தமிழ்[தாய்]மொழிக் கல்வி

0

ஒரு குழந்தை தன் தாயின் கருப்பையிலிருக்கும்போதே தன் தாயிடமிருந்து மொழியைக் கற்கத் துவங்குகிறது என்று வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சி கூறுகிறது
தமிழ்நாட்டில் விரும்பி வாங்கப்படும் ஹ்யன்டே [Hyundae] கார்களைத் தயாரிக்கும் தென்கொரியநாட்டில் அனைவரும் கொரியமொழியிலேயேதான் உயர்கல்வி கற்கிறார்கள். ஐம்பது ஆண்டுகளுக்குள் அவர்கள் எப்படி இப்படிப்பட்ட முன்னேற்றத்தை அடைந்தார்கள்? தாய்மொழிக்கல்வியினால்தான்! பிரஞ்சுக்காரர்களைப்போல மொழிப்பற்று மிகுந்த கொரியர்கள், பழம்பெருமைமட்டுமே பேசாமல், மொழியையும், தங்களையும், தங்கள் நாட்டையும் முன்னேற்றுவதில் வெற்றிபெற்றிருக்கிறார்கள். பன்னாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டுக்கு வருவதுபோல அங்கு வந்தாலும், அந்நிறுவனங்களில் பணியாற்றவேண்டி, அடிமை உணர்ச்சியை வளர்த்துத் தங்கள் கொரியமொழியைப் புறக்கணிக்கவில்லை.

ஒரு அரிசோனன்

mother child

ஒரு குழந்தை தன் தாயின் கருப்பையிலிருக்கும்போதே தன் தாயிடமிருந்து மொழியைக் கற்கத் துவங்குகிறது என்று வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சி கூறுகிறது[1].  முதலில் அழுவதையெ மொழியாகக் கொண்டிருக்கும் அம்மகவு, தாய் தன்னுடன் பேசும்மொழியைக் காதுறுகிறது.  கேட்கக் கேட்க, அதன் மொழி அறிவு வளர்கிறது.  தாயைவிட யார் தனது குழந்தையுடன் அதிகநேரம் பேசிமகிழ்கிறார்கள்?  எவருமில்லை.

அதையே வள்ளுவர் பெருமானும்,

குழலினிது யாழினிதென்பர் தம்மக்கள்

 மழலைச் சொல் கேளாதவர்

எனச் செப்பிச் சென்றிருக்கிறார்.

தாயே தன் பாலுடன்சேர்த்து அன்புடன் புகட்டும், உரையாடும், மொழியே —  மற்றவர்களால் புரிந்துகொள்ள இயலாவிட்டாலும், அதைக் கவனமாகக் காதுற்று, அதன் பொருளை அறிந்துகொண்டு, தன்னைச் சுற்றியிருப்போருடன், தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள – முதல் ஆசாளான தாயிடமிருந்து அன்புப்பரிசாகப் பெறும் மாபெரும் பரிசே – இவ்வுலகில் தன் வாழ்க்கைப்பயணத்தைத் துவங்க அளிக்கப்படும் அரிய, விலைமதிப்பற்ற மாணிக்கமே – தாய்மொழி.

அதர்வ வேதமும், “இறைவனைத் தாய்மொழியில் துதியுங்கள்; ஏனெனில் அதுதான் ஒருவரின் பிராணனில் கலந்திருக்கிறது.  அதுவே குருதியில் பெருக்கெடுத்தோடுகிறது,”என்று பகர்கிறதென்றால், தாய்மொழியின் சிறப்பைப்பற்றி அறிந்துகொள்ள வேறென்ன அத்தாட்சி வேண்டும்?

அப்படி ஊனோடும், உயிரோடும் கலந்த ஒன்றுதான், நமது ஆன்மாவேதான் தாய்மொழி.  அதை எவரும் தம்மிடமிருந்து தனிப்படுத்த இயலாது.

மாந்தரை விட்டுவிடுவோம்; “நாயினும் கடையேன்…” என்று மாணிக்கவாசகர் திருவாசகத்தில் — சிவபுராணத்தில், தன்னையே தாழ்த்திக்கொள்ள உவமையாக எடுத்துக்கொள்ளும் நாயினையே எடுத்துக்கொள்வோம் – சொந்தக்காரர் அதனுடன் எம்மொழியில் பேசுகிறாரோ, அம்மொழிதான் அந்த நாய்க்கே புரியுமாம்[2];  வேறுமொழியில் பேசினால் அதற்குப் புரியாதாம்.

ஒரு நாய்க்கே அப்படியென்றால் — எந்தவொரு மொழியிலும் உரையாட இயலாத நாய்க்கே அதனுடன் பேசப்படும் மொழி அதன் அறிவில், உணர்வில், புரியும்தன்மையில் கலந்துவிடுகிறதென்றால் —  ஆறறிவுள்ள நமக்கு மொழி எவ்வளவு முக்கியமானது, தனித்தன்மைவாய்ந்தது என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக விளங்குகிறது.

எனவே, எவருக்கும் தன்னுடன் கலந்துவிட்ட தாய்மொழியில் உரையாடுவது, புரிந்துகொள்வது, உள்ளத்தில் எழும் உணர்ச்சிகளைப் பகிர்ந்துகொள்வது, கல்வியறிவுபெறுவது மிகவும் எளிதான ஒன்று என்பது பல ஆராய்ச்சிகளாலும் உறுதிப்படுத்தப்பட்ட ஒன்றேயாகும்.  இதையே, “கல்வியைப் பொறுத்தவரையில், குழந்தைகளுக்கு  அறிவாற்றல் மற்றும் மொழியின் அடிப்படை அவர்களுடைய தாய்மொழியில் கொடுக்கப்படுவதே சிறந்தது” என்று தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த சீதா பய் கூறுகிறார்[3].  அதையே க்ளோபல் பார்ட்னர்ஷிப் ஃபார் எஜுகேஷன் நிறுவனமும் அதன் ஆராய்ச்சியின்வாயிலாக அறிவிக்கிறது[4].

அதுமட்டுமா?  விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்ட மக்களின் மக்கட்செல்வம் முன்னுக்குவருவதற்கு தாய்மொழிக் கல்வியே தலைசிறந்தது என்று சென்ட்டர் ஃபார் எஜுகேஷன் இன்னொவேஷன்ஸ் நிறுவனம் தெரிவிக்கிறது[5].

ஆராய்ச்சிகளும், உணர்வுகளும் தாய்மொழிக்கல்வியே சிறந்த்து என ஆணித்தரமாக அறிவிக்கும்போது, தமிழில் கற்பது தாழ்மையான ஒன்று என்ற தவறான கருத்து தமிழகம் முழுவதும் நிலவிவருகிறது.

அதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.  அவை என்னவென்று எதிர்கொள்வோம்:

  1. தமிழில் கல்வித்தரம் குறைவாக இருக்கிறது.
  2. தமிழில் உயர்கல்விக்கான கல்லூரிகள் இல்லை.
  3. தமிழில் உயர்கல்வி போதிக்கும் ஆசிரியர்களின் தரம் குறைவு, அல்லது தரமான ஆசிரியர்கள் கிடைப்பதில்;லை.
  4. தமிழில் கல்விபெற்றால் தமிழ்நாட்டிலேயே, எம்.என்.சிகளில் [பன்னாட்டு நிறுவனங்கள்] வேலை கிடைக்காது; அப்படியிருக்க, தமிழ்நாட்டுக்கு வெளியிலோ, அல்லது வெளிநாடுகளிலோ எப்படி வேலை கிடைக்கும்? ஆகவே, எம்மொழியில் படித்தால் நல்ல வேலை கிட்டுமோ, அம்மொழியைப் படிக்கவேண்டும்.  [இக்கேள்விதான் எனது “தமிழ் இனி மெல்ல…” புதினத்திற்குக் கருவாக அமைந்தது[6].]
  5. உலக அறிவுபெற, எங்கும் சென்று வெல்ல, ஆங்கிலக் கல்வி தேவை; அப்படியிருக்க, தமிழில் பயின்று கிணற்றுத் தவளையாக இருக்கமுடியுமா?
  6. மொழி கருத்துப் பரிமாற்றத்திற்கான ஒரு கருவிதான்; அதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்?

மேலே சொல்லப்பட்ட கருத்துகள் மான்களாகத் துள்ளி ஓடுகின்றன; அவற்றைத் துரத்திச் சென்று, அக்கருத்துகளில் பொதிந்திருப்பவை உண்மையான மாங்களா, அன்றி உண்மையைப்போலத் தோன்றுகின்ற மாயமான்களா என்று ஆராய்வோம்.

முதலாகச் சொல்லப்படும் தமிழ்க்கல்வித்தரம் குறைவு என்பதை நோக்குவோம்.  எந்தக் கல்வியைக் கண்ணுறும்போதும், அதன் அடிப்படை எப்படி உள்ளது, எம்மொழியில் கற்பித்தால் சிறார்கள் நன்கு கற்பார்கள் என்று நோக்கினால், தாய்மொழிக்கல்வியே என்று ஆய்வுகள் கூறுகின்றன என்பதை முன்பே கண்டோம்.  எனவே, குழந்தைகள் தமிழில் கற்பிக்கப்படும் அடிப்படைக் கல்வியையே சிறப்பாகக் கற்பார்கள் என்பதில் எந்த ஐயமுமில்லை.

அடுத்த இரண்டு கூற்றுகளுக்கு வருவோம். உதாரணமாக, கின்டர் கார்டன் [Kinder Garden] எனும் பள்ளிமுன்படிப்புக்கு[Pre-school] ஆண்டுக்கு இலட்சக்கணக்கான ரூபாய்களைத் தண்ணீர்போலச் செலவிடும் பெற்றோர்கள், தமிழ் அடிப்படைக் கல்விக்கும், தமிழ் உயர்படிப்புக்கும் அவ்வளவு செலவிட்டால், தமிழில் உயர்தரமான கல்வி கற்பிக்கப்படும் துவக்கப்பள்ளிகள், கல்லூரிகள் தோன்றாதா, தமிழ் அறிவியல் நூல்கள் எழுதப்படமாட்டாதா, அல்லது அதிக ஊதியம் கிடைக்கிறது என்று தமிழில் பயிற்றுவிக்க ஆசிரியர்கள்தான் கிடைக்கமாட்டார்களா?

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு;  “நாம் எதை வேண்டுகிறோமோ, அதுதான் நிறைவேறும்!” என்பதே அது.  ஆங்கிலக்கல்விதான் சிறந்ததென்று பணத்தைத் தண்ணீராகச் செலவழித்து தமிழைப் புறக்கணித்து வரும் பெற்றோர்கள், துவக்கத்தில் தங்கள் குழந்தைகள் எப்படித் தடுமாறுகிறார்கள் என்பதையும், ஆங்கிலத் துவக்கப்பள்ளிகள் குழந்தைகளுக்கு அனுமதி கொடுக்குமுன் எப்படிப்பட்ட கடுமையான நிபந்தனைகளுக்கு உள்ளாகிறார்கள் என்பதையும் உணர்ந்துபார்க்கவேண்டும்.  அப்படிப்பட்ட தனியார் ஆங்கிலப்பள்ளிகள் அரசு விதிக்கும் விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றுவதில்லை என்பதே கண்கூடு[7].

அடுத்ததாகச் சொல்லப்படுவது, வேலை கிடைப்பதற்காக ஆங்கிலக்கல்வி வேண்டும் என்பதே.  ஐம்பது ஆண்டுகளுக்குமுன்பு தென்கொரியா எந்தநிலையில் இருந்தது, இப்பொழுது எப்படி உயர்ந்து நிற்கிறது என்பதைப் பார்ப்போமானால், நாமே உணர்ந்துகொள்ளலாம்.

தமிழ்நாட்டில் விரும்பி வாங்கப்படும் ஹ்யன்டே [Hyundae] கார்களைத் தயாரிக்கும் தென்கொரியநாட்டில் அனைவரும் கொரியமொழியிலேயேதான் உயர்கல்வி கற்கிறார்கள்.  ஐம்பது ஆண்டுகளுக்குள் அவர்கள் எப்படி இப்படிப்பட்ட முன்னேற்றத்தை அடைந்தார்கள்?  தாய்மொழிக்கல்வியினால்தான்!  பணி நிமித்தமாகத் தெங்கொரியாவுக்குச் சென்று நான் அறிந்த உண்மை இது!  ஆங்கிலத்தில் எழுதப்படும் பல அறிவியல் நூல்களைக் கொரியமொழிக்கு மாற்றம் செய்கிறார்கள்.  பிரஞ்சுக்காரர்களைப்போல மொழிப்பற்று மிகுந்த கொரியர்கள், பழம்பெருமைமட்டுமே பேசாமல், மொழியையும், தங்களையும், தங்கள் நாட்டையும் முன்னேற்றுவதில் வெற்றிபெற்றிருக்கிறார்கள்.  பன்னாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டுக்கு வருவதுபோல அங்கு வந்தாலும், அந்நிறுவனங்களில் பணியாற்றவேண்டி, அடிமை உணர்ச்சியை வளர்த்துத் தங்கள் கொரியமொழியைப் புறக்கணிக்கவில்லை.

உழைப்புக்கும், சுறுசுறுப்புக்கும் பெயர்போன ஜப்பானியர்களும் இவ்வகையிலேயெ அடங்குவர்.  எம்.என்.சி வேலை என்று தமிழ்நாட்டில் ஆங்கிலக்கல்வி முன்வைக்கப்படுகிறது.  ஆனால், இரண்டாம் உலகப்போருக்குப்பின்னர் அமெரிக்காவினால் எழுபது ஆண்டுகள் முன்னெற்றப்பட்ட ஜப்பான் இன்னும், இன்றும் தன் மொழியை விட்டுவிட்டு ஆங்கிலத்தை தழுவ்வில்லை.  கார் உற்பத்தியில் டயோட்டாவும், ஹான்டாவும், நிசானும் அமெரிக்கக் கார் நிறுவன்ங்களான ஜி.எம்., ஃபோர்ட், க்ரைஸ்லர் நிறுவனங்களை உற்பத்தித் திறனிலும், தரக்கட்டுப்பாட்டிலும் தூக்கிச் சாப்பிட்டுவிட்டன.

இதுவே, நான்கு, ஐந்தாம் கருத்துக்களுக்கான மறுமொழியாகும்.  எனவெ, தமிழில் பயின்று, முன்னுக்குவரலாம்.  வெளிநாடுகளுக்குச் சென்று தங்கள் பெருமையையும் நிலைநாட்டலாம்.  அதற்காக ஆங்கிலத்தைக் கற்க்க்கூடாதென்பதில்லை.  பலமொழிகள் கற்பவர்களுக்கு சிக்கலவிழ்க்கும் திறன் [problem-sovling skills] அதிகம் என்று நிலைநாட்டப்பட்டிருக்கிறது[8].  மனிதமூளையும் பயனடைகிறது[9].

மொழி ஒரு கருவியல்ல.  அது நமது உயிர் என்பதை வேதங்கள் உரைக்கின்றன என்பதை முன்பே குறிப்பிட்டோம்.  இன்னொரு மொழியைக் கற்பது இரண்டாவது ஆன்மாவைப் பெறுவதற்குச் சமம் என்று ஃபிராங்குகளின் அரசரான சார்லமான் எட்டாம் நூற்றாண்டிலேயே பகர்ந்திருக்கிறார்[10].

எனவே, தாய்மொழியான தமிழில் கல்விபெறுவதே சாலச்சிறந்தது என்ற முடிவுக்கு வர இயலுகிறது.  அதற்கு எதிராக வைக்கப்படும் வாதங்கள் விதண்டாவாதங்களே என்றும் அறியமுடிகிறது.

[1]   While in womb, babies begin to learn language from their mothers, Molly McElroy, University of Washington, USA, January 2, 1013, http://www.washington.edu/news/2013/01/02/while-in-womb-babies-begin-learning-language-from-their-mothers/

[2]   Do Dogs Understand Words or Emotions?, by Tia Ghose, Live Science, 2014, http://www.livescience.com/48920-dogs-hear-words-and-emotions.html

[3]   Innovating Educaton:  Archives: Mothertongu Education, https://innovatingeducation.wordpress.com/category/mother-tongue-education/

[4]   Chilren Learn Better in Their Mother-tongue, Advancing reserch on mother tongu-based multi-lingual education, Global Partnership Foundation, http://www.globalpartnership.org/blog/children-learn-better-their-mother-tongue

[5]   Mother-tongue Education, Center for Education Innovations, http://www.educationinnovations.org/program/mother-tongue-education-mte

[6]   தமிழ் இனி மெல்ல…, அரிசோனா [தேவ்] மகாதேவன் (ஒரு அரிசோனன்),  தாரிணி பதிப்பகம், சென்னை, 2014

[7]   Private and Public Schooling: The Indian Experience, by Geeta Gandhi Kingdon, University of Oxford, p44, 2005

[8]   The Benefits of Multilingualism, By Michał B. Paradowski, Mutilingual Living, University of Warsaw, http://www.multilingualliving.com/2010/05/01/the-benefits-of-multilingualism/

[9]   Brains Benefit from Multilingualism, Academy of Finland, 2009, http://www.sciencedaily.com/releases/2009/10/091029151807.htm

[10]   Charlimagne, King of the Franks

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *