இன்னும் விழித்துக் கொள்ளாதது ஏன்?

0

உமாராணி. ந.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த விவாதம் பெரும்பாலும் விவசாயிகளின் தற்கொலைக்கு ஒரு தற்காலிகமான ஒரு பதிலை தருவதாகவே உள்ளது. இனியும் எந்த விவசாயியும் தற்கொலை செய்யக்கூடாது என்பதற்கான முடிவாக அவை அமைவதில்லை. இதுவும் கடந்துபோகும் என்பதுபோல், ஒவ்வொரு விவசாயியின் இறப்பு எண்ணிக்கை நம்மைக் கடந்து சென்று கொண்டே இருக்கின்றன. ஆனால் இதற்கான முடிவு என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. தவறு எங்கு ஏற்படுகிறது, அதை எவ்வாறு சரிசெய்வது என்பதே இங்கு விவாதமாக உள்ளது. இவை எல்லாவற்றையும் விட இதைப்பற்றி அரசு கூறும் பதில் அதிருப்தி தருவதாக உள்ளது. அவை தன் பங்கிற்குப் பதில் சொல்ல வேண்டுமே என்பதற்காகச் சொல்வதாக உள்ளது.

விவசாயத்தின் மூலம் 40 சதவிகித வேலையை மக்களுக்குத் தரமுடியும் என்று ஐ. நா. குறிப்பிடுவது மிக முக்கியமான ஒன்று. விவசாயியின் ‘தற்கொலை’ என்ற ஒற்றை வார்த்தைக்குப் பின்னால் மறைந்து இருக்கும் பருவ நிலை மாற்றம், நீர் பற்றாக்குறை, பொருளாதாரப் பிரச்சனை, இளமை, வறுமை, மழையின் அளவு குறைந்து போதல் அல்லது அதிகப்படியான மழை மற்றும் நிலம் இல்லாமல் கூலி வேலைக்குச் செல்வது என நீண்டு கொண்டே செல்லும் காரணங்கள் தெரிவதில்லை. நமக்குத் தெரிவது விவசாயி ‘தற்கொலை’ என்ற ஒற்றை வார்த்தையின் காரணமான எண்ணிக்கைகளில் அடங்கும் செய்திகள் மட்டுமே. நாம் எதிர் கொள்ள வேண்டிய ஒரே கேள்வி, இதற்கு முன்னர் நாம் விவசாயிகளின் தற்கொலை பற்றிய செய்தியை கேட்டதே இல்லையா? நிறையப் பார்த்து இருக்கிறோம் என்பதை நம் வரலாறு காட்டுகின்றது.

அவற்றில் இருந்து நாம் தெரிந்து கொண்ட படிப்பினை என்னென்ன? அப்படித் தெரிந்து கொண்டோம் என்றால் ஏன் இன்றுவரை விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது? அவற்றை ஏன் இன்னும் தடுத்து நிறுத்த முடியவில்லை? என்பது தான் நமது அடுத்தடுத்த கேள்விகள்.

இந்திய விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது 1990 ன் இடைப்பட்ட காலத்தில் இருந்து ஆரம்பிக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை விவசாயிகளின் தற்கொலை என்பது 1966-ல் இருந்து தமிழ்நாட்டின் ஒரு பகுதியாகவே அமைந்துள்ளது. அன்றிலிருந்து இதன் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவின் தேசிய குற்றப்பிரிவு துறை 1950-ல் இருந்து விவசாயியின் தற்கொலை பற்றிய தகவல்களை சேகரித்து வெளியிட்டும் வருகிறது.

இதன்படி பார்த்தால் இந்திய அளவில் இதுவரை 1995 இல் இருந்து இன்றுவரை தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 2,96,438 ஆக உள்ளது. 1995-ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 10,720; 1996-ல் இதன் எண்ணிக்கை உயர்ந்தது, 1997- ல் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 13,622, இன்ன பிற. இவ்வாறு 1995- இல் இருந்து நாம் பல காரணங்களுக்காக விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை உயர்வதைப் பார்த்துக்கொண்டிருக்கின்றோம். ஆனால், இத்தனை ஆண்டுகள் ஆகியும் நாம் இன்று வரை விவசாயிகளின் தற்கொலைகள் பற்றிப் பார்த்தாலும், விவாதங்கள் மட்டுமே செய்து கொண்டு இருக்கின்றோம். அப்படியெனில் அவற்றினால் தெரிந்து கொண்ட காரணங்களை சரிசெய்து, அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி, விவசாயிகளின் தற்கொலையை தடுத்து நிறுத்த ஏன் முடியவில்லை என்பது தான் இன்றைய கேள்வி.

2006 ல் இந்தியா, தற்கொலை செய்துகொண்ட விவசாயிகள் அதிக எண்ணிக்கையில் உள்ள மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களைத் தேர்ந்தெடுத்து ஒரு சிறப்பு மறுவாழ்வு அமைப்பை நிறுவியது. அதன் பிறகு 2008- ல் இந்திய அரசு ஒரு நிவாரணத் திட்டத்தையும் நிறுவியது. இவ்வாறு பல திட்டங்களை அரசு நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளது. அதன் மூலம் பல செயல் திட்டங்கள் உதவுகின்றன. ஆனாலும் ஏன் விவசாயிகளின் தற்கொலை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே வருகிறது? இதற்கான மாற்று வழிதான் என்ன?

அரசு தான் தரும் நிவாரணப் பணிகள் மற்றும் நலத் திட்டங்கள் மூலம் விவசாயிகளின் நிலைமையை முன்னேற்ற முடியும். மேலும், அவற்றின் மூலம் விவசாயிகளைத் தற்கொலை வரை கொண்டு செல்லாமல் தடுத்து நிறுத்தவும் முடியும் என நம்புகின்றது. ஆனால், நம் மக்கள், இதற்கான மாற்றுவழியை யோசிக்காமல் அரசு தான் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாகவும் உள்ளனர்.

விவசாயிகளின் தற்கொலை தினமும் நிகழ்வதால் இதற்கான முடிவை விரைவில் எடுக்க வெண்டும் என்ற அவசர நிலையில் இந்திய அரசு உள்ளது. ஐ. நா. வுடனும், பல நாடுகளுடனும் இணைந்து எடுத்த 17 நோக்கங்களில், நிலையான விவசாயத்தை உருவாக்குவது என்பதும் ஒரு முக்கியமான நோக்கம் என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு ஆண்டும் எத்தனை விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள், அதற்கான காரணம் என்ன என்பதை அறிந்து கொள்வதற்காக மட்டுமே குழு அமைக்காமல், நலத்திட்டங்கள் சரியாக சென்று சேர்கின்றனவா? ஒவ்வொரு விவசாயியும் அவற்றினால் பயன் பெறுகின்றார்களா என்பதைக் கண்டறியவும்; அவற்றையும் தாண்டி தவறுகள் எங்கே நிகழ்கின்றன என்பதைக் கண்டறியவும் குழு அமைக்க வேண்டும். ஆனால், திட்டங்களை வகுப்பதும், அதைச் செயல்படுத்துவது மெதுவாகவும், பெயரளவிலும் நடைபெறுகின்றன என்பதே யதார்த்தமான உண்மை.

மத்திய அரசும், பல சமுகத் தொண்டு நிறுவனங்களும் விவசாயிகளின் தற்கொலைகளுக்கு ஒரு நிரந்தரமான முடிவுகட்டவே மிகப் பெரிய அளவில் செயல்படுகின்றனர். ஆனால், அவற்றின் விளைவுகளை இன்று எந்த இடத்திலும் நம்மால் காண இயலவில்லை. விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகமாக நிகழ்ந்து கொண்டே இருக்கும் போதே அரசும் விழித்துக்கொண்டிருக்க வேண்டும். ஆனால் இதற்கான செயல்திட்டங்கள் குறைவாகவும், தீவிரமற்றும் இருப்பதைக் காண முடிகிறது.

1994 – பஞ்சாயத் ராஜ் சட்டத்தின் படி விவசாயத்தைச் செம்மைப்படுத்துவதில் கிராம பஞ்சாயத்துகளுக்குப் பெரும் பங்கு உண்டு. இவை யாவும் சரிவர தனது பணியை செய்திருந்தால், ஒவ்வொரு கிராமத்திலும் விவசாயமும், விவசாயிகளின் வாழ்வும் செம்மையடைந்திருக்கும். இதன் மூலம் விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை ஒவ்வொரு பக்கமும் அதிகரித்துக் கொண்டே வந்தாலும், மற்றொரு பக்கம் இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய நல்லதொரு மாற்றாகக் கிராம பஞ்சாயத்து என்ற அமைப்பு முறையும் நம்மிடம் உள்ளது தெரிகிறது.

ஒவ்வொரு கிராமத்திலும் கிராம பஞ்சாயத்து சரியான முறையில் தனது பணியைச் செய்யுமேயானால் நிச்சயம் விவசாயமும் செம்மையடையும், விவசாயியின் வாழ்வும் செம்மையடையும்; அதேநேரம் விவசாயியின் தற்கொலை என்ற ஒன்றும் இல்லாமல் போகும். இந்தியா முழுவதும் சமூக பங்கேற்புடன் கூடிய வறுமை குறைப்பு, வாழ்வில் தாழ்வுற்றோரை அதிகாரப்படுத்துதல், மக்கள் பங்கேற்புடன் வளர்ச்சி மற்றும் மேம்பாடு அனைத்தும் வெற்றித் தடங்களை பதிக்கின்ற போது, விவசாயியின் தற்கொலையை தடுத்து நிறுத்துவதில் மட்டும் ஏன் இந்த பொறுப்பற்றத் தன்மை?

நாம் உண்ணும் உணவை உற்பத்திசெய்யும் ஒவ்வொரு விவசாயியும் கடவுளுக்குச் சமமானவர். ஒவ்வொரு விவசாயியும் தற்கொலை செய்துகொள்வது ஒவ்வொரு கடவுளும் தற்கொலை செய்து கொள்வதற்கு இணையானது. எல்லாப் பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது. முதலில் நம் வாழ்வாதாரத்திற்குத் தேவையான ஒரு வழியை நாம் தேடிக்கொள்ள வேண்டும். எப்போதும் அரசின் உதவியையே எதிர்பார்ப்பதும் அவை சரிவர கிடைக்கவில்லையென்றால் தற்கொலை செய்து கொள்வதும் ஏற்புடையதல்ல.

விவசாயத்தில் சிக்கிம் மாநிலம் இந்திய அளவில் முதல் இடத்தில் உள்ளது. விவசாயமே அங்குப் பிரதான தொழில். விவசாயத்தைச் செம்மைப்படுத்த இம்மாநில மக்கள் கடுமையாக முயற்சித்துள்ளனர். சிக்கிம் மாநிலத்தில் மட்டும் எவ்வாறு இந்த அமைப்பு முறை சாத்தியமானது? மற்ற மாநிலத்தில் ஏன் இவை முடியவில்லை? எங்கு மாற்றம் தேவை படுகிறது?

அது மட்டுமல்லாமல், பொதுமக்களை அரசு கட்டமைப்புகளுடன் இணைத்தும் வைக்க வேண்டும். இந்தச் சூழல் உருவானால், பொதுமக்களுக்கு எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டாலும் அவர்கள் முழுப் பொறுப்புடன் முழு வேலையில் ஈடுபடுவார்கள். ஆனால், நம் அரசு கட்டமைப்புகள் பொதுமக்களைத் தொலைவில் தனித்து வைத்துவிடவே எண்ணுகின்றன. அரசுக்கும் பொதுமக்களுக்கும் இடையில் ஓர் இடைவெளி இருக்குமாறு பார்த்துக் கொள்கின்றன. இதற்கு அரசு மட்டுமே காரணம் இல்லை என்றாலும் இந்த இடைவெளியில் நடக்கும் செயல் வேக மற்ற ஒரு மந்த நிலையே அரசின்மீது சந்தேகப்பட வைக்கிறது. இடைவெளி இல்லை என்றால் அரசின் அனைத்துத் திட்டங்களும் சரியான நேரத்திலும், வேகமாகவும் பொதுமக்களை சென்றடைய முடியும். அதனால் அனைத்து பொதுமக்களும் பயனடைந்திருப்பார்கள்.

உள்ளாட்சியையும், கிராம பஞ்சாயத்தையும் வலுப்படுத்தாமல் இருப்போமானால் பொதுமக்களையும் ஒருங்கிணைக்க வழியில்லை. இன்றுள்ளது போல, பொதுமக்களின் பிரச்சனைகளை அரசு தெரிந்து கொள்வதிலும், அரசின் நலத் திட்டங்கள் பொதுமக்களைச் சென்றடைவதிலும் பெரிய இடைவெளி வரவே செய்யும். இடைவெளியில் அரசியல்வாதிகளும் லாபம் பார்க்கவே செய்வார்கள். அதையும் தவிர்க்கவே முடியாது.

எனவே, விவசாயிகளின் தற்கொலைகளைத் தடுத்து நிறுத்த ஒரு மாற்று வழியைக் கண்டு பிடிக்க வேண்டும். மேலும், அரசும் விவசாயம் மற்றும் விவசாயிகளின் நிலைபற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதற்கான நலத்திட்டங்களும், பாதிக்கப்படும் போது அதற்கான செயல்பாடுகளும் எந்தவித தாமதமும் இன்றி சரியான முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சென்றடைய வெண்டும். அதேநேரம் விவசாயிகளுக்கும் தற்கொலைதான் முடிவு என்ற எண்ணத்தைக் கைவிடும் வகையில் விழிப்புணர்வையும் ஏற்படுத்த வெண்டும். இனியும் எந்த விவசாயியும் தற்கொலை செய்யக்கூடாது. இதுதான் இன்றைய மிக முக்கியமானத் தேவை.

_________________________________

உமாராணி. ந
அரசியல் அறிவியல் மற்றும் வளர்ச்சி நிர்வாகத் துறை
காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகம்
கந்திகிராம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *