(ஒரு எளிய மனிதனின் சுயசரிதை)

மீ.விசுவநாதன்

அத்யாயம்: 44

“பம்பாய் தமிழ்ச்சங்கத் தலைவர் ஆதிலக்ஷ்மணன்”

d022f342-e928-4e42-bd00-68a1fcc5be77

அவன் 1975ம் வருடம் “மே” மாதம் கோடை விடுமுறைக்காக கல்லிடைக் குறிச்சிக்குச் சென்றிருந்தான். அந்த நேரத்தில் அவனுடைய குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான “சாரதாமாமி” அவனுக்கு அம்மாவிடம்,” ராமா…இன்னிக்கு சச்சுவும், அவ ஆத்துக்காரரும் வரா…நம்ம கண்ணனுக்கு அவர்ட வேலை கேட்கச் சொல்லு…நானும் சொல்லறேன்” என்றாள். அவர்கள் மாலையில் வந்தார்கள். சென்று பார்த்தான். அவனுக்கு சச்சு மாமியையும், அவர்களது சகோதரிகளான லக்ஷ்மி, பார்வதி, ரத்னா மாமிகளையும் நன்கு தெரியும். அனைவருமே ரொம்பவும் அன்புடன் பழகும் குணம் கொண்டவர்கள். அவனுக்கு சச்சு மாமியின் கணவரிடம் அத்தனை நெருக்கம் கிடையாது. பார்வதி மாமியின் கணவர் R. S. மணி அவர்களிடமும், லக்ஷ்மி மாமியின் கணவர் “குளத்து” அவர்களிடமும் ஓரளவு பழக்கம் இருந்தது. அதனால் அவன் சச்சு மாமியின் கணவரைப் பார்க்கச் சென்றும் வேலை விஷயமாக எதுவும் சொல்லாமல், அவனுக்கு இருக்கும் இலக்கிய ஆர்வத்தையும், கவிதைகள் பற்றியும் கூறிக் கொண்டிருந்தான். அவரும் மிகுந்த ஆவர்வமாக,” நீ எழுதிய கவிதைகள் இப்பொழுது உன்னிடம் இருக்கிறதா?” என்று கேட்க, தயாராக வைத்திருந்த அந்தக் கவிதை நோட்டுப் புத்தகத்தை அவரிடம் காட்டினான். அதை புரட்டிப் பார்த்து படித்த படியே,” கவிதைகள் எல்லாம் எளிமையாக, கண்ணதாசன் கவிதைகள் போல நன்றாக இருக்கிறது. விடாமல் எழுதி வா….நிறைய புத்தகங்களும் படி…” என்று உற்சாகப் படுத்தினார். உடனே அவர் அவனிடம்,” நாங்கள் நாளைக்குக் காலைல “கார்ல” மணிமுத்தாறு அருவிக்குப் போகலாம் என்று இருக்கிறோம்…நீயும் வா…உனக்கு வழி தெரியுமா?” என்று கேட்டார். “தெரியும்” என்றான்.

அவன் பள்ளி இறுதி நாட்களில் அவனையும், நீலகண்டன், விசு போன்ற சில நண்பர்களையும் மின்வாரியத்தில் வேலை செய்து வந்த “கோதையார் சுவாமிநாதன்” மாமா மின்வாரியத்தின் ஜீப்பில் கோதையாறுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். மணிமுத்தாறு நீர்த்தேக்கம் கடந்து அருவியை நெருங்கும் பொழுது எல்லோருக்கும் ஒரே உற்சாகமாக இருக்கும். அதையும் தாண்டி மாஞ்சோலை அதன் பிறகு கோதையாறு வரும். “காக்காச்சி”, “குதிரைமூக்கு” போன்ற இடங்கள் எல்லாம் மிக மிக அழகாக இருக்கும். அவன் எப்பொழுதும் ஜீப்பின் பின்புறம் அமர்ந்து இயற்கையை ரசித்தபடியேதான் வருவான். அதனால் அவனுக்கு மணிமுத்தாறு அருவிக்கு வழி தெரியும்.

மறுநாள் கலையில் எட்டு மணிக்கு சச்சு மாமி, அவரின் கணவர், சச்சுமாமியின் தாயார் சாரதாமாமியுடன் அவனும் மணிமுத்தாறு அருவிக்கு காரில் புறப்பட்டான். சச்சுமாமின் கணவர் தென்காசியில் இருந்தே “பிரீமியர் பத்மினி” பியட் காரில் வந்திருந்தார். அவர் ஏதோ ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை செய்கிறார் என்று தெரிந்த்தது. அதை அவன் அவரிடம் கேட்கவில்லை. கார் மணிமுத்தாறு பூங்காவைச் சுற்றி நீர்த்தேக்கம் ஒட்டிய சாலையில் சென்று கொண்டிருந்தது. “கண்ணா…வழி சரிதானா..அருவிக்கரையே கண்ணுல படலையே..என்னடாது “கோமணமா” நீளப்போயிண்டே இருக்கே..” என்று சாரதாமாமி அவனுக்கு கிலியூட்டினாள். “கவலைப் படாதேங்கோ…அவனுக்குத்தான் இடம் தெரியும்னு சொன்னானே” என்று சச்சு மாமியின் கணவர் சொல்லிவிட்டு, அவனிடம்,” கண்ணா ..ஒனக்கு ஒரு டெஸ்ட்…இந்த இடத்துலேந்து அருவிக்கரை வரத்துக்குள்ள ஒரு நல்ல கவிதை நீ எழுது பார்க்கலாம்” என்று தன் பையில் இருந்த பேனாவையும், காரில் வைத்திருந்த பழைய டைரியில் இருந்து ஒரு தாளையும் கிழித்து அவனிடம் தந்தார். அவனுக்கு உற்சாகம் கரை புரண்டது. அகண்டு விரிந்த மணிமுத்தாறு நீர்த்தேக்கத்தை பார்த்துக் கொண்டே ஒரு சின்னக் கவிதையை எழுதி முடிக்கவும், அருவிக்கரை நெருங்கவும் சரியாக இருந்தது. அவன் எழுதிய கவிதையை அவர் படித்தார். நீர்த்தேக்கத்தின் தவிப்பையும், அடித்தட்டு மக்களின் உணர்வையும் இணைத்து ஆசிரிய விருத்தத்தில் எழுதி இருந்த கவிதை அது. “பலே …நல்ல கருத்து…நீ நானா வருவாய் கண்ணா” என்று அவனைப் பாராட்டினார்.

அருவியில் நன்றாகக் குளித்து விட்டு மதியம் ஒரு மணிக்கு வீட்டிற்குத் திரும்பினோம். அவருக்கு அவனைப் பிடித்திருந்தது. அவன் அவர்களிடம் சொல்லிக்கொண்டு கிளம்பும் நேரம், “அதுக்கு ஒரு வேலை ஒங்க கம்பெனியில போட்டுக் கொடுங்கோ…அவா குடும்பம் முன்னுக்கு வரும்” என்று சாரதாமாமி சச்சு மாமியின் கணவரிடம் சொன்னாள். “நீ இப்ப எங்க வேலை பார்க்கிறாய்?” என்று அவனைக் கேட்டார். சொன்னான். “என்ன சம்பளம் வாங்கறாய்” என்றார். “இருநூற்றி ஐம்பது” என்றான். “போதுமா? என்றார். “போதும்” என்றான். “என்ன போரும்..அதுக்கு என்ன தெரியும்…எப்போதும் கதை, கவிதைன்னு எழுதினா யாரு சோறு போடுவா…சம்பளம் ஒண்ணும் போறாது…நீங்க பார்த்து ஒரு வேலைக்கு ஏற்பாடு பண்ணுங்கோ” என்று பட்டாசலைக் கதவில் சாய்ந்து நின்று கொண்டு சாரதாமாமி அவனுக்காக அவரிடம் குரல் கொடுத்தாள். அவர் மெதுவாகச் சிரித்தபடி,”பாம்பேக்கு” வருவையா? என்று கேட்டார். அவன் மெட்ராஸ்லே இருக்கேன் என்றான். காரணம் கேட்டபொழுது, “எனக்கு எழுத்தாளனாக இருக்க வேண்டும். அதற்கு மெட்ராஸ்தான் எனக்குப் பிடிச்சிருக்கு” என்றான். “சரி…பார்க்கலாம் ..கவலைப்படாதே…” என்றார். அவன் வீட்டிற்குத் திரும்பி வந்தான். மாலையில் அவர் தென்காசிக்குத் திரும்பிச் செல்வதற்காகக் காரில் ஏறும்பொழுது, “கவலைப்படாதே…நான் பாத்துக்கறேன்” என்று அவராகவே அவனைப் பார்த்துச் சொன்னார்.

கார் புறப்பட்டதும் சாரதாமாமியும், பார்வதிமாமியும் ஒரே குரலில்,” கண்ணா …அவர் நிச்சயம் ஒனக்கு வேலை வந்கித்தருவர்” என்றனர். “ஒன்னோடு கவிதையெல்லாம் அவருக்கு ரொம்ப பிடிச்சிருக்கு…அவருக்குத் தமிழ்ல ரொம்ப ஈடுபாடு உண்டு…அவர்தானே பாம்பாய் தமிழ்ச் சங்கத்துக்குத் தலைவர்…. அவர் ஒரு வார்த்தை சொன்னா அதக் காப்பத்துவர்” என்றாள் பார்வதிமாமி. அவர்தான் பம்பாய் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் “ஆதிலக்ஷ்மணன்”. காட்பரி நிறுவனத்தின் மிகப் பெரிய பொறுப்பில் இருந்தவர். அவனிடத்தில் அவருக்கு நிறைய அன்பு இருந்தது. அவனுக்கு அவர்மூலம் நிறைய இலக்கிய வாதிகளின் அறிமுகமும் கிடைத்தது. அவனுக்கு அந்த வருட இறுதியில் “காட்பரி நிறுவனத்தில்” இருந்து வேலைக்கான அழைப்பு வந்தது.

21.01.2016

அவன் மீண்டும் அடுத்தவாரம் வருவான்………..

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *