-தமிழ்த்தேனீ

தயங்கித் தயங்கித் தொலைபேசியில் மகன் சரவணனிடம் கேட்டார் சபேசன். ”ஏம்பா உனக்கு நம்ப வீட்டோட போட்டோ எல்லாம் அனுப்பிச்சேனே  பாத்தியா?”

”எல்லாம் பாத்தேம்பா  ரொம்ப மோசமா இருக்கே…?  நானே அதைப்பத்தி உங்க கிட்ட பேசணும்னு இருந்தேன்  நிறைய வேலை.”

”சரிப்பா நான் நாளைக்கே ஐந்து லட்‌சத்தை உங்க பேருலே அனுப்பறேன்; வீட்டை உடனடியாச் சரிப்படுத்திடுங்க” என்றான் சரவணன்.

மூன்று மாதங்களாக  ஏற்கெனவே சொருகு ஓடு போடாத மேல் தளத்தில் மழை பெய்ததால்  ஏற்பட்ட  நீர்க் கசிவை சரிசெய்ய  வேறு வழியில்லாமல்  தளத்தில் இருந்த சிமென்ட் ஜல்லி கலந்துபோட்ட கலவையெல்லாம் உடைத்து எடுத்து   ஒரு இடம் விடாமல் லீக் ப்ரூப் எண்ணெயைப்  பூசிவிட்டு  வேறு சிமென்ட் ஜல்லி மணல்கலந்து போட்டு,  விழும் தண்ணீர் ஒரு இடத்தில் குவிந்து குழாய் வழியாகத் தோட்டத்துக்குப் போகுமாறு சாய்வு கொடுத்து,  அதைச் சரிசெய்துவிட்டு, அதன்மேல் மீண்டும் லீக் ப்ரூப் எண்ணெயை அடித்து அதன்மேல் சிமென்ட் போட்டு, அதுக்கும் மேலே வெள்ளை டைல்ஸ் போட்டு, வெப்பம் தாக்காமலும், நீர் உள்ளே இறங்காமலும்  மற்ற இடங்களில் அதனால் ஏற்பட்ட பள்ளங்கள், வர்ணம்போன இடங்கள்  எல்லாவற்றையும் சரிசெய்து,  ஒழுங்காக வேலைக்கு வராத,  வந்தாலும் ஒழுங்காக வேலை செய்யாத ஆட்களை வைத்துக்கொண்டு வெய்யிலில் அவர்களின் கூடவேநின்று  வேலை வாங்கி, வலிக்கும் முதுகில்  அவ்வப்போது வலிநிவாரணிப் பசை தேய்த்துக்கொண்டு மூன்று மாதத்துக்குப் பின் இப்போதுதான்  வேலை முடிந்திருக்கிறது.

வீட்டின் ஒவ்வொரு பகுதியையும் புகைப்படம் எடுத்து மகனுக்கு  இணையத்தின் வழியாக அனுப்பினார்.

மகனிடமிருந்து தொலைபேசி அழைப்பு!

”சொல்லுப்பா போட்டோ எல்லாம் பாத்தியா?”  என்றார் உற்சாகக் குரலில்.

”பாத்தேம்பா!  இந்த வயசிலே எதுக்கு இவ்ளோ உழைக்கிறீங்க?  அது சரி இவளோ உழைச்சு  இன்னும் அசிங்கமா ஆக்கிவெச்சிருக்கீங்க வீட்டை” என்றான் மகன்.

”என்னப்பா சொல்றே?” என்றார் அவர்.

பின்ன என்னப்பா? நீங்க அமெரிக்காவுக்கு வந்தப்போ அங்கே இருக்கிற வீட்டையெல்லாம் பாத்தீங்களே அதெல்லாம் எவ்ளோ  நல்லா  நாகரிகமா வசதியா  இருக்கு.  இப்பிடி  ஒவ்வொரு அறைக்கு ஒவ்வொரு வர்ணம்  முன்னாலே  தாழ்வாரத்துக்கு அடுத்து  முத்தம், அது போதாக்குறைக்கு  அதிலே  ரெட் ஆக்சைடு அடிச்சு,  ஏதோ காவி கலர்லே தரை. என்னப்பா இதெல்லாம்?  வீட்டை அசிங்கப்படுத்தி வெச்சிருக்கீங்க!  அஞ்சு லட்‌சம் அனுப்பினேன்;  அஞ்சு லட்‌சம் செலவழிச்சு நீங்களும் உழைச்சு,  வீட்டைக் கெடுத்து வெச்சிருக்கீங்களே?   இன்டெர்னெட்லே  பாருங்கப்பா!  எவ்ளோ டிசைன் வந்திருக்கு.  அதைப் பாத்தாவது  லேட்டஸ்டா,  மாடர்னா,  கட்டக் கூடாதா?   சரி… என்னமோ செய்ங்க!”  என்று தொலைபேசியை வைத்தான்  மகன்.

ஆறு மாதங்கள் அவருடன் சரியாகப் பேசவில்லை.  அவரும் சரி எதையுமே கண்டு கொள்ளாமல் அமைதியாக இருந்தார். சற்றே கோபம் தணிந்தது போலும்!
ஒருநாள் தொலைபேசியில், ”அப்பா! நான் உங்களுக்கும் அம்மாவுக்கும்  விசா போடறேன் அமெரிக்கா வறீங்களா?  உங்க பேரன் உங்களோட இருக்கணுமாம்! இப்போ அவனுக்கு லீவு விட்டுட்டாங்க.  வறீங்களா?  என்றான்.

”சரிப்பா…வரோம்!” என்று அமெரிக்கா போய் இறங்கினார்கள் இவரும் இவர் மனைவியும்.

பேரன் ஓடிவந்து,  ”தாத்தா, பாட்டி  வெல்கம்! வெல்கம்!” என்று கட்டிக் கொண்டான்.  மருமகள், “வாங்க வாங்க  ப்ரயாணமெல்லாம் சௌகரியமா இருந்துதா?”  உக்காருங்க  முதல்லே  காப்பி குடிங்க! என்று காப்பியைக் குடுத்துவிட்டு சாப்பாடு ரெடியா இருக்கு குளிச்சிட்டு வந்தீங்கன்னா சாப்படலாம் என்றாள்.

ஆயிற்று உணவு முடிந்ததும் தூக்கம் கண்களைச் சுழற்றிக் கொண்டு வந்தது.

ரெண்டு பேரும் இப்போ  சமாளிச்சிக்கோங்க;  ராத்திரி  தூங்கலாம்   அப்போதான்  ஜெட்லாக் போகும் என்றாள் மருமகள். சரி என்று இவர்களின் வருகைக்காகவே ஏற்பாடு செய்து வைத்திருந்த தமிழ்ச் சேனல்களைப்  பார்க்க ஆரம்பித்தார்கள்.

தொலைக்காட்சித் தொடர் பார்த்துக் கொண்டிருந்தபோது  அதிலே ஒரு வீட்டைக் காட்டினார்கள்.  அப்பா இந்த  வீடு இருக்கே  நிறைய தொலைக் காட்சித் தொடர்லேயும்  சினிமாவிலேயும்  நிறைய வருதுப்பா. ஒரு நாளைக்கு  இருவதாயிரம் வாடகையாம்.  இருந்த இடத்திலேருந்தே சம்பாதிச்சுக் கொடுக்குது  என்றாள்  மருமகள்.

”இப்படி மூன்று மாதங்கள் கழிந்ததும் சரிப்பா.. நாங்க இந்தியா கிளம்பறோம்” என்றார்.

”ஏம்பா இன்னும் மூணு மாசம் இருக்கலாமே?” என்ற மகனிடம் அமெரிக்காவிலே  பார்க்கவேண்டிய இடங்களெல்லாம் பாத்தாச்சு. அங்கே இந்தியாவிலே கொஞ்சம் வேலையிருக்கு  அதுனாலே கிளம்பறோம்” என்றார்.

மறுநாள் மீண்டும் இந்தியா கிளம்பவேண்டும்.

”ஏம்பா…எனக்கு ஒரு பத்து லட்‌சம்  அனுப்பி வைக்கிறியா?” என்றார்  அப்பா.

”என்னப்பா விளையாடறீங்களா? உங்களையும் அம்மாவையும் இங்கே கூட்டிகிட்டு வந்து இது வரைக்கும்  10 லட்‌சம் செலவழிச்சிருக்கேன். காசு சும்மா வரலப்பா…உழைச்சாதான் வரும். பணத்தோட  அருமையே தெரியாம பேசறீங்களே?” என்றான் மகன்.

மறுநாள்  ஏர்போட்டுக்கு வந்து சேர்ந்தாயிற்று. ”எல்லாம் எடுத்து வெச்சிகிட்டீங்களாப்பா?  பத்திரமா போயிட்டுவாங்க  ரெண்டு பேரும். உடம்பைப் பாத்துக்கோங்க.  நான் நேத்து கடுமையாப் பேசினேன்… அதையெல்லாம் மனசிலே வெச்சிக்காதீங்க!”  என்றார் மகன்.

”சரிப்பா…இமிக்ரேஷனுக்கு நேரமாச்சு!  நாங்க கிளம்பறோம்.  எங்க பேரனைப் பத்திரமா பாத்துக்கங்க.  நீங்க  ரெண்டுபேரும்கூட  நேரத்துக்குச் சாப்டுட்டு நேரத்துக்குத் தூங்கி ஆரோக்கியத்தைப் பாத்துக்கோங்க.  பணம்மட்டும்  முக்கியமில்லேப்பா;  ஆரோக்கியம் முக்கியம்” என்றபடி பேரனைத் தூக்கி ஒரு முத்தம் கொடுத்துவிட்டு,  ”உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்! தொலைக்காட்சித் தொடர்லேயும், சினிமாவிலேயும் அடிக்கடி வருதே அந்த வீடுதாம்ப்பா நம்ம கிராமத்து வீடு. நாங்க  ஒரு அறையிலே இருந்துண்டு வாடகைக்கு விடறோம் படப்பிடிப்புக்கு. இது வரைக்கும் அந்தவீடு இருவத்தி அஞ்சு லட்சம் சம்பாறிச்சுக் குடுத்திருக்கு.

அந்த இருபத்தி அஞ்சு லட்‌சத்தை வெச்சு  அதே கிராமத்திலே  இன்னொரு வீடு வாங்கினேன்.  அந்த வீட்டை நீ  ஏற்கெனவே சொன்னா மாதிரி  மாடர்னா  மாத்தலாம்னுதான்  பத்து லட்‌சம் கேட்டேன்”  என்றார் அப்பா.

சற்றுநேரம் புயலடித்து ஓய்ந்தாற்போல் ஒரு மௌனம்.

மகன் சொன்னான்…”அப்பா நான் பத்து லட்சம் அனுப்பறேன்…ஆனா மாடர்னா கட்டாதீங்க!  நம்ம கிராமத்து வீடு மாதிரியே கட்டுங்க!” என்றான் கையைப் பிடித்துக் கொண்டு.

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *