இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (190)

0

— சக்தி சக்திதாசன்.

அன்பினியவர்களே!

அன்பான வணக்கங்கள்.

அடுத்தொரு வாரம் ஓடி விட்டது. காலம் எனும் பறவை தனது சிறகுகளுக்குள் பல நிகழ்வுகளை தங்கிக் கொண்டு வேகமாகப் பறக்கிறது. அதன் இலக்கு எதுவென்று எமக்குத் தெரியாது ஆனால் அதன் சிறகுகளுக்குள் சிக்குண்டு அதனோடு பறக்கும் நாம் மட்டும் எத்தனையோ இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டு பறக்கின்றோம்.

சட்டம், ஒழுங்கு என்பது ஒரு நாட்டின் முதுகெலும்பாகிறது. இவை சீர்குலைந்து விட்டால் நாட்டின் கலாச்சார சீரழிவைத் தடுப்பதென்பது முடியாத செயலாகிவிடும். இச்சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதே நாட்டின் பாதுகாவலர்களான போலிஸ் படையினரின் முக்கிய பணியாகிறது.

சட்டத்தின் முன்னே குற்றமென கருதப்படும் விடயங்கள் இவர்களிடம் முறையிடப்படுமானால் அதைத் தீர விசாரித்து நடவடிக்கை எடுப்பது இவர்களின் முக்கிய கடமையாகிறது. ஆனால் இவர்களின் முன்னால் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளின் தராதரம் அவை எவரால் வைக்கப்படுகிறது, அதனுள் வேறு ஏதாவது உள்நோக்கங்கள் புதைந்திருக்கின்றனவா? எனும் வினாக்களுக்குத் திருப்தியான விடை கிடைத்தால் மட்டுமே இவர்களது விசாரிப்புகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இங்கிலாந்தின் காவல்துறையினரின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் குழு இவர்களது ஒவ்வொரு நடவடிக்கையையும் உன்னிப்பாகக் கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது. இவர்களது நடவடிக்கையில் ஏதாவது ஒன்று முறையற்றது என்று காணும் பட்சத்தில் இக்கண்காணிப்புக்குழு காவல்துறையினர் மீதான தனது விசாரணைகளை முடுக்கி விடுகின்றது.

இப்படியான பல நிகழ்வுகள் நடந்திருப்பதை நாம் கண்கூடாகப் பார்த்திருக்கிறோம். குறிப்பாக ஆயுததாரியான ஒரு சந்தேகநபர் மீது காவல்துறையினரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டால் உடனடியாக இக்கண்காணிப்புக் குழுவின் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுவிடுகிறது. இதைப் பல சமீபத்திய நிகழ்வுகளில் நாம் பார்த்திருக்கிறோம்.

Paedophile Information Exchangeஅதுமட்டுமின்றி காலத்துக்குக் காலம் இங்கிலாந்துக் காவல்துறையின் பொறுப்பதிகாரி பாராளுமன்றத்தில் காவல்துறைக்குப் பொறுப்பான தேர்வுக்குழுவின் முன்னால் ஆஜர் படுத்தப்பட்டு அவரின் நடவடிக்கைகளை அன்றிக் காவல்துறையின் நடவடிக்கைகளுக்கு விளக்கம் கோரப்படுவது வழமை.

இது காவல்துறையினர் மீதும், அவர்களது நடவடிக்கைகளின் மீதும் பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்படுகிறது. இப்படியான சூழலில் தான் இப்போது ஒரு புது சர்ச்சை கிளம்பியுள்ளது. இதைக் கிளப்பியுள்ளவர் இப்போது ஆட்சியிலிருக்கும் கன்சர்வேடிவ் கட்சியின் ஒரு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராவர்.

இவரின் பிரச்சனை என்ன ? இதன் பின்னணி என்ன ? எனும் கேள்விகள் எழுவது சகஜமே ! இங்கிலாந்தின் பிரபல முன்னணிப் பிரமுகர்களில் ஒருவர் மறைந்த திரு ஜிம்மி சவில் ( Jimmy Savile ). இவர் திருமணமாகாத பிரம்மச்சாரி ஆவார். இவர் மறைந்து சில வருடங்களாகின்றன. இவர் தொலைக்காட்சியிலும், மற்றும் ஊடகங்களிலும் பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியவர். குறிப்பாகப் பல இளம் சிறார்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்றிருந்தவர்.

பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பல நிவாரணப் பணிகளுக்கான நிதிகளைச் சேர்க்கும் நிகழ்வுகளை நடத்தியவர். இவருக்கு இங்கிலாந்து மகாராணியாரினால் அளிக்கப்படும் அதியுயர் கெளரவமான “சர்” பட்டம் வழங்கப்பட்டிருந்தது. இவர் உயிரோடு இருக்கும் போதே இவரைப் பற்றி கசமுசவென்று ஆங்காங்கே வதந்திகள் கிளம்பின. ஆனால் சமுதாயத்தில் இவருக்கிருந்த செல்வாக்கினால் அவையனைத்தும் புறக்கணிக்கப்பட்டன. அப்போதைய காவல்துறையும் இவர் மீது எவ்விதமான சேற்றையும் வாரியிறைக்கத் தயாராகவில்லை.

இவர் மறைந்து சில வருடங்களின் பின்னால் இவரால் பாலியல் பாதிப்புக்குள்ளாகிய பல பெண்கள் முன் வந்து முறையீடு செய்தார்கள். ஊடகங்களில் தனக்கிருந்த செல்வாக்கின் அடிப்படையில் அப்போது சிறுவர்களாகவும், சிறுமியராகவும் இருந்த பலரை இவர் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டது அம்பலத்திற்கு வந்தது.

இவர் இறந்தது போயிருந்ததினால் இவர்மீது எந்த விதமான சட்ட நடவடிக்கைகளும் எடுக்கமுடியவில்லை. ஆனால், மாகாரணியாரினால் இவருக்கு அளிக்கப்பட்ட கெளரவ பட்டம் திரும்பப் பெறப்பட்டது. இவரது இந்தப் பிரச்சனையில் அன்றைய காலகட்டத்தில் ஊடகத்துறையில் முன்னணியிலிருந்த மற்றும் பலரின் மீதும் வழக்குகள் தொடரப்பட்டன. காவல்துறையினரின் அன்றைய கையாலாகாதப் போக்கும் பலரால் கண்டிக்கப்பட்டது.

பலவருடங்களின் முன்னால் நிகழ்ந்த இத்தகைய பாலியல் குற்றங்களை ஆராய்வதற்கென புதிதாகக் காவல்துறையினரால் ஒரு பிரிவே ஆரம்பிக்கப்பட்டது. அப்போதுதான் “நிக்” என்று மட்டுமே அறியப்பட்ட ஒரு மனிதர் போலிசாருக்கு அன்றைய பல முன்னணி அரசியல் தலைவர்கள் பலர் தம்மீதும் வேறுபலரின் மீதும் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றம் சாட்டினார்.

அவரின் குற்றச்சாட்டுகளின் படி முன்னால் உள்துறை அமைச்சர் லியோன் பிரிட்டன், இராணுவ ஜெனரல் லார்ட் பிரமோல், முன்னால் கன்சர்வேடிவ் பாராளுமன்ற உறுப்பினர் ஹார்வி பிராக்டர் மற்றும் முன்னால் பிரதமர் எட்வர்டு ஹீத் ஆகியோர் இத்தகைய துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டோரில் சிலர் எனக்க குறிப்பிடப்பட்டது.

ஜிம்மி சவைல் அவர்களின் மேலெழுந்த குற்றச்சாட்டுகளை தகுந்த முறையில் விசாரிக்கத் தவறியதாகக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் காவல்துறையினர். அதனால்தானோ என்னவோ இதனை மிகவும் முக்கியமாக எடுத்து மேற்குறிப்பிட்டவர்களில் உயிரோடிருந்த மூவரை விசாரணைக்குட்படுத்தினார்கள். ஆனால், விசாரணை முடிவடைதற்குள்ளாகவே திரு லியோன் பிரிட்டன் அவர்கள் இறந்து விட்டார். அதைத் தொடர்ந்து நடந்த விசாரணைகளினால் மற்ற இருவரினதும் மீதான அவதூறுகள் அவர்களைப் பெரிதும் பாதித்தன.

இதிலே காவல்துறையினரின் மிகப்பாரதூரமான செயல் என்னவெனில் “நிக்” எனும் நபரின் வாக்குமூலம் நம்பப்படக்கூடியது எனும் கருத்துடன் கூடிய அறிக்கையை வெளிவிட்டதுவே. பல மாதங்கள் விசாரித்ததின் பின்னால் தற்போது இத்தகைய குற்றங்கள் இழைக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவுமே இல்லை என்று கூறி இவ்விசாரணைகள் அனைத்தையும் நிறுத்தி விட்டார்கள்.

ஆனால், இவற்றால் பாதிக்கப்பட்வர்களில் ஒருவரான திரு ஹார்வி பிராக்டர் எனும் 69 வயதான முன்னைய பாராளுமன்ற உறுப்பினர் இதனால் தனது வாழ்க்கையே சீரழிந்து போயுள்ளதாகப் பகிரங்கமாக தொலைக்காட்சியில் அறிக்கை விட்டுள்ளார். தன்னுடைய கெளரவமும், அதனால் தனது குடும்பத்தினருக்கு ஏற்பட்ட அவமானத்துடன் கூடிய அசௌகரியங்களும் ஈடு செய்யப்படமுடியாதவை என்று கண்ணீர் மல்கக் கூறியுள்ளார். சுயநலத்துடன் கூடிய பொய்வாக்குமூலம் அளித்த ஒரு பொய்யனின் வாக்குமூலத்தை நம்பக்கூடியது என்று கூறிய காவல்துறையினர் மீது மிகவும் ஆத்திரம் கொண்டுள்ளார்.

தனக்கிழைக்கப்பட்ட அநீதிக்காகக் காவல்துறையின் பொறுப்பதிகாரியும், அதற்குப் பொறுப்பாகவுள்ள உள்துறை அமைச்சரும் இராஜினாமா செய்யவேண்டும் என்று கோரியுள்ளார். அதற்கான பதில்கள் அவர்களிடமிருந்து இதுவரை வெளிவரவில்லை.

இதில் இரண்டு விதமான கேள்விகள் எம்முள் பிறக்கின்றன

சமுதாயத்தில் எத்தனைப் பெரிய அந்தஸ்து வகித்தாலும் அவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தக் காவல்துறை தயங்காதா ? என்பது ஒன்று.

தம்மீது குற்றச்சாட்டு வந்துவிடக்கூடாது என்பதற்காக வலுவில்லாத வாக்குமூலத்தைக் கொண்டு கெளரவமான பிரஜை ஒருவரின் வாழ்வைச் சிதைப்பதற்கும் தயங்கமாட்டார்களோ ? எனும் ஆதங்கம் மற்றொன்று.

சட்டமும், ஒழுங்கும் ஒரு நாட்டிற்கு எத்தனை முக்கியமோ அதனை நிலைநாட்டும் முறையும் முக்கியம். இரண்டிற்குமிடையிலான சமநிலை பேணப்படுவது அவசியம். தவறான நடவடிக்கைகளினால் ஒரு நிரபராதியின் வாழ்க்கை சீர்குலைக்கப்படுமானால் அதுவும் சட்டமும், ஒழுங்கும் திசைமாறிப்போவதன் அடையாளமே !

மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்

படம் உதவி: http://tapnewswire.com/2015/08/spies-lords-predators-murders-by-westminster-paedophile-ring/

http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *