வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து ..

0

 

எம். ஜெயராமசர்மா … மெல்பேண் .. அவுஸ்திரேலியா 

images
வள்ளுவன் தன்னையுலகினுக்கே தந்துவான்புகழ் கொண்டநாடென
தெள்ளுதமிழ் கொண்டு செப்பிநின்றான் பாரதியும்
அள்ளவள்ளக் குறையாத அமுதமாம் சுரங்கமென
வள்ளுவரின் குறளெமக்கு வாய்த்தெல்லோ விருக்கிறது !

பாவளவில் குறுகிடினும் பாரெல்லாம் பயனுறவே
நீழ்கருத்தைச் சொல்லியதால் நிமிர்ந்துகுறள் நிற்கிறது
யார்மனதும் நோகாமல் நல்லதெலாம் சொல்லுவதால்
பார்முழுக்க உள்ளாரும் பார்க்கின்றார் வள்ளுவத்தை !

சமயமெலாம் கடந்துநிற்கும் சன்மார்க்க நூலெனவே
இமயமென இருக்கிறது எங்களது திருக்குறளும்
சமயமெலாம் கடந்தாலும் தங்களது நூலெனவே
மனமாரக் கொண்டாடி மதித்திடுவார் திருக்குறளை !

அறம்பற்றிச் சொன்னாலும் அழகாகச் சொல்கிறது
உரங்கொண்ட கருத்தெல்லாம் உயிரோட்டம் பெறுகிறது
வரமாகவந்து நிற்கும் வள்ளுவரின் குறளெமக்கு
அரணாக நிற்பதனால் அகமகிழ்ந்து நிற்போமே !

காலத்தால் அழியாத கருத்தனைத்தும் கொண்டதனால்
ஞாலத்தில் குறளெமக்கு நற்றுணையாய் இருக்கிறது
சீலத்தைப் புகட்டுவதாய் திருக்குறளே இருப்பதனால்’
காலத்தைப் புலப்படுத்தும் கண்ணெனவே திகழ்கிறது !

மொழிபெயர்புப் பலகண்ட முழுமைபெற்ற நூலாக
தெளிவான கருக்கொண்ட திருக்குறளே திகழ்கிறது
ஒளிவிளக்காய் என்றும்குறள் உலகினுக்கே இருப்பதனால்
உயர்பெருமை தமிழுக்கே உரித்தாகி நிற்கிறது !

குறள்படித்தால் குறையகலும் குறள்படிப்போம் வாருங்கள்
குறள்படித்தால் குணம்சிறக்கும் குறள்வீட்டில் வைத்திருங்கள்
அறங்கொண்ட வாழ்வுவர அனைவருமே குறள்கற்போம்
திறம்கொண்ட குறளொன்றே தீர்வான மருந்தாகும் !

வள்ளுவத்தை படித்தறியார் வாழ்வதிலே ஏதுபயன்
தெள்ளுதமிழ் பொக்கிஷமாய் திருக்குறளே இருக்குதன்றோ
உள்ளமெலாம் திருக்குறளை உட்செலுத்தி வைத்துவிடின்
வையகத்தில் எல்லோரும் வாழ்வாங்கு வாழ்ந்திடலாம்
( உலகத் திருக்குறள் பேரவை – காஞ்சிபுரமாவட்டம் நடத்திய
கவிதைப் போட்டியில் பரிசு பெற்ற கவிதை 31/01/2016 )

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *