோர் உடனடி தேவை பற்றிய அடையாளமாக தாழ்வுற்றுக் கிடக்கின்றனர். தமது உன்னத நிலையை இழந்துவிட்டு நிற்கின்றனர்…..”

போன்ற வரிகளை ஒரு 28 வயது மாணவர் தமது இறுதி சாசனமாக எழுதிவிட்டுப் போக முடியும் என்பது நாம் எத்தனை சபிக்கப்பட்ட காலத்தில் வாழ்கிறோம் என்பதையே வெளிப்படுத்துகிறது. ரோஹித் வெமுலா தேடிக் கொண்ட முடிவை ஆதரிக்க முடியாதுதான். ஆனால் இந்த அவலம் நேர்ந்ததற்கான காரணங்களுக்குப் பதில்களைத் தேட மறுப்பதற்கு அதையே ஒரு சாக்காகச் சொல்லிக் கொண்டிருக்கவும் முடியாது..

*******************

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *