க. பாலசுப்பிரமணியன்

 

பாரு.. பாரு… நல்லாப் பாரு ..

பயாஸ்கோப்பில் படத்தைப் பாரு…

பாம்பே ..டெல்லி.. கல்கத்தா ..

பாபர்… அக்பர்…. சமாதி பாரு..

உலகம் போற்றும் தாஜ் பாரு..

காலம் மாறும் வேகம் பாரு,,

பார்க்கும் படமும் மாறுது பாரு !

 

கையைக் கிழித்து உள்ளே போகும்

ஊசி பாரு.. நல்லாப் பாரு.. உள்ளே பாரு..

ஓடும் குருதி வேகம் பாரு…

ஓடி ஓய்ந்த இதயம் பாரு..

கறைபடிந்த நாளம் பாரு..

கசங்கிப் போன பூவைப் போல

வாசம் இழந்த நெஞ்சம் பாரு..

 

ஈயம் பூசும் தொழிலாளி

இசைவாய் காற்றை அழுத்தித் தள்ள

அசையும் உறையைப் போல

அசைந்து ஆடும் இதயம் பாரு..

 

கூடி நிற்கும் டாக்டர் பாரு ..

குருதி தேடும் உடலைப் பாரு..

வாழ விரும்பும் மனிதன் பாரு..

வாழ்ந்து தீர்த்த நாளைப் பாரு…

 

காதல் தோற்ற வலி கொஞ்சம்

கருணை மறந்த வலி கொஞ்சம்

கடமை தவறிய வலி கொஞ்சம்

காலன் கையில் தவிக்கும் நெஞ்சம்…

 

இயற்கை எடுத்த படத்தைப் பாரு..

அதில் நடித்த ஹீரோ யாரு …..

சாயம் நிறைந்த முகத்தைக் கழுவி

கண்ணாடி முன்னால் முகத்தைப் பாரு..

 

பாரு.. பாரு..நல்லாப்  பாரு

பயாஸ்கோப்பில் படத்தைப் பாரு…

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *