க. பாலசுப்பிரமணியன்

கேள்வியறிவு ஒரு சிறப்பான ஆற்றல்

education11-1

“வாத்தியார் சொன்னதை காதிலே வாங்கிண்டயா?” என்று தங்கள் குழந்தைகளிடம் கேட்காத பெற்றோர்களே கிடையாது எனச் சொல்லலாம். “கேட்டதையெல்லாம் இந்தக் காதிலே வாங்கி அந்தக் காது வழியா வெளியிலே விட்டுடாதே” என அறிவுறுத்தும் பெற்றோர்களும் அதிகம். கற்றல் என்ற ஆற்றலில் காதால் கேட்பது ஒரு முக்கியமான செயல்.

இதன் சிறப்பை விளக்கிய வள்ளுவரோ

“செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம் அது

செல்வத்துள் எல்லாம் தலை “

என அழகாக எடுத்துரைத்துள்ளார். கற்றலில் மொழித்திறன்களைப் பற்றிய ஆராய்ச்சியில் அதனை வலுப்படுத்த நன்கு வகையான முறைகளை வகுத்துள்ளனர்.

1.கேட்பது (Listening)

2.பேசுவது (Speaking)

3. படிப்பது (Reading)

4, எழுதுவது (writing)

இதில் கேட்கும் திறனுக்கே முதலிடம். தாயின் கருவறையில் இருக்கும் பொழுதிலிருந்தே தாயின் இதயத்துடிப்பை கேட்டு  அறிந்து நினைவில் கொள்ளுவது ஒவ்வொரு குழந்தையின் வளர்ச்சிப் பாதையில் முதல் படி.

ஆகவே சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு கேட்கும் திறனை வளர்த்தல் மிக அவசியம். கேட்கப்படும் ஒவ்வொரு சொல்லும்  ஒலியும் பொருளை அறிந்து கொள்ள உதவுவதாகவோ அல்லது ஒரு பொருளுக்கு விளக்கம் அளிப்பதாகவோ இருக்க சாத்தியமில்லை.

ஆனால் கேட்கப்படும் விஷயத்தின் பொருளை அறிந்துகொள்ளவும் அதை உள்மனத்தில் நிலைப் படுத்திக் கொள்ளவும் குழந்தைகள் கற்றுக்கொள்ள வேண்டும். இந்தத் திறனை இளம் வயதில் நாம் கற்றுக்கொள்ளவிட்டால் அதுவே ஒரு பழக்கமாகி நம்முடைய வளர்ச்சிக்கு ஒரு முட்டுக் கட்டையாக மாறிவிடும். எத்தனையோ முறை நாம் மற்றவர்களுடன் உறவாடும்போழுது “நான் சொல்லுவதை முழுதாகக் கேட்டுவிட்டு அப்புறம் நீங்கள் பேசலாமே ” என்று மற்றவர்கள் சொல்லக்  கேட்டிருக்கின்றோம். கேட்டல்  என்பது ஒரு உணர்வு சார்ந்த செயல். முழுமையாக கவனம் இல்லாமல் நாம் கேட்கும் பொழுது அது நேரத்தை வீணடிப்பது மட்டுமின்றி சொல்லுபவர்களின் மனத்தையும் புண்படுத்துவதாக அமைகின்றது.

“சொல்லுங்க.. சொல்லுங்க.. கேட்டுக் கொண்டுதானிருக்கின்றேன் ” என்று ஒருவர் சொல்லும்பொழுது அவருடைய அலட்சியப் போக்கு வெளிப்படுகின்றது.

” நீங்க சொல்றதைச் சொல்லுங்க.. ” என்பதைக் கேட்கும் பொழுது மற்றவரின் வார்த்தைகளுக்கு மரியாதை இல்லாமை  வெளிப்படுகின்றது.

” நான் இப்ப என்ன சொன்னேன்?” என்று கேட்கின்ற ஆசிரியரைப் பார்த்து மிரண்டு திரு திருவென முழிக்கின்ற மாணவர்கள் பலருண்டு.!

காதால் கேட்பது (hearing )  ஒரு இயற்கையான செயல். காதில் விழுகின்ற ஒலி வடிவங்களெல்லாம் முனைவுடனோ முயற்சியுடனோ கேட்பது ஆகாது. பல நேரங்களில் அது  ஒரு தற்செயலான தற்காலிகமான செயலாக இருக்கும். காதில் உள்வாங்கிக் கொள்ளுதல் (Listening ) கவனத்துடன் ஈர்ப்புடன் விருப்பத்துடனோ விருப்பமின்றியோ அறிந்து புரிந்து கொள்வதற்கு முனைப்படும் செயல். கற்றலுக்கும் வாழ்க்கைத் திறனின் வளத்திற்கும் இது ஒரு முக்கியமான நுழைவாயில். பள்ளிப் பருவத்தில் குழந்தைகள் ஈடுபாடுடன் கேட்கும் திறனை வளர்த்துக்கொள்ள வளப்படுத்திக்கொள்ள ஆசிரியர்களும் பெற்றோர்களும் உதவி செய்தல் அவசியம்.

ஈடுபாடோடு ஒருவர் கேட்கும் பொழுது சொல்லுபவரின் உணர்வுநிலைகளுக்கும் கேட்பவரின் உணர்வு நிலைகளுக்கும் ஒரு பாலம் அமைக்கப் படுகின்றது. உணர்வுகள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன பல நேரங்களில் சொல்லுபவரின் உணர்வு நிலைகளுக்கேற்ப கேட்பவர் கோபம், கருணை, விரக்தி, பயம் சிரிப்பு மற்றும் பல நுண்ணிய உணர்வுகளை அனுபவிக்கின்றார்.

பேரறிஞர் ஜித்து கிருஷ்ணமூர்த்தி கூறுகின்றார். “ஒருவர் மற்றவர்கள் சொல்வதை முழுமையாகவும் கவனமாகவும் கேட்கும் பொழுது மற்றவைகள் வார்த்தைகளை மட்டுமின்றி சொல்கின்றவரின் உணர்வுகளையும் முழுமையாக உணர்ந்து ஏற்றுக்கொள்கிறார்.”

கற்றலில் கேள்வி அறிவின் விழுக்காடு மிக அதிகமானது. படித்தல், பேசுதல் மற்றும் எழுதுதல் ஆகிய நிகழ்வுகளை விட கேட்பதின் மூலமாக நாம் அறிந்துகொள்வது கருத்துக்களை வளப்படுத்துவதற்கும், சிந்தனையைத் தூண்டுவதற்கும் நல்ல உரமாக அமைகின்றது.

ஒரு நல்ல அறிவாளி சொல்லுவதை நாம் கேட்பது ஒரு நூலகத்தில் உள்ள நூல்கள் அனைத்தையும்  படித்து முடித்ததற்கு நிகர்  என்று ஒரு  ஆங்கில எழுத்தாளர் சொன்னது நினைவுக்கு வருகின்றது.

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *