தமிழ்த்தேனீ

அம்மாவே ஒரு குழந்தை

எத்தனையோ பேறுகள் பெற்றவள் ஆயினும் அம்மாவே ஒரு குழந்தைதானே மலடி பூக்காமரம் காய்க்காகொடி முளைக்கா விதை என்றெல்லாம் ஒருகுழந்தை பெற்றுத்தர வக்கில்லையென்றே ஏசும் வாய்மொழிகள் வீசும் தீக்கணைகள் எத்தனையோ பேர்கள் அத்தனையும் பெற்றுத் துடித்தாலும் ஏற்காத பழியெல்லாம் ஏற்று மனம் நொந்து போனபின்னே நோற்காத நோன்பெல்லாம் நோற்று  வரமாய் ஒரு குழந்தை பெற்றாளே

அம்மாவே ஒரு குழந்தை

தாலாட்டி சீராட்டி பாலூட்டி வளர்க்க ஒரு குழந்தை வேண்டுமென்றே தவம் கிடந்தே பெற்ற ஒரு மகன் அந்தத் திருமகன் வாழ்வுக்காய் எத்தனையோ தியாகங்கள் செய்திருந்தாலும் அத்தனையும்  அடி மனதில் அழுத்தி வைத்தே  சிரித்தாள் அம்மாவே ஒரு குழந்தை

தவமிருந்து தான் பெற்ற  அந்த  ஒரு மகன்  அந்தத் தாயின் திருமகன்  அவளைக் காப்பான் என்று சற்றும் எண்ணாமல் அவனைக் காப்பதே வரமாய் வளர்த்தாள்

அம்மாவே ஒரு குழந்தை

எதிர்பார்ப் பேதுமின்றி அவன் சொன்ன சொல்லுக்கெல்லாம் மறுப்பேதுமின்றி எதற்கும் தலையாட்டி நயந்தாள்  பயந்தாள் இழைந்தாள் குழைந்தாள் அவள் பெற்ற  குழந்தைக்காய்  அவள் குழந்தை ஆனாளே  அம்மாவே ஒரு குழந்தை எதிர்பார்ப் பேதுமின்றித்தானே தவமிருந்தாள்  தானே தவமிருந்தாள்

தாயறியாச்  சூலா நூலறியாச் சீலையா  தவமிருப்பதே வேலையா அதென்ன பிள்ளை பெறும் ஆலையா

சூலாயுதம் கொண்டே காக்கும் வேலாயுதா சூல் ஆயுதம்  கொண்டே தாக்கினால் தாங்குவார் யாருளர் தவித்தே போனாள் தனித்தே அவன் போனான் தவித்தே இவள் போனாள்

பாவம் அம்மாவே ஒரு குழந்தை

தாய்க்குப் பின்  தாரம்தானே அந்த அவதாரம் தானே சொன்ன  மந்திரம் ஆக்கியதே அவளை யந்திரமாய் இனித்தே பெற்ற அந்த  ஒரு மகன் அவளைத் தனித்தே தைரியமாய்  துணித்தான்

  அவளை பணித்தாயாய்ப் பணித்தான்   அவளுக்கு  தனிமையைத் திணித்தான்  இனித்தேற  வழியுண்டோ தனித்திருந்து  தவமிருந்தாள் தவமிருந்து தனித்திருந்தாள் தனித்திருக்கும் நேரமெல்லாம் தவமிருந்தாள் தவமிருந்த காலமெல்லாம் தனித்திருந்தாள் அதனால்தான்  பிள்ளை கனிந்தான் அறியாமல் அவனின்று  நினைந்தான் அவளைத் தவிர்த்திருக்கக துணிந்தான்

 பாவம் அம்மாவே ஒரு குழந்தை

  அன்புக்காய் பரிவுக்காய் அன்பான உறவுக்காய் இதமான  சொல்லுக்காய் பரிவான  மனதுக்காய் ஏங்கியேங்கித் தவித்தாள்   கனிகின்ற காயானால் கனியும் எப்போதும் கனியாத  காயாலே  தனித்தாள்

பாவம் அம்மாவே ஒரு குழந்தை

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *