என்ன குறை வைத்தேன்

[மொழியாக்கக் கதை]
தெலுங்கில்: வசந்தலட்சுமி. P
மொழியாக்கம்: கௌரி கிருபானந்தன்

“உனக்கு என்ன குறை வைத்தேன்?”

“உனக்கு என்ன குறை வைத்தேன்?” திரும்பவும் கேட்டான் மகேஷ்.

‘எல்லாமே அதிகம்தான்’ மனதில் நினைத்துக் கொண்டேன். வெளியில் மட்டும் எதுவும் சொல்லாமல் என் வேலையை பார்த்துக் கொண்டிருந்தேன். என்னவென்று சொல்வது? எப்படிச் சொல்வது இந்த மனிதனுக்கு?

தோசை வார்த்துக் கொண்டிருந்தேன். தேங்காய் சட்னி அரைத்தாகி விட்டது. தக்காளி தொக்கு ஏற்கனவே இருந்தது. தோசைமிளகாய் பொடி, நல்ல எண்ணெய் எல்லாம் தயாராக வைத்தேன்.

குளித்துமுடித்துவிட்டு தலையை துவட்டிக் கொண்டே வந்த மகேஷ் டிபனுக்கு என்ன பண்ணியிருக்கிறேன் என்று எட்டிப் பார்த்துவிட்டு, “சாம்பார் இல்லையா?” என்றான்.

நேற்று முதல் எனக்கு மைக்ரேன் தலைவலி. அம்மா வீட்டில் இருந்த போது எனக்குச் சின்ன தலைவலி வந்தாலும் அம்மா எவ்வளவு துடித்துப் போவாளோ, எவ்வளவு உபசாரம் செய்வாளோ நினைவுக்கு வந்ததும் கண்களில் நீர் சுழன்றது.

என் கண்ணில் நீர் துளிர்த்தது மகேஷின் கண்ணில் பட்டு விட்டது. என்ன இருந்தாலும் மனைவியின் கண்கள் கலங்கினால் இந்த ஆண்களால் தாங்கி கொள்ள முடியாது இல்லையா.

“என்னவோ பெரிதாக கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பது போல் அழுவானேன்? மாவு அரைக்க கிரையிண்டர். சட்னி அரைக்க மிக்ஸி இருக்கு. குக்கர், ஓவன் எல்லாமே வாங்கிக் கொடுத்திருக்கிறேன். வாய்க்கு ருசியாகச் சமைத்து போடுவாய் என்றுதானே உன்னைக் கல்யாணம் பண்ணிக்கொண்டேன். இல்லையென்றால் எந்தப் பிடுங்கலும் இல்லாமல் நிம்மதியாக இருந்திருப்பேன்.”

வெடுக்கென்று இப்படிச் சொல்லாமல் எனக்குச் சமையலில் கொஞ்சம் உதவி செய்து கொண்டே, கிண்டல் அடிப்பது போல் சொல்லி இருந்தால் இந்தக் காலை நேரத்தில் என் விழிகளில் ஈரம் படிந்திருக்காதோ என்னவோ.

காலை ஐந்து மணிக்கே எழுந்து பில்டரில் டிகாஷன் போட வேண்டும். காபி புது மணத்துடன் சூடாக இருக்க வேண்டும். இட்லி மாவை ஒரு நாளுக்கு மேல் பயன்படுத்தக் கூடாது. ஹோட்டல் தோசை போல் மொறுமொறுப்பாக இருக்க வேண்டும். ஹோட்டலில் கொடுப்பது போலவே மூன்று விதமான சட்னி, கூடவே சாம்பாரும் இருக்க வேண்டும். இட்லி பஞ்சு போல் மெத்தென்று, வாயில் போட்டால் கரைந்து போக வேண்டும்.

இவையெல்லாம் மகேஷின் விருப்பங்கள். இல்லை இல்லை டிமாண்டுகள்! அதது அப்படி இல்லை என்றால் தன்னுடைய வெறுப்பை முகத்தில் மட்டுமே இல்லை, வார்த்தைகளிலும் காட்டுவதற்கு தயங்கமாட்டான்.

ஆணாக இருந்தால் எது வேண்டுமானாலும் நடத்திக்கொள்ள முடியுமா? என்னுடைய விருப்பம் என்னவென்று ஒரு நாளும் கேட்டது இல்லை. சொல்லவும் எனக்கு வாய்ப்பு கொடுத்தது இல்லை.

அம்மா செய்யும் இட்லி மல்லிகை போல் வெள்ளை வெளேரென்று, வாயில் போட்டால் கரைந்து விடுவது போல் இருக்கும். ஆனால் நான் எப்போது சமையல் அறைக்குள் எட்டிப் பார்த்திருக்கிறேன், அம்மா எப்படித் தயாரிக்கிறாள் என்று தெரிவதற்கு?

எப்போதும் படிப்பு, இல்லையா சிநேகிதிகளுடன் சினிமா, டிராமா என்று ஊர் சுற்றுவது. அப்பாவின் செல்லம் நான். ஒரே மகள்! ‘அவளை எதுவும் சொல்லாதே. எங்க அம்மாதான் மகளாகப் பிறந்திருக்கிறாள்’ என்று எவ்வளவு செல்லமாக பார்த்துக் கொண்டார்!

*******

நானும் தவறு செய்திருக்கிறேன். சிவில் இன்ஜினியரிங் முடித்த பிறகு, வேலைக்கு முயற்சி எதுவும் செய்யவில்லை. அப்பாடா! படிப்பு முடிந்து விட்டது. கொஞ்சநாள் நிம்மதியாக ரெஸ்ட் எடுத்துக்கொள்வோம் என்று நினைத்திருந்தேன்.

படிக்கும் போது கவனம் செலுத்தி படிக்கவில்லை. எப்போதும் சிநேகிதிகளுடன் பேச்சும், சிரிப்புமாகப் பொழுதை போக்கி வந்தேன். எப்படியோ முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று விட்டேன். படிப்பு முடிந்த பிறகுதான் தோன்றியது. பள்ளியில் படிக்கும் போது நன்றாகத்தானே படித்து வந்தோம்? இந்த இன்ஜினியரிங் படிப்பை ஏன் சிரத்தை எடுத்துக்கொண்டு படிக்க வில்லை?

எல்லாம் கனவு போல் நடந்து முடிந்து விட்டது. கல்லூரிப் பேருந்தில் ஒரு மணி நேரம் பயணம், ஆண்களும், பெண்களுமாய் சேர்ந்து அரட்டை அடித்துக் கொண்டு ஜாலியாக ஏதோ பிகினிக் போவது போல் கல்லூரிக்குப் போய் வந்தாள். அந்த நான்கு வருடங்களும் எவ்வளவு சந்தோஷமாக கழிந்து விட்டன!

படிப்பு முடிந்ததும் அப்பா கேட்டார் மேற்கொண்டு என்ன செய்வதாக இருக்கிறாய் என்று.

என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. ஒரு லட்சியமும் இல்லாத படிப்பை முடித்துவிட்டு களைத்துப் போய் விட்டேன். கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்ளணும் என்று நினைத்தேன். இப்பொழுது தோன்றுகிறது இன்னும் கொஞ்சம் சிரத்தையாகப் படித்திருக்கலாமே என்று.

அம்மா எப்போதும் சொல்லிக்கொண்டு இருப்பாள். “சுதா! வாழ்க்கையில் படிப்பு ரொம்பவும் முக்கியம். அதை விட்டு விடாதே” என்று. அப்போது அம்மா சொன்னது பழைய பஞ்சாங்கம் போல் இருந்தது.

அதற்குள் அப்பாவின் நண்பன் மூலமாக இந்த வரன் வந்தது. பெயர் மகேஷ். நல்ல உயரம், இன்ஜினியர், ஹைதரபாதில் சாப்ட்வேர் வேலை, ஒரு தங்கை. அவளுடைய திருமணமும் முடிந்து விட்டது. பெற்றோர்கள் சொந்த ஊரில் இருக்கிறார்கள். அவர்களுக்கு அங்கே வீடு, நிலம் நீச்சு எல்லாம் இருக்கிறது. பெரிய பொறுப்புகள் எதுவும் இல்லை. குறை சொல்வதற்கு எதுவும் இல்லாத இடம்.

எனக்கும் மறுப்பு சொல்வதற்கு எந்தக் காரணமும் தெரியவில்லை. கல்யாணம் என்றதும் ஏதோ தெரியாத உற்சாகம் பொங்கி வந்தது. இனிமேல் எனக்கு என்று ஒரு வீடு இருக்கும். என் விருப்பம் போல் அதை சீரமைத்துக் கொள்வேன். கணவன் மனைவியுமாக ஊர் சுற்றுவோம், காதலித்துக் கொள்வோம். கல்யாணம் முடிந்த பிறகுதான் காதல் என்று என் மனதில் முன்பே தீர்மானம் செய்திருந்தேன் . கல்லூரியில் படிக்கும் போது இரண்டு மூன்று பேர்கள் காதலித்து கல்யாணம் செய்து கொண்டார்கள். ஆனால் என் மனதில் அது போன்ற எண்ணம் ஒரு நாளும் வந்தது இல்லை.

திருமண நாள் நிச்சயமானதும் அம்மாவும், நானும் கடைகடையாக ஏறிக் கொண்டிருந்தோம். பட்டுப் புடவை, சாதாரண புடவை, ரெடிமேட் ஆடைகள், மாட்சிங் பிளவுசுகள், செருப்புகள், சிக்கர் பொட்டுகள்… ஒன்றா இரண்டா!

ஷாப்பிங் என்றாலே தலைவலி வரும் அளவுக்குக் கடைகளை ஏறி இறங்கினோம். இனி திருமணப் பத்திரிகை தேர்வு செய்யும் கட்டம். எனக்குப் பிடித்தது அம்மாவுக்குப் பிடிக்காது, அப்பாவுக்குப் பிடித்தது எனக்குப் பிடிக்காது. மூன்று பேருக்கும் பிடித்தது தேர்வு செய்வதற்குள் ஒரு வாரம் ஓடி விட்டது.

இனி வாழ்நாள் முழுவதும் எனக்குத் துணை மகேஷ்! வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்வதில் அவசரப்பட்டு விட்டேனா?

அம்மா, அப்பாவுக்கும் பெரியவர்கள் நிச்சயம் செய்த கல்யாணம்தான். அவர்கள் ஒற்றுமையாகத்தானே இருந்தார்கள்?

என் விஷயத்தில் மேட்சிங் எங்கேயோ தவறி விட்டது போன்ற உணர்வு.

கல்யாணத்தின் போதே தெரிந்தது. என் சினேகிதிகள் ஜோக் செய்தால் கடுகடுவென்று முகத்தை வைத்துக் கொண்டான். “அவனுக்கு எல்லாம் ஒழுங்குமுறையுடன் இருக்கவேண்டும். நான் பண்ணினால் கூட அவனுக்கு சில சமயம் பிடிக்காது. ஏன் இப்படிச் செய்தாய் என்று கோபித்துக் கொள்வான்.” மாமியார் மகனைப் புகழ் பாடினாள்.

“உன் மனைவி வந்த பிறகு உனக்கு வேண்டிய விதமாகப் பண்ணவைத்து சாப்பிடு. என்னால் இதைவிடச் செய்ய முடியாது என்று சொல்லிவிட்டேன்.”

மாமியார் சொன்ன போது என் இதயம் தொண்டைக்குழிக்கு வந்தது போல் இருந்தது,

இப்பொழுது நான் வாய்க்கு ருசியாக சமைத்துப் போட்டு, வீட்டை நேர்த்தியாக எடுத்து வைத்து நல்ல பெயர் வாங்க வேண்டுமா? அடடா! நன்றாகப் படித்திருந்தும் வேலைக்குப் போகாமல் ஏன் சும்மா இருந்தேன்? அது இன்னும் கொஞ்சம் சுலபமாக இருந்திருக்கும் இல்லையா?

கணினி மூலமாகச் சமையல் குறிப்புகளைக் கற்றுக்கொண்டு ஆறுமாதங்கள் போவதற்குள் பைவ் ஸ்டார் ஹோட்டல் அளவுக்கு இல்லை என்றாலும் ஓரளவுக்கு நன்றாகவே சமைக்கத் தொடங்கினேன்.

அப்படியும் குறை சொல்லாமல் ஒரு நாளும் சாப்பிட்டது இல்லை. கத்தரிக்காய் வதக்கல் செய்தால் எண்ணெய் பசையே இல்லை. இன்னும் கொஞ்சம் எண்ணெய் விட்டு வதக்கி இருந்தால் நன்றாக இருக்கும் என்பான். டாக்டர்கள் எண்ணெய்யை குறைக்கச் சொல்லி சொன்னார்களே என்று கவனமாக தயாரித்தேன். ருசியாகத்தான் இருந்தது. இன்னும் சொல்லப் போனால் அமிருதமாகவே இருந்தது.

என்ன மனிதன் இவன்!

இருந்தாலும் இப்படி சமைத்துப் போட்டுக்கொண்டு நான் ஏன் இப்படி உட்கார்ந்து இருக்கிறேன்? வேலைக்குப் போகணும் என்று முடிவு செய்து அதை அறிவிக்கவும் செய்தேன்,

“உன் விருப்பம். நான் வீட்டுக்கு வரும் போது நீ வீட்டில் இருக்க வேண்டும். மூடி இருக்கும் கதவைத் திறந்து கொண்டு வீட்டுக்குள் வருவது எனக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்காது. எனக்கு வாய்க்கு ருசியாக இருக்க வேண்டும். சமையல் சாப்பாட்டில் எந்தக் குறையும் இருக்கக் கூடாது. நான் மற்றவர்களைப் போல் இல்லை. இருந்தாலும் நான் உனக்கு என்ன குறை வைத்தேன்? நீ கேட்காமலேயே எல்லாம் வாங்கித் தருகிறேன். சொந்த வீடு இருக்கிறது. அடுத்த மாதம் கார் வாங்கப் போகிறேன்.”

எனக்குத் தெரியாமலேயே, என்னைக் கலந்து ஆலோசிக்காமலேயே, என் விருப்பு வெறுப்புகளின் பிரமேயம் இல்லாமலேயே காரியங்கள் நடந்தேறிக் கொண்டிருக்கும்.

நான் எவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டேன் என்று இப்பொழுது புரிந்தது. என் வாழ்க்கையைப் பற்றி, எவ்வளவு சுலபமாக, முடிவு செய்து விட்டேன்! என்னுடைய பிரமேயம் இல்லாத வாழ்க்கை இது!

சதுரமாக இருக்கும் ஒரு பொருளை எடுத்து வட்டமாக இருக்கும் ஒரு இடத்திற்குள் பொறுத்த முயற்சி செய்தால், பொருளாகவே இருந்தாலும் அதற்குக் காயம் ஏற்படாமல் இருக்காது.

நான் என்று ஒருத்தி இறுதியில் எஞ்சி இருப்பேனா? மகேஷின் மனைவியாக என்னை நிலை நாட்டிக் கொள்வதற்குள் எனக்குப் பிரியமானவற்றை எத்தனை இழக்க வேண்டியிருக்குமோ.

தேவையில்லாமல் அதிகமாக யோசித்துக் கொண்டிருக்கிறேனோ. இப்பொழுதே இப்படி என்றால் நாளை ஒரு குழந்தை பிறந்து விட்டால் நிலைமை இன்னும் எப்படி மாறுமோ.

வேலைக்குப் போவதாக சொன்னது முதல் அவனுடைய எரிச்சல் அதிகமானதை உணர்ந்து கொண்டுதான் இருந்தேன். அதன் பாதிப்புதான் இன்று தலைவலியாக உருமாறி இருக்கிறது. மனம் காயமடைந்தால் உடலும் நலிந்து போகும் இல்லையா.

“டிபன் ரெடியா?” மகேஷின் குரல் கேட்டது.

“இதோ கொண்டு வருகிறேன்.”

ஒரு தட்டில் இரண்டு தோசைகள், இரண்டு விதமான சட்னி, தோசைமிளகாய் பொடி, உருக்கின நெய், இன்னொரு கையில் டம்ளரில் தண்ணீர் கொண்டு போய் மேஜை மீது வைத்தேன்.

“நான் வேலைக்குப் போவது நிச்சயம். வேலைக்குப் போகாமல் என்னால் இருக்க முடியாது. குறைந்த பட்சம் சின்ன குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் டீச்சர் வேலை என்றாலும் சரி. இல்லை என்றால் எனக்குப் பைத்தியம் பிடித்து விடும். இது போல் சமைத்துப் போட்டுக்கொண்டு, வீட்டோடு இருப்பதற்கு நான் படிப்பு அறிவு இல்லாத, சுயசிந்தனை இல்லாத முட்டாள் இல்லை. மனமும், யோசிக்கும் மூளையும் இருக்கும் பெண். வாய்க்கு ருசியாக சமைத்துப் போடும் சமையல்காரியாக மட்டுமே நீங்கள் என்னை நடத்துகிறீர்கள். உங்களை நேசிக்கும், மதிக்கும் மனைவி உங்களுக்கு வேண்டும் என்றால் நான் வேலைக்குப் போவதற்கு சம்மதம் சொல்லுங்கள். இல்லை என்றால் என்னால் இங்கே இருக்க முடியாது.”

மனதில் இருப்பதைச் சொல்லிவிட்டு என் அறைக்குப் போய் படுத்துக் கொண்டேன்.

இந்தத் தலைவலி குறைய வேண்டும் என்றால் தூக்கம் ஒன்றுதான் மருந்து.

என் மனதில் பட்ட காயம் ஆற வேண்டும் என்றால் முதலில் நான் விழித்துக் கொள்ள வேண்டும்.

இனி முடிவு அவன் கையில். எனக்கு என்ன குறை என்று புரிந்தால் ஒப்புக்கொள்வான் என்ற யோசனையுடன் தூக்கத்தில் நழுவினேன்.

_____________________________________

கௌரி கிருபானந்தன்
மொழியாக்கம்:
கௌரி கிருபானந்தன்
tkgowri@gmail.com

_____________________________________

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *