வரிவிதிப்பில் ஆக்கப்பூர்வமான ஒரு புதிய சிந்தனை

1

பவள சங்கரி

தலையங்கம்

வருமான வரி ஒழிப்பு பற்றி உயர்மட்டக் குழு ஆலோசனை

இன்று பரவலாக பேசப்படும் வருமான வரி ஒழிப்பு பற்றி மகாராஷ்டிர மாநிலம் ஔரங்காபாத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் அர்த்தகிரந்தி பிரதிஸ்தன் என்ற தன்னார்வக் குழுவினரின் அறிக்கையின்படி வருமான வரி மற்றும், மத்திய மாநில அரசுகளின் முப்பது வகையான வரிகளை நீக்குதல் சம்பந்தமான செயல்பாடுகள் துணை உயர்மட்ட குழுவின் ஆய்வில் இருப்பதாக செய்திகள் வருகின்றன. இதே கருத்தை நம் வல்லமை தலையங்கத்தில் சென்ற 2014ஆம் ஆண்டே ‘புதிய நிதிநிலை அறிக்கையும், மக்கள் எதிர்பார்ப்பும்!’ (Saturday, June 7, 2014, 22:40) என்ற தலைப்பில் நாம் வெளியிட்டோம்.

அர்த்தகிரந்தியின் அறிக்கையின்படி ஒரு இலட்சத்து நாற்பதாயிரம் கோடி ரூபாய் அரசிற்கு வருமானம் வரும் என்று குறிப்பிட்டுள்ளார்கள். ஆயினும் இத்திட்டத்தை இன்னும் விரிவாக செயல்படுத்தினால் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரிதும் இடையூறாக இருக்கும் விற்பனை வரியையும் முற்றிலும் நீக்கிவிடலாம். அதாவது வருமான வரி, விற்பனை வரி அலுவலகங்களின் அவசியமே இல்லாமல் போகும் என்பதால் அந்த அலுவலகப் பணியாளர்களை மாற்று வகையில் வளர்ச்சித் திட்டங்களுக்குப் பயன்படுத்தினால் கையூட்டுகளும் குறைவதோடு வளர்ச்சிப் பணிகளும் பன்மடங்கு பெருகும். இதற்காக ஒவ்வொரு தனி நபரையும், பொது நிர்வாகங்களையும் தனிப்பட்ட முறையில் சோதனையிட்டு கண்டுபிடிக்க வேண்டிய அவசியமும் இருக்காது. ஒவ்வொரு மணித்துளியிலும் அரசிற்கு முழுமையான வருவாய் வந்து கொண்டிருக்கும். இதற்கு ‘பணப் பரிமாற்ற வரி’ என்றும் பெயரிடலாம். இதன் மூலம் அனைத்து வகையான பணப் பறிமாற்றங்களும் வங்கிகள் மற்றும் வங்கி அட்டைகள் மூலமாகவே நடைபெறும். இதனால் பல இலட்சம் கோடிகள் அரசிற்கு வருமானமாக அதிகரிப்பதுடன் செலவும் கணிசமாகக் குறையும். கருப்புப் பணமும் முற்றிலுமாக ஒழிக்கப்படும். கையூட்டு, அல்லது கட்சிகளுக்குக் கொடுக்கக்கூடிய அரசியல் நன்கொடைகளோ என அனைத்தும் வெளிப்படையாகவே இருக்கும். நாசிக்கில் அச்சடிக்கப்படும் ரூபாய் நோட்டுகள் 80 சதவிகிதம் குறையும். நாட்டின் பொருளாதார வளர்ச்சி கட்டாயம் 10 சதவிகிதத்தைத் தாண்டும் என்பதும் உறுதி. தொழில் துறையினர் எதற்கும் அஞ்சாமல் நேர்மையாக தமது தொழிலைக் கவனிக்கலாம். அதுபோல் ஏற்றுமதியாளர்கள், விவசாயிகளும் சிரமமின்றி தங்கள் தொழில்களை நடத்தும் வாய்ப்புகளும் பெருகும் என்பதிலும் ஐயமில்லை. தொழிலகங்களோ, தொழிலதிபர்களோ, என எவரும் எந்த ஏமாற்று வேலைகளிலும் ஈடுபட முடியாது. சிறப்பான நிர்வாகம், சிறந்த வளர்ச்சி என்று நாடு முன்னேற்றப் பாதையை நோக்கி பீடு நடை போடும். இதுபோன்று புதிய பொருளாதார சிந்தனைகளுக்கு ஊக்கமளித்தால் நாடு முன்னேற்றப்பாதையில் செல்வது உறுதி. இந்திய மக்களின் வளமான வாழ்க்கைக்கு வித்தாகவும் அமையும். இது மட்டுமன்றி பெரிதும் விவாதம் நடக்கும் ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரிக்கு அவசியம் இல்லாமலும் போகும்.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “வரிவிதிப்பில் ஆக்கப்பூர்வமான ஒரு புதிய சிந்தனை

  1. இந்த தலையங்கத்தை நான் வரவேற்கிறேன். இந்தியாவில் வருமானவரி ஏமாற்றுதல் சகஜம். கிட்டத்தட்ட 4 கோடி வருமானவரி செலுத்திவோர்களிலிடமிருந்து  99 % வரி தானாகவே வந்தடைகிறது, கஜானாவை. 63%  பங்கு வருமானவரி ரூ.20 லக்ஷத்திற்கு மேல் வருமானம் படைக்கும் 4 லக்ஷம் பேர்களிடம் வசூல் ஆகிறது. ஒரு கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்கள் 42,800/- ஆகமொத்தம் மலையை கிள்ளி எலியை பிடிக்கும் முன்னால் அது ஓடி விடுகிறது. மத்தியதர மக்கள் தான் வருமான வரிக்கு உயிர் நாடி. செல்வந்தர்கள் டபாய்த்து விடுவார்கள். ஒழுங்காக கட்டினாலும், ஒரு கோடீஸ்வரர்களும் , லக்ஷாதிபதிகளும், என் மாதிரியான லக்ஷோபலக்ஷம் மத்தியதர மக்களும் ஒரே விகிதத்தில் வரியாட்டப்படுகிறார்கள். வருமான வரியை எடுத்து விட்டு, ஏழையிடமிருந்து எள்ளுருண்டையையும், மத்தியதரத்திலிருந்து இருட்டுக்கடை அல்வாவும், லக்ஷாதிபதிகளிடமிருந்து பாஸுந்தியும், கோடீஸ்வரர்களிடமிருந்து சக்கைப்பிரதமனமும் வாங்க, வருமான வரி வேண்டாம்; செலவு வரி, சேமிப்பு வரி என்றெல்லாம் வழிகளுண்டு. ஆனால் ‘வாலு போனா கத்தி வரணும். ஆமாம்.!
    தணிக்கைத்துறையிலிருந்து நாங்கள் கரடியா கத்தியும் பிரயோஜனம் இல்லையே. பார்க்கலாம்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *