இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (193)

0

—  சக்தி சக்திதாசன்.

அன்பினியவர்களே !

இனிய வணக்கங்களுடன் இவ்வாரம் உங்களைச் சந்திப்பதில் பெரு மகிழ்வடைகிறேன். இவ்வுலகில் பிறந்த அனைவரது வாழ்விலும் எது நிச்சயமோ இல்லையோ அனைவரும் ஒருநாள் இவ்வுலகை விட்டுப் பிரிவது நிச்சயமே ! ஆனால் அம்முடிவு ஒவ்வொருவருக்கும் எப்போது வரும் என்பதுதான் வாழ்வின் சூட்சுமமே ! இதையே அழகாய் கவியரசர் கண்ணதாசன் ” கருவாகிப் பத்துமாதங்களில் பிறக்கும் என ஒரு குழந்தைக்கு விதிக்கப்பட்ட விதி, அது எப்பொழுது மறையும் என்பதை மட்டும் ரகசியமாக வைத்த இறைவன் தன்னையும் அங்கே மறைத்து வைத்தான்” என்று குறிப்பிடுவார்.

எதற்காக திடீரென இவ்வாரம் இந்த வாழ்வின் யதார்த்தம் என்று நீங்கள் எண்ணுவது புரிகிறது. எல்லாவற்றிற்கும் ஒரு காரணம் இருக்கிறது அவசரப்படாதீர்கள் அவசியம் அறிவீர்கள்.

ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு கலாச்சாரப் பின்னணி இருக்கிறது. அவை எந்த அளவிற்கு இந்தக் காலகட்டத்தில் பின்பற்றப்படுகிறது என்பதுவே கேள்விக்குரிய விடயம். பண்டைய காலங்களில் ஒவ்வொரு சமூகமும் தமக்கென ஒரு இராஜ்ஜியத்தையும், அந்நாட்டையும், மக்களையும் உள்ளடக்கிய இராஜிய பரிபாலனத்திற்கு ஒரு அரசனையும் கொண்டிருந்தது வரலாறு. இவ்வரசர்கள் பரம்பரை வழி வந்தவர்களாக இருந்ததுவே பொதுவாகக் காணப்பட்ட தன்மை எனலாம்.

இன்றைய காலகட்டத்தில் உலகிலுள்ள பலநாடுகளில் இந்த இராஜ கலாச்சார முறை மாறிவிட்டது. முடியாட்சி, மன்னர் ஆட்சிமுறை மாறி மக்களாட்சி மலர்ந்துள்ள ஒரு நிலையே பெரும்பான்மையான நாடுகளில் காணப்படுகிறது. ஆனால் இன்னும் சில நாடுகளில் இக்கலாச்சார முறை பின்பற்றப்பட்டே வருகிறது எனலாம்.

இம்முறை இரண்டு வகைகளில் நடைபெறுவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. சில மேலைநாடுகளில் மக்களாட்சி நடைபெற்ற போதும் இராஜ கலாச்சாரத்தைப் பேணும் வகையில் அந்நாட்டின் தலைவர்களாக பெயரளவில் பேணப்பட்டு வருகிறார்கள். மற்றும் சில மத்திய கிழக்கு நாடுகளில் இராஜபரம்பரையே தற்பொழுதும் அந்நாட்டில் முழு அதிகாரத்திலிருந்து வருகிறது.

அவ்வகையில் நான் வாழும் இங்கிலாந்து தனது கலாச்சாரத்தைப் பேணுவதில் முன்னிற்கிறது. தமது சரித்திரத்தை வருடங்களைக் கொண்டு கணக்கிடாமல் தமது நாட்டை ஆண்ட மன்னர்களின் மதிப்பீட்டைக் கொண்டு அளவிடுவதையே தமது வழமையாகக் கொண்டுள்ளார்கள். இங்கேதான் நான் மேலே குறிப்பிட்ட அந்த வாழ்வின் யதார்த்தத்தின் காரணத்தை விளக்க முற்படுகிறேன். இன்று, அதாவது 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் திகதி இங்கிலாந்தின் மகாராணி இரண்டாவது எலிசபெத் மகாராணியார் தமது 90வது பிறந்தநாளை அதிகாரப் பூர்வமாக இன்று கொண்டாடுகிறார்.

90th birthday

நாடு முழுவதும் ஒரே உற்சாகமாக , மகிழ்ச்சி பூத்த தினமாக மக்கள் ஒரு ஆனந்த நிலையிலிருக்கிறார்கள். இங்கிலாந்து மகாராணியாரின் வாழ்வின் நீளம் இறைவனின் வனப்புமிகு மர்மங்களில் ஒன்று என்பதைக் குறிப்பிடவே வாழ்வின் யதார்த்த நிலைகளை நான் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தேன்.

இங்கிலாந்தின் மகாராணியாவேன் என்று பிறந்ததிலிருந்து 10 வயது வரும்வரை எண்ணியிராத எமது எலிசபெத் மகாராணியார் இங்கிலாந்தின் முடிசூடிய வரலாறு விசித்திரமானதே !

விக்டோரியா மகாராணியாரின் மகன் 7வது எட்வர்ட் மன்னாராகி ஆண்ட பின்னர், அவரது மகன் 5வது ஜார்ஜ் மன்னர் அரசாண்டார். அவரது மூத்த புதல்வர் 8வது எட்வர்ட் மன்னராக இருந்தபோது அவருக்கும் ஒரு அரசபரம்பரையில் மணமுடிக்கத் தகுதியில்லாத பெண்ணுக்கும் மூண்ட காதலினால் பதவியிலிருந்த காதலை விட தன் காதலியின் மேலிருந்த காதல் மிகுந்திருந்ததால் தனது அரசபதவியை உதறித் தள்ளிவிட்டு காதலியைக் கரம்பிடித்தார் அவர்.

அவ்விடைவெளியை நிரப்ப அவரது தம்பியாகிய 6வது ஜார்ஜ் மன்னராக முடிசூட்டப்பட்டார். 6வது ஜார்ஜ் அவர்களின் மூத்த புதல்வியே தற்போதைய இங்கிலாந்து மகாராணி இரண்டாவது எலிசபெத் ஆவார். அவர் மணமுடித்து, ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யா நாட்டுக்குக் கணவருடன் அரச விஜயமாகச் சென்றிருந்த சமயம் அவரது தந்தையான 6வது ஜார்ஜ் மன்னர் காலமானார்.

90th birthday 2

கணவருடன் சுற்றுப்பயணத்திலிருந்த இளவரசி எலிசபெத் அவர்களுக்குத் தந்தை இறந்த துயரச் சம்பவம் தெரிவிக்கப்பட்டதோடு அவர் இங்கிலாந்து மகாராணியாக முடிசூட்டப்படப் போகிறார் என்பதும் தெரிவிக்கப்பட்டது. அது நடந்தபோது அவருக்கு வயது இருபத்தி இரண்டேதான்.

கடந்த அறுபத்து மூன்று ஆண்டுகளாக இங்கிலாந்தின் மகாராணியாக ஆண்டு கொண்டிருக்கும் இப்பெண் கடந்து வந்த காலங்களில் கண்ட அனுபவங்கள் எத்தனையோ. மகளின் மணமுறிவு, மகனின் மணமுறிவு, மருமகளின் மரணம் என அவர் கடந்து வந்த பாதையில் கண்டவை பலவே ! நான் எதிர்கொண்ட பிரச்சனைகள் அனைத்தையும் மிகவும் அமைதியான முறையில் உள்வாங்கிக் கொண்டு தனது கடமைகளில் எதையும் தவற விடாமல் மேற்கொண்ட மகாராணியாருக்கு இங்கிலாந்து மக்களிடையே அமோக மதிப்பு இருக்கிறது.

90th birthday 1

தமது இராஜவம்சத்து கலாச்சாரத்தை மிகவும் பெருமையுடன் பேணிக்காத்து வரும் இங்கிலாந்து மக்களுக்குத் தான் மிகவும் விசுவாசமுடைய மகாராணியாராக இருப்பதைத் தனது முக்கியமான குறிக்கோளாகக் கொண்டு இயங்கும் மகாராணியாரின் 90வது பிறந்தநாளை மிகவும் விமரிசையாகக் கொண்டாடும் இங்கிலாந்து மக்கள் அதன் நிமித்தம் பல விழாக்களை நடத்தி வருகிறார்கள்.

தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகள் இதனை முன்னிறுத்தி நடத்தப்படுகின்றன. இன்று அதாவது 21ம் திகதி , 21 பீரங்கிக் குண்டுகளை வெடித்து இராணுவ மரியாதை செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து நாட்டின் பலபாகங்களிலும் தீப்பந்தங்கள் ஏற்றப்பட்டு இத்தினத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இளவரசர் சார்லஸ், அவரது மைந்தர்கள் இளவரசர்கள் வில்லியம், இளவரசர் ஹாரி, மற்றும் இளவரசர் வில்லியத்தின் மைந்தன் குழந்தை இளவரசர் ஜார்ஜ் ஆகியோருடன் மகாராணியார் தனது பிறந்தநாளைக் கொண்டாடும் காட்சிகள் தொலைக்காட்சிகளில் தொடர்ந்து காண்பிக்கப்படுகின்றன.

ஒரு புலம்பெயர் தமிழன் எனும் வகையில் இந்நிகழ்வுகள், இங்கிலாந்தின் இராஜவம்சக் கலாச்சாரம் என் மனதில் எவ்வகையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்று எண்ணிப்பார்க்கிறேன். இங்கிலாந்துப் பிரஜாவுரிமை பெற்றுள்ள நான், எனது பிரஜாவுரிமையை ஏற்றுக்கொண்டபோது வழக்கறிஞர் முன்னிலையில் இங்கிலாந்து மகாராணியாருக்கு விசுவாசம் உள்ளவனாக நடப்பேன் எனும் சத்தியப்பிரமாணம் எடுத்தது என் நினைவிலிருக்கிறது.

இலங்கை எனும் சிறிய தீவை விட்டு இங்கிலாந்து எனும் பெரிய தீவினுக்குள் நுழைந்தது உடலளவில் இடமாற்றம் அன்றி உலகளவில் வாழ்வை நோக்கிய ஒரு பரந்த பார்வையை நல்கியதே உண்மை. மக்களாட்சியின் அனுகூலம், நாகரீகமான அரசியலின் அனுபவம், சகிப்புத்தன்மை என்பனவற்றை நேரடியாக அனுபவித்த அனுகூலம் என்பனவே எனக்கு இவ்வாழ்க்கை தந்தவையாகும்.

இங்கிலாந்து மகாராணியாரின் வாழ்க்கையும், அவர் தனது மக்களை நோக்கிக் கொண்ட பார்வையும் என்னைப் பொறுத்தவரையில் எனக்குக் கிடைத்த ஒரு அனுபவ அனுகூலம் என்றே நான் எடுத்துக் கொள்கிறேன்.

மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்

படம் உதவி: http://www.itv.com/news/central/2016-04-21/how-the-midlands-is-celebrating-the-queens-90th-birthday/

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *