-க. பிரகாஷ் 

கடல்கோள்களால் அழிவுற்றனபோக எஞ்சியவற்றைப் பாண்டிய, சேர அவையங்களில் புலவா்களைக்கூட்டித் திட்டமிட்டுத் தொகுத்துத் தந்தவையே பழந்தமிழ் இலக்கியப் பாடல்களாகும். அவையே பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களாகும். தமிழ் இலக்கியம் – பண்பாடு, நாகரிகத்தின் ஊற்றுக்கண்ணாகும்.

குறுந்தொகையென்னும் நூல் பூரிக்கோ என்பவரால் தொகுக்கப்பட்டது. இதில் நான்கடிச் சிற்றெல்லைமுதல் எட்டடிப் பேரெல்லைவரை அமைந்த நானூறு பாடல்கள் அடங்கியுள்ளன. அடியளவால் குறுகிய இப்பாடல்களில் முதல், கருப்பொருளைவிட உரிப்பொருளே சிறப்பிடம் பெற்றுள்ளது.

scan0004

குறுந்தொகையில் தலைவன், தலைவி:

ஊழ்வயத்தாலே ஒன்றுபடும் தலைவன் தலைவியரது வாழ்விலே ஏற்படுகின்ற கட்டங்கள் பல.  அவை, இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கற்கூட்டம், பாங்கியற் கூட்டம், பகற்குறி, பகற்குறி இடையீடு, இரவுக்குறி, இரவுக்குறியிடையீடு, வரைவுகடாதல், வரைபொருட் பிரிதல், அறத்தொடு நிற்றல், பொருள்வயிற் பிரிதல், பிரிவிடைத் தலைவனும், தலைவியும் ஒருவரையொருவா் நினைத்து புலம்பலும், ஏங்கலும், பிரிந்தவர் ஒன்றுபடுதல், பரத்தையரை நாடித் தலைமகன் பிரிதல், அவன் பழையபடி தலைவியோடு வந்து கூடுதல் என்னும் இவை போன்ற பலவாகும். இவர்களிடைத் தோன்றும் உள்ள நெகிழ்ச்சிகளையெல்லாம் நயம்பட அமைத்துக்காட்டுகின்றன இக்குறுந்தொகைச் செய்யுட்கள்.

தமிழில் தொன்மையுடையது சங்க இலக்கியமே என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடில்லை. தொல்காப்பியர் அகத்திணை ஏழு என்பா். அவை, முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை, பெருந்திணை, கைக்கிளை என்பவனாகும். இவற்றிற்கு ஏற்பப் புறத்திணையையும் ஏழு வகையாகக் குறிப்பிடுகிறார். அவை, வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் என்பனவாகும். இதில் தொல்காப்பியா் அகத்திற்கே முதன்மைதந்து புறத்தைச் சார்புபடுத்தி விளக்குகிறார்.

அக்காலத்தில் திணைப்பாடல்கள் வட்டாரப் பாடல்களாகத் திணைதோறும் வழங்கிவந்தன. நிலமே அதன் அடிப்படைப் பாகுபாட்டிற்கு காரணமாகும்.

“அவற்றுள்
நடுவண் ஐந்திணை நடுவண தொழியப்
படுதிரை வையம் பாத்திய பண்பே” – (948)

எனவும்,

மாயோன்மேய காடுறை உலகமும்
சேயோன்மேய மைவரை உலகமும்
வேந்தன்மேய தீம்புனல் உலகமும்
வருணன்மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்…….(தொல்: 951) 

எனக் கூறப்படும் தொல்காப்பிய நூற்பாக்களால் நிலவழியாக வளா்ந்த திணைப் பாங்கினை உணரலாம். நிலம், பொழுது, கருப்பொருள்களை வைத்தே முதற்கண் ஒரு பாடல் இன்ன திணையென உணரப்படுகிறது. முதல் என்பது நிலமும், பொழுதுமாகும். பொழுது என்பது சிறுபொழுது, பெரும்பொழுது என இருவகைப்படும். கருப்பொருள்கள் என்பது அவ்வகை நிலப்பாகுபாட்டையும், அதிலுள்ள தெய்வம், பறவை, விலங்கு, உணவு, யாழ் உள்ளிட்டவற்றையும் குறிக்கும்.

ஐவகை நிலத்தினர்:

குறிஞ்சி நிலத்தவரே அளவளாவி இன்புறுவரென்பதும், முல்லைநில மகளிரே தலைவரைப் பிரிந்து ஆற்றியிருப்ப ரென்பதும், மருதநில மகளிரே தலைவருடன் ஊடிப்பிணங்கி இருப்பரென்பதும், நெய்தல்நில மகளிரே இரங்குவரென்பதும், பாலைநில மகளிரே பிரிவை நினைந்து புலம்புவரென்பதுமான ஒரு வரையறை உலகவாழ்வில் இல்லாதிருப்பினும், புலவா்கள் யாத்தமைக்கச் செய்யுட்களிலே இவ்வரையறைகள் காணப்படுகின்றன. இவற்றை நாடக வழக்கெனவும், நாடகப் புலவன் தானமைக்க நினைக்கும் காட்சிக்கேற்பக் களத்தைப் புனைந்தமைத்துக் காட்டுமாறு போலவே, புலவர்களும் காட்டிச் செல்கின்றனா். சிறுபான்மை உலகியலையும், பெரும்பான்மை புனைந்துரைகளையும் கொண்டு விளக்குவனவாகவே இச்செய்யுட்கள் அமைந்துள்ளன.

திணை:

திணை என்பது ஒழுக்கம் என்று பொருள்படும். ஐந்திணை என்பது ஐவகையான ஒழுக்கங்கள். இவை ஐந்தும் இல்வாழ்மக்கள் கடைப்பிடித்து ஒழுகவேண்டிய ஒழுக்கமுறையே ஆகும்.

குறுந்தொகையும் குறிஞ்சியும்: 

“கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமஞ் செப்பாது கண்டது மொழிமோ….” (குறுந்: 2)

இயைற்கைப்புணர்ச்சி புணர்ந்தவழி, தலைமகனை இயற்கைப் புணர்ச்சிக்கண் இடையீடுபட்டு நின்ற தலைமகன், தலைமகளை நாணின் நீக்குதன் பொருட்டு மெய்தொட்டுப் பயிறல் முதலியன அவள்மாட்டு நிகழ்த்திக்கூடி தனது அன்புதோன்ற நலம் பாராட்டியது. இறையனார் என்பது இங்குச் சிவபெருமானைக் குறிக்கும். சிவபெருமான் ஒரு புலவராய்த் தோன்றி, தருமி என்னும் அந்தணன் பொருட்டுப் பாடியது இப்பாடல்.

மணமுடைய தேனை ஆராய்ந்து உண்டுவாழும் அழகிய சிறகுகளையுடைய தும்பியே! முற்பிறப்பில் பயின்றது இப்பிறப்பின் உரியதாகிய நட்பினையுடைய மயில் போன்ற சாயலினையும், வரிசையாய்ச் செறிந்துள்ள பற்களையும் கொண்ட இந்த அரிவையின் கூந்தல் நறுமணம் போன்றதொரு ஒப்பற்றமணம் நீ அறிந்த மலர்களில் உள்ளனவோ? பல மலா்கள்தோறும் சென்று அவற்றின் மணத்தை அறிந்துள்ள நீ, எனக்கின்பமான ஒன்றைக்கூறாது நீ துய்த்து அருந்திய மணமுடைய மலா் ஒன்று இருக்குமாயின் கூறுவாயாக.

“நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரளவின்றே சாரல்……( குறுந்: 3) 

தலைமகன் சிறைப்புறமாக, அவன் வரைந்துகொள்வது வேண்டித் தோழி இயற்பழித்தவழித் தலைமகள் இயற்பட மொழிந்தது இப்பாடல் ஆகும். கரிய கொம்பினையுடைய குறிஞ்சிப் பூக்களைக்கொண்டு மிகுதியான தேனைத்தொடுக்கும் மலைப் பக்கத்தையுடைய நாட்டைச் சேர்ந்தவனோடு உண்டாகிய அரிய நட்பானது, சொல்லப்புகின் நிலத்தைக் காட்டிலும் அகலத்தால் பெரியது; நினைத்துப் பார்த்தால் வானத்தைக் காட்டிலும் உயா்வில் உயர்ந்தது. உள்ளே புகுந்து எல்லைகாணப்புகின் கடலைக் காட்டிலும் ஆழத்தால் அரிய அளவினது.     பெருந்தேன் இழைக்கும் குறிஞ்சி நிலத் தலைவனின் நட்பு, தலைவன் பிரிந்திருத்தலால் பயனில்லாது கழிவது குறித்துத் தோழி இயற்பழித்தவழி, தலைமகள் அதனை மறுத்துத் தலைமகனின் நட்பின் சிறப்பை உயர்த்திக் கூறினாள். (நிலத்தினும், வானினும், நீரினும் – உயர்வு சிறப்பும்மைகள்).

“யாரும் இல்லைத் தானே களவன்
தானவன் பொய்ப்பின் யான் எவன் செய்கோ…” (குறுந்: 25)

வரைவு நீட்டித்தஇடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

தலைமகன் வரைந்துகொள்ளாது களவினை நீட்டித்தவிடத்து ஆற்றாத தலைகள், ”தோழி! உணா்வார் எவருமிலர்; அவன் கூறிய சூளுரையை அவன் பொய்ப்பின் யான் என் செய்வேன்? அவன் மணந்தஅன்று ஆரலைப் பார்க்கும் குருகு இருந்தது எனக் கூறுதல்.”

தலைமகளிடம் அவன் கலந்தநாளில் வேறு எவருமில்லை… தலைவன் தானே நிகழ்ச்சி நடந்த இடத்துச் சான்றாவான். அவன், தான்கூறிய அச்சூளுரையிலிருந்து பொய்ப்பின் நான் என்ன செய்வேன்? அவன் மணந்த அன்று தினையினது தாளைப் போன்ற சிறிய பசுமையான கால்களையுடைய கொக்கு, இடையறாது ஒழுகும் நீரின்கண் நீந்தும் ஆரல்மீனை உணவாகக் கொள்ளுவதற்குக் காத்திருக்கும்.

சங்கஇலக்கிய நூல்களில் ஒன்றாகவும், பதினெண் மேல்கணக்கு நூல்களுள் ஒன்றாகவும் விளங்கும் குறுந்தொகை, சிறந்த நூலாகவும், குறுகிய நூலாகவும், தலைவன், தலைவி பற்றி செய்திகளை அழகாக எடுத்து இயம்பக்கூடியதாகவும் திகழ்கின்றது.

பார்வை நூல்கள்:

  • குறுந்தொகை – புலவா் துரை. இராசாராம்
  • குறுந்தொகை ஒரு நுண்ணாய்வு – மனோன்மணி           சண்முகதாஸ்
  • புதியநோக்கில் தமிழ் இலக்கியவரலாறு – தமிழண்ணல்
  • தமிழ் இலக்கிய அறிவுக் களஞ்சியம் – இலக்கிய வித்தகர்                      செந்துரையான்
  • குறுந்தொகை மூலமும் உரையும் – புலியூர் கேசிகன்

***

க.பிரகாஷ் எம்.ஏ, எம்பிஃல்,
தமிழ்த்துறை
தொழில்நுட்பக் களஆய்வுப் பணியாளர்
பாரதியார் பல்கலைக்கழகம்
கோயம்புத்தூர் – 46

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *