நிர்மலா ராகவன்

தாம்பத்தியத்தில் தலைவலி

உனையறிந்தால்
கேள்வி: எங்களுக்குக் கல்யாணமாகி ஐந்து வருடங்கள் ஆகின்றன. என் கணவர் என்னுடன் ஒத்துப்போகவே மாட்டேன் என்கிறார். தினமுமே எங்களுக்குள் சண்டை வருகிறது. இதை எப்படித் தடுப்பது?

விளக்கம்: என்னதான் வாழ்க்கைத்துணையாக இருந்தாலும், நம் விருப்பத்திற்கேற்ப ஒருவரை மாற்ற முடியாது. நம்மை நாமே கட்டுப்படுத்திக்கொள்வதுதான் முடிந்த காரியம். பெரிய மனதிருந்தால், மற்றவரது குறைகளை அப்படியே ஏற்றுக்கொள்ளலாம். (நம்மை ஒத்தவர்களிடம் பேசிச் சிரிக்கலாம்).

கணவன்-மனைவியருக்குள் ஏன் சண்டை பூசல் வருகிறது?

1 ஒருவர் பேசும்போது, மற்றொருவர் தன்பாட்டில் ஏதாவது செய்துகொண்டிருப்பது. உதாரணமாக, கணவரோ அல்லது மனைவியோ தொலைகாட்சியில் கவனத்தைப் பதித்தபடி, மற்றவர் பேசும்போது அசுவாரசியமாக `உம்’ கொட்டியபடி இருத்தல். பத்திரிகையைப் படிப்பதில் ஆழ்ந்திருத்தல், கைத்தொலைபேசியில் வேறு யாருடனோ உரையாடுவது இதெல்லாம்கூட தொடர்பைத் தகர்க்கும். `தன்னைக் கவனிக்கிறாரா (கவனிக்கிறாளா), பார்!’ என்ற ஆத்திரத்தை விளைவிக்கும். இப்படி எதிலாவது ஈடுபட்டிருந்தாலும், அதைத் தாற்காலிகமாக நிறுத்தி வைத்துவிட்டுக் கவனிப்பது நம்முடன் பேசுபவருக்கு நாம் கொடுக்கும் மரியாதை.

ஒருவர் முக்கியமான விஷயத்தைப் பேசிக் கொண்டிருக்கும்போது, இடைமறித்து ஏதாவது பேசுவது, `நீ எப்பவுமே இப்படித்தான்!’ என்ற வகையில் அலட்சியப்படுத்துவது — இதெல்லாமே சண்டைக்குக் காரணமாக அமையும். தலையை லேசாக அசைத்து, ஒருவர் கூறுவதை நாம் சரியாகப் புரிந்துகொண்டோமா என்று அவர் கூறியதில் சந்தேகம் கேட்பது உசிதம்.

நாம் கவனிக்கிறோம் என்பதை உடல் மொழியால் காட்டுவது: தலையைச் சற்றே குனிந்து, காதை ஒருவர் பக்கம் திருப்பிக்கொண்டு அவர் சொல்வதைக் கேட்கத் தயாரானால், அவருக்கு நம்மிடம் மேலும் பேச உற்சாகமாக இருக்கும்.

2.  நம் தேவைகளைப் புறக்கணித்துவிட்டு, பிற வேலைகளைச் செய்வதே தலையாய கடமையாக எண்ணிச் செய்வதுதான் நல்ல பெண்ணுக்கு அழகு என்று நம்மில் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். (அல்லது, வளர்க்கப்பட்டிருக்கிறோம்). அப்படி நடந்தால், நாளடைவில் எரிச்சல்தான் உண்டாகும். அந்த ஆத்திரம் வேறு பக்கம் திரும்பும்.

கதை: நான் வீட்டிலும், வெளியிலும் வேலை பார்த்த காலத்தில், சனிக்கிழமையானால் காரணமின்றி குழந்தைகளிடம் எரிந்து விழுவேன். அவர்கள் சிரித்தபடி, `நாங்கள் இன்று சமைக்கிறோம். நீ எழுதும்மா!’ என்பார்கள். அவர்களுக்குச் சமைக்கத் தெரியாது என்பது வேறு விஷயம். அதன்பின், ஒவ்வொரு சனியும் எங்கள் வீட்டில் நூடுல்ஸ்தான்! மேக்கியையும், மசாலாவையும் சேர்த்துப்போட்டு, நீரில் கொதிக்கவைத்தால், ஆயிற்று சமையல்! நானும் உற்சாகமாக விடுமுறை நாட்களை எதிர்பார்க்க ஆரம்பித்தேன்.

நீதி: உங்களுக்கு எழுதவோ, படிக்கவோ பிடிக்குமானால், அதை அடியோடு விடத் தேவையில்லை. வாரம் சில தினங்களாவது சற்று நேரத்தை ஏதாவது ஒரு பொழுதுபோக்கிற்காக ஒதுக்கலாமே! பெரிய தியாகிபோல் உங்களை எண்ணிக்கொள்ளாது, உங்கள் குடும்பத்தினருடன் கலந்து பேசினால் புரிந்துகொள்ள மாட்டார்களா, என்ன!

3. பரஸ்பர நம்பிக்கை

`நான் ஏதாவது நடிகையின் அழகைப் புகழ்ந்தால்கூட என் மனைவிக்குக் கோபம் வருகிறது!’ என்றார் என்னுடன் வேலை பார்த்த நண்பர். என்னிடம் கேட்டார், `அவளுக்குக் கண் அழகா இருக்கும். ரொம்ப குறைச்சலா டிரெஸ் போட்டுக்கிட்டு டான்ஸ் ஆடுவாளே! அவ பேர் என்ன?’

நான் சிரித்தபடி பதில் சொன்னேன். (நீங்களும் ஊகித்திருப்பீர்கள்).

இதில் பொறாமைப்பட என்ன இருக்கிறது! எங்கோ இருக்கும் அந்த நடிகை இவரை ஒரு கூட்டத்தில் இனம் கண்டுகொள்ளப்போகிறாளா, என்ன!

கதை: `நமக்குத் திருமணமாவதற்குமுன் நான் பல பெண்களுடன் பழகியிருக்கிறேன்!’ என்று ஒருவர் தான் காதலித்து மணந்த மனைவியிடம் வெள்ளைமனத்துடன் கூறினாராம் — காதலிக்கும் இருவருக்குள் எவ்வித ரகசியமும் இருக்கக்கூடாது என்று நினைத்ததால். அதுதான் அவர் செயுத தவறு. அவள் அவரை அதன்பின் நம்பவே மறுத்துவிட்டாள். அனுதினமும் மனைவி ஏவிய சொல்லம்புகளைப் பொறுக்காது, விவாகரத்து பெற்றுவிட்டதாக என்னிடம் வலிய வந்து கூறினார். `நான் அவளை எவ்விதத்திலும் கட்டுப்படுத்தவில்லை. ஆனால், என் மணவாழ்க்கை ஏன் பொய்த்தது?’ என்றவரிடம் அனுதாபம்தான் காட்டமுடிந்தது என்னால்.

தனது, அல்லது வாழ்க்கைத்துணையின், கடந்த காலத்தையே ஒருவர் கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருந்தால், நிகழ்காலம் நரகமாகிவிடாதா! அதேபோல், வருங்காலக் கனவுகளிலேயே ஆழ்ந்துவிடுவதும் நிகழ்காலத்தைப் பாதிப்பதுதான்.

4. நம்மையே நாம் ஏற்காதபோது, நம் உணர்ச்சிகளை மதிக்காதபோது, மகிழ்ச்சி இராது.

`எப்போதும் என்ன யோசிப்பீர்கள்?’ என்று நான் சிலரைக் கேட்டேன்.

ஒரு பெண்மணியின் பதில்: `தெரிந்தவர்கள் யாராவது என்னைப் பார்த்துச் சிரிக்காவிட்டால், மனமுடைந்து போய்விடுவேன்! நாம் என்ன தப்பு செய்துவிட்டோம்?’ என்ற கேள்வி நாளெல்லாம் மண்டையைக் குடையும்.

தன்னைப்பற்றிப் பிறர் என்ன நினைக்கிறார்களோ என்ற கவலையிலேயே காலத்தைக் கழிப்பவர்களுக்கு என்றுமே நிம்மதி கிடையாது. ஏனெனில், எல்லாருமே அவர்களைப்பற்றி ஒரேவிதமான எண்ணத்தைக் கொண்டிருக்க மாட்டார்களே!

தீர்வு: `நான் இப்படி நடப்பதுதான் எனக்கு ஏற்றதாக, நிம்மதியை அளிப்பதாக இருக்கிறது. மற்றவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசிவிட்டுப் போகட்டும்,’ என்ற மனப்போக்கை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

வேறு சிலர் துக்கம், இழப்பு, தனிமை முதலியவற்றில் ஏதாவது ஒன்றால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். ஆனால், அதனால் தாம் பாதிக்கப்பட்டதாகக் காட்டிக்கொள்வது இழுக்கு என்று நினைப்பார்கள்.

கதை: ஒரு கூட்டுக்குடும்பத்தில் பத்து வயதான சிறுவன் இறந்து ஒரு மாதத்திற்குள் தீபாவளி கொண்டாட்டம் தடபுடல் பட்டது. `அவன் விதி அவ்வளவுதான்!’ என்று விட்டேற்றியாகப் பேசினார்கள். அக்குடும்பத்தில், பெற்ற தாய் உள்பட, யாருக்குமே சிறிதளவுகூட துக்கம் இருந்திருக்காதா? ஏன் அதை ஒத்துக்கொள்ள மறுக்கிறார்கள்?

எங்கள் உறவினர் ஒருவருக்கு நான்கைந்து குழந்தைகள் பிறந்து ஒரு வருடத்திற்குள் இறந்தனவாம். ஆனால், தாயார் எந்த உணர்ச்சியையும் வெளியில் காட்டிக்கொள்ளாது, தன் கடமைகளைச் செய்துவந்தாள். வீட்டிற்கு மூத்த மருமகள் என்ற முறையில், அதுதான் அவளிடம் எதிர்பார்க்கப்பட்டது.

இம்மாதிரி தமது உணர்ச்சிகளை மறைத்துக்கொண்டு, உள்ளுக்குள்ளேயே மறுகுபவர்கள் ஆத்திரம், குற்ற உணர்வு, அவமானம் என்று தமக்கே புரியாத பல்விதமானவைகளுக்கு ஆளாகிறார்கள். பிறரிடம் ஓயாது குற்றம் காண்பது, பழிகூறுவது, காரணமில்லாது கோபப்படுவது, அல்லது உள்ளுக்குள்ளேயே ஒடுங்கிவிடுவது — இதெல்லாம் வேண்டாத விளைவுகள். இம்மாதிரி தருணங்களில், துணைவர் (துணைவி) தன்னையும் பார்த்துக்கொள்ள வேண்டுவது அவர் கடமை என்று எண்ணுவார்கள். நடக்கிற காரியமா!

அப்படி ஒருவர் எதிர்பார்த்துக்கொண்டே இருந்தால், கூட இருப்பவருக்கும் நிம்மதி போய்விடும். பித்துப் பிடித்துவிடுவது போலிருக்கும். `இது அவர் வந்த வழி!’ என்று தன் காரியத்தைப் பார்த்துக்கொண்டு போகவேண்டியதுதான்.

4. மணமானவர்கள் மனத்தாங்கல் இல்லாது நட்புடன் பழக, வீட்டு வேலைகளையும், செலவுகளையும் பகிர்வது நல்லதொரு வழி. இருவருமே உத்தியோகம் பார்க்கும் நிலையில் மட்டுமல்ல; நாள்பூராவும் வீட்டிலேயே அலுத்துச் சலித்து வேலை பார்க்கும் மனைவிக்கு சிறிது உதவி செய்தால் அவளுடைய நன்றியையும் அன்பையும் பெறலாம்.

5 `கல்யாணம்தான் ஆகிவிட்டதே! இனி என்ன!’ என்று தம்பதிகள் அலட்சியமாக இருந்தால் உறவு எப்படி பலப்படும்? வாரத்தில் ஒரு நாளை ஒதுக்குங்கள் — இருவரும் எங்காவது தனியாக ஊர்சுற்ற. முதல் நாளும், மறுநாளும் சண்டை போடலாம்!

தாம்பத்திய உறவுகளில் இருக்கும் எல்லா சிக்கல்களையும் தீர்க்க முடியாது. அப்படி ஒரு நிலை இருந்தால், அவைகளைப்பற்றி எந்நேரமும் நினைத்தோ, பிறரிடம் பேசிப் பேசியோ ஆறுதல் தேட நினைக்காது, வேறு ஆக்கபூர்வமான காரியங்களில் ஈடுபடுவதுதான் நிம்மதிக்கான வழி.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *