வாழ்வைக் கொண்டாடுவோம்

Man on top of mountain. Conceptual design.
Man on top of mountain. Conceptual design.

காலையில் எழும்போது மலச்சிக்கல் இல்லாமல் எழுவதும்

இரவிலே உறங்குகையில் மனச்சிக்கல் இல்லாமல் உறங்குவதிலிருந்தே வசப்பட்டு விடுகிறது வாழ்க்கை

வைரமுத்து

மிகப்பெரிய வாழ்க்கை எல்லாம் சாதாரண எளிய சந்தோசங்களால் ஆனது எனலாம் . ஒவ்வொருவருடைய லட்சியமும் அவரவர்க்கு மனமும் சூழலும் பொறுத்தே அமைந்துவிடுகிறது. வாழ்வதை லட்சியமாக கொண்டவர்களுக்கு மத்தியிலே சிலர் லட்சியத்தை அடைவதையே வாழ்வாக கொண்டு எல்லா நிலையிலும் அதை நோக்கிய பயணத்தையே செலுத்திவிடுகிறார்கள்

” உனக்கு எப்படி இப்படி நேரம் கிடைக்கிறது “

” சினிமாலாம் பாப்பீங்களா சார் “

” இத்தனை நண்பர்களை வைத்துக் கொண்டு எப்படி சமாளிப்பீர்கள் “

” நீங்கள் எழுதி இந்த சமூகத்தை மாற்ற இயலுமா “

என்ற பல்வேறு கேள்விகளை நாம் தினமும் எதிர்கொள்கிறோம் . பலநேரங்களில் நாம் செய்யும் செயல்களில் பிறருடைய கவனித்திற்காகவோ பாராட்டுதலுக்காகவோ மட்டுமே செய்துவிட்டு அதற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை எனில் புலம்ப ஆரம்பித்துவிடுகிறோம் . இதுதான் நம்மிலும் பலருக்கு இயல்பு கூட . இதில் தவறும் இல்லை . புதிதாக வாங்கிய ஆடையைக்கூட யாராவது கவனிக்கவில்லை எனில் நமக்கு ஏதோ ஒரு வெறுமையான உணர்வு வந்துவிடுகிறது . இது நீடித்துவிடக்கூடாது என்பது எனது வாதம் . என்னுடைய விருப்பமும் கூட . நேரம் என்பதெல்லாம் நாம் வகுத்துக்கொள்வதுதானே. நமக்கு பிடித்த விசயங்களுக்கு அதிக நேரம் ஒதுக்கிவிடுகிறோம். செய்யும் வேலை அனைத்தையும் நமக்கு பிடித்தமான வேலையாக நம்முடைய ரசனைக்கு ஏற்ற வகையிலே செய்ய ஆரம்பித்தால் நமக்கு நேரமும் ஒரு பொருட்டாக இருக்காது . லட்சியத்தை அடைவது நம்முடைய வாழ்வாக இருக்கலாம். அதற்காக நம்மைச் சுற்றி நிகழும் நல்ல விசயங்களை கவனிக்காமல் கடிவாளம் போடப்பட்ட குதிரை மாதிரியான வாழ்க்கை என்பது சரியில்லாமல் போய்விடும்

எனக்குப் பிடித்த செயல்களை மிக நேர்த்தியாக நல்ல புரிதலோடு செய்ய முடிகிறது என்பதே மிகச்சிறந்த வரம் போன்றது . நம்மைச் சுற்றி இருக்கும் மனிதர்கள் அனைவருமே நம்மைப்போல அமைய வேண்டும் என்பதெல்லாம் பேராசை . அவ்வாறு அமைந்துவிட்டால் அதில் எவ்வித சுவாரசியமும் இருந்துவிடாது . நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் நமக்கு ஆசிரியரே. அவர்கள் ஏதாவது ஒன்றை நமக்கு கற்றுத் தருகிறார்கள் என்ற ஒரு வரி எங்கோ படித்த ஞாபகம் எனக்கு . உண்மையும் அதுதான் . இயற்கையும் வித்தியாசமான மனநிலை கொண்ட மனிதர்களும் சூழல்களுமே நம்மை வாழ்வதற்கான நம்பிக்கையை தருகிறது . சில சிக்கல்கள்தான் நமக்குள் இருக்கும் நாம் அறியாத பல திறமைகளை உந்தித்தள்ளுகிறது . எதிர்மறையான விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளலாம் . உண்மையில் அதுபோலானதொரு குணம் நம்மிடமே இருந்தால் அதை மாற்றிக் கொள்ளலாம் . இல்லையெனில் அதை அப்படியே புறம்தள்ளிவிட்டு மீண்டும் அதே போன்ற விமர்சனம் எழாமல் வாழ பழகிக்கொள்ளலாம் .

உலக வாழ்விலே எதிலும் கலந்துகொள்ளாமல் இலட்சியம் என்ற ஒரு மாயையை நாமாக உருவாக்கிக் கொண்டு அதை நோக்கியே நாம் பயணப்பட்டு திரும்பிப் பார்க்கையில் நாம் பல சந்தோச தருணங்களை இழந்திருப்போம் . நமது நல்ல நண்பர்கள் நம்மை விட்டு வெகுதூரத்தில் நின்றிருப்பார்கள் . நமக்காக பணி செய்ய பலபேர் காத்திருப்பார்கள். ஆனால் ஆறுதல் சொல்ல ஆளில்லாத ஆளாக மாறி நிற்போம். இத்தனை பெரிய வாழ்க்கையில் வரும் அனைவரையும் ஏதோ ஒரு வகையில் ஏற்றுக்கொண்டு பகைமை என்பதை மறந்து நம்மோடு அவர்களையும் அரவணைத்துச் செல்லும் வாழ்வுதான் அனைவருக்குமான வாழ்வு. அந்த அழகிய வாழ்வு அனைவருக்கும் கிடைக்கிறது . வெகுசிலரே அதை வாழ்கிறார்கள். பலரும் அதைக் கடந்து விடுகிறார்கள் ஏதோ ஒரு கடிவாளத்தோடு …

ஒவ்வொரு நாளுமே திருநாள்தான்

அதைக் கொண்டாடி வாழ்வோம் ….

சதா பாரதி

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *