(ஒரு எளிய மனிதனின் சுயசரிதை)

மீ.விசுவநாதன்

“பொங்கல் திருநாள்”

எல்லோருக்கும் மகிழ்ச்சியான பண்டிகையில் “பொங்கல் திருநாளும்” ஒன்று. முதல் நாள் இயற்கையை வணங்கியும், மறுநாள் நமக்காக என்றும் தன்னையே தந்து உதவுகின்ற கால்நடைகளை, முக்கியமாக மாடுகளைக் கொண்டாடியும், காகம்போன்ற பறவைகளுக்கு உணவு படைத்தும் மக்கள் மகிழ்ச்சியோடு இருக்கும் நன்னாள்.
அவனது கிராமத்தில் பொங்கலுக்கு ஒருவாரம் முன்பாக வீட்டிற்கு வெள்ளை அடித்து, வாசல் திண்ணைச் சுவரில் காவியிலும், வெள்ளை நிறத்திலும் வண்ணம் பூசியும் அழகு செய்வார்கள்.

ஒருமுறை அவனது வீட்டிற்கு வெள்ளை அடிக்க ஆள் வராததால் அவனுக்கு அம்மாவும், அக்காவும், அவனும் சேர்ந்து அந்தப் பணியைச் செய்ததும், எப்படி சுவர்களில் சுண்ணாம்பு வெள்ளை அடிக்க வேண்டும் என்று அம்மா சொல்லித்தந்ததும் ஒரு சுகமான அனுபவம்.

பொங்கல் அன்று அதிகாலையிலேயே எழுந்து, வீட்டு வாசலை அம்மாவும், அக்காவும் மாட்டுச் சாண நீரால் தெளித்து, நன்றாகப் பெருக்கிய பின்னர், வீட்டு வாசலில் மிகப்பெரிய கோலம் போடுவார்கள். அதில் புள்ளி வைத்த கோலம் அதிகமாகவும், மிக அழகாகவும் இருக்கும். அவனும் அவர்களுடன் அச்சுக் கோலங்கள் போடுவான் . விதவிதமான கோலங்களுடன் எல்லோருடைய வீட்டு வாசலும் அழகாக இருக்கும். அதை ரசிப்பதற்கே தெருத்தெருவாக அவன் சுற்றி வருவான்.

“பொங்கல் பூஜை”

வீட்டின் முற்றத்தில் துளசி மாடத்தின் அருகில் சூரியன், சந்திரன் கோலம் போட்டு அதன் அருகில் ஒரு குத்துவிளக்கை ஏற்றி வைப்பாள் அம்மா. பக்கத்திலேயே இரண்டு பெரிய கரும்புகளும், மஞ்சள்க் குலையும் சுவரோடு சாத்தி வைப்பாள். ஒரு தாம்பாளத்தில் தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம்,தட்சிணையும், இன்னொரு தாம்பாளத்தில் பூஜைக்கான பூவும் எடுத்து வைப்பாள். காலையில் நல்ல நேரத்தில் பூஜை செய்வதற்காக அவர்கள் வீட்டிற்கான சாஸ்திரிகள் ப்ரும்மஸ்ரீ ரங்கவாத்யாரோ, ப்ரும்மஸ்ரீ சுந்தர வாத்தியாரோ வந்து பூஜை செய்வார்கள். நெய்வேத்யமாக சர்க்கரைப் பொங்கல். வடை, சுத்த அன்னம் எல்லாம் இருக்கும். பூஜை முடிந்தவுடன் அப்பா, சாஸ்திரிகளுக்கு தட்ஷிணையும், ஒரு முழுக் கரும்பும் தருவார். அம்மா சக்கரைப்பொங்கலும், வடையும் ஒரு பாத்திரத்தில் வைத்து அந்தப் பெரியவரிடம் அவனையோ, அவனுக்கு அக்காவையோ தரச்சொல்லுவாள். பிறகு சர்கரைப்பொங்கலும், வடையும் தந்து பக்கத்து வீட்டு அன்பர்களுக்கும் கொடுத்துவிட்டு வரச் சொல்லுவாள். அதன் பிறகு தாத்தா, அப்பா, சித்தப்பா, அக்கா எல்லோருடனும் சேர்ந்து சாப்பிடுவோம். அம்மா கடேசியில்தான் சாப்பிடுவாள். மதியம் வேலைக்கு வரும் “ரோசாலி”க்கும் ஒரு பாத்திரத்தில் சர்கரைப்பொங்கல், வடை, சாப்பாடு மற்றும் கரும்புத்துண்டு என்று தனியாக அம்மா எடுத்து வைத்திருப்பாள்.

“மாட்டுப் பொங்கல்”

மறுநாள் காலையில் சித்திரானங்கள் செய்து நெய்வேத்யம் செய்தபின்பு மஞ்சள்செடியின் இலையில் அந்தச் சாதத்தை வைத்து, ” காக்காய் கூட்டம் கலஞ்சாலும் என் கூட்டம் கலையாமல் இருக்கணும்” என்று வேண்டிக்கொண்டு காக்கைக்கு உணவளிப்பார்கள். குறிப்பாக உடன்பிறந்த சகோதரர்களின் நலனுக்காக இது ஒரு பிராத்த்தனை. இந்த நல்ல நாளில் சகோதரர்கள் தங்களது சகோதரிக்குத் தங்களால் இயன்ற பொருளுதவி செய்வார்கள். அவனுக்கு மாமா ஒவ்வொரு வருடமும் பொங்கலுக்கு ஐந்து ரூபாய், பத்துரூபாய், இருபத்தி ஐந்து ரூபாய் என்று அவனுக்கு அம்மாவுக்கு பணம் அனுப்பி வந்ததை அவன் நன்கு அறிவான். அப்பொழுதெல்லாம் அவனுக்கு அம்மா அவனிடம், ” நீயும் ஒனக்கு அக்காவுக்கு இது போல முடிஞ்சத அனுப்பி, எப்போதும் ஒத்துமையா இருக்கணும்” என்று நெறிப்படுத்துவாள்.

இரண்டாவது நாளான மாட்டுப் பொங்கலன்று கிராமத்தில் உள்ள செல்வந்தர் வீடுகளில் உள்ள மாடுகளுக்கு கொம்புகளில் வண்ணம் பூசி, உடலெங்கும் கைச்சின்னம் பதித்து, நெற்றியில் பொட்டு வைத்து, கழுத்தில் மாலையிட்டு நல்ல அலங்காரம் செய்வார்கள். மாட்டுக் கொம்புகளிலும், கழுத்திலும் கரும்பு, பனங்கிழங்கு போன்றவைகளைக் கட்டி இருப்பார்கள். பிறகு திருஷ்டிக்காக வீட்டு வாசலில் வைக்கோலில் தீயிட்டு அந்தத் தீயைத் தாண்டிச் செல்லும் படியாக அந்த மாடுகளை மெதுவாக விரட்டுவார்கள். அந்தத் தீயைத் தாண்டிக் கொண்டு காளை மாடுகளும், பசுமாடுகளும், கன்றுக் குட்டிகளும் பாய்ந்து தெருவில் ஓடி வரும். அந்த மாடுகளை அந்தத் தெருவில் இருக்கும் அவனும், அவனுக்கு நண்பர்களும் விரட்டிச் சென்று பிடிப்பார்கள். சிலசமயம் முரட்டுக் காளைகள் முட்டக் காயம் பட்டதும் உண்டு.

ஒரு முறை தெற்கு மாடத்தெருவில் வசித்து வந்த “வாழவுகந்த அம்மன் கோவில்” பட்டர் வீட்டில் பசுமாடையும், கன்றுக் குட்டியையும் அழகாக அலங்காரம் செய்து வெளியில் விடுகிற சமயம், அவனும் நண்பர்கள் H. கிருஷ்ணன், கபாலி, லக்ஷ்மண வாத்தியார் வீட்டு விஸ்வம், சன்னதித்தெரு கண்ணன் எல்லோருமாக அந்த வீட்டின் வாசலில் அந்த மாட்டைப் பிடிப்பதற்காக நின்று கொண்டிருந்தனர். அந்தப் பசுமாடு வாசல் வரை வந்ததும் அவர்களைப் பார்த்து மிரண்டு திரும்பவும் அவர்களது வீட்டிற்குள்ளே ஓடிவிட்டது. அப்பொழுது அந்த வீட்டு பாட்டி,” டேய்…வால்களா…உங்களைப் பாத்து இந்த மாடு பயப்படறது….அது அந்த தீயத் தாண்டட்டும் ….அப்பறமா அத பிடியுங்கோடா…” என்று கெஞ்சினாள்.

மாட்டுப் பொங்கல் அன்று அவர்களது தெருவில் நாள் முழுக்க மாடுகள் பாய்ந்து ஓடுவதும், அந்த மாடுகளைத் துரத்திக் கொண்டு அந்த கிராமத்துச் சிறுவர்களும், இளைஞர்களும் ஓடுவதும் பார்க்கவே பரவசமாக இருக்கும். அந்த மாடுகளின் கொம்பில் கட்டி இருக்கும் கரும்பையும், பனங்கிழங்கையும் பறித்து உண்பதே ஒரு அலாதியான சுகம். மாட்டுக் கொம்பில் இருக்கும் வண்ணக் கலவை அந்தக் கரும்பிலும் ஒட்டிக் கொண்டிருக்கும். அப்படியே அந்தக் கரும்பைக் கடித்துச் சுவைக்கும் பொழுது வாயெல்லாம் அந்த வண்ணம் ஒட்டிக் கொள்ளும். அவனுக்கு அம்மா,’ அப்படி அந்தக் கரும்புல என்னதான் இருக்கு” என்று கேலி செய்வாள்.

“ஒரு வினோதமான விளையாட்டு தேங்காய் உருட்டு”

இந்தப் பொங்கல் சமயத்தில் அவனது கிராமத்தில் ஒரு வினோதமான, அதே சமயம் ஒரு விறுவிறுப்பான விளையாட்டும் நடக்கும். அது “தேங்காய் உருட்டு” என்ற விளையாட்டு. சில நடுத்தர இளைஞர்கள் இந்த விளையாட்டில் ஈடுபடுவார்கள். ரதவீதி சுற்றி இந்த விளையாட்டு நடைபெறும். தேரடித் தெருவில் இந்த விளையாட்டுத் துவங்கி மீண்டும் அதே இடத்தில் முடிவடையும். ஒரு பந்தயம் வைப்பார்கள். அதாவது ரதவீதி முழுவதும் அதிக பட்சமாக இருபது உருட்டுகளில் முடிக்கவேண்டும், அதுவும் தேங்காய்கள் அதிகமாக உடையவும் கூடாது என்ற நிபந்தனையும் இருக்கும். ஒரு பெரிய சாக்கில் நல்ல தேங்காய்களை வைத்திருப்பார்கள். பந்தயத்தில் கலந்து கொள்பவர்கள் பத்து ரூபாய், இருபது ரூபாய் என்று பணம் கட்ட வேண்டும். குறிப்பிட்ட உருட்டுகளில், தேங்காயும் அதிகமாக உடையாமல் யார் அந்தச் சுற்றை முடிக்கிறார்களோ அவர்களுக்கு பந்தயப் பணம் கிடைக்கும். இதில் பணம் கிடைக்கும் என்பதை விட அந்த வித்யாசமான விளையாட்டில் பங்கு கொண்டு வெற்றி பெறவேண்டும் என்ற முனைப்பே அதிகமாக இருக்கும். இந்த விளையாட்டை மிக நேர்த்தியாகவும், அழகாகவும், தேங்காய்கள் அதிகமாக உடையாமலும் விளையாடக் கூடியவர் “லாரிச் சங்கரன்” என்பவர். அவர் லாரியில் வரும் சரக்குகளை ஏற்றி, இறக்கி வைக்கும் கூலித் தொழிலாளி. அவருடன் வேலை செய்யும் சில நண்பர்கள் சேர்ந்துதான் இந்த விளையாட்டை ஏற்பாடு செய்வார்கள். அவனுக்கு இந்த விளையாட்டு ரொம்பவும் ரசனையாக இருந்தது. இப்பொழுதெல்லாம் கிராமத்தில் இந்த விளையாட்டே நின்று போனது.

பொங்கல் வாழ்த்து வண்ணப் படங்கள்

அவனுக்கும் அவனுக்கு அக்காவுக்கும் பொங்கல் திருநாளுக்காக அவர்களது உறவினர்களிடம் இருந்து “பொங்கல் வாழ்த்து” வண்ணப் படங்களுடன் தபாலில் வரும். ஒவ்வொன்றும் அருமையான வாசகங்களைக் கொண்டிருக்கும். குறிப்பாக மதுரையில் இருந்து ரமணிச் சித்தப்பாவும், பாம்பேயில் இருந்து சின்னம்பிச் சித்தப்பாவும் அனுப்பும் வாழ்த்து அட்டைகள் மிகுந்த ரசனைக்குரியதாக இருக்கும். ரமணிச் சித்தப்பாவின் கடிதமே நல்ல நகைச்சுவையாக இருக்கும். அழகான தமிழில், முத்து முத்தாக அவரது கையெழுத்தைப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கும். பொங்கல் சமயத்தில் எப்பொழுது “போஸ்ட்மேன்” (தபால்காரர்) வருவார் என்று காத்திருப்பார்கள் அவனும், அவனுக்கு அக்காவும். அந்த அனுபவத்தை இப்பொழுது இழந்து விட்டோம் என்றுதான் அவன் நினைக்கிறான். என்னதான் “முகநூல்” (Face book) தொடர்பு இருந்தாலும், நமக்கு ஆத்மார்தமானவர்களின் உணர்வுகளை, அவர்களது கையெழுத்திலேயே புரிந்து கொள்ளக்கூடிய ஒரு தொடர்பு அறுந்து போனதாகத்தான் அவன் நினைக்கிறான். இன்றும் அவனுக்கு அப்பா தனது தொண்ணூறாவது வயதிலும் அவருடைய நண்பர்களுக்கு “தபால் கார்டு” மூலமாகத்தான் தனது கருத்தைப் பதிவு செய்துகொண்டிருக்கிறார் என்பது அவனுக்குக் கொஞ்சம் ஆறுதல்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *