-முனைவர் இராம. இராமமூர்த்தி

மனிதகுலம் தோன்றிய நாள்தொட்டு இடைவிடாமல் ஒரு போர் நடந்துகொண்டே யிருக்கின்றது. அப்போர் எது? தேவாசுர யுத்தமா? இராம இராவண யுத்தமா? அல்லது பாரதப் போரா? அன்றெனில் சென்ற நூற்றாண்டில் நிகழ்ந்தது போன்ற உலகப் போர்களா? இவ்விடைகளை உண்டெனவும் கூறலாம்; இல்லை யில்லை யெனவும் மறுப்புரைக்கலாம். அப்படியானால் அப்போர்தான் யாது? அப்போர் எங்கு நிகழ்கின்றது? ஏன் நிகழ்கின்றது? அப்போரைச் செய்வோர் யார்? நமக்கும் அப்போருக்கும் என்ன தொடர்பு? இவ்வினாக்கட்கெல்லாம் விடைதான் என்ன? அதனை இப்போது காண்போம்.

வாழ்வின் முதற்பொருளாகத் தமிழர்கள் நிலத்தையும் காலத்தையும் வகுத்தனர். “முதலெனப்படுவது நிலம்பொழு திரண்டின் இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே”, என்பது தொல்காப்பியம். நிலமோ காட்சிப்பொருள்; யாவருங் காணலாம்.  அஃது மலையாகவும் மண்ணாகவும், காடாகவும் கடலாகவும் காட்சியளிப்பதனைக் கண்டுள்ளோம். ஆனால், காலத்தைக் காணமுடியுமா? காலம் கருத்துப்பொருள்; நுண்பொருள்; அருவப்பொருள். அதனால் காணவியலாது; உண்மையே! எனினும் உணரமுடியுமே! கதிரெழுங் காலையும், கடும்பகற்பொழுதும், மயங்கும் மாலையும், மறைக்கும் இருளும் நாளும் நாளும் வந்துபோவதை அறியமாட்டாமோ நாம்? அறிவோமன்றோ? அதற்கென்ன என்பீர்!

மாலை மறைகின்றது. பகலொளி தந்த கதிரோன் மெல்ல மெல்ல மேற்றிசையில் மறைகின்றான். இருட்பகைவன் மெதுவாகத் தன் ஆட்சியை இந்நிலவுலகிற் பரப்புகின்றான். எங்கும் இருள்; இருட்படலம் பார்வையை மறைக்கின்றது. மீண்டும் வைகறை விடியல்; வெள்ளி முளைக்கின்றது; பின்னர்ப் பகலவன் தோன்றக் காலையும் மாலையும் வருகின்றன. இவ்வொளிக்கும் இரவிற்கும் இன்று நேற்றா யுத்தம் தொடங்கியது? பகலாட்சி நடைபெறுவதும் அதனை விரட்டிவிட்டு இருளாட்சி தொடர்வதுவும் தொடர்கதையாகவே உள்ளது. இவ்வுருவக நிகழ்ச்சி நமக்கு – மக்களினத்திற்குத் தரூஉஞ் செய்திதான் யாது? அதனை எண்ணுவோம்; அறிவொளி பெறுவோம்.

இவ்வுருவகப் போர், அறிவிற்கும் அறியாமைக்கும், நன்மைக்கும் தீமைக்கும், அடக்கத்திற்கும் அடங்காமைக்கும் நிகழ்கின்ற போரேயாகும். ஒவ்வொரு நிலையில் ஒவ்வொன்று வெற்றிபெறுவதுபோல் தெரிகின்றது. இறுதிப் போரில் வெற்றிபெறுவது யார்?

மனிதகுலம் அன்பையும் அறிவையும் அருளையும் நற்பண்புகளையும் போற்றி நற்செயல்களைச் செய்யும்போது ஒளி – பகல் – உண்மை வெல்லுகின்றது. அதே மனிதகுலம் ஆணவங்கொண்டு அருளைத் துறந்து, தீமையை – பொய்ம்மையை மேற்கொள்ளும்போது இருட்பகைவன் – இருளரக்கன் ஆட்சி நிலவுகின்றது. உண்மைக்கும் பொய்ம்மைக்கும் நடக்கும்போரை நிறுத்துவது எவ்வாறு? அல்லது வாய்மை நிரந்தரவெற்றிபெற என்ன செய்யவேண்டும்?

இப்போரில் வெற்றிபெற மார்க்கங்கள் உள்ளனவா? மனிதகுலம் சிந்தித்தது; பல மார்க்கங்களை – நெறிகளைக் கண்டறிந்தது. அக்கண்டுபிடிப்பில் மலர்ந்ததுவே – முகிழ்த்ததுவே சமயங்கள். இச்சமயங்கள் மனிதர்களிடம் காணப்படும் ஆணவத்தை நீக்கி அடக்கத்தை விதைக்கவும், அச்சத்தை நீக்கி அன்பைப் பயிரிடவும், அறியாமையை விரட்டி அறிவொளி பரவிடவும் வழிகாணலாயின. “அன்பே கடவுள்” என அன்புநெறியை அனைத்துச் சமயங்களும் பரப்பின; உண்மையைப் போற்றின; ஆணவம் கூடாதென அறைந்தன.

ஆனால், காலப்போக்கில் சமயங்கட்குள்ளேயே சச்சரவுகள் – சண்டைகள் தோன்றின. போர்களுக்குச் சமயங்களும் காரணமாயின, வேலியே பயிரின் அழிவிற்குக் காரணமானாற் போல. சமயப் பூசல்கள், சமயங்களிடையே பிணக்கை ஏற்படுத்தின; உயர்வு தாழ்வுகளை உண்டாக்கின. சமயவாதிகள் ஆணவங்கொண்டவராயினர். சமயங்கள் பிளவுபட்டன. வேற்றுமைகள் உருவாயின. என் செய்வது?

சான்றோர்கள், அருளாளர்கள் மீண்டும் சிந்திக்கத் தொடங்கினர். ஆணவமற்ற அன்புநெறியைப் பரப்புவது எவ்வாறு? மனிதர்களைச் சகோதரவுணர்வொடு வாழச்செய்வது எவ்வாறு? பலகாலம் சிந்தித்தனர்; பலர் சிந்தித்தனர். பல்வேறு வழிகளைக் கண்டனர். அங்ஙனம் சிந்தித்த சிந்தனையாளர்களுள் வள்ளலார், காந்தியார், திரு.வி.க. போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் புதிய சமயங்களைத் தோற்றுவித்தனரல்லர்; மாறாகப் பழைய சமயங்கட்குப் புதுப்பார்வை தந்தனர்; பொதுமைநெறி காட்டினர். சமயங்களெல்லாம் ஒரே கருத்தினையே வலியுறுத்துகின்றன.

இறைவன் எல்லாவுயிர்களையும் நேசிப்பவன். அவனது தூயஅன்பில் வேறுபாடில்லை; அவன் உயிர்களுள் வேறுபாடு காண்பதுமில்லை; காட்டுவதுமில்லை. எல்லாச் சமயங்களும் ஆறுகளைப் போன்றவை. இறைவனோ அவ்வாறுகள் சென்று சங்கமிக்கும் – கலந்திடும் – பேராழியாகப் – பெருங்கடலாக விளங்குகின்றான் என்றனர் அருளாளர்கள். எனவே, சமயங்கள் மனிதர்களிடம் ஒருமையுணர்வை, நல்லிணக்கத்தையே ஏற்படுத்தவேண்டும். அதற்கு முரணாக மனிதர்கட்குள் பிளவையும் பேதத்தையும் ஏற்படுத்தலாகா என அறிவுறுத்தினர். இப்பொதுமைக் கருத்தை – பொதுமைச் சமயக்கோட்பாட்டை வடலூர் வள்ளலார் தம் திருவருட்பாவில் கூறாத இடமில்லை. சான்றாக ஒரு பாடலைக் காணலாம்.

மருளொடு மாயைப்போய்த் தொலைந்தது மதங்கள்
–வாய்மூடிக் கொண்டன மலர்ந்தது கமலம்
அருளொளி விளங்கிய தொருதிருச் சபையும்
–அலங்கரிக் கின்றனர் துலங்குவீற் றிருக்கத்
தெருளோடு பொருளும்மேன் மேலெனக் களித்துச்
–சித்தெலாஞ் செய்திடத் திருவருள் புரிந்தே
இருளறுத் தெனையாண்ட அருட்பெரும் ஜோதி
–என்வள்ள லேபள்ளி யெழுந்தருள் வாயே!

இப்பாடலில் இருள் விலகுதலும் அருளொளி பரவுதலும் உட்கருத்தாதலை உணர்க. மதச் சண்டைகள் ஒழிந்தன என்பார் வள்ளலார். அவர் காட்டும் இறைவனே அருட்கடலாக விளங்கிடும் பேரொளிப் பிழம்பாம்.

இதனாலேயே வள்ளற்பெருமான், பிறிதோரிடத்தில், “மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்”, என வேண்டுகின்றார்.  அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையாக இறைவனைப் போற்றிப் புகழ்கின்றார். “அன்பே சிவமென்பது” திருமந்திரம்.

அண்ணல் காந்தியடிகள் நமக்குத் தந்த நன்முத்துக்கள், வாய்மை, இன்னாசெய்யாமை, அன்புடைமையாம். பகைவனையும் நேசிப்பதே காந்தியாரின் சமயம். “இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்”, என்பது வான்புகழ் வள்ளுவம். பாரதி, “அறிவொன்றே தெய்வமென,” முழங்குகின்றான். அப்பர் பெருமான்,

”கங்கை யாடிலென் காவிரி யாடிலென்
கொங்கு தண்கும ரித்துறை யாடிலென்
ஓங்கு மாகடல் ஓதநீ ராடிலென்
எங்கு மீச னெனாவதர்க் கில்லையே” எனச் சுட்டுவார். இறைவன் எங்குமுளான்.

இக்கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு செயற்பட்டால், “இருட்பகைவன் தானே மாய்வன், அருட்பகலோன் யாண்டும் ஒளிபரப்புவன்.” நல்லோர் ஆட்சி நடைபெறும். தீமைகள் விலகும். குருக்ஷேத்திரம் நாள்தோறும் நடைபெறாது. ஞானச் சுடரொளி பரவும். ஆணவ இருள் விலகும். ஞாலம் அன்பினில் தழைக்கும். போரும் பூசலும் ஒழியும். உலகெலாம் இன்புறும். அந்நன்னாளைக் காண இன்றே புறப்படுவோமா?

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *