ந்ருஸிம்ஹ மந்த்ரராஜம்
——————————–

dc47cbdd-4586-444c-8d90-a9fa68285b8f
“உக்ரம், வீரம் ,மஹாவிஷ்ணும் ,ஜ்வலந்தம் ,ஸர்வதோமுகம் |
ந்ருஸிம்ஹம்,பீஷணம் ,பத்ரம் ,ம்ருத்யும்ருத்யும் நமாம்யஹம் ||

“வீரியன், வீரன் , வியாபகன் , சைதன்ய
சூரியன் சூக்கும காரியன் -சீறிடும்
சிங்கன் ,எதிரிக்கு சொப்பனம் ,காலகாலன்
மங்களம் சேர்த்திடும் மால்”….

“நானார் வினவ நரசிம்மம் ஆணவத்
தூணார்வம் தட்டித் தகர்த்திடும், -மீனாமை
ஏனசீய வாமன மூணுராம கண்ணனாய்
ஆன ஜெயவிஜயம் அஃது”….

“தனயன் அழைக்க
துரும்பும் அசையவில்லை
தகப்பன் உதைக்க
தூண் பிளந்தது
இரண்ய கசிவு”….

’’எந்தையே எவ்வுயிர்க்கும் முந்தையே ஏகாந்த
சிந்தையே சிக்காத விந்தையே -கந்தையே
ஆனாலு(ம்) என்நெஞ்சைக் கட்டிக் கசக்கிடு
தூணாளும் சிங்கா தயவு’’….

’’தூணுண்டு வீட்டில் துரும்புமுண்டு, வாஞ்சையாய்
நானுண்டு வாராய் நரசிம்மா -பூநின்ற
சாந்த இலக்குமியை ஏந்திக் களிக்கின்ற
காந்த வடிவில் கனிந்து….

’’முரணெனப் பட்டாலும் மூலமே நின்னை
வரவழைக்கக் கண்டேன் வழியை -இரணியன்போல்
இல்லை இறையென்று சொல்லி இரையாக
மல்லுக்(கு) அழைப்பேன் முனைந்து’’….

வெண்பாவில் ‘’பாகவதம்’’ எழுதிக் கொண்டிருக்கிறேன்….அதிலிருந்து….
————————————————————————–

காட்டடா அந்தக் கருநீலப் பூதத்தை
போட்டடைப்பேன் இத்தூணில் பூச்சியாய் -வேட்டையை
ஆடத் துவங்கிய அப்பனுக்குக் காட்டினான்
கூடத்து தூணுக்கே கை….

பக்தப் பிரகலாதன் பேச்சை ருஜுப்படுத்த
சக்திக்கு மீறிய சங்கடமாய் -திக்கெட்டை
தேகமாய்க் கொண்டவன் ஏகினான் தூண்வேக
வேகமாய் வைகுண்டம் விட்டு….

கள்ளத் தனம்செய்தென் பிள்ளை பிடித்தவனே
உள்ளத் துணிவிருந்தால் ஊர்ந்துவா -முள்ளிட்ட
பாதுகையால் தூணுதைக்க பாதிநர பாதிசிங்கம்
காதுசிகை கோதி குதிப்பு….

சாயங்கா லம்வரை சண்டை புரிந்தந்த
சீயங்கா லைமடித்து, சோர்ந்தெழுந்து -பாயும்
இரணியனை தூக்கி இடைவாசல் வைத்து
கரநுனியால் கீறிக் கிழிப்பு….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *