— எஸ். வி. வேணுகோபாலன்.

இன்று காலை சக்தி நகரின் அந்தத் தெரு மையப் பகுதியில் இருந்த அந்த வீட்டுமுன் நான்கைந்து பேர் நிற்கும்போதே எனக்குச் சிலீர் என்றது.

இன்று காலை சக்தி நகரின் அந்தத் தெரு மையப் பகுதியில் இருந்த அந்த வீட்டுமுன் நான்கைந்து பேர் நிற்கும்போதே எனக்குச் சிலீர் என்றது.

ஒரு வேளை அந்தப் பாட்டி… அடடா… என்னுடன் மகள் இந்து இருந்தாள்.

இந்த ஞாயிற்றுக் கிழமை காலை பத்து மணிக்கு எனது மூன்றாவது நடை அது. காலை ஏழரை மணிக்கு நானும் ராஜியும் வழக்கமான நடை நடந்து போகையில் இதே வீட்டைக் கடக்கையில் பாட்டியை நினைத்தபடி தான் கடந்தோம்… அப்போது வாசலில் எந்தக் கூட்டமும் இருந்திருக்கவில்லை. “”கொஞ்சம் ஆயாசமாக இருக்கிறது” என்று சொல்லிக்கொண்டே முழு நடையை முடித்த நான், பால் வாங்க மறந்தது வீட்டருகே நெருங்கும்போது நினைவுக்கு வர, ராஜியை போகச் சொல்லிவிட்டு மீண்டும் பிஸ்மி கடைக்கு நடந்தேன்.

பிஸ்மி கடை, சக்தி நகர் நுழைவுக்கு முந்தைய தெருவான விஸ்வநாதபுரம் இரண்டாவது தெரு. வீட்டுக்குத் திரும்பிய பிறகு சிறிது நேரம் கழித்து மகன் நந்தா, “”கொஞ்சம் நடை நடந்து விட்டு வரலாம் வா” என்றான். அவனோடு நடக்கும் திசைகள், தெருக்கள் வேறு. அப்புறம் இந்து கேட்டாள், “”அப்பா கொஞ்சம் வாக் போயிட்டு வரலாமா?” என்று அது எங்கள் வழக்கமான நடைப் பயிற்சிப் பாதை.

சக்தி நகரில் நுழைகையில் அந்த வீட்டின் முன் நான்கைந்து பேரைப் பார்த்தோம். அந்தப் பாட்டி விடைபெற்று விட்டிருந்தாள். ஏழரை மணிக்கு எங்கள் நினைவில் வாழ்ந்து கொண்டிருந்த உயிர், இனி எப்போதும் நினைவில் வாழ்வதானது.

ஒரு நாளா? இரண்டு நாளா? எத்தனை முறை பார்த்திருப்போம்? ராஜிக்கு அந்தப் பாட்டியை மிகவும் பிடித்திருந்தது. பல ஆண்டுகளுக்கு முன் பார்க்கையில் திடமாகத் தெரிந்த பாட்டி, அண்மைக் காலமாக நாங்கள் அந்த வழி செல்கையில், எப்போதேனும் எதிர்ப்படுவாள். தெருவில் யாரேனும் தென்படுகிறார்களோ என்று தேடும் காந்தக் கண்கள். கருணை சுரக்கும் கண்களில் அதே போக்கில் ஒரு கோரிக்கையும் ஒலிக்கக் கேட்டிருக்கிறோம்.

“”கொஞ்சம் அந்தப் பக்கம் கொண்டு விட்டுடேன்” என்று கேட்பாள் பாட்டி. ஐம்பது மீட்டர் கூட இல்லாத சிறிய தெருவில் எதிர்ப்பக்கம் கையைப் பிடித்துக் கொண்டு விட்டால் போதும், அப்புறம் பாட்டி நேரெதிரே இருக்கும் முட்டுச் சந்தில் ஒரு வீட்டை நோக்கித் தானே நடந்து செல்லத் தொடங்கி விடுவாள். சிலபோது, எதிர்ப்பக்க முட்டுச் சந்தின் முனையில் காத்திருக்கையில் பார்த்திருக்கிறோம். ராஜி கையைப் பிடித்து தெருவின் குறுக்கே வண்டி வராத நேரமாக நடக்க வைத்து இந்த வீட்டின்முன் கொண்டு விடுவாள். அந்தக் கண்களில் இலேசான பரிச்சய சிரிப்பும், மகிழ்ச்சியும் எதிர்காலத் தலைமுறையையும் வாழ்த்தும்படி இருக்கும்.

இங்கே யார் இருக்கிறார்கள். அங்கே யார் இருக்கிறார்கள் எங்களுக்குத் தோன்றியதில்லை, கேட்க. பாட்டி சொல்லியதாக நினைவு, இங்கே ஒரு பிள்ளை வீடு, அங்கே ஒரு பிள்ளை வீடு என்று. வாழ்க்கை ஒரு தொடர் ரயில் பயணம். இடைப்பட்ட தூரத்தில் பயணிகளுக்கு இடையே ஒருவருக்கொருவர் பேச்சுத் துணைக்கு, ரசனைக்கு, பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளும் விஷயங்களுக்கு எப்போதுமே ஓர் எல்லைக் கோடு இருக்கிறது. வடிவேலு சொல்வது மாதிரி, “”அதைத் தாண்டி நீயும் வரக் கூடாது.. நானும் வர மாட்டேன்” என்று பாட்டி எங்கள் நடைப் பயிற்சியின் இடையே ஒரு பாத்திரம். அவளது வாழ்க்கையில் எங்களுக்கு பெரிய இடம் இருந்திருக்க வேண்டிய சாத்தியம் இல்லை.

முதுமையின் நிறைவில் ததும்பிக் கொண்டிருந்த அழகில், உடலின் இயலாமையை வெல்லும் அந்த கம்பீரப் புன்னகையில், மூக்குத்தியின் ஜொலிப்பில் நாங்கள் அந்தப் பாட்டியை நேசிக்கத் தொடங்கி இருந்தோம்.

சிறிது காலமாக பாட்டியைப் பார்த்த நினைவு இல்லை. இந்த அவசர மாநகர வாழ்க்கையில் நழுவும் சங்கதிகள், மறக்கும் நிகழ்ச்சிகள், இழக்கும் அனுபவங்கள், தொலைக்கும் உறவுகள் எத்தனை எத்தனை… ஆனாலுமென்ன? இருக்கவே இருக்கிறது, “”ஓஹோ அப்படியா”, “”அடடா அப்புறம்”, “”அடக் கடவுளே”, “”ஆஹா போச்சுடா” என்பது மாதிரி ஸ்டாண்டர்ட் சொற்கோவை சில இருக்கவே இருக்கிறது, எல்லாவற்றையும் அந்த ஓரிரு சொற்களில் அழுத்தி உணர்ச்சிகளை மூழ்கடித்து அடுத்த வேலைக்குச் செல்ல கூட்டங்களில் அன்னார் நினைவுக்கு ஒரு நிமிடம் அஞ்சலி என்று அறிவிப்பதன் விரிவான பொருள், அதற்கு மேலும் அந்தத் துக்கத்திற்கு இங்கே நேரமில்லை என்பதாக இருக்கக் கூடும், யார் கண்டது?

பாட்டி போய்விட்டாள் என்பதை வாசலில் அவரது மகன் அலைபேசியில் யாரிடமோ, ஆமாம்… எட்டரை மணிபோல இருக்கும்.. என்று சொல்லிக் கொண்டிருந்ததில் உறுதியானது. இந்து பார்த்துக் கொண்டிருக்கும்போதே நான் மட்டும் சட்டென்று வீட்டினுள் நுழைந்தேன். அழுது கொண்டிருந்தது மருமகளாக இருக்கக் கூடும். அவசர அவசரமாக வேறு ஒரு பெண்மணி – பச்சை நிற மாஸ்க் அவள் கழுத்தில் ஊசலாடிக் கொண்டிருந்தது, நர்சிங் பணியாளராக இருக்கக் கூடும்- பாட்டிக்கு புடவை அணிவித்துக் கொண்டிருக்கவே சட்டென்று வாசலோடு நின்றேன்.

“”கடைசியா ஏதாவது சாப்பிட்டாங்களா?” என்றேன்.

“”கார்த்தால காப்பி சாப்பிட்டாளே… அப்புறம் எட்டு மணிக்குத் தான்”

என்னருகே நின்ற ஒருவரிடம், “”டாக்டர் பார்த்துவிட்டுச் சொல்லிட்டாராக்கும்?” என்றேன்.

“”ஆமாம்… முடியலேன்னு கூப்பிடவும் டாக்டர் வந்து பார்த்து ஐ சி யூவில் சேர்க்கலாம்னு சொல்லி இருக்கார். அவர் அந்தண்ட போயிருக்க மாட்டார். போய்ட்டா பாவம்” என்றார்.

அதற்குள் வேறொரு பெண்மணி, “”நிறைவாழ்வு வாழ்ந்துட்டா… ஆறு மாசத்துக்கு முன்னாடி தாத்தாவும் பாட்டியும் நன்னா உட்கார்ந்துண்டு கனகாபிஷேகம் பண்ணிண்டாளே… அவருக்கு நூறு வயசு. பாட்டிக்கு தொண்ணூற்று ஐந்து” என்றார்.

நான் பாட்டியைக் கை தொழுது நின்றேன். கழுத்து வழி புடவையைக் கொண்டுபோய் அந்த நர்சிங் பெண்மணி பாட்டியின் தலையை உயர்த்திய மாதிரி வைத்து வேலையை முடிக்கையில், பாட்டியின் முகம் பளிச்சென்று தெரிந்தது. “நான் வரட்டுமா?’

என்று கேட்டாற்போல் இருந்தது. சாலையைக் கடந்து போகத் துணை தேடியவளுக்கு இப்போது காலத்தைக் கடந்து போக எந்தத் துணையும் தேவைப்பட்டிருக்கவில்லை. உடலை முன்னெடுக்கவும், உடலை நகர்த்தவும், உடலை இயக்கவுமே இயலாதவருக்கு யாருடைய துணையாவது தேவையாயிருக்கிறது. உடலைத் துறக்க வேண்டிய தருணத்தில் இலேசாகிறது எல்லாமும்.

வெளியே இந்து காத்திருந்தாள். நான் பாட்டி எதிர்ச்சாரியில் முட்டுச் சந்து நோக்கிக் கடக்கும் இடத்திற்கு அவளையும் அழைத்து நகர்ந்தேன்.

மிகவும் வயதான பெரியவரை யாரோ கைத் தாங்கலாக அழைத்து வந்தனர். மிக நெடிய அகல நெற்றியில் திருமண் பளிச்சிட்டது. துணையை இழந்த முதியவர் அவராகத் தான் இருக்கவேண்டும். அதற்குள் வேறொருவர் வேகமாக வந்து தாத்தாவின் கையைப் பற்றிக் கொண்டு நடக்க உதவி செய்தவாறே, “”போயிட்டா” என்றார்.

பெரியவர் அப்படியே நின்றார். ஒரு நொடிப் பொழுது. – ஒரே ஒரு நொடிப்பொழுது உறைந்தவண்ணம் நின்றார். தழுதழுக்கும் குரலில், “”போயிட்டாளா?” என்று வினவினார். “”நல்லதுக்குத் தான்” என்றார். அடுத்த கணம். மெதுவாக நடக்கத் தொடங்கினார்.

எனக்கு என்னவோ, அவரை மெல்ல அந்தப் பக்கம் தெருவைக் கடக்க வைத்து அந்த வீட்டுக்குள் கொண்டு சேர்த்த பிறகு சொல்லி இருக்கலாமோ என்று பட்டது. ஆனால், அவரால் அந்த ஒரு நொடியில் உண்மையை ஜீரணிக்க முடிந்தது.

இப்போது வண்டிகள் எதுவும் குறுக்கே வராதபடி பார்த்து மெல்ல தாத்தாவை அந்த இருவரும் கைத் தாங்கலாக அழைத்து வந்தனர்.

ஏனெனில், இனி ஒரு போதும் பாட்டி அப்படி அதே எச்சரிக்கையோடு அடுத்தவர் உதவியோடு கூட எதிர்ப்பக்க முட்டுச் சந்துக்கு அவரைத் தேடிச் செல்ல இயலாது.

____________________________________________________________
மறுபகிர்வு:
நன்றி: முட்டுச் சந்து – தினமணி கதிர் சிறுகதை

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *