மக்களின் எதிர்பார்ப்புகள்!

0

பவள சங்கரி

தலையங்கம்

எரிபொருள் நிறுவனங்களின் சமீபத்திய அறிவிப்பு மக்களுக்கு அதிர்ச்சியளிக்கக்கூடியது. பெட்ரோலுக்கு ரூ. 2.19 உம், டீசலுக்கு ஒரு உரூபாயும் விலையை அதிகப்படுத்தியுள்ளனர். இதையடுத்து பெட்ரோல் விலை 61. 32 உரூபாயும், டீசல் விலை 50.09 உரூபாயாகவும் உள்ளன. இது கீழ்த்தட்டு மற்றும் மத்திய தர மக்களை பெரிதும் பாதிக்கக்கூடியது. உலகச் சந்தையின் கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தின் காரணம் காட்டி, மிக சமீபத்தில் சென்ற மார்ச் 17 ஆம் தேதியன்றுதான் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 3.06ம், டீசலுக்கு ரூ.1.96ம் உயர்த்தப்பட்டன. அதாவது இந்த ஒரு மாத காலத்தில் மட்டும் ரூ.5.25 வரை விலை உயர்ந்திருக்கிறது. ஏற்கனவே விலைவாசி ஏற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மீண்டும் ஒரு முறை விலைவாசி உயரும் நிலை வந்தால் மிகுந்த சிரமத்திற்குள்ளாவார்கள் என்ற கவலை துளியும் இன்றி நடுவண் அரசு இப்படி விருப்பம்போல் விலையேற்றம் செய்வது இந்த தேர்தல் நேரத்தில் நல்லதல்ல. டீசல் விலை உயர்ந்ததாலும், தமிழகச் சாலை பயன்பாட்டிற்குரிய சுங்கக் கட்டணம் உயர்ந்ததாலும், ஏற்கனவே சரக்குந்துகளின் கட்டணம் உயர்த்தப்பட்டிருந்ததால் சரக்குந்துகளின் வாடகையை உயர்த்தப்போவதாக வண்டி உரிமையாளர்கள் அறிவித்திருந்தார்கள். இப்போது இந்த எரிபொருள் விலையுயர்வு காரணமாக மேலும் வாடகை உயர்ந்தால் பால், காய்கறிகள் என அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் நேரும். இதனால் பாதிக்கப்படப்போவது பொதுமக்கள்தான். பொதுவாகவே உலகச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறையும்போது அதன் பயனை நாட்டு மக்களுக்கு வழங்காத அரசு விலையேற்றம் என்று வரும்போது மட்டும் பாரபட்சமின்றி விலையை உடனே ஏற்றிவிடுவது மக்களுக்கு ஆட்சியாளர்கள் மீது அதிருப்தியையே ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

பெட்ரோலியப் பொருட்களுக்கு விலை நிர்ணயிக்கும் அதிகாரத்தை அரசு அளித்தபோதே விலைவிதிப்பானது சந்தையில் கச்சா எண்ணையின் பேரல் விலைகளையும் சந்தை உரூபாய் மதிப்பையும் வைத்தே நிர்ணயிக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெட்ரோலியப் பொருட்களை வாங்குவது மக்களுக்கு அத்தியாவசியத் தேவை என்பதாலேயே இந்நிறுவனங்கள் தங்கள் மனம் போன போக்கில் விலையை நிர்ணயம் செய்கின்றன. எப்போதுமே பெட்ரோலியப் பொருட்கள் விலை குறைவாக உள்ள மேற்கத்திய நாடுகள் மற்றும் கிழக்காசிய நாடுகளின் விலையுடன் நமது இந்தியாவில் விற்கப்படும் விலையை ஒப்பிட்டுப் பார்க்காமல் சந்தையிலுள்ள கச்சா எண்ணெயின் விலையையும் சந்தையிலுள்ள உரூப்பாயின் மதிப்பும் சரிவடையாமல் இருக்கும் இந்த சூழ்நிலையில் பெட்ரோலியப் பொருட்களின் விலை குறைக்கப்பட வேண்டுமேயொழிய இது போன்ற விலையேற்றம் அறிவிப்பு அதிர்ச்சியளிக்கக்கூடியதாகவே உள்ளது. இன்றைய சந்தை நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை உரூபாய் 40 முதல் 50 வரை இருக்கலாம் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மக்கள் அதிகாரப்பூர்வமாக கொள்ளையடிக்கப்படுவதே நிதர்சனம். பெட்ரோலிய நிறுவனங்கள் பெட்ரோலியப் பொருட்களுக்கான விலைவிதிப்பு பற்றிய வெள்ளை அறிக்கையை பொது மக்களுக்கு அளிக்க வேண்டியதும் நடுவண் அரசின் கடமை. முந்தைய ஆட்சியில் இதேபோன்ற பிரச்சனை வந்தபோது இன்றைய ஆட்சியாளர்கள் பேசியவைகளை நினைவுகூர்தலும் இன்றைய தேவை.

சென்ற பிப்ரவரி மாதத்தில் என்.சி.ஆர்., எனப்படும், தேசிய தலைநகர் பிராந்தியத்தைச் சேர்ந்த நொய்டாவில், உள்ள ‘ரிங்கிங் பெல்ஸ்’ நிறுவனம் உலகின் மிக மலிவான, ‘பிரீடம் 251’ என்ற ஸ்மார்ட் போன் தயாரித்து, அதை 251 உரூபாய்க்கு விற்கப்பட இருந்தது நினைவிருக்கலாம். இந்த போன் ரூ. 5,000 மதிப்புள்ள போன்களுக்குச் சமமாக, 4 அங்குல தொடுதிரையுடன், ‘டுவிட்டர், பேஸ்புக்’ போன்ற சமூக வலைதளங்கள் விரைவாக இயங்கக் கூடிய வகையிலான, 1 ‘ஜிபி’ நினைவுத்திறன், 8 ஜிபி தகவல் சேமிப்பு திறன், 3.2 ‘மெகாபிக்சல்’ பின்புற கேமரா, ‘செல்பி’கேமரா, அதிகத் திறனுள்ள பேட்டரி (1450 எம்.ஏ.எச்.) மற்றும் 32 ஜி.பி., மைக்ரோ எஸ்.டி., கார்டு பொருத்தக்கூடிய வசதியும் உடைய அந்த நவீன கைபேசி 251 உரூபாய்க்கு வழங்குவதாக அறிவிக்கப்ப்பட்டு சாதாரண மக்களின் வயிற்றில் பால் வார்க்கச் செய்திருந்தது. ஆனால் நமது அரசோ அவர்களின் வங்கிக் கணக்கு, தொழிலகங்களின் ஆய்வு என்று பல்வேறு சோதனைகளை நடத்தி அந்த நிறுவனத்தையே முடக்கிவிட்டது. இந்த விசயத்தில் அரசு, அந்த நிறுவனத்தின் உற்பத்தியில் உறுதுணையாக இருந்து தரக்கட்டுப்பாடு அலுவலர்களை பணியாற்ற வைத்து, இன்னும் சற்று விலையில் கூடுதல் இருந்தாலும் கூட, அந்நியச் செலாவணியும் , மக்கள் பணமும் பாதுகாக்கப்பட்டிருக்கும். இதைவிடுத்து அந்த முயற்சியை முளையிலேயே கிள்ளியெறிந்தது பன்னாட்டு நிறுவனங்களின் நிர்ப்பந்தமா என்ற ஐயமும் கிளப்பிவிட்டது. அரசு பொதுவாக பன்னாட்டு நிறுவனங்களின் தயாரிப்புப் பொருட்களுக்கான விலைவிதிப்பை ஆய்வு செய்வதில்லை. உதாரணமாக ஒரு காரின் விலை 8 இலட்சம் என்று அறிவிக்கிறார்கள் என்றால் அந்தக் கார் அந்த 8 இலட்சத்திற்கு தகுதியுடையதா? அல்லது எத்தனை சதவிகிதம் இலாபம் எடுத்துக்கொள்கிறது என்ற ஆய்வை அரசு ஏன் மேற்கொள்வதில்லை. இது போல பல இலட்சங்கள், கோடிகள் என்று காரின் விலை நிர்ணயிக்கப்படுகின்றன. அந்த விலைக்கு அவை தகுதியுடையவைதானா? நம்முடைய தரக்கட்டுப்பாடு நிர்ணய அலுவலகம் இந்த வாகனங்களின் தரத்தை சோதனை செய்துள்ளதா? சமீபத்தில் ஒரு பிரபலமான கார் நிறுவனம் தாம் தயாரித்த வாகனங்களில் இலட்சம் வண்டிகளை திரும்பப் பெற்று அவை மீண்டும் சரி செய்யப்பட்டன. இதுபோன்று அலைபேசி, கைபேசி எனும் சுமார்ட் போன்களின் பயன்பாடு அதிவேகமாக பரவி வருகின்ற இன்றைய நிலையில் அலைக்கற்றையை உபயோகிப்பதற்கான கட்டணங்களை அரசு ஏன் வரைமுறைப்படுத்துவதில்லை?மக்களிடமிருந்து பல ஆயிரம் கோடி பணங்கள் கொள்ளையடிக்கப்படுவதையும் டிராய் கண்டுகொள்வதில்லை. இதைவிடுத்து அரசு நிறுவனங்களே பன்னாட்டு நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு கட்டணத்தை நிர்ணயித்து அதிலும் இலாபக் கணக்கைக் காட்டாமல் நட்டக் கணக்கை காட்டுவதே வியப்புக்குரிய செய்தியாக உள்ளது.

பன்னாட்டு நிறுவனங்களின் தடை செய்யப்பட்ட மருந்துகள் பற்றிய முடிவு என்ன எடுத்துள்ளது என்ற விவரம் அறிவிக்கப்படவில்லை. ஐந்து நாட்கள் மட்டுமே தடை செய்யப்பட்டதை நிறுத்திவைத்து நீதிமன்றம் வழங்கிய ஆணைக்குப் பிறகு இந்த மருந்துகளின் உற்பத்தி, விற்பனை எந்த நிலையில் உள்ளது, இதுபற்றி அரசின் நிலைப்பாடு என்ன என்பதுபற்றிய விவரங்களை மருந்து ஆளுமை மையம் மக்களுக்குத் தகவல் அறிவிப்பார்களா? தடை செய்யப்பட்ட மருந்துகளின் பட்டியல் ஒவ்வொரு மருந்தகங்களிலும் வைக்க அரசு ஆணை பிறப்பிக்குமா?

வாக்களிப்பது நம் உரிமை மட்டுமல்ல, கடமையும் கூட
வாக்களிக்கத் தவறாதீர்கள்! 100% வாக்களிப்புச் செய்வோம்!!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *