வல்லமையாளர் விருது பொறுப்பேற்கும் செ.இரா. செல்வக்குமார்

பவள சங்கரி

அன்பினிய நண்பர்களுக்கு,

வணக்கம். கடந்த 200 வாரங்களாக வல்லமையாளர் தேர்வை மிகச் சிறந்த முறையில் நடத்தியுள்ள நம் வல்லமை ஆலோசனைக் குழு உறுப்பினர் திரு.திவாகர், வல்லமை ஆசிரியர் குழு உறுப்பினர் முனைவர் தேமொழி அவர்களையும் மனமார வாழ்த்தி, அடுத்து உயர்திரு செ.இரா. செல்வக்குமார் அவர்களை இப்பொறுப்பை ஏற்று நடத்த மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். மேலும் இப்பணியில் உதவிய திரு. இன்னம்பூரான்,  பேராசிரியர் நாகராசன் அவர்களையும் பாராட்டி மகிழ்கிறோம். இதுவரை 200 வல்லமையாளர்களை நாம் பாராட்டி மகிழ்ந்திருக்கிறோம். மேலும் பல வல்லமையாளர்களை திருமிகு செ.இரா. செல்வக்குமார் அவர்கள் தெரிவு செய்ய உள்ளார்கள் என்பதையும்  மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

crசெ.இரா. செல்வக்குமார் கனடாவில் உள்ள வாட்டர்லூ பல்கலைக்கழகத்திலே மின்னிய, கணினியியப் பொறியியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றுகின்றார். அவருடைய ஆய்வும் கற்பித்தலும் குறைக்கடத்தி நுண்கருவிகள் (Semiconductor micro-nano eleactronic devices) துறையைச் சார்ந்தது. அவர் கிண்டி பொறியியற்கல்லூரியில் இளநிலை பொறியியற்பட்டமும் இந்தியத்தொழினுட்பக்கழகம் (ஐ.ஐ.டி), மும்பையில் முதுநிலைப்பட்டமும், சென்னை இந்தியத்தொழினுட்பக்கழகத்தில் (ஐ.ஐ.டி)  முனைவர்ப்பட்டமும் பெற்றவர். பின்னர்  வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் முதலில் முதுமுனைவராகவும் பின்னர் பேராசிரியராகவும் ஆனார். 1992 இல் கலிபோர்னியாவிலுள்ள இசுட்டான்போர்டு (Stanford) பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராகவும், (Visiting faculty),  பின்னர் 2003 இல் பிரின்சிட்டன் (Princeton) பல்கலைக்கழகத்தில் வருகைதரு சிறப்பாளராகவும் (Visiting Fellow) பணியாற்றியிருக்கின்றார். வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் 9 ஆண்டுகள் (1996-2005) வாட்டுமேட்டு (WATMAT) என்னும்  பொருளறிவியல், பொறியியல் நடுவத்தின்  இயக்குநராக இருந்தார். ஐ.இ.இ.இ (IEEE)  என்னும் அனைத்துலகப் பொறியியல் நிறுவனம் நடத்தும்  ‘’IEEE Bipolar/BiCMOS Circuits and Technology Meeting.’’ என்னும் கருத்தரங்கத்தின் தலைவராக 1994 இல் இருந்தார்.  ஐ.இ.இ.இ ஆய்விதழ் ஒன்றுக்குச் சிறப்பாசிரியராகவும்  இருந்தார். வாட்டர்லூ பல்கலைக்கழகத்தின் மேலவை (Senate) உறுப்பினராகவும், பல்கலைக்கழக ஆளுநர் குழுவின் (Board of governors) உறுப்பினராகவும் 3 ஆண்டுகள் (2006-2009) பணியாற்றியிருக்கின்றார். 1992 முதல்  American Men and Women of Science என்னும் தொகைநூலில் குறிக்கப்பெற்றுள்ளார்.

crs

இவர் கடந்த 25 ஆண்டுகளாக இணையத்தில் தமிழில் எழுதிவருகின்றார். Alt.culture.tamil,  soc.culture.tamil, tamil.net போன்ற மடலாடற்குழுமங்களின் நிறைய எழுதியிருக்கின்றார். அதன் பின் இப்பொழுது முகநூலிலும், அவர் நடத்தும் தமிழ்மன்றம் என்னும் கூகுள் மடலாடற்குழுமத்திலும் தொடர்ந்து எழுதிவருகின்றார். இவர் தமிழ் விக்கிப்பீடியாவில் ஏறத்தாழ 820 கட்டுரைகளைத்தொடங்கி எழுதியும் 20,000 உக்கும் கூடுதலான தொகுப்புகள் செய்தும் ஆக்கம் அளித்திருக்கின்றார். பள்ளிநாள்களிலிருந்தே தமிழ்ப்பற்றுடன் தமிழ்வளர்ச்சி சார்ந்தவற்றில் பங்காற்றி வருகின்றார். முகநூலில் அதிகமான தமிழ் மொழிபெயர்ப்புகள் செய்தவர் இவரே.   மாதத்துக்கு 80 மில்லியன் பேருக்கும் மேலானோர் வருகைதரும் கோரா (Quora) என்னும் தளத்தின் முன்னணி எழுத்தாளர்களில்  (Top Writers) ஒருவராக 2016 இல் அறிவிக்கப்பெற்றுள்ளார்.  அங்கு  அவர் எழுதியவையும் பெரும்பாலும் தமிழ்சார்ந்தவையே.

cr2

மேலும் ஓவியம் வரைதல், களிமண் சிலைவடித்தல், பாப்புனைதல், பாறையேற்றம், மொழியியல் ஆர்வம் போன்ற பல்கலைகளிலும் வித்தகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவரைப்பற்றிய குறிப்புகள் அடங்கிய வலைப்பக்கங்கள்:

https://ece.uwaterloo.ca/~selvakum/biop.html

https://uwaterloo.ca/electrical-computer-engineering/people-profiles/chettypalayam-selva-selvakumar

 விக்கிப்பீடியா பயனர் பக்கம்:  https://ta.wikipedia.org/s/1lo
முகநூல் பக்கம் :  https://www.facebook.com/c.r.selvakumar

இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.com , vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில்  தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம்.  மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

_______________________________________________________

About the Author

has written 1213 stories on this site.

நிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்

6 Comments on “வல்லமையாளர் விருது பொறுப்பேற்கும் செ.இரா. செல்வக்குமார்”

 • Innamburan wrote on 29 February, 2016, 5:01

  நண்பர் திரு. செல்வகுமார் அவர்களை வரவேற்கிறேன்.ஒரு கால கட்டத்தில் இந்த பொறுப்பை வகித்தவன் என்ற ஞாபகத்தில்  ஒரு பரிந்துரையை என் கட்டுரை ஒன்றில் அனுப்பியுள்ளேன். அதை ஆசிரியர் திரு.செல்வக்குமாருக்கு அனுப்புவாராக.

 • செ.இரா.செல்வக்குமார் wrote on 29 February, 2016, 20:03

  வரவேற்புக்கு மிக்க நன்றி இன்னபூரான் ஐயா.  கட்டாயம் பார்க்கின்றேன். 

 • Innamburan wrote on 1 March, 2016, 20:03

  அது இன்னும் பிரசுரம் ஆகவில்லை. ஆசிரியருக்கு எழுதியுள்ளேன்

 • சக்தி சக்திதாசன் wrote on 6 March, 2016, 21:20

  அன்புநிறை உயர்திரு பேராசிரியர் செ.ரா.செல்வக்குமார் அவர்கள் இப்பொறுப்புக்கு வருகை தந்தமை அற்புதம். இதுவரை இப்பணியைத் திறம்படச் செய்தவர்களுக்கு நன்றி கூறும் அதேவேளை இனிய பேராசிரியரை அன்புடன் வரவேற்போம். மேலும் பல வல்லமையாளர்கள் உங்கள் தெரிவினால் விருது பெற்றிடட்டும்.

 • செ.இரா.செல்வக்குமார் wrote on 7 March, 2016, 1:00

  சக்தி சக்திதாசன் ஐயா, உங்கள் நன்மொழிகளுக்கும்  இனிய வரவேற்புக்கும் மிக்க நன்றி.

 • தமிழ்த்தேனீ wrote on 20 April, 2016, 17:10

  இனிய  வாழ்த்துக்கள்  திரு  செல்வகுமார்   அவர்களே

  அன்புடன்
  தமிழ்த்தேனீ

Write a Comment [மறுமொழி இடவும்]


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.