நிர்மலா ராகவன்

தற்காலத்தில் பண்டையகாலக் கருத்துகள்

உனையறிந்தால்12

கேள்வி: எக்காலத்திலோ தக்கதென சான்றோர் சொல்லிவிட்டுப்போன கருத்துகள் தற்காலத்துக்கும் உகந்தைவைதானா?

விளக்கம்:

பழையன கழிதலும் புதியன புகுதலும் மனித வாழ்க்கையின் தன்மை. இதை ஏற்காது, நம்மில் பலர் பழமைவாதிகளாக இருப்பதில்தான் பெருமை கொள்வார்கள். மூதாதையர் காலத்து நடைமுறைகளையும், பழமொழிகளையும் மேற்கோள் காட்டி, காலத்துக்கு ஒவ்வாத தம் நடத்தையை நியாயப்படுத்திக்கொள்ள முனைவார்கள். காலம் அதேபோல் இன்றும் இல்லையே!

முன்னேற்றம் என்பது நல்லதொரு மாற்றத்தை நாமே ஏற்படுத்திக்கொள்வது. முன்னேற்றம் என்பதன் பொருளே மனிதனுக்கு மனிதன் மாறுபடும் — பணக்காரராக ஆவது, புகழுடன் விளங்குவது, கல்வியில் சிறப்பது இப்படி.

`போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து’ என்பதைச் சிலர் வலியுறுத்த, பலரும் கைப்பிடித்து வருகின்றனர். நமது வாழ்க்கைத்தரம் ஒரே நிலையில் இருக்கவேண்டும். மேன்மேலும் புகழ், பொருளுக்கெல்லாம் ஆசைப்படக்கூடாது என்று மனதைத் தேற்றிக்கொள்வார்கள் இவர்கள். புதிய பாதைகளில் என்னென்ன இடர்பாடுகள் எதிர்ப்படுமோ என்ற பயமும் இதற்கு அடிப்படைக் காரணமாக இருக்கலாம்.

வயதில் மூத்தவர்கள் சொல்வதை அப்படியே கேட்டு நடந்து, `ஏன் நான் மட்டும் முன்னேற்றமே அடையாமல், பின்தங்கியே இருக்கிறேன்?’ என்று வாடுபவர்கள் பலர்.

சிறு வயதில், பெற்றோர் சொல்வதைக் கேட்க வேண்டியதுதான். ஆனால், அது ஒருவருடைய இயற்கையான திறன்களை மழுங்கடித்து, மனநலனையே பாதிக்கும் அளவுக்கு இருந்தால், எதற்குப் பொறுத்துப்போவது?

கதை: ஒரு பையனுக்குச் சிறுவயது முதலே சித்திரம் வரைவதில்தான் ஆர்வம். அதிகம் பேசாது, ஓயாது வரைவான். பார்ப்பதையெல்லாம் மிகக் குறுகிய காலத்தில் அப்படியே வரையும் திறன் அவனுக்கு வாய்த்திருந்தது.

அவனுடைய தந்தையைப் பொறுத்தவரை அவன் நேரத்தைப் பள்ளிப்படிப்பில் மட்டும்தான் செலவழிக்க வேண்டும். மற்ற செயல்கள் எல்லாம் வீண். அவன் காகிதத்தையும், பென்சிலையும் எடுத்தாலே இரைவார். பையன் பயந்து, பீரோவுக்குப் பின்னால் ஒளிந்து வரைய ஆரம்பித்தான். கண் பார்வை கெட்டது. அப்பா வெளியில் போனால் தைரியமாக வரைவான். அவர் வீட்டுக்குள் நுழைவதைப் பார்த்து குடும்பத்தினர் எல்லாரும், `அப்பா!’ என்று அடக்கிய குரலில் எச்சரிப்பார்கள். உடனே ஒளிந்து வரைவது வழக்கமாகப் போயிற்று.

தாயோ, `பருவ வயதில் பெண்களையே வரைகிறானே!’ என்று கவலைப்பட்டு அரற்றினார்களாம். `அது தவறோ?’ என்று, இயற்கையாக எழுந்த கற்பனையை அதன்பின் விலக்க, `பெண்கள்’ என்றாலே குழப்பம்தான் எழ ஆரம்பித்தது.

தனக்கு மிகவும் பிடித்த காரியத்தைச் செய்ய ஏதோ தீய பழக்கத்தில் ஈடுபட்டதைப்போல அவன் மறைத்துச் செய்தது அவனுடைய தன்னம்பிக்கையைக் குலைத்து, பிற்காலத்தில் இல்லற வாழ்வையே நரகமாக்கியது.

`நான் அப்படித்தான் வரைவேன்!’ என்று நீங்கள் உங்கள் அப்பாவை எதிர்த்திருக்க வேண்டும்,’ என்றேன். காலங்கடந்து, வருத்தத்துடன் தலையை அசைத்தார் அந்த மனிதர். இயற்கையாக அவருக்கு அமைந்திருந்த திறனில் உலகப்புகழ் பெற்றிருக்க முடியும். அது தெரிந்திருந்தும், தந்தைக்காக விட்டுக்கொடுத்தது எவ்வளவு கொடுமை!

கலைஞர்கள் மென்மையான குணம் படைத்தவர்கள். அவர்கள் மனதை நொறுக்குவது பிறருக்குப் பலத்தை அளிப்பதுபோல் இருக்கும். அதனால் முனைந்து செய்வார்கள்.

எழுதுவதும் அப்படித்தான். ஆண்கள் என்ன எழுதினாலும், எவ்வளவு ஆபாசமாக எழுதினாலும் வாசகர்கள் பொறுத்துப் போகிறார்கள். ஆனால், ஒரு பெண் கதாநாயகனை வர்ணித்தோ, ஆண்-பெண் உறவைப்பற்றி விரிவாக எழுதினாலோ சர்ச்சைக்குள்ளாகிறாள். கற்பனை என்பது இருபாலருக்கும் பொது. இதில் என்ன ஆண், பெண் வேறுபாடு?

பெண்களுக்கு மொழிவன்மை ஆண்களைவிட அதிகம் என்கிறது உளவியல். ஆண்குழந்தைகளோ, கைகளால் செய்வது எதையும் பெண்களைவிடச் சிறப்பாகச் செய்வார்கள். இது புரியாது, பொறாமையாலோ, இல்லை, `எங்கே நம்மை மிஞ்சிவிடுவாளோ!’ என்ற பயத்தாலோ எதிர்க்கும் ஆண்களின் கண்டனத்தைப் பொருட்படுத்தாது எழுதும் பெண்கள்தாம் தொடர்ந்து எழுதமுடியும்.

நான் எழுத ஆரம்பித்தபோது, கற்பழிப்பைப்பற்றி ஒரு கதை எழுதி, `எங்கம்மா இதை அனுப்ப விடமாட்டா. நீங்க என்ன சொல்றேள்?’ என்று என் கணவரின் ஒப்புதலைக் கேட்டேன். `கற்பனைதானே? அதனால் என்ன!’ என்றுவிட்டார். அதைப் பிரசுரித்த பத்திரிகை ஆசிரியர், `இது கற்பனைக்கதைதான். உண்மைச் சம்பவமில்லை’ என்று அடியில் ஒரு குறிப்பு எழுதப்போக, பலர் என் கணவரை விசாரித்தார்களாம், `அது என்ன ஸார், அடியிலே அப்படி எழுதியிருக்காங்க?’ என்று!
இறப்பைப்பற்றியும்தான் எவ்வளவோ எழுதியிருக்கிறேன். அது என்னவோ, நான் பல தடவை செத்துப்பிழைத்தவள் என்று எவரும் நினைப்பதில்லை!

ஒருமுறை, `திருக்குறளில் பெண்கள்’ என்ற தலைப்பில் உரையாற்ற என்னை அழைத்திருந்தார்கள்.

பேசி முடித்ததும், ஒருவர் எழுந்து, `திருவள்ளுவர் பெண்களின் பேச்சைக் கேட்டு ஆண்கள் நடக்கக்கூடாது’ என்று சொல்லியிருக்கிறார். அதை நீங்கள் கவனிக்க வேண்டும்!’ என்று விண்ணப்பித்தார்.

`அந்தக் காலத்தில் பெண்கள் கல்வியறிவு அற்றவர்களாக இருக்கவேண்டிய கட்டாயம். வெளியுலகைப்பற்றி அதிகம் தெரியாமலிருந்திருக்கலாம். இப்போதும் அப்படியா?’ என்று நான் பதிலளித்தபோது, சற்றும் எதிர்பாராவிதமாக பெண்கள் தலைக்குமேல் கையை உயர்த்தித் தட்டி, தம் ஆதரவைத் தெரிவித்தார்கள்!

நல்ல வேளை, `பெண்ணுக்குப் படிப்பு எதற்கு?’ என்ற காலம் போய்விட்டது.

உயர்கல்வி பெற்று, உத்தியோகமும் பார்க்கும் ஒரு பெண்ணைப் பார்ப்போம். வாழ்வில் முன்னேற அவசியமானது கல்வி. ஆணோ, பெண்ணோ, தன்னை நாடுபவர்களுக்கு சுய நம்பிக்கையையும், சொந்தக்காலில் நிற்கும் துணிவையும் அளிப்பது கல்விதான். களவாடவோ, அழிக்கவோ முடியாதது.

ஆனால், படித்த பெண் தனது வருவாயில் பெரும்பகுதியைக் கணவனிடம் கொடுத்துவிடுவது பதிபக்தியா?
அப்படிச் செய்தால், மனைவியின்மீது ஆண் கொண்டுள்ள அதிகாரமும், ஆக்கிரமிப்பும் இன்னும் அதிகமாகாதா!

`கணவனே கண் கண்ட தெய்வம்’ என்று ஏதோ மந்திரம்போல, பழைய திரைப்படத்தின் தலைப்பை மூதறிஞர் உரைபோல கெட்டியாகப் பிடித்துக்கொள்பவர்களைக் கேட்கிறேன், கொடுமைப்படுத்துவது தெய்வத்தின் தன்மையாகுமா?
`எனக்குத் திரைப்படங்கள் பிடிக்காது. அதனால், நீயும் பார்க்க்க்கூடாது!’ என்று மிரட்டும் ஆண் எதில் சேர்த்தி?
`அவருக்குப் பிடிக்காவிட்டால் என்ன? நீபாட்டில் போயேன்!’ என்று ஒரு மாதுவிடம் கூற, `கணவர் திட்டினால்?’ என்று பயந்தாள். அவரை மீறிப்போனால், அவள் கெட்டவளாகி விடுவாளா?

ஆக்ககரமாக எதுவும் செய்யத் துணிவோ, அறிவோ இல்லாதவர்களுக்குத்தான் சில பழமொழிகளினால் பலம். நமது துன்பங்களை நாமே களைய முன்வராது போனால், வேறு யார்தான் அதில் அக்கறை காட்டுவர்?

ஒரு குடும்பத்தைச் செவ்வனே நடத்திச்செல்ல வேண்டிய பொறுப்பு ஆண், பெண் இருவருக்குமே இருக்கிறது. இதை ஒருவர் உணரத் தவறும்போது, மற்றொருவர் தக்க முறையைக் காட்ட வேண்டுவது அவசியம். கணவனின் வருவாய்க்கு மேலேயே செலவு செய்யும் பெண்ணாகட்டும், மனைவி என்பவள் தன் தாழ்மை உணர்வுகளுக்கெல்லாம் வடிகால் என்பதுபோல் அவளை கீழ்த்தரமாக நடத்தும் கணவனாகட்டும், இவர்களுக்குத் தக்க முறையைக் காட்டுவது ஒருவருக்கொருவர் செய்யும் கடமை, உபகாரம்.

`குடும்பத்தில் சச்சரவு எதற்கு?’ என்று விட்டுக்கொடுத்துவிட்டு, கையில் காசில்லாததால், வேறு வழியின்றி கணவனின் அடி, உதைகளை ஏற்று, `பொறுமையுடையார் பூமி ஆழ்வார்,’ என்று பிதற்றுவது மடமை.

கோலாலம்பூரில் ஆதரவற்ற பெண்கள் மையத்தில் கணவரால் வதைக்கப்பட்டவர்கள் ஏழ்மை நிலையிலிருந்த பல தமிழ்ப்பெண்களும், படித்து உத்தியோகம் பார்க்கும் மலாய்ப்பெண்களும் மட்டும்தாம் என்பது எனக்கு ஆச்சரியத்தை விளைவித்தது. இவர்கள் மருத்துவர்களின் பரிந்துரைக்குப்பின் காவல் துறையினரால் அங்கு கொண்டு விடப்பட்டவர்கள். (வசதியான குடும்பத்திலிருந்து வரும் தமிழ்ப்பெண்களை எப்படியெல்லாம் வதைத்தாலும், கணவரைக் காட்டிக்கொடுக்க மாட்டார்கள். அப்புறம் குடும்ப கௌரவம் என்ன ஆகிறது?)

மலேசியாவில் மலாய், சீனர், இந்தியர் ஆகிய மூன்று இனங்களும் பிரதானமாக விளங்குகின்றனர்.
`சீனப்பெண்களை கணவன்மார்கள் வதைப்பதே இல்லையா?!’

இல்லத் தலைவி என் ஆச்சரியத்தைக் கண்டு, நிலைமையை விளக்கினாள்: “சீனப்பெண்களுக்குச் சிறு வயது முதலே சொல்லிக் கொடுப்பார்கள்,` நீ சம்பாதிப்பது எல்லாவற்றையும் அப்படியே தூக்கி உன்னை மணப்பவனிடம் கொடுத்துவிடாதே. அவன் மது, மாது, மாஜோங் (சூதாட்டம்) என்று எல்லாவற்றையும் அழித்துவிடுவான். புத்திசாலித்தனமாக அதில் சிறு பங்கையாவது எங்கேயாவது பதுக்கி வை!’ என்று”.

என் சீன மாணவி (17) ஒருத்தியும் அதை உறுதிப்படுத்தினாள்: “எங்கப்பா ரொம்ப மோசம். அம்மாவை அடிப்பார். எனக்குப் பதினஞ்சு வயசானபோது, `நீங்க எல்லாம் கொஞ்சம் பெரியவங்களா ஆகணும்னுதான் இத்தனை வருஷமா பொறுத்துட்டு இருந்தேன். இப்போ, தனியா போறேன்,’ என்று சொல்லிவிட்டு அம்மா எங்கேயோ போய்விட்டாள்”.

மலேசியாவில், மற்ற இரண்டு இனப்பெண்களில் பலர் தம் சம்பாத்தியம் முழுவதையும் கணவரிடம் கொடுத்துவிட்டு, மகிழ்ச்சியற்ற குடும்ப வாழ்க்கையிலிருந்து விடுபடத் தெரியாது மாட்டிக்கொள்வார்களாம். (விவாகரத்து கோருவதில் இந்தியப்பெண்கள் முதலிடம் வகிக்கிறார்கள் என்பது சில ஆண்டுகளுக்குமுன் என் வேண்டுகோளுக்கு இணங்கி, எனக்குக் கொடுக்கப்பட்ட புள்ளிவிவரம்).

`நீங்கள் எழுதுவதுபோல் பெண்கள் சுதந்திரமாக நடந்தால், குடும்பத்தில் சண்டை வருமே!’ என்று ஒருவர் சந்தேகம் தெரிவித்தார்.

எத்தனை காலம்தான் சண்டை போடுவார்கள்! மாற்ற முடியாது என்று புரிந்துபோனதும், தானே விட்டுக்கொடுத்து விடுவார்கள். முடியாவிட்டால் விலகி, அவரவர் வழியைப் பார்த்துக்கொண்டு போகவேண்டியதுதான்.

வாழ்க்கை எவ்வளவு நரகமாக இருந்தாலும், `விதி’ என்று ஏற்றுக்கொள்வது அறிவுடமையாகுமா? அளவுக்கு மீறிய பொறுமையுடன் எந்த அநியாயத்தையும் சகித்துக்கொண்டிருந்தால், வாழ்வில் பிடிப்பு குன்றி, நாளடைவில் நடைப்பிணமாக ஆகிவிடும் அபாயம் இருக்கிறதே!

நம் வாழ்வினை மேம்படுத்திக்கொள்வது நம் கையில்தான் இருக்கிறது. நம் திறமைக்கு ஏற்ப, நமக்கு விருப்பமான துறையைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு, யார் எதிர்த்தாலும், பழித்தாலும் சட்டைசெய்யாது, தீவிர முயற்சியுடன் அதில் இறங்கினால் வெற்றி காண்பது உறுதி. முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்.

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “உன்னையறிந்தால் …… (45)

  1. அன்பினிய சகோதரி உங்களுடைய பதிவுகளை படித்து வந்தாலும் பின்னூட்டம் இடக்கூடிய சந்தர்ப்பம் இன்றுதான் கிடைத்தது. அருமையான பதிவு. உள்ளத்தில் ஊறிடும் உண்மைநிலைகளை அழகாய் வாழ்க்கைக்கு ஏற்ற விதத்தில் எளிமையான் உரைநடையில் ஆக்கியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

  2. மிக்க நன்றி.
    நாம் எழுதுவது பலரையும் போய்ச்சேர வேண்டுமானால், எளிமையாக எழுதவேண்டும் என்பது நான் கற்றறிந்த பாடம்.  
    அன்புடன்,
    நிர்மலா ராகவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *