-மேகலா இராமமூர்த்தி

”காதல் காதல் காதல்
காதல்போயின் காதல்போயின்
சாதல் சாதல் சாதல்” 
என உணர்ச்சிததும்பக் காதலின் மகத்துவத்தைச் சகத்துக்கு உணர்த்தினான் மகாகவி பாரதி.

காதல் என்பது பிறருக்கு விவரிக்க இயலாத ஓர் உள்ளத்து உணர்வு; காட்டலாகாப் பொருள். ஊழ் கூட்டுவிப்பதனால், ’வடகடலிட்ட ஒரு நுகத்தின் ஒருதுளையில் தென்கடலிட்ட ஒருகழி கோத்தாற்போல்’ (இறையனார் அகப்பொருளுரை – சூத்திரம் 2) எங்கோபிறந்த ஆணும், பெண்ணும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் காதல் கொள்கின்றனர். இந்தக் காதலை, ‘நோய்’ என்று புகல்வதிலும், ‘அணங்கு’ என்று மருள்வதிலும் பொருளில்லை. குளகை (அதிமதுரத்தழை) மென்ற யானை மதங்கொள்வதைப்போல், தக்கவரைக் கண்டால் வெளிப்படும் தன்மையுடையது இந்தக் காதல்!” என்கிறார் சங்கப்புலவர் மிளைப்பெருங்கந்தனார்.

காமங் காம மென்ப காமம்
அணங்கும் பிணியும் அன்றே நுணங்கிக்
கடுத்தலும் தணிதலும் இன்றே யானை
குளகுமென்று ஆள்மதம் போலப்
பாணியும் உடைத்தது காணுநர்ப் பெறினே (குறுந்: 136)

(காதலும், காமமும் ஒரேபொருளிலும் சங்க இலக்கியத்தில் பயின்றுவருதலுண்டு.)

தெய்வத்தின் ஆணையால் நிகழ்வது, ஊழின்வலியால் விளைவது என்று காதல்குறித்துச் சான்றோர் சாற்றியிருப்பினும், இவையாவும் உண்மைக்காதலுக்கே பொருந்துவதாகும். அப்படியானால் ”போலிக்காதல் என்ற ஒன்று உண்டா?” என்ற வினா நமக்கு எழலாம். இன்றைய இளைய சமுதாயத்தினர் சிலரின் நடத்தையை நோக்குங்கால், ”போலிக்காதல் இல்லை என்று சொல்லுவதற்கில்லை” என்றே பதிலிறுக்கவேண்டியிருக்கின்றது. ஆம்! இன்றைய இளைஞர் பலருக்குக் காதல் என்பது பொழுதுபோக்காகவும், காமஇச்சையைத் தணித்துக்கொள்வதற்கான குறுக்குவழியாகவும் மாறிவருவதாய்த் தோன்றுகின்றது. மக்கள் நடமாட்டம் மிகுந்திருக்கும் கடற்கரைகள், பூங்காக்கள் போன்ற பொதுவிடங்களிலும், பேருந்துகள், புகைவண்டிகள் உள்ளிட்ட ஊர்திகளிலும் காதலர்கள் என்று சொல்லிக்கொள்(ல்)வோர் அரங்கேற்றும் அருவருக்கத்தக்க காட்சிகள் இதனை உறுதிப்படுத்துகின்றன.

அஞ்சுவது அஞ்சாமையும், நாணுவது நாணாமையும் பேதைமையே ஆகும். மற்றவருக்குக் காட்சிப்பொருளாய்க் காதல்மாறுவது வேதனைக்குரியது. நம் தமிழ்ப்பண்பாட்டிற்கு அது முற்றிலும் எதிரானதுங்கூட. பெற்றோருக்குத் தெரியாமல் தலைவனும் தலைவியும் வளர்த்த அருமைக் காதலை, ’களவு’ எனத் திணைவகுத்து அனுமதித்த நம் புலவோர், அவர்கள் நாணமின்றிப் பொதுவிடத்தில் பலர்காணக் காதல்வளர்ப்பதை அனுமதித்தாரில்லை. ’பலர் காண’ என்பதில் உயர்திணையை மட்டுமல்லாது அஃறிணையையும் அடக்கியிருக்கும் உயர்ந்த மரபுக்கு சொந்தக்காரர்கள் நாம் என்பது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது.

என்ன….? அஃறிணை உயிர்கள் முன்பும் காதல் வளர்ப்பது தவறா? என்றுதானே வியக்கிறீர்கள்? நற்றிணைப் பாடலொன்று பகரும் கருத்து அதைத்தான் சொல்கின்றது!

விளையாடு ஆயமொடு  வெண் மணல் அழுத்தி
மறந்தனம் துறந்த காழ்முளை அகைய
நெய்பெய் தீம்பால் பெய்தினிது வளர்ப்ப
நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகுமென்று
அன்னை கூறினள் புன்னையது சிறப்பே
அம்ம நாணுதும்  நும்மொடு நகையே……….. (நற்றிணை – 172)

நெய்தல் நிலத்தலைவன் ஒருவனும், தலைவி ஒருத்தியும் ஒருவரை ஒருவரை சந்தித்தனர் கடற்கரையில். ’கடலோரக் கவிதை’யாய் காதல் மலர்ந்தது அவர்களிடையே. பிறரறியாது தினந்தோறும் சந்தித்துவந்தனர் இருவரும். அவர்கள் காதலை அறிந்தாள் தலைவியின் ஆருயிர்த்தோழி. ஒருநாள் பகற்பொழுதில் தலைவியைச் சந்திக்கவந்தான் தலைவன். அவ்வேளையில் தலைவியுடன் தோழியும் இருந்தாள். அவளைக்கண்டு நட்போடு புன்னகைத்த தலைவன், தலைவியோடு அருகிலிருந்த புன்னைமரத்தடியில் அமரப்போனான்.

அவ்வளவுதான்! தீயை மிதித்ததுபோல் பதறிய தலைவி, அவ்விடத்தைவிட்டு அகன்று நின்றாள். அவளின் செயல்கண்டு திகைத்த தலைவன், ”ஏன் இந்த மரத்தைக் கண்டதும் பதறி விலகுகின்றாய்? உன் அச்சத்துக்குக் காரணமென்ன?” என்று வினவினான் வியப்போடு!

”இந்தப் புன்னையருகில் என்னால் உம்மோடு அமரமுடியாது; ஏன்…அமரவும் கூடாது!” என்று புதிர்போட்டாள் தலைவி. விடைதெரியாது விழித்த தலைவன், தலைவியருகில் நின்றுகொண்டிருந்த தோழியை நோக்கினான். தலைவியின் தயக்கத்துக்கான காரணத்தைத் தோழி அப்போது விளம்பலுற்றாள் விவரமாய்.

”சிலகாலத்திற்கு முன்பு நானும்(தோழி), தலைவியும் எங்கள் ஆயத்தோடு இங்கே (தற்போது புன்னைமரம் இருக்குமிடத்தில்) கிச்சுக்கிச்சுத் தம்பலம்1 விளையாட விரும்பி, அவ்விளையாட்டில் ஒளித்துவைக்க ஏற்றதொரு பொருளைத் தேடிக்கொண்டிருந்தோம். சுற்றுமுற்றும் பார்த்தபோது முற்றிய புன்னைவிதை ஒன்று எங்கள் கைக்குக் கிட்டியது. அதைவைத்து விளையாடிவிட்டுச் சிறிதுநேரங்கழித்து மண்ணுள் புதைக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவ்விதையை இங்கு விட்டுவிட்டு அவரவர் இல்லிற்குச் சென்றுவிட்டோம்.

சிறிதுநாள் கழித்து மீண்டும் நாங்கள் இவ்விடம்வந்து பார்த்தபோது, என்ன ஆச்சரியம்…! அந்தப் புன்னைவிதை சிறிதாய் முளைவிட்டிருக்கக் கண்டோம்; அளவற்ற மகிழ்ச்சி கொண்டோம். அந்தச் சின்னஞ்சிறுசெடியை நெய்கலந்த இனியபாலை நீர்போலப் பெய்து வளர்த்துவந்தோம். (தலைவி இல்லத்தின் செல்வவளம் இங்கே குறிப்பாலுணர்த்தப்படுகின்றது!)

அந்த புன்னைச்செடியை எம் அன்னைக்கும் காட்டினோம். புன்னையைக் கண்ட அன்னை மகிழ்ச்சிமீதூர, ”நும் தங்கையைப் போன்ற இந்தப் புன்னை நும்மினும் சிறந்ததாகும்” (நும்மினும் சிறந்தது நுவ்வையாகும்) என்று இதனைப் புகழ்ந்துரைத்தார். அன்னை போற்றிய இப்புன்னையை அதுமுதல் எங்கள் தங்கையாகவே எண்ணிவருகின்றோம். அதனால்தான், அது பார்த்திருக்க, அதனருகே உம்மோடு அமர்ந்து நகையாட நனிநாணுகின்றாள் எம் தலைவி” என்று எடுத்துரைத்தாள் தோழி.

தோழியின் உரைகேட்டுப் பிரமித்துப்போனான் தலைவன். கேளிர்முன்பு (அது மரமாகவே இருந்தபோதினும்) காதல்வளர்க்க நாணிய தலைவியின் மாண்பும், மாட்சியும் நம்மைச் சிலிர்க்கவைக்கின்றன அல்லவா? இத்தகைய நாணமும் நற்பண்பும் இன்றைய ’மாடர்ன்’ காதலர்களிடம் மறைந்து அசட்டுத்துணிச்சலும், ஒழுக்கக்கேடும் மலிந்துவருவது மனவருத்தத்தை மிகுவிக்கின்றது.   

ஆதலால் காதலர்களே! காதல் செய்யுங்கள்…தவறில்லை; அதனைக் கண்ணியத்தோடும் கட்டுப்பாட்டோடும் செய்யுங்கள். அதுதான் எல்லாரும் உவப்பது! அன்றியும் காதலுக்கு நீவிர் காட்டும் மரியாதையும் அதுவே!

***

  1. கிச்சுக்கிச்சுத் தம்பலம்அன்றைய மகளிர் விளையாட்டுக்களில் ஒன்று. மண்ணை நீளமாகக் குவித்து அதனுள் ஒருபொருளை (ஒருபெண்) ஒளித்துவைக்க, (இன்னொருபெண்) அதனைக் கண்டுபிடிக்கவேண்டும். இதனைக் ’காய்மறை விளையாட்டு’ என்றும் அழைப்பர். நாகரிகம் மிகுந்துவிட்ட இக்காலத்தில் ’கணினி விளையாட்டுக்கள்’ வரவேற்பைப்பெற்று, காய்வைத்து விளையாடும் இதுபோன்ற விளையாட்டுக்கள் மண்ணைவிட்டே விரைந்து மறைந்து வருகின்றன.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *