(Law Makers) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாராட்டு!

1

பவள சங்கரி

தலையங்கம்

ஜனநாயகம் காக்கப்படுவதற்காக எதிர் கட்சியை சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் 6 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து பல மணி நேரங்களாக பேசிக்கொண்டிருக்கிறார்கள். நாட்டின் பாராளுமன்ற எதிர் கட்சித் தலைவர் மட்டும் தொடர்ச்சியாக 11 மணி நேரத்திற்கும் மேல் பேசியுள்ளார். அந்த நாட்டின் பாராளுமன்றத்தின் பாதிக்கு மேல் உள்ள ஆளும் கட்சியினர் அதை அமைதியாக கவனித்தும் வருகின்றனர். அதுவும் அவருடைய பேச்சுகளுக்கு எந்த விதமான இடையூறும் செய்யாமல் கவனித்து வருகிறார்கள். அந்த பாராளுமன்றத்தின் சபாநாயகர் 115 நேரத்திற்கு மேலாக பேசுவதற்கு அனுமதி அளித்துள்ளார். இந்த அதிசயம் நடந்திருப்பது நம் நாட்டில் அல்ல. தென் கொரிய நாட்டில் நடந்த இது முந்தைய கின்னஸ் சாதனையான கனடா பாராளுமன்றத்தில் 50 மணி நேரம் தொடர்ச்சியாகப் பேசியதை முறியடித்து புதிய சாதனை படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க செனட் சபையைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து இந்தியாவில் நடைபெறும் ஆட்சியில் மத உணர்வுகளுக்கு சகிப்புத் தன்மையின்மையை சுட்டிக்காட்டி பாரதப் பிரதமர் திரு மோடி அவர்கள் கண்டிக்க வேண்டுமென்று வற்புறுத்தியுள்ளனர்.

இங்கிலாந்து பாராளுமன்றத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் கட்சிப் பாகுபாடின்றி அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் டிரம்ப் அவர்களின் தேர்தல் வாக்குறுதியான, “நான் வெற்றி பெற்றால் இசுலாமியர்களை அமெரிக்க நாட்டிற்குள் அனுமதிக்க மாட்டேன்” என்று கூறியதை வன்மையாகக் கண்டித்ததோடல்லாமல் டிரம்ப் அவர்களை இங்கிலாந்திற்குள் அனுமதிக்க மாட்டோம் என்றும் கூறியுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து விலகும் என்ற முடிவினை ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்களும் ஆக்கப்பூர்வமாக கருத்துகள் தெரிவித்து கேமரூன் அவர்கள் ஒன்றியத்திலிருந்து விலகுவதில்லை என்று முடிவு எடுத்தும் ஒன்றியத்தைச் சார்ந்த நாடுகளில் அகதிகளை ஏற்றுக்கொள்ளும் ஒத்தக் கருத்தினை ஏற்படுத்தியுள்ளனர். இப்படி வெளி நாடுகளில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனநாயகத்தைப் போற்றி பாதுகாக்கும் வேளையில் உலகின் இரண்டாவது மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் எதிர்கட்சியினரின் குரல்வளைகள் நசுக்கப்படுவதுடன், குண்டுக்கட்டாகத் தூக்கி எறியும் அவலங்களும், எதிர்கட்சியைச் சார்ந்த பெரும் தலைவர்கள் தேசத் துரோக குற்றச்சாட்டில் தில்லி முதலமைச்சர் திரு கேசரிவால் அவர்களும், கம்யுனிசத் தலைவர் திரு யெச்சூரி அவர்களையும், அகில இந்திய காங்கிரசின் துணைத் தலைவர் திரு ராகுல் காந்தி அவர்களையும் தேசத் துரோக குற்றச் சாட்டில் வழக்கு பதிவு செய்தலும், அகில இந்திய காங்கிரசு கட்சித் தலைவர் திருமதி சோனியா காந்தி, உதவித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அக்கட்சியைச் சார்ந்த சில தலைவர்கள் மீது டெக்கான் ஹெரால்ட் வழக்கைப் போடுவதும், பாராளுமன்ற எதிர்கட்சியினராகிய காங்கிரசு கட்சியினர் பாராளுமன்றத்தை நடக்க விடாமல் முடக்குவதும், நமது நாட்டின் சட்ட மன்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகளாக உள்ளது.

காந்தியின் சத்திய சோதனையின் அடிப்படையில் நடக்க வேண்டிய நமது நாட்டின் பாராளுமன்ற, சட்டமன்ற மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குவது மிகுந்த வேதனைக்குரிய விசயம். கீழ்த்திசை நாடான கொரியா ஆகட்டும், மேற்கத்திய நாடுகளாகிய அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளின் பாராளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் பாராட்டுதலுக்குரியதாக உள்ளதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டியுள்ளது.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “(Law Makers) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாராட்டு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *