அறவியல் நோக்கில் இரட்டைக்காப்பியங்கள்

0

–து.கார்த்திகேயன் 

தமிழ்மொழியில் தோன்றிய முதற்காப்பியம் சிலப்பதிகாரம். அதனைத்தொடர்ந்து தோன்றியது மணிமேகலை. இவை இரண்டுமே ஒன்றுடன் ஒன்று மிக நெருங்கிய தொடர்பு கொண்டனவாகும். இரண்டு என்பதற்கும் இரட்டை என்பதற்கும் வேறுபாடு உண்டு. இரண்டு என்பது வெவ்வேறான இரண்டைக்குறிக்கும். இரட்டை என்பது மிக நெருங்கிய ஒற்றுமையுடைய இரண்டைக் குறிக்கும். உலகியலிலும் ‘இரட்டை வாழைப்பழம்’ என்ற வழக்கை நன்கு அறியலாம். ஆகவே சிலம்பும் மணிமேகலையும் கதைத் தொடர்ச்சி மட்டுமல்லாமல் வாழ்வியலுக்குத் தேவையான நல்லறங்களைச் சொல்வதிலும் ஒன்றுபட்டு நிற்கின்றன. சமய நோக்கில் மட்டுமே இவை இரண்டும் வேறுபடுகின்றனவே தவிர மற்றபடி அறவியல் நோக்கில் இவை ஒன்றுபட்டே விளங்குகின்றன. நற்சொல், நற்செயல், நன்னடத்தை ஆகியவற்றைப் பல்லாற்றானும் இவ்விரட்டைக்காப்பியங்கள் விளக்குகின்றன.

பிற உயிர்களுக்குத் தீங்கு செய்யாத – நினைக்காத வாழ்க்கையே பண்பட்ட வாழ்க்கையாகும். அதற்கு அடிப்படையாக அமைவது நற்சொல், நற்செயல், நன்னடத்தை ஆகிய மூன்றும் ஆகும். இம்மூன்றும் சரிவர ஒருவனுக்கு வாய்க்கப்பெற்றால், அவன் வீட்டின்பத்தைப் பெறும் வாய்ப்பைப் பெறுகிறான். அத்தகைய நல்லறங்களைப் பற்றி விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

மனித வாழ்வும் பயனும்:

மண்ணுலகில் மனிதராய்ப் பிறப்பெடுத்த எல்லா உயிர்களின் நோக்கமும் இனிப்பிறவாப் பெருநிலை அடைய வேண்டும் என்பதே! ஆனால், உயிர்களோ அதனை அறியாது அறியாமையில் உழன்று அல்லற்பட்டு நிற்கின்றன. இவ் வுயர் நோக்கத்தை உணர்ந்து மனித உயிர்கள் உய்யவேண்டும் என்பதையே திரு நாவுக்கரசர்,

“வாய்த்தது நந்தமக் கீதோர் பிறவி மதித்திடுமின்”  (திருமுறை:4: பாடல்: 784)

என்றார். ஆனால் மனித உயிர்களோ உலகியலில் மூழ்கிச் சிற்றின்பச் சேற்றில் திளைத்து மகிழ்கின்றன. இவ்வாறு பெண்வழிச் சேரலும், உண்டி பெருக்கி உடலை ஓம்பலும் மனிதர்க்குத் துன்பத்தையே தருகின்றன. இதனைச் சிலப்பதிகாரம்,

“பெண்டிரும் உண்டியும் இன்பம் என்று உலகின்
கொண்டோர் உறூஉம் கொள்ளாத் துன்பம்” (சிலம்பு: ஊர்காண் காதை.3940)

என எடுத்துக் காட்டுகின்றது. பிறப்பின் நோக்கத்தை உறுதிபட  உணராமல் அறவழிப்பட்ட மனையற வாழ்வியலை வகுத்துச் சிற்றின்பத்தை நாடித் திரிந்தான் கோவலன். மனைவியோடுகூடி மனையறம்  காக்கும் உயர்வினை மறந்தான்; அறிவுமயங்கி, ஐம்புல நுகர்ச்சியினை விரும்பினான். இறுதியில் களவுப்பழி ஏற்று உயிரை இழந்தான். மக்கள் அருந்தவம் உடையோர் என்றாலும் அவர்களின் முன்வினைப் பயன்களால் கீழ்நிலை ஏற்படும். அப்போது அவர்கள் மேற்கொள்ளும் அறவாழ்வு ஒன்றே, அரணாக நின்று காக்கும். அப்படி இல்லாது அறத்திலிருந்து மாறுபடுகின்றபோது – அறவாழ்வைத் தவிர்க்கும்போது, முந்தைய நல்வினைகூடக் காவலாகாது என்பதைச் சிலப்பதிகாரம்,

“உம்மை வினைவந்து உருத்த காலைச்
செம்மையில் லோர்க்குச் செய்தவம் உதவாது” (சிலம்பு-கட்டுரை காதை.171-172)

என உரைக்கிறது. எனவே ஐம்புலன்களை நல்வழிப்படுத்தி நல்லறம் புரியும் நல்வாழ்க்கையே நன்னிலை நல்கும் என்பதை இதன்வழி உணரலாம்.

நற்சொல் நவிலல்:

சொற்கள் மிகுந்த வலிமை மிக்கன. சொற்களால் பகை நட்பாகலாம்; நட்புகூடப்  பகையாகலாம். நல்லசொற்கள் அன்பை மலரச்செய்யும், நட்பை வளரச்செய்யும், உறவை நிலைபெறச் செய்யும், ஆறுதலைத் தரும், மாறுதலைத் தரும். இப்படி, பலவாறாகப் பயன்பாட்டில் உள்ளன நற்சொற்கள். அதனாலேயே இன்மொழி உரைத்தலை மக்கட்பண்புகளில் ஒன்றாகவே எடுத்துக்காட்டினார் வள்ளுவர்.

“தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு” (குறள்-129)

என்பார் வள்ளுவப் பெருந்தகை. தீயசொற்களைச் சொல்லிவிடின் அவை ஏற்படுத்தும் காயம் நிலைபெற்றுவிடும். எனவே தீச்சொற்களைத் தவிர்க்க வேண்டும்.

கவுந்தியடிகளோடு கோவலனும் கண்ணகியும் மதுரைக்குப் பயணித்தார்கள். இடைவழியில் ஒரு பரத்தையும், காமுகனும் அவர்களிடம் வந்தனர். கோவலன், கண்ணகியைப் பார்த்து இவர்கள் யாவர் என அடிகளிடம் வினவினர். கவுந்தியடிகள் ‘இவர்கள் என்மக்கள்’ என விடைபகர்ந்தார்.’ அதைக்கேட்ட அவர்கள் “இவர்கள் உமது மக்களாயின் உடன்பிறந்தோர் கணவனும் மனைவியுமாக வாழ இயலுமோ?” என்றனர். இத்தீச் சொற்களைச் செவியுற இயலாது பெரிதும் நடுக்குற்றாள் கண்ணகி. இதனைக் கண்ட கவுந்தியடிகள்,  அக்கீழ்மக்களைச் சினந்து முள்ளுடைக் காட்டில் முதுநரிகளாகத் திரியும்படி சாபமிட்டார்.

“உடன்வயிற் றோர்கள் ஒருங்குடன் வாழ்க்கைக்
கடவதும் உண்டோ! கற்றறிந்தீர் எனத்
தீமொழி கேட்டுச் செவியகம் புதைத்துக்
காதலன் முன்னர்க் கண்ணகி நடுங்க
எள்ளுநர் போலும் இவர்என்பூங் கோதையை
முள்ளுடைக் காட்டின் முதுநரி ஆக எனக்
கவுந்தி இட்டது தவந்தரு சாபம்” (சிலம்பு: நாடுகாண் காதை.227-233)

என்னும்  அடிகள் தீச்சொல் உரைத்தமையால் வரும் அவலநிலையை உணர்த்துகின்றன.

ஒருவனைக் கண்ட அளவில் அவர்தம் குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம், செல்வம், உருவம், பருவம் ஆகிய திறங்களை உய்த்துணர்ந்து தமக்கும் அவர்க்கும் தீமைதராத  சொற்களை உரைத்தலே திறனறிந்து உரைத்தலாகும். ஒருவரது திறனறிந்து அவரிடத்தில் நற்சொல் உரைத்தலைக் காட்டிலும் வேறு சிறந்த அறமும் பொருளும் இல்லை என்கிறார் வள்ளுவர்.

“திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூஉங் கில்”  (குறள்-644)

எனவே திறனறிந்து பேசுதல் என்ற தன்மை இல்லாமையால் விளைந்த அவலம் சிலப்பதிகாரத்தின் வழி அறியப்படுகின்றது. 

நற்செய்கை புரிதல்:

அறம்,பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கும் உயிர்க்கு உறுதிப்பொருளாகும். உயிர்கள் தம் பிறவிப் பயனே வீடுபேறாகும். அவ்வீடுபேற்றினை அடைய வேண்டுமானால் பற்றறுத்தல் வேண்டும். ’அற்றது பற்றெனில் உற்றது வீடு’ என்னும் ஆன்றோர் வாக்கு இங்கு நினையத் தகும். பற்று நீக்கமும் அதன்வழியிலான நற்செயலாக்கமும் வீடுபேற்றுக்கு அழைத்துச் செல்லும் கருவிகளாகும். உலகியல் இன்பத்திற்கு காரணமான இளமை, செல்வம், யாக்கை போன்றவற்றிலிருந்து பற்று நீங்குதலே பற்றறுத்தல் எனப்படும். வாழ் நாள் படாமல் ஒருவன் நற்செயல் புரிந்தால் அதுவே அவனது பிறவியின் பெருவாயிலை அடைக்கும் கல் என்றார் வள்ளுவப் பேராசான்.

“வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்குங் கல்” (குறள்-38)

என்ற திருக்குறள், நற்செயல்களே வாழ்வின் பிறவித்துன்பங்களைப் போக்கும் அருமருந்து என்பதை எடுத்துக்காட்டுகிறது.

பிறர்வாழ நற்செயல் புரியும் நல்லறச் சிந்தனையை கண்ணகி மூலம் சிலப்பதிகாரம் இவ்வுலகிற்கு வழங்குகிறது. கண்ணகி, தன் கணவன் பிரிந்து சென்றபோது இல்லற இன்பங்களை நுகரவில்லையே என வருந்தவில்லை. அறவோர்க்கு அளித்தல், அந்தணர் ஓம்பல், துறவோரைக் காத்தல், விருந்தோம்பல் செய்தல் போன்ற அறச்செயல்களைப் புரியஇயலாமற் போயிற்றே என வருந்துகிறாள்.

“அறவோர்க் களித்தலும் அந்தண ரோம்பலும்
துறவோர்க்கு எதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை” (சிலம்பு.கொலைக்களக்காதை:71-73)

என்னும் அடிகள் சிற்றின்பத்தைக் கடந்து பேரின்பத்திற்கு வழிகோலும் அறச்செயல்கள் புரிகின்ற உயர்வாழ்வியலை உணர்த்துகின்றன. இல்லற வழியமைந்த நல்லறச் செய்கைக்கும் சிலப்பதிகாரத்தின் இவ்வடிகள் சான்று பகர்கின்றன.

துறவறத்தின் வழியமைந்த அறச்செய்கைக்கு மணிமேகலை வாழ்வைச் சான்றாகக் கொள்ளலாம். அறத்தால் வருவதே இன்பம் என்பதை உணர்ந்த மணிமேகலை, பிறப்பு, மூப்பு, பிணி என்பனவற்றையுடைய கொள்கலனாக விளங்குவது மக்கள் யாக்கை என்பதையும் நன்றாக உணர்ந்திருந்தாள்.

“மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” (மணிமேகலை:பாத்திரம் பெற்றகாதை.95-96)

என்னும் அறக்கோட்பாட்டை நிறுவி, பாரினில் உள்ளோரின் பசிப்பிணி அகற்றும் அறச்செயல் புரிந்தாள். அதன்வழி பேரின்பப் பெருவாழ்வு பெற்றாள்.

தொகுப்புரை:

மனித வாழ்க்கை ஒரு வரம். அதன்மூலம் பிறவியின் வேரறுத்துப் பிறவாநிலை எய்த மனித உயிர்கள் முயலல்வேண்டும். அத்தகைய நிலைக்கு அடிப்படை இயல்புகளாக விளங்குவன பண்பட்ட நன்னடத்தையும், அருளுணர்வோடு பிறக்கும் நற்சொற்களும், தன்னலம் மறந்து பிறர்க்காக முயலும் நற்செயல்களும் ஆகும். அத்தகைய இயல்புகளை மக்கள் சமுதாயம் எய்துகின்றபோது தீயவை தானாக அழிந்துபோகும். மனித வாழ்க்கை மாண்புடையதாக மலரும். அதன்வழி, பேரின்பப் பெருவாழ்வை மக்கள் அடைய இயலும் என்பதையே இவ் விரட்டைக் காப்பியங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

***

து.கார்த்திகேயன்,
முனைவர் பட்ட ஆய்வாளர்
உதவிப்பேராசிரியர்,
தருமபுரம் ஆதினம் கலைக்கல்லூரி,
தருமபுரம்மயிலாடுதுறை
tamilkarthik82@gmail.com

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *