நிர்மலா ராகவன்

முடியாது, மாட்டேன்! 

உனையறிந்தால்11

கேள்வி:
சுயநலம் தகாது என்ற முறையில் என்னை வளர்த்தார்கள். பெரியவர்கள் சொல்வதைக் கேட்டு, மிக மரியாதையாகத்தான் நடந்து வந்திருக்கிறேன். இப்போது, நாற்பத்தைந்து வயதில் எதையோ இழந்துவிட்டதைப்போன்ற ஏக்கம் ஏற்படுகிறதே, ஏன்?

விளக்கம்:
பிறர் சொல்வதை அப்படியே கடைப்பிடிக்க வேண்டுமென்றால், நமக்கு எதற்கு தனித்தனியாக மூளை? நம் நலனைப் பேணினால்தான் பிறர் நலனில் அக்கறை செலுத்த முடியும். இதை ஏனோ பலரும் மறந்துவிடுகிறார்கள்.

தன் ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்த தாத்தா ஒருவர், போகிற போக்கில், `அம்மா சொல்றதைக் கேளு!’ என்று தன் பேத்திக்கு அறிவுரை கூறிப்போனார். பெரியவர்களுக்கு மரியாதை கொடுப்பதும், அவர்கள் கூறுவதை இம்மிபிசகாது கடைப்பிடிப்பதும் ஒன்றல்ல. அவர்களது கூற்றை ஏற்க முடியாவிட்டால், மரியாதையுடன் மறுக்கலாம். அந்தச் சுதந்தரம் குழந்தைகளுக்கு வழங்கப்பட வேண்டும். தலைமுறைக்குத் தலைமுறை வாழ்க்கைமுறை மாறிக்கொண்டே இருக்கிறதே!

சிறுவர்களுக்குப் பேச்சு சுதந்திரம் கொடுத்து, அவர்களது எண்ணங்கள் சரிதானா என்று அவர்களுடன் அலசுவதே நல்ல முறை. அப்படி இல்லாவிட்டால், ஏனென்று விளக்கினால், ஏற்பார்கள். சில இல்லங்களில், யோசிக்கத் தெரிந்த சிறுமிகள் வாயைத் திறந்து ஏதாவது பேசினாலே, `வாயாடாதே! ராங்கி!’ என்று பெற்றோர் அடிப்பதுண்டு.

இவர்களைப் போன்றவர்கள், தம்மையுமறியாது, குழந்தைகளின் தனித்தன்மையை ஒடுக்கிவிடுகிறார்கள்.

இரண்டு வயதான குழந்தைகளை `TERRIBLE TWOS” என்று வர்ணிக்கிறார்கள். ஏனெனில், அவர்கள் எளிதில் பிறருக்கு அடங்க மாட்டார்கள். எது சொன்னாலும், `மாத்தேன், போ!’ என்ற பதில்தான் வரும். இதுதான் மனிதனின் பிறவிக்குணம். ஆனால், சுயமாக எது செய்தாலும் கூடாது என்ற நிலை. நமக்கு இயற்கை அளித்திருக்கும் வரப்பிரசாதமான கற்பனைத்திறன், சிந்திக்கும் ஆற்றல் பலருக்கும் சிறு வயதிலேயே ஒடுக்கப்பட்டு விடுகிறது பெரியவர்கள் சொற்படி மட்டுமே நடப்பதால்தான்.

குழந்தைகள் சுவரில் கிறுக்குவது எல்லார் வீட்டிலும் நடக்கும் ஒன்று. வரையப் பிடித்த குழந்தைகள் தம்மைத் தாமே திருப்திப்படுத்திக் கொள்கிறார்கள். அவ்வளவுதான். எதைச் செய்யலாம், எதைச் செய்யக்கூடாது என்றெல்லாம் பகுத்தறியத் தெரியாத வயது அது. அச்செயல் வீட்டின் அழகைக் குலைப்பது என்று நாம் எடுத்துக்கொண்டால், அது யார் தவறு?

`சுவற்றில் கிறுக்காதே!’ என்று ஒரு சிறுமி ஓயாது கண்டிக்கப்பட்டால், தன் காலில் வரைந்துகொள்ள ஆரம்பிப்பாள். அப்படி ஒரு அடக்க முடியாத எழுச்சி கிளம்பும் அந்த வயதில். அவளுடைய ஆர்வத்தைப் புரிந்துகொண்டு, காகிதத்தைக் கொடுக்க வேண்டும். எதையாவது உருண்டையாகப் போட்டுவிட்டு, `கோழி’ அல்லது `புலி’ என்று பெருமையுடன் காட்டும்போது, `புத்திசாலி என்று சொல்லிவைக்க வேண்டியதுதான். நாம் சொல்வதை நம்பி, தன்னம்பிக்கை வளர, திறமைசாலியாக ஆகிவிடுவாள்.

இப்படி வளர்க்கப்பட்ட ஒரு சிறுமி எட்டு வயதிலேயே சித்திரத்திற்கு வண்ணம் பூசும் (பெரியவர்களுக்கான) போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றாள். நீதிபதி, `இவளுடைய வண்ணச் சேர்க்கை எனக்கே தோன்றாத ஒன்று!’ என்று புகழ்ந்திருக்கிறார்.

இரண்டிலிருந்து நான்கு வயதுவரை சில குழந்தைகள் தனிமையை நாடி, தாமே பேசிக்கொண்டு இருப்பார்கள். `என்ன பேசறே?’ என்று கேட்டால், `கதை சொல்கிறேன்!’ என்ற விளக்கமும் கிடைக்கும்! யாரிடம் என்றெல்லாம் கேட்கக்கூடாது. அவர்கள் மனதில் தோன்றும் எண்ணங்களைக் கோர்வையாகப் பிறரிடம் வெளிப்படுத்தத் தெரியாத வயதல்லவா! அப்போது காற்றோ, சுவரோதான் உற்ற நண்பன். அவர்களுக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு அது. `இதுக்குப் பைத்தியமா!’ என்று அயராது, குழந்தையைத் தன்போக்கில் விட்டுவிட்டால், கற்பனைத்திறன் மேன்மேலும் பெருகும்.

தனிமையை நாடுவது என்பது குழந்தைகள் தங்களைப் புரிந்துகொள்ள எடுக்கும் முயற்சி. அவர்களுக்குப் பிறரைப் பிடிக்காது என்றில்லை. பெரியவர்கள் அப்படித் தவறாக எடுத்துக்கொண்டு, `ஏன் பிறருடன் ஒத்துப்போவதில்லை?’ என்று பலவாறாக அவர்களை மாற்ற முயற்சித்தால், குழந்தைகளுக்குக் குழப்பம்தான் எழும்.

`உனக்குப் பிடித்ததைச் சொல்வதோ, செய்வதோ சுயநலம். அது கெடுதல்!’ என்று வளர்ப்பதும் இயற்கைக்கு விரோதமானதுதானே!

நமக்குப் பிடித்தது, வேண்டியது என்னவென்று நம்மைத் தவிர வேறு யாருக்குத் தெரியும்?

எந்தக் குழந்தையும், உலகம் தன்னைச் சுற்றித்தான் இயங்குகிறது என்றுதான் நினைத்துக்கொண்டிருக்கும். தனக்குப் பிடித்த தின்பண்டம் ஒன்றைத் தானே தின்று தீர்க்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கும் குழந்தையிடம் பிறருக்கும் பகிர்ந்து கொடுக்க வேண்டும் என்று போதிக்கலாம். அதைவிட்டு, `சுயநலம் பிடித்தது!’ என்று திட்டுவதோ, பழிப்பதோ நாம் எதிர்பார்க்கும் பலனைத் தராது.

எல்லாக் குழந்தைகளும் ஒரேமாதிரி இருப்பதில்லை. சில குழந்தைகளுக்குப் பலர் பேசும் இடத்தில் தானும் உட்கார்ந்திருக்கப் பிடிக்கும். எவர் சொல்வதையும் கேட்டு நடந்து, நல்ல பெயர் எடுக்க முனையும்.

இப்படி வளர்க்கப்படுகிறவர்கள் பெரியவர்களானதும், பிறரும் தாம் சொல்வதையெல்லாம் அப்படியே கடைப்பிடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அப்படி நினைத்தது நடக்காவிட்டால், ஆத்திரமடைகிறார்கள்.

வேறு சிலரோ, எந்த வயதிலும் பிறர் சொல்வதைக் கேட்டுத்தான் நடக்க முடியும் என்ற நிலைக்கு உள்ளாகி, அதனால் விரக்தி அடைகிறார்கள். இவர்கள், `என்னால் முடியாது!’ என்று சொல்லிப் பழகாதவர்கள். உலகில் இத்தகையவர்கள் பலர் இருக்கிறார்கள் போலும்! `SAY NO‘ என்று புத்தகங்களே போடுகிறார்கள்!

சர்வாதிகாரம் மிகப் பெரிய குடும்பங்களில் வேண்டுமானால் அவசியமாக இருந்திருக்கலாம். ஆனால், ஒரு குடும்பத்திலுள்ள ஒவ்வொரு குழந்தையும் தன் தனித்தன்மையை இழக்காது வாழ்வில் சிறக்க, கடமை உணர்ச்சி, பொறுப்பு, சுயநலம் எல்லாம் சரியான விகிதங்களில் இருத்தல் அவசியம்.

இக்குணங்களில் ஏதாவது ஒன்று மட்டும் மிகையாக இருக்கும்போது ஒரு மனிதனுக்குப் பிறரிடம் அவன் எதிர்பார்க்கும் மரியாதையோ, பாராட்டோ கிடைக்காது. தாழ்மை உணர்ச்சி மிக, `என்னிடம் என்ன குறை?’ என்றெல்லாம் எண்ணம் போவதால், நிம்மதியும் போய்விடுகிறது.

தீர்வு:
`முடியாது!’ `மாட்டேன்!’ என்று சொல்லிப் பழகுங்கள். ஆனால் மரியாதை குன்றாது. வேண்டுமானால், சற்றுப் பொறுத்து, ஏன் என்று விளக்கலாம்.

உங்களை உங்களுக்கே பிடிக்க வேண்டும். அப்போதுதான் உலகத்தினர்மேல் அன்பு செலுத்த முடியும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *