நூலாறு 2010: வேலூரில் கணித்தமிழ் அரங்கு நிகழ்ச்சிகள்

0

வேலூர் ஆகஸ்டு 29, 2010

வேலூர் வாசகர் பேரவை ஆழி அறக்கட்டளை இணைந்து வழங்கும் நூலாறு 2010 நிகழ்வில் கணித்தமிழ் அரங்கு நிகழ்ச்சிகள் குறித்து அதன் அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளதாவது:

வேலூரில் தொடங்கி உள்ள நூலாறு 2010 வேலூர் புத்தகத் திருவிழாவில் தினமும் பள்ளி மாணவர்களுக்கும் மாணவ / மாணவிகளுக்கும், கல்லூரி மாணவ / மாணவியர்கள் மற்றும் பொது மக்களுக்கும் தினமும் தமிழில் தட்டச்சு செய்தல், வலைப்பூ உருவாக்குதல், லினக்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் நிறுவுதல் ஆகிய பயிற்சிகள், மேலும் கணித்தமிழ் வரலாறு என்ற தலைப்பின் கீழ் புகைப்படக் கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் கணினியில் தமிழ் மென்பொருட்கள் எப்போதிலிருந்து வெளிவந்தன போன்ற தகவல்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் வருங்காலத்தில் தமிழில் என்ன மாதிரியான மென்பொருட்கள் வரவிருக்கின்ற போன்ற தகவல்களும் இடம்பெறுகின்றன.

தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைப் போட்டி

மேலும் பள்ளி மாணவ / மாணவியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்குத் தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைப் போட்டியும் அதற்கான பரிசுகளும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன.

மொபைல் திருக்குறள்

விஐடி- பல்கலைக்கழகத்தில் இயங்கிவரும் மொபைல்வேதா நிறுவனம் சார்பில் திருக்குறளை இலவசமாக செல்பேசியில் படிக்கும் விதமாக புளூ-டூத் நுட்பம் வழியாகப் பார்வையாளர்கள் அனைவருக்கும் வழங்கப்படுகிறது.

மென்பொருள் தொழில் வாய்ப்புக் கருத்தரங்கு

முக்கிய நிகழ்வாக வேலூரில் மென்பொருள் துறை நிறுவனங்களுக்கான தொழில் வாய்ப்புகள் என்ற கருத்தரங்கு நடைபெற உள்ளது. 2010 செப்டம்பர் 4ஆம் தேதி மதியம் 3 மணி முதல் மாலை 6 மணி வரை தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் கோட்டைகளான பெங்களூருவுக்கும் சென்னைக்கும் நடுவில் இருக்கும் வேலூர் மாவட்டத்தில் மென்பொருள் நிறுவனங்கள் செயல்படுவதற்கான ஆதாயங்கள் இருக்கின்றன.

மாவட்டத் தலைநகராக, ஒரு சிறு நகராகக் கருதப்பட்டு வரும் வேலூரில் என்னென்ன மாற்றங்கள் வர வேண்டும், அரசாங்கம் என்னென்ன வசதிகள் செய்து தர வேண்டும் என்பது விவாதிக்கப்பட வேண்டும்.

வேலூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலிருந்து தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் ஊழியர்களின் கருத்து என்ன, இங்கு இருக்கும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் நோக்கங்கள் என்ன?

சென்னை அல்லது பெங்களூருவில் செயல்படும் மென்பொருள் நிறுவனம் ஒன்று வேலூரில் மென்பொருள் உருவாக்க மையம் ஏற்படுத்த வேண்டுமானால் என்னென்ன எதிர்பார்ப்பார்கள்?

வேலூர் மாவட்டத்தில் இருக்கும் தொழில் நிறுவனங்களுக்கு எந்த மாதிரியான தகவல் தொழில்நுட்பத் தேவைகள் இருக்கின்றன?

இவற்றை விவாதித்து ஒரு செயல்திட்டம் வகுக்கும் நோக்கத்தில்

1. வேலூர் மாவட்டத்தில் கிடைக்கும் மனித வளம் பற்றிய தகவல்கள் – மாவட்டத்தில் இருக்கும் பொறியியல் கல்லூரி பிரதிநிதி

2. வேலூரில் நிறுவனக் கிளை ஏற்படுத்தத் தேவைப்படும் வசதிகள் – சென்னை / பெங்களூருவில் செயல்பட்டு வரும் மென்பொருள் நிறுவனப் பிரதிநிதி

3. வேலூரில் மென்பொருள் நிறுவனம் தொடங்கி நடத்தும் நடைமுறைச் சாத்தியங்கள் – வேலூரில் செயல்படும் சிறு நிறுவன பிரதிநிதி

4. வேலூர் மாவட்ட நிர்வாகம் மென்பொருள் நிறுவனங்களுக்கு எப்படிப்பட்ட உதவிகளைச் செய்ய முடியும் – மாவட்ட நிர்வாகப் பிரதிநிதி

5. வேலூரைச் சார்ந்த தொழில் நிறுவனங்களின் தொழில்நுட்பத் தேவைகள் – வேலூரைச் சார்ந்த வணிக / தொழில் நிறுவனப் பிரதிநிதி

6. தகவல் தொழில்நுட்பச் சூழலை உருவாக்குவதற்கான தேவைகள் – தகவல் தொழில்நுட்பத் துறை வல்லுனர்

என்று ஆறு பேர் கொண்ட கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வேலூர் நகரின் கல்லூரி மாணவர்கள், வேலூர் மாவட்ட நிர்வாக அதிகாரிகள், மாவட்ட வணிக நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், வேலூரில் மென்பொருள் நிறுவனம் தொடங்க விரும்பும் தொழில் முனைவர்கள் இந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்டு பலன் பெறலாம்.

மேலும் விபரங்களுக்கு:
செந்தில்நாதன் – 99401-47473
(விழா ஒருங்கிணைப்பாளர், ஆழி அறக்கட்டளை)
செல்வ.முரளி – 99430-94945
மா.சிவக்குமார் – 98840-70556

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *