திவாகர்

755f9efe-8196-4e23-bb3e-1723b76204b1

மழையே மழையே மனமகிழ்
மழையே மிதமாய் மிதமாய்
பெய்யும் மழையே சுகமாய்
சுகமாய் பொழியும் மழையே
பையப் பையப் பெய்கின்றாய்
வையம் வாழ்த்தப் பொழிகின்றாய்
பார்க்கப் பார்க்க பரவசம்
பாரெல்லாம் நனைகின்றதே
சிறகு நனைக்கும் பறவைகளோடு
பறந்து திரிந்து மழையுனூடே
பரந்துகிடக்கும் வான்வெளியில்
வரும்நீர் பருகத் தோன்றுதே

 

பச்சை மரங்கள் அசைந்தாட
இச்சைகொண்ட இலைகள்மேல்
வலியும்தெரியா உணர்வுடனே
வலுவில்லாமல் விழுகின்றாய்
கருப்பைநிறைந்த மேகங்களின்
கருவினைத் திறந்துவெளிவந்த
பிறந்தகுழந்தைக்கிணையாக
மிருதுவாய் வந்து விழுகின்றாய்
பூவெல்லாம் கூட இதழ்தாங்கி
சாவகாசமாய் கீழனுப்பி
பூமித்தாய்க்கு பாரமிலாமல்
சாமிதந்த வரம்போல
வருத்தம்தராமல் பொழிகின்றாய்
கருமேகத்தின் வண்ணம்கொண்ட
குறும்புக்கண்ணன் அம்புகளாய்
கரும்புத்தமிழ்மகள் கோதைசொல்படி
சரங்களாய்மண்ணில் விழுந்துகொண்டு
சரசரசடசடவென சப்தம்செய்து
நிறைவாய் நித்தமும் பெய்கின்றாய்
குறைகள்நிறைந்த பூவுலகில்
குறையை நீக்கமுயல்கின்றாய்
இறையும் இனிக்கப் பெய்கின்றாய்

 

மறையாப்புகழ் கம்பனும்கூட
இறையாய் உன்னைப்பாடினான்
உப்புக்கடலுள் உள்ளேபாய்ந்து
உப்பையெடுத்து உவர்ப்பைநீக்கி
சிறப்பாய் செய்தநன்னீராக்கி
வறுமையைப்போக்க பொறுப்புடனே
மண்ணுலகமெல்லாம் உய்யப்பெய்த
உன்னதமழையே உயர்ந்தமழையே
என்னதவம் யாம் செய்தோமோ
உன்னைப்பெறவே உலகத்தோரெலாம்

 

ஒளியைப்பாய்ச்சும் நிலவுவேண்டாம்
பளிச்சிடும்தோழன் மின்னலேபோதும்
சுட்டெரிக்கும் சூரியனும் வேண்டாம்
படபடவென முழங்கும் இடியேபோதும்
கண்சிமிட்டும் தாரகைவேண்டாம்
வண்ணம்காட்டும் வானவில்போதும்
மழைத்தோழர்களே மழையோடுவாரும்
விழாவெடுப்போம் வாழ்நாள்முழுதும்
எங்கும்மழையால் பச்சைப்புற்களும்
தங்கம்போல மின்னுகின்றனவே
புல்லும்பூவும் மரமும்செடியும்
நல்மழையால் நன்குசெழிக்கின்றதே
மழையே நீயேஎம்தெய்வம்
மழையே யாம்போற்றுகின்றோம்.

 

அடடா என்ன இது.. ஏன் இப்படி
படுக்கையிலிருந்து ஏன்விழுந்தேன்
அடடே கனவும் ஏதும் கண்டேனோ
சடசடவெனப்பொழிந்த மழைஎங்கே
பளிச்சிட்டுவீசிய மின்னலெங்கே
களிநடனத்தோசை இடியுமெங்கே
சில்லென்ற சீரானகாற்றெங்கே
அலகைநனைத்த அந்தப்பறவையெங்கே
ஊரெல்லாம்சிறக்க உயர்வுதனைகொடுக்க
சீராகப்பெய்தாய் எனக் கண்டதெலாம்
கனவுதானா? பகலிலோர்கனவுதானோ
கனவில்தான் சுகமானமழையோ
கனவில்தான் மிதமானமழையோ
கனவில்நான் கண்டதெல்லாம்பொய்யோ
மாயைமழையில் நனைந்தேனா
பொய்யாய்ப் பொழுதைக்கழித்தேனா

 

சுட்டெரிக்கும் வெப்பமே சுடாதே
சுடராய் கண்ணைப்பறிக்கும் சூரியனே
இன்னும் எத்தனைநாள் இப்படித்தான்
மன்னுயிரை மாய்ப்பாய் இங்கே
அங்கேயும் எங்கேயும் பச்சைமரங்கள்
எங்கள்கண்ணெதிரே கருகிப்போகுதே
புல்லும்பூவும் காய்ந்துபோகுதே
கல்லில் பாதம்பட்டு புண்ணாகுதே
செய்தவமெல்லாம் வீணாகிப்போகின்றதே
வெய்யிலே வாராமல் போய்விடு
வெந்தணலில் துடிக்கவிடுவது நியாயமோ
எந்தைமழையை எங்கேனும்கண்டால்
கண்டவுடன் வரச்சொல்வீர் காத்திருப்போம்.
வான்மழையின் ஒருதுளியேனும் இனியும்
காணாதுபோனால் உயிர்பிரிந்துபோகும்காண்!
—————————————————————————
திவாகர்

 

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண் பரிது. (திருக்குறள்-16)

(மேகத்திலிருந்து மழைத்துளி விழுந்தால் அல்லாமல் இவ்வுலகில் பசுமையான ஒரு புல்லின் நுனியையும் காண இயலாது)

கூகிள் படத்திற்கு நன்றி.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *