க. பாலசுப்பிரமணியன்

படிக்கும் திறன் (Reading Skills )

education-

“புத்தகத்தை எடுத்துக் கொஞ்சம் படியேண்டா” என்று தன் மகனைப் பார்த்துச் சொல்லாத பெற்றோர்களே இருக்க முடியாது. “புத்தகம் என்னவோ அவன் கையிலேதான் இருக்கு, ஆனால் மனசு எங்கேயோ அலை பாயுது ” என்றும்  “புத்தகத்தை கையிலே வைத்துக்கொண்டு இருக்கிறான், கண் திறந்துதான் இருக்கு, ஆனால் தூங்கிக் கொண்டிருக்கிறான்” என்று தன் குழந்தைகளை பல விதங்களில் வர்ணிக்கின்ற பெற்றோர்களை நாம் பார்த்திருக்கின்றோம்.

படிக்கும் பொழுது என்ன நடக்கின்றது? படிப்பது எல்லாம் நம் மனதில் படிகின்றதா? மூளை படிப்பது அனைத்தையும் ஏற்றுக்கொள்ளுகிறதா? படிப்பது அனைத்தையும் நாம் புரிந்து கொள்கின்றோமா? படிப்பதில் எவ்வளவு விழுக்காடு நம் நினைவில் நிற்கின்றது? அது எவ்வளவு காலம் மனதில் நிற்கின்றது? நாம் படிப்பதை  எல்லாம் மூளை எங்கே அடைத்து வைக்கின்றது?  எல்லாம் புரியாத புதிரா? மூளை நரம்பியல் வல்லுனர்களின் ஆராய்ச்சிகள் கற்றலைப் பற்றியும் நினைவைப் பற்றியும் என்ன சொல்லுகின்றன?

சற்றே யோசித்துப் பாருங்கள்… தமிழிலும் சரி, மற்ற மொழிகளிலும் சரி ..தற்போதைய எழுத்து வடிவங்கள் எத்தனை நூற்றாண்டுகளாக  வழக்கத்தில் இருக்கின்றன ? இதற்கு முன்னால்  இருந்த எழுத்து வடிவங்கள் எப்படி இருந்தன? அவைகளை நாம் இப்போது பார்த்தால் நம்மால் எளிதாகப் புரிந்து கொள்ள முடியுமா? ஆனால், அந்தக் காலத்து மக்களுக்கு அந்த வடிவங்கள் எப்படி எளிதாகப் புரிந்தன? உலக மாற்றங்களை மூளை எவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ளுகிறது?

ஆராய்ச்சியாளர்களிடம் பேசினால் அவர்கள் சொல்லுவார்கள் “கண்கள் உங்கள் எழுத்துக்களை புரிந்துகொள்வதில்லை. அவைகளுக்கு எந்த எழுத்தும் எந்த மொழியைச் சார்ந்தது என்று தெரியாது. அவைகள் தாங்கள் பார்க்கும் ஒளி வடிவங்களை மட்டும் திரைகளில் பதிவு செய்து மூளைக்கு அனுப்புகின்றன.” ஆங்கில இலக்கிய மேதை திரு பெர்னார்ட் ஷா அவர்கள்  அழகாகச் சொன்னார் ” Words are only postage stamps delivering the object for you to unwrap.” வார்த்தைகள் பொருள்களைக் கொண்டு சேர்க்கும் தபால் தலைகளைப் போன்றவை”

ஆராய்ச்சியாளர்களின் கருத்துப் படி “Words are nothing but art museums in our brain- in the form of straight lines, circles, and other art forms. There is no such thing for the eye called words!! ” வார்த்தைகள் மூலையில் ஒரு கலைக்கூடம் போன்றவை. – நேர்கோடுகள், வட்டங்கள் மற்றும் மாறுபட்ட கலை வடிவங்கள். கண்களைப் பொருத்தவரை அவைகளுக்கு வார்த்தைகள் என்றால் என்னவென்று தெரியாது”… விந்தையாக இல்லையா?

வார்த்தைகளையும் அறியாமல் மொழிகளையும் அறியாமல் இந்தக் கண்கள் என்ன சாதனை படைகின்றன ! அப்படியானால் நமக்கு வார்த்தைகளும், மொழிகளும், அதன் பொருள்களும் எவ்வாறு புலப்படுகின்றது?

இயற்கையின் அமைப்பில் இந்த மூளை ஒரு ஆயிரம் சூப்பர் கணினிகளின் வேலைகளைச் சேர்த்துச் செய்கின்றது. கண்களால் அனுப்பப்படும் ஒளி வடிவங்கள் மூளையின் பல பகுதிகளுக்கு அனுப்பபடுகின்றன. மூளையில் கற்றல் பற்றிய ஆராய்ச்சியாளர்கள் கருத்துப்படி இந்த வடிவங்களில் நேர்கோடுகள் ஓரிடத்திற்கும் வட்டங்கள் மற்றொரு இடத்திற்கும் அது போல் மற்ற வடிவங்கள் மூளையின் வெவ்வேறு பகுதிகளிலும் பதிவாகின்றன. தன்னுடை முன் நினைவுகளோடு அவைகளை பரிசீலிக்கும் மூளை அவைகளை வார்த்தைகளாகவும் வடிவங்களாகவும் அமைக்கின்றது. இந்த செயல் நடப்பதற்கு மூளையின் பல்வேறு பாகங்கள் கைகோர்த்து ஒன்றாக வேலை செய்கின்றன.

வடிவமைக்கப்பட்ட இந்த எழுத்துக்களுக்கும், வார்த்தைகளுக்கும், வடிவங்களுக்கும் பொருள் கொடுப்பது (Meaning  Making) மூளையின் ஒரு அசாதரணமான வேலை. இது அற்புதச் செயல், ஆனால் ஒரு நொடியின் சில விழுக்காடுகளில் இந்தச் செயல் மிகச் சாதாரணமாக நடந்து விடுகின்றது.

இதைப் பற்றிய மேலும் சில அறிய தகவல்களை நாம் மேற்கொண்டு பார்ப்போம். ஆனால், படித்தல் என்ற ஒரு செயலுக்குப் பின்னே நடக்கின்ற ஒரு பெரிய போராட்டத்தை நாம் புரிந்து கொள்ள முயல வேண்டும்.

(தொடரும் )

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *