பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

12900166_984511154936417_1924486583_n
67945931@N04_rராஜ எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (02.04.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த திருமதி மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “படக்கவிதைப் போட்டி (57)

  1. காக்க வாரீர்…

    சாயம் உடலில் பூசிடினும்
         சாயா அழகுச் சிறுமலர்கள்,
    மாயம் மந்திரம் ஏதுமில்லை
         மாறா வெகுளிப் புன்னகைகள்,
    காயம் மனதில் உள்ளவர்தம்
         காமப் பார்வை தனில்சிக்கிக்
    காயம் படாமல் காத்திடவே
         கணத்தில் வருவீர் கடவுள்களே…!

    -செண்பக ஜெகதீசன்…

  2. வறுமை மறந்து சிரித்திடவே 
       வானவில் லாட்டம் ஆடிடுங்கள் !
    பெருமை சிறந்து திகழ்ந்திடவே   
       பொறுமை யாட்டம் இருந்திடுங்கள் !
    கருணை கொண்ட விளங்கிடவே 
       கடவு ளாட்டம் மின்னிடுங்கள் !
    சாதி மறந்து வாழ்ந்திடவே 
      சமத்துவ ஹோலியை விதைத்திடுங்கள் !  
                                                             – ஹிஷாலி, சென்னை !

  3. வண்ணங்களே இங்கு
    வாழ்க்கையாகின்றன….
    எண்ணங்களால் அதை
    பேதப்படுத்துகிறான் மனிதன்!

    வண்ணங்களால் மனம்
    வசந்தத்தைப் பூசிக்கொள்கிறது….
    வார்த்தைகளால் அதன்
    தட்பவெப்பநிலை மாறுபடுகிறது.

    வண்ணங்களால் இயற்கை
    எல்லையிலா எழில் பெறுகிறது…..
    சுயநலத்தால் மனிதரதைச்
    சிதைத்து விடுகின்றனர்.

    வண்ணங்களால் இறைவனும்
    வடிவழகைப் பெறுகின்றான்……
    மதப்பூச்சால் வேறுபட்டு
    மாகடவுள் நிறமிழக்கின்றான்.

    வண்ணங்களால் சூழுலகு…அதன்
    வடிவம் கெடாது கொண்டாடு பெண்ணே…
    வண்ணத்துப்பூச்சிகளை இழந்துவிட்டு
    அவையுதிர்த்த வண்ணங்களால் ஏதுபயன்?

    வண்ணங்களை மனதிலிருந்தகற்றி
    வாழ்க்கையினை வாழ்ந்து பார்!
    புறவுலகின் பூக்களெலாம்
    வண்ணங்களின் பாடம் புகட்டும்!

    இன்னும் பலமுறை
    பேதமிலாது
    வண்ணங்கள் பூசிக்கொள்ளுங்கள்….
    இருக்கின்ற உலகம்
    அடடாவோ…..
    எத்தனை எழில் கொள்ளும்!
              கவிஞர் “இளவல்” ஹரிஹரன், மதுரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *