செண்பக ஜெகதீசன்

ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து. (திருக்குறள்-155: பொறையுடைமை) 

புதுக் கவிதையில்…

தீங்கு செய்தவர்க்குத்
தண்டனை கொடுத்தவரைத்
தனியாகக் கண்டுகொள்ளாத உலகம்,
தீங்கதனைப் பொறுத்துக்கொண்டு

தண்டிக்காதவரைக்
கண்டுகொண்டு, அவரைப்
பொன்போலப் போற்றிப் பாதுகாக்கும்…! 

குறும்பாவில்…

தண்டனை கொடுப்போரைக் கண்டுகொள்ளாமல்,
பொறுமையுடையோரைப் பார்த்து

பொன்போலப் பாதுகாப்பர் புவிமாந்தர்! 

 மரபுக் கவிதையில்…

தனக்குத் தீங்கு செய்வோர்க்குத்
     -தண்டனை கொடுக்கும் மனிதனைத்தான்
மனதில் கொள்ளா உலகமாந்தர்,
     -மன்னித் தவரை ஒறுக்காத

மனமதில் பொறுமை கொண்டோரை,
     -மண்ணில் உயர்ந்த பொன்போல

இனிதாய்ப் போற்றி இவர்வாழ
     -என்றும் துணையாய் இருப்பாரே…! 

லிமரைக்கூ…

தண்டனையுண்டு செய்தால் தீங்கு,
மன்னித்திடும் பொறையுடையோரை உலகோர்

பொன்போலப் போற்றுவர் ஆங்கு! 

கிராமிய பாணியில்…

வேணும்வேணும் பொறுமவேணும்
ஒவ்வொருவருக்கும் பொறுமவேணும்,
வேதனவந்தாலும் பொறுமவேணும்

ஒலகம்வாழ்த்தப் பொறுமவேணும்… 

தீமசெஞ்ச மனுசனுக்குத்
தண்டனகுடுக்கறது பெருசில்ல,
அதக்

கண்டுக்காது ஒலகமுமே… 

தீமதனக்குச் செய்தவனயும்
தண்டிக்காம மன்னிக்கிற
பொறுமயான மனுசனத்தான்
பொன்னப்போலப் பாதுகாத்து
பொகழுமிந்த ஒலகமெல்லாம்… 

அதால,
வேணும்வேணும் பொறுமவேணும்

ஒவ்வொருவருக்கும் பொறுமவேணும்,
வேதனவந்தாலும் பொறுமவேணும்

ஒலகம்வாழ்த்தப் பொறுமவேணும்!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *