கிரேசி மோகன்

 

அமுதசுரபியில் அடியேன் எழுதிய ‘’ரமணாயணத்திலிருந்து’’….

9e24425b-a11f-4795-97f3-7c58fe1e3449

கண்ணன் கதைக்கு கிடைத்த சுகமுனிபோல்
அண்ணல் பகவான் அவதார -எண்ணத்தை
நால்வருணம் தாண்டிய பால்பிரண்டன் தீட்டினான்
நூல்வடிவில் நானார் நிகழ்வு….

பால காண்டம்….
——————————————
திருவா திரையில் திருச்சுழி ஊரில்
கருவாய் அழகம்மை கர்பம் -உருவாய்
பெருந்தவம் செய்த பகவான் ரமணர்
பிறந்து துறந்தார் பிறப்பு….

பேரூழி காலத்தில் பாராழி புக்காது
நீரோய சூலன் நிறுத்திய -ஊராம்
திருச்சுழி தோன்றினன், தாயழ கம்மை
கருக்குழியில் கர்மம் கழித்து….
பகவான் உவாச
——————————
சித்தப்பா வீட்டில்நான் செத்தப்பா ஆனதும்
முத்தாய்ப்பாய் கேட்டேனோர் சத்தத்தை -வத்தாத
ஜீவநதி ‘’நான்ஆன்ம” சாகர சங்கமிப்பை
சாவதனில் கொண்டேன் சுகம்….

வந்தது சாவு வரட்டுமே சாவென்றால்
எந்தஎது சாகிறது என்றவினா -தந்த
பலத்தால் மரண பயத்தை எதிர்த்தேன்
களத்தில் இறந்தது கூற்று….

வந்த இறப்பை வரவேற்று வாசியின்றி
அந்தநிலையில் ஆழ்ந்து அடுத்ததாய் -இந்த
உடலை எடுத்து சுடலை நெருப்பில்
விடுவதைப் பார்த்தேன் வியந்து….
உடல்போன பின்பும் உயிர்போன பின்பும்
கடல்போல என்னிருப்பைக் கண்டேன் -மட’நான்’போய்
தான்குவித்த குப்பையை தானே களைந்தது
நான்கவஸ்த்தை தாண்டிய ‘’ நான் ‘’….

பகவான் உவாச
—————-

சுவரென்ற சக்தி சுழற்றித் திருப்பும்
கவணெறி வேகத்தில் கர்மம் -அவரவர்
ப்ராரப்தம் என்று பணிந்தேற்றுக் கொள்வீர்
வேறர்த்தம் எல்லாமே வீண்….

நடவாத ஒன்றை நமது முயற்சி
நடத்தா ததுபோல் நிகழ்வும் -தடையாய்
எவனென செய்தும் எழுவது திண்ணம்
மவுனக் கிடக்கையே மட்டு….

செயல்புரியும் மோகம் ,செயல்பலன் தாகம்
அயலாக எண்ணல் தியாகம் -வயலாம்
விசாரம் விடுத்து விழலான வாழ்வின்
அசாதா ரணத்திற்க்கேன் அப்பு….

சிந்தை விளையாட்டு செப்ப வினையாகும்
விந்தையாம் ‘’ நானார்’’ விசாரணை -வந்ததோர்
ஆணவத்தைக் கூண்டில் அமர்த்தி வினவிட
நானவஸ்த்தை ‘’நான்’’என்பான் நைந்து….

மாயநான் மார்பில் மணிகட்ட பூனையாம்
தூயநான் தோன்றிடும் தூண்பிளந்து -சீயமாய்
ஆன்மா அதற்கிரை ஆனால் அதுஇறையாய்
‘’நான்’’போன நம்முள் நுழைந்து….
ஆரூர் பிறந்தோர்க்கும் அக்காசி மாய்ந்தோர்க்கும்
பாரில் சிதம்பரம் பார்த்தோர்க்கும் -நேரும்
திருநாளாம் முக்தி அருணா சலத்தை
ஒருநாள் நினைத்தாலே உண்டு…
குளித்து மடியாய் வெளுத்த நுதலாய்
உளத்தில் அரனை உடுத்தி -களைத்த
நிறைகர் பிணியாய் நிதானம் காத்து
வரைசுற்ற வாழ்வில் வளம்….

நானென்ற ஓசை நவில்வது யாரென்று
ஊணுறக்கத் திற்க்கீடாய் உன்னிப்பாய் -காணென்றும்
ஒன்றிவிடும் உள்ளம்நான் ஊறும் இடத்தினில்
மன்றமது மெய்த்தவக் குன்று….

விழிப்பு, கனவு, விழுங்கும் சுழுத்தி
கழிக்கும் அதுவே’நான்’ காண்பாய் -உழைப்பாய்
உடலான்ம பாவம் ஒழிக்கும் விதத்தை
அட!ஆன்மத் தேடல் அதற்கு….

வெட்டியான்போல் நின்று விசாரணைக் கோல்கொண்டு
சுட்டும் எழும்பும் சவமனம்மேல் -பட்டென்(று)
அடித்திட ‘நானும்’ அடித்திடும் ‘நானார்’
தடிக்கொம்பும் சாம்பலாம் தீக்கு….

மந்திர ஓசையுள் ளெங்கிருந்து தோன்றுதென்று
எந்திரமாய்ப் பார்க்க எழுவாய்க்குள் -வந்தடங்கும்
உந்தன் மனது ஒடுங்கிட மிஞ்சிடும்
விந்தை மவுனம் விளைந்து….

ஆடி அசைந்திடும் ஆனை துதிக்கையாய்
நாடிச் சலித்திடும் நம்மனப் -பேடிக்கு
சங்கிலியாய்த் தந்திடுவீர் சத்வ குணங்களை
அங்கொளிரும் ஆன்மா அலர்ந்து….

உப்புபுளி காரம் உணவில் தவிர்த்திடுவாய்
செப்பிறைவன் நாமம் , சரணென்று -ஒப்படைப்பாய்
உன்னையொரு மூர்த்தியிடம் உள்ளே தியானித்து
தொன்னைமனம் நெய்யான்மா தொப்….
காவிய கண்டர் கருணைக்கை தூரிகையால்
ஓவியம் போலவர்முன் உட்கார்ந்தார் -மேவிய
சந்தேகம் ஓய்ந்திட சஞ்சலம் மாய்ந்திட
தன்தேக பாவம் தொலைப்பு….

இராமனம் வென்று மராமரம் போல்வாழ்
பிராமண சாமிபெயர் சீடர் -சிறாருரைக்க
வேங்கட ராமனுக்கு வேறுபெயர் கண்டரிட்டார்
ஈங்கிவர் ஸ்ரீரமணர் என்று….

திருவொற்றி யூரில் தவமிருந்த போது
உருவொத்து வந்த ரமணர் -சிரமொத்தி
தன்சாரம் தீட்சையாய் தந்தாராம் கண்டர்க்கு
மின்சாரப் பாய்வு முனிக்கு….

சுமாரோர் மாதத்தில் செய்ய நினைத்தகண்டர்
உமாசஹஸ்ரம் பெய்தாரோர் நாளில் -தமாஷாக
‘’என்ன கணபதி சொன்னது போதுமா’’
கண்சிமிட்டிக் கேட்டார்சத் குரு….
கண்டர் -காவ்ய கண்ட கணபதி முனிகள்…

பச்சையம்மன் கோயில் பகவான் இருக்கையில்
உச்சிமுகர்ந்து சென்றதாம் நட்சத்திரம் -இச்சரியை
ஆறுமுறை ஆக அங்கிருந்த சாஸ்திரியார்
ஆறுமுகன்தான் என்றார் அடித்து….
விருபாட்ஷி மாடத்து வேழன்மேல் வெண்பா
உருவாச்சு ஓர்நாள் பகவான் -திருவாக்கால்
வேடிக்கை வெண்பாவை பாடி கணபதிக்கு
கோடிட்டுக் காட்டியதைக் கேள்….

பகவான் சொன்ன வெண்பா
—————————

பிள்ளையாப் பெற்றவனைப் பிச்சாண்டி யாக்கியெங்கும்
பிள்ளையாப் பேழ்வயிற்றைப் பேணினீர் -பிள்ளையான்
கன்னெஞ்சோ மாடத்துப் பிள்ளையாரே கண்பாரும்
பின்வந்தான் தன்னைநீர் பெற்று….

பகவான் உவாச
——————

ஞானம் நிரந்தர கானம் குழந்தைக்கு
ஏனென்றால் ‘நானங்’(கு) எழவில்லை -பேணிடுவீர்
பிள்ளைப் பருவத்தை பேசா விருப்பத்தை
உள்ளின் உவப்பை உகந்து….

உனக்குதவும் செய்கை உலகளாவும் சேவை
பிணக்கிதில் நீவேறாய்ப் பாரை -நினைப்பது
ஆன்மாவில் ஒன்றிட ஆளே(து) உதவிட
வீண்பேதம் காணல் விலக்கு….
கண்ணனும் ஏசுவும் பண்ணிய அற்புதங்கள்
என்னளவில் ஆகுமா என்கிறீர் -முன்னமவர்
செய்யவந்த செய்கையை செய்வதாய்ச் செய்யவில்லை
கைவந்தோர்க்(கு) ஈதியற்கை காண்….
சித்தி வலைதனில் சிக்கிடாது நீந்திடுவாய்
சத்திய மெய்ஞான சாகரத்தில் -உத்தியாய்
பூரண சரணத்தில் பூத்திருப்போர்க்(கு) இல்லைகாண்
காரண காரியக் கட்டு….

மனவிளிம்புக்(கு) அப்பால் மனமுவந்து சென்று
குணமளிக்கும் ஆன்மாவில் கூடு -நினைவளிக்கும்
புத்தியோடு நில்லாமல் சத்தியத்தைப் பார்த்திட
கத்தி விசாரணையால் கொத்து….

சூதாடி உள்ளமதன் மீதாடும் எண்ணமுடன்
வாதாடி மாய்த்துமனம் வென்றிடுவாய் -ஆத்தாடி
சித்தம் சிவமாகும் பித்தம் பிணமாகும்
அத்தை உரைத்தல் அறிது….

கும்பிடும் தெய்வம் கிருத்துவோ கண்ணனோ
நம்பிட நாமதுவாய் எம்பிடுவோம் -என்பதற்கு
மாதிரியாய் வாழ்ந்த மகான்விடை பெற்றகன்றார்
பாதிரியாய் ஹம்ப்ரீஸ் பணிக்கு….

பாரதியார் வருகை….
————————————–

சிவய்யாவும் மற்றும் சிலரே இருந்த
அவைக்குள் நுழைந்ததும் அங்கு -தவய்யா
நேரவர் உட்கார்ந்தார் நேரம் ஒருமணி
யாரவர் பாரதி யார்….

அங்கிருந்த போது அறியார் ரமணரவர்
பொங்குதமிழ் ஞானப் புயலென்று -எங்கிருந்தோ
வந்தார் ,இடைச்சாதி நானொழித்த ராமனுக்கு
தந்தார் அணிலாய்த் தமிழ்….

வாழ்க மஹரிஷியார்,வாழ்க பாரதியார்
வாழ்க தமிழ்த்தவ வல்லார்கள் -வாழ்க
திருவருணைக் குன்று திருவல்லிக் கேணி
குருவருள் கொஞ்சுதமிழ் காப்பு….

————————————————————-

பாதாள லிங்க குகை வாசம்….
————————————————–
உய்யும் தவம்கலைக்கும் பையன்கள் தொந்திரவால்
அய்யன் இடமாற்றம் செய்தனன் -மையிருளாம்
சாதா ரணர்களால் செல்ல முடியாத
பாதாள லிங்க குகைக்கு….

பூரான் கறையான் புழுபூச்சி பல்லிகள்
ஆரா அமுதாய் அவரெதிர் -பாரா
உடலை ருசித்தும் கடவுள் நினைப்பில்
ஜடமாய் இருந்தான் ஜெயித்து….

ஜாடியில் வைத்த சிவகடாட்ச ஊறுகாய்
வாடாது பாதாள வாயிலுக்கு -மூடியாய்
தானுகந்தான் தன்னை தவத்திரு சேஷாத்ரி
ஞானியின்கால் ஞானம் அறிந்து….

——————————————————————————————-
பகவான் உவாச
—————

நானென்றும் சொல்லி நினதென்றும் சொல்கிறாய்
நானிதில் யார்யார் நினக்குள்ளே -காணதை
உன்னுள்ளே நோக்கி உழல்கின்ற உண்மையை
கண்ணுள்ளே காண்போனே கோன்….

பாலுக்கும் தோழனாய் பூனைக்கும் காவலாய்
பாலுனக்கு பாடு புலன்களால் -பாலதன்
பால்கலந்த தண்ணீரே பாழ்நான் உணர்வாய்யன்
பால்பிறக்கும் நானே பரம்….

தேடலின் தீவீரம் தீக்குச் சமமாகும்
சீடன் கரியா? வெடிமருந்தா? -பாடது
முன்னதில் தேசிகர்க்கு மூளவைத்தல் துர்லபம்
பின்னதில் பற்றல் பளிச்….

சரித்திரம் நேற்று ,விசித்திரம் நாளை
நிரந்தரம் இன்றை நினைவாய் -பரம்பொருள்
தாங்குவான் பாரங்கள் ஈங்கிதே சாரம்காண்
ஏங்குதல் ஏங்காமை ஏய்ப்பு….

யதாவுன் இருப்பு ததாயிவ் உலகு
கதாகனா வாகின்ற காட்சி -சதாநீ
உனதுண்மை தேடு, உலகுக்கதன் பாடு
மனதின்மை காண்போன் மகான்….
புண்ணியநம் நாட்டில் புதைந்த ரகசியத்தை
கண்ணியவான் பால்பிரண்டன் கண்டுணர்ந்து -மண்ணுக்கு
புத்தகமாய் தந்தார் ,பகவான் ரமணரின்
தத்துவம் தொட்டதெட்டு திக்கு….
——————————————————————————————————————————————
முக்தி காண்டம்….
————————————–
வாம முழங்கை வழியாய் புகுந்தன்று
ஆமையாம் கான்ஸர்நோய் அண்ணலிடம் -சாமியே
காலடியின் கூட்டத்தால் கையடியில் வந்தநானும்
போலடியார் தானென்றான் புற்று….

ஆடா(து) அசங்கா(து) அமர்ந்திருந்த உங்களை
மேடையென் றெண்ணிமேல் ஏறிவிட்டேன் -ஆடிடுவோன்
வாய்க்கெட்டும் ஆலம்நான் கைக்கேட்டும் மூலமும்
நோய்க்கட்டி ஆனதென்நன் நாள்….

மாதுமையாள் கண்டத்தில் மாலையாய் சாய்கின்ற
போதெம்மை பூஜைக் கரடியென்றாள் -ஆதலால்
உய்ய வழியின்றி உம்மில் புகுந்தேன்நான்
அய்ய அடைக்கலமுன் கை….

சிற்றின்பம் ஓடியது பேரின்பம் நாடியது
உற்றன்பு கொண்டூ டுறுவுமிப் -புற்றின்பம்
ஏற்றுப் பொறுத்து எமக்களிப்பீர் முக்தியை
தூற்றுமூர் மூக்கை உடைத்து….

கொல்லும் கணைக்கூட்டம் காகுத்தன் தோளிருப்பு
சொல்லும் வசவும் சரஸ்வதிதான் -அல்லும்
பகலுமிங்கு சேர்ந்திருக்க புண்ணியத்துள் இப்புண்
புகுதலென்ன பாவம் புகல்….

கர்கடக ராசிநான் கைராசி ஆனேனே
சற்குரு உந்தன்கை சேர்ந்ததனால் -தற்பரமே
கையடித்து சொன்னாலுன் கைவலிக்கும் வாக்களித்தேன்
மெய்யடியார் மெய்யுண்ணேன் மெய்….

கொப்பளநோய் தன்னை குணமாக்க நீர்மனம்
ஒப்பிடத் தூளாகும் அப்பளமாய் -சுப்பரா
மய்யாவாள் வேண்ட மகானுரைத்தார் மெய்யாமை
பொய்யாம் மனமுயல் போக்கு….

நேரிசை வெண்பாவில் சீரசைவு போனதற்கு
நேரிசை வானநோய் மேனியின் -வாரிசே
நானசம் பாவிதத்தை நன்குணர்ந்த ஞானிக்கு
மானச சஞ்சார மேது….

அஸ்திரத்தை நோவானேன் அர்ஜுனன் எய்ததற்கு
சஸ்திர வைத்தியம் செய்வதேன் -வஸ்திர
மேனிக்கு வந்ததே ஹானி எனக்கல்ல
ஞானிக்(கு) ஏதுடல் நெஞ்சு….

நோய்சிரமம் ஏற்று நொடிந்த ரமணரிடம்
ஆசிரமம் அண்டி அறுவைக்காய் -பேச
மயக்க மருந்தின்றி மாசை அகற்ற
தயக்கமில்லை என்றார் தவர்….

தொண்டையில் ஹம்ஸரும் தோளில் கிருத்துவும்
கொண்டனர் தொண்டர்தம் கர்மத்தை -பண்டை
வினைப்பயன் ஏது விதிவசம்தான் ஏது
தனிப்பெரும் வாஞ்சை தனக்கு….
பாவியென்று வந்தவரின் பூர்வஜென்ம கர்மமேற்று
கோவிலாய் மாற்றினார் கோட்டானை -தாவிய
அப்பாவம் புற்றாக அண்ணலிடம் சேர்ந்திட
அப்பிரா ரப்தம் அழிவு….

வண்டி அமர்ந்தவன் கொண்டுவந்த மூட்டையை
மண்டை சுமத்தல் மதியீனம் -அண்டியோர்
தேசிகன் தாளிடை தஞ்சம் புகுந்துவிடு
நீசுக துக்க நினைப்பு….

வாமனனாய் வந்தகட்டி விக்கிரம னாய்வளர்ந்து
கோமணத்தர் கையில்கை கூப்பியது -சாவினை
போவென சொன்னவர்மேல் போயின்று நாளைவந்த
ராவணனாய் நின்றான் ரணம்….

கள்ளுண்டோன் ஆடைமேல் கொண்ட உணர்வேயாம்
உள்ளுண்ட சித்தன் உடலுணர்வு -புல்லுண்டு
மண்ணுண்டு பூச்சி புழுவுண்டு போகுமிதை
புண்ணுண்ட போதேன் பதைப்பு….

பலியுண்ட ஆட்டுக்கு பீடம் நெருங்கியும்
கிலியின்றி போகும் கதையாய் -வலியுண்டு
கூறுவார் வாய்தவறிக் கூட வலிக்கிறது
கூறாராம் ஊராருக் காய்….

வேள்வியாய் மூலிகை வைத்தியர் பார்த்தது
தோல்வியாய்ப் போக துவண்டாராம் -கேள்வியாய்
கூனியவர்(கு) ஆறுதலாய் கூறினார் ‘’அன்பரே
நானிருப்பேன் உம்மால் நிலைத்து’’….

ஜனவரியில் அண்ணல் ஜனித்த தினத்தில்
ஜனவரிசை கூட்டத்தில் சேர்ந்து -அனைவரையும்
போல்யானை நட்புடன் தாள்வணங்கிச் சென்றதாம்
பால்யத்து தோழனைப் பார்த்து….

தேவை நமக்கு தயவு அனைத்திற்கும்
சாவை நமக்காக சுமப்பாரோ -பாவை
உடலிதை நால்வர் திடல்வரை சேர்ப்பர்
இடைவெளியில் நானேன் இதற்கு….
பண்டங்கள் நூறு பறிமாறி நாலுமிலை
உண்டபின் ஓரம் ஒதுக்கத்தான் -பிண்டமாம்
வாழுமிலை மேனியிது வாழ்விலை ஆனபின்
வாழையிலை போலெறியும் வீடு….

இல்லாத துன்பம் இருப்பதாய்த் தோன்றவைக்கும்
பொல்லாத மாயையை போக்கிவிட்டு -எல்லாமும்
சாட்சியாய்ப் பார்க்கின்ற சாஸ்வத மெய்யுணர்வே
மோட்சமாம் நீயதில் மூழ்கு….

மணியென்ன கேட்ட மகானுடனே சொன்னார்
இனியென்ன காலக் கணக்கு( இழுப்பு) -பணியாக
அன்பர்க்(கு) அளித்தார் அமைதியாய் த்யானத்தை
நண்பகல் வேளைஅந் நாள்….

ஆதவன் சாய்கின்ற அந்திப் பொழுதினில்
மாதவம் சாய்ந்தது மஞ்சத்தில் -ஓதும்
அருணா சலசிவத்தை அண்மையில் காண
மரணாவஸ் தைக்கு முடிவு….

எட்டுநாப் பத்தேழு ஏப்ரல் பதினாலில்
விட்டுடல் ஜோதி விரைவாக -முட்டக்
கறுத்தவிரி வானை எரித்துவிண் மீனாய்
பரத்திடம் முக்தி பறப்பு….

சுபம்
முடிவு
மங்களம்
——————————————————-

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *