ஸ்ரீ பாரதீ தீர்த்த மகாஸ்வாமிகள்

0

-மீ.விசுவநாதன்

 (இன்று சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ சங்கராசார்யாள்
அனந்தஸ்ரீ விபூஷித ஸ்ரீ பாரதீ தீர்த்த மகாஸ்வாமிகளின் வர்தந்தி தினம் (பிறந்த தினம்) – 12.04.2016)

கைகூப்பி முன்னேநான் கண்மூடி நிற்பதை
மெய்கூப்பி  ஏற்கிறேன்! மேன்மைமிகு மெய்ஞ்ஞானி
பாரதீ தீர்த்தரின் பாதமே எப்போதும்
பூரண சாந்தி புரி.                             (1) 

புரிகிறது அந்தநற் பூரணரின் உள்ளம்
சொரிகின்ற அன்பான  
பூவின் கரிசனம்!   ஸ்ரீ பாரதீ தீர்த்தர் மகான்
தீதினைக் கொஞ்சமும் தீண்ட விடாமலே
ஞாதியாய் காக்கிற ஞாய். ( ஞாய்  தாய்)  (2) 

ஞாயிறு போலவே ஞான ஒளிகொண்டே
ஆயிர(ம்) ஆண்டுகள் ஆன்மிகத் தாயெனப்
பூமியைக் காத்திடும் புண்ணிய வம்சத்தின்
சாமி குருவே சரண்.                           (3) 

சரணடைந்த பக்தமனம் தானே அடங்கி
வரவழி காட்டும் மகானி வரைநான்
கரங்கூப்பி எப்பொழுதும் கண்பனிக்கக் காண்பேன்!
வரங்கோடி கொட்டுகிற வான்.                (4)  

வான்மழை பொய்க்கலாம், மாகடல் வற்றலாம்,
தேன்பலா தித்திப்பும் தீரலாம் – நானிலா
சத்குரு பாரதீ தீர்த்தரின் தண்கருணை
நத்தம் பெருக்கும் நதி.   (நத்தம்  ஆக்கம்)    (5) 

நதிபோல் புனிதமும்ஞான வெளியின்
பதியாம் சிவனின் பனிசூழ் பதியாம்
இமயத்தின் நல்லுறுதி ஏற்ற துறவும்,
சமயத்தில் நாம்காணும் சாது.                  (6) 

சாதுக்கள் தேடிவரும் சாரதா பீடத்தின்
கோதுக ளில்லா குருநாதர் – பாத
கமலத்தில் வீழ்கின்ற கள்வனையும் மாற்றி
அமலனாக்கும் முக்த(ன்) அறி.                               (7) 

அறிந்ததோ அத்வைத(ம்) ஆனபடி யாலே
செறிந்த மனத்தில் பெரிதும் சிறிதுமெனப்
பேதமில்லை! ஈசனின் பேரொளி மூச்சான
வேதவழி தானிவர் வேர்.                    (8)  

வேறான எண்ணமே வேர்விடா யோகியை
நேராகச் சென்று விரும்பியே நேர்பட
நின்று வணங்க,  நிமிடத்தில் நெஞ்சிலே
நன்றாய்  மறைந்ததே நஞ்சு.                 (9) 

நஞ்சுண்ட நான்மறை நாயகனை, நித்தமும்
மஞ்சுண்ட மாமலை வாசனை – பஞ்சுண்ட
வேல்போல் விரல்கொண்டு பூசைசெயு மென்குரு
கால்களைக் கும்பிடுங் கை.                  (10)

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *