இரா.முருகனின் ‘தியூப்ளே வீதி’ பயோபிக்ஷன் நாவல்

0

தியூப்ளே வீதி – முன்னுரை

7aa1821a-2abf-4765-a061-17225e5c4c8d

ஆறு வருடம் முன்பு தினமணி கதிர் வார இதழில் ‘நெம்பர் 40, ரெட்டைத் தெரு’ என்ற தலைப்பில் ஒரு தொடர் எழுதினேன். பயோஃபிக்‌ஷன் என்ற, வாழ்க்கை வரலாற்று அடிப்படையிலான புனைகதை அல்லது புனைகதையான வரலாறு அது.

1960-களில், தமிழ்நாட்டில் இருக்கும் பெயர் குறிப்பிடப்படாத ஒரு சிறு நகரத்தில் இருந்த ஒரு பத்து வயதுப் பையனின் வாழ்க்கைதான் அந்தத் தொடர். நான்தான் அவன்.

‘நெம்பர் 40, ரெட்டைத் தெரு’ நூல் வடிவம் பெற்றது. அதன் பகுதிகள் குறும்படமாயின. நானும் அதில் நடித்தேன்.

வாழ்க்கை 1960-களிலேயே நின்றுவிடவில்லையே. அந்தப் பையன் வளர்ந்து கல்லூரியில் அடி எடுத்து வைத்தான். 1970-களில் அவனுடைய உலகம், அவனைச் சுற்றி இயங்கிய உலகம், பழகிய மனிதர்கள், நடந்த தெருக்கள் இதையெல்லாம் கற்பனை கலந்து பதிவு செய்யும் தொடர்தான் ‘தியூப்ளே வீதி’.

தியூப்ளே வீதியும் ரெட்டைத் தெருவும் வெவ்வேறு ஊர்களில் இருந்தவை. இப்போது இரண்டுமே பெயர் மாறி நினைவுகளில் மட்டும் நிலைத்திருக்கின்றன.

நூலில் புகும் முன்பு, சில வார்த்தைகள். நாவலுக்கும் குறுநாவல் தொகுப்புக்கும் விஸ்தாரமாக முன்னுரை எழுதும் மனமும் கைகளும் பயோ பிக்‌ஷன் என்றதும் நகர மறுக்கின்றன.  வாழ்க்கை சார் புதினத்துக்கு வாழ்க்கை தானே முன்னுரையும், முடிவுரையும், கருவும், உருவும், சார்பும், இயக்கமும், இலக்கும் தருவது? தனியாக முன்னுரை எழுதிச் சேர்க்க என்ன இருக்கிறது?

ரொம்ப சரி. சில தகவல்களை மட்டும் சொல்கிறேன். தியூப்ளே வீதி தொடர்பானவை அவை.

தியூப்ளே வீதி முழுவதையும் தினமணி இணையத் தளத்தில் அத்தியாய வரிசை பிசகாமல் தேடிப் படித்த ஒரு நண்பரின் கேள்வி –

’அது ஏன் கடைசியிலே இப்படி பண்ணிட்டே? நீ நடந்துக்கிட்டது ரொம்பத் தப்பு’.

பயோபிக்‌ஷன் கதைசொல்லி முழுக்க முழுக்க நானே என்று நம்ப வைத்ததற்கு எழுத்தின் மீது பழி போடலாம் என்றாலும் எழுத்தைப் பற்றி அவருக்குக் குறைச்சல்பட ஏதுமில்லை.

பரவாயிலே.. முற்றுப்புள்ளியே இல்லாம பாஷ்யம் ஐயங்கார் மாதிரி அடிச்சுட்டுப் போறே

யார் மாதிரி?

அதான்’பா கடல்புறா..

அவர் சாண்டில்யனை விட்டு என்னைத் திரும்பத் துரத்திக் கிடுக்கிப் பிடி போட்ட இடம்:

சுவிட்சர்லாந்துக்கு முப்பது வருடம் முன் முதல் தடவையாகத் தொழில் நிமித்தமாகப் போனபோது அமேலிக்குத் தொலைபேசினேன். விவாகரத்து ஆகி இருப்பதாகத் தெரிவித்தாள். சந்திக்கலாமா என்று கேட்டேன். வரச் சொன்னாள். பெரிய வீடு. எல்லா வசதியும் உண்டு. சாப்பிட்டு விட்டு உட்கார்ந்து ஊர்க் கதை பேசிக் கொண்டிருந்தபோது பிரஞ்ச் ஷகொலா சாப்பிடறியா என்று கேட்டாள் அமேலி. அவள் கொடுத்த் அழகான பெட்டியில் இருந்து சாக்லெட் எடுத்தபோது தான் கவனித்தேன். லலி தொலாந்தல் வீதியில் கர்னல் வீட்டில் அமேலி இருக்கும்போது பார்த்த பெட்டி போல இந்தப் பெட்டிக்கும் இரண்டு அறைகள். அன்றைக்கும் மறுநாளும் அங்கே தான் தங்கினேன்.

வருடா வருடம் ஏதாவது சாக்கு சொல்லி இங்கிலாந்து பயணமும், சுவிட்சர்லாந்தில் நானாக இழுத்துப் போட்டுக் கொள்ளும் கம்பெனி வேலையாக சுவிட்சர்லாந்து பயணங்களும் தொடர்ந்தன.

கயலை அமேலி விஷயத்தில் மட்டும் ஏமாற்றி இருப்பதை அவளிடம் சொல்ல வேண்டிய நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

இதுக்கு என்ன அர்த்தம்? you went out of the wedlock.

நான் இல்லே.

பயோபிக்‌ஷன்னு சொல்லிட்டே. நீ தான்.

அது எப்படியோ இருக்கட்டும்.

தியூப்ளே வீதியின் கதைசொல்லி நான்கு பெண்களை நேசிக்கிறான். ஒருத்தியோடு (அமேலி) உறவும் ஏற்படுகிறது. அது அவனுக்குத் திருமணம் முடிந்து ஆண்டுகள் சென்றும் நீடிக்கிறது. அதைக் குறித்து மனக் குமைச்சல் எதுவும் இல்லாமல், மற்றவர்கள் அன்பின் காரணமாக மன்னித்து விடுவார்கள் என்று நினைக்கிறான்.

தப்பு இல்லையா?

தவறா இல்லையா என்பது meta-ethical (மீயொழுக்கம் சார்ந்த?) கேள்வி என்று தான் நினைக்கிறேன். தியூப்ளே வீதியில் விவாதிக்கப் பட வேண்டியவற்றில் இதுவும் ஒன்று. ஜோசபினோடு அவனுக்கு (எனக்குன்னு சொல்லு, சரி அப்படியே வச்சுக்கலாம்) இருந்த அன்பும் உடற்கவர்ச்சியும் சார்ந்த நட்பு கூட அவ்வாறே.

தினமணி இணைய தளத்தில் வியாழன் தோறும், 33 வாரம் வெளியானது ‘தியூப்ளே வீதி’ பயோபிக்‌ஷன் நாவல்.

ஒவ்வொரு வாரமும் எடிட்டராக மட்டும் இல்லாமல் முதல் வாசகராக, ரசித்துப் படித்து, வாசக அனுபவத்தைத் தொடர்ந்து வாராவாரம் எல்லா சஹ்ருதயர்களோடும் பகிர்ந்து கொண்டார் என் அன்புத் தோழி, தினமணி Senior Content Editor கவிதாயினி உமா.

பாராட்டுகிற அதே வேளையில் அன்போடு கிண்டல் செய்யவும் மறக்கவில்லை அவர். ‘என்ன முருகன், ஆரம்பத்திலே ரொம்ப விவரமா பாண்டிச்சேரி வீதி, கட்டடம், வீடு, ஹோட்டல், தியேட்டர்னு ஒண்ணு விடாம கவர் பண்ணினீங்க.. அப்புறம் அங்கே எல்லாம் அந்தப் பையன் சளைக்காம கேர்ள் ப்ரண்டுகளைக் கூட்டிப் போய் முத்தம் கொடுத்திட்டு இருக்கான்..’.

ஒவ்வொரு புது அத்தியாயம் எழுதும் போதும் இதை நினைத்துச் சிரிப்பேன்!

பயோபிக்‌ஷன்லே எவ்வளவு விழுக்காடு உண்மை? இந்தக் கேள்விக்கு நான் உமாவுக்கு இதுவரை நேரடியான பதில் சொல்லவில்லை. மேகலாவும், ஜோசபினும், கயலும், அமேலியும்… உண்டு ஆனா இல்லே. உமாவுக்கு மேகலாவை அறிமுகப்படுத்தியிருக்கிறேனாக்கும்!

இறுதி அத்தியாயங்களை ஒரு முறைக்கு இருமுறை வாசித்து, அற்புதமான ஒரு உட்பெட்டிக் கடிதமாக அனுப்பியிருந்தார் அந்தக் கவிதாயினி. அவர் கவிதை போல், அழகியல் ரசனையோடும் சிந்தனைத் தெளிவோடும் அற்புதமாக அமைந்த அந்தக் கடிதத்தைப் படிக்கப் படிக்க மனம் நிறைகிறது.

உமாவுக்காக இன்னொரு பயோபிக்‌ஷன் எழுதலாம்.

நன்றி உமா ஷக்தி

வாராவாரம் தினமணிக்கு அனுப்பும் போதே இன்னொரு நண்பருக்கும் அனுப்பி விடுவேன். பொறுமையாகப் படித்து அழகாகக் கருத்துத் தெரிவிப்பார் அவர். அச்சுதம் கேசவம், தியூப்ளே வீதி, வாழ்ந்து போதீரே மூன்றையும் விரிவாக விமர்சனம் செய்கிற, பாராட்டுகிற, கேள்வி கேட்கிற என் அருமை நண்பர் கிரேசி மோகனுக்கு நன்றி வெண்பா நானூறு பாட இருக்கிறேன்!

எழுதச் சொல்லிக் கேட்டுக் கொண்ட தினமணி பொது நிர்வாகி, நண்பர் ஆர் வி எஸ் என்ற வெங்கடசுப்பிரமணியன், இணையப் பதிப்பு ஆசிரியர் பார்த்தசாரதி இவர்கள் அளித்த ஊக்கம் 10 வாரத்தில் முடிக்க நினைத்த தொடரைச் சரம் சரமாகக் கதை சொல்ல வைத்து 580 பக்கங்களில், 33 அத்தியாயங்களோடு நிறைவு காண வைத்துள்ளது. இந்த நண்பர்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றி. ‘புகுமுகம்’ ஆக இருக்கும் முதல் ஆறு அத்தியாயங்களும் என் நண்பர் சித்தன் பிரசாத் ஆசிரியராக இருந்த யுகமாயினி இலக்கிய இதழில் பிரசுரமானவை. சித்தனுக்கும் என் நன்றி,

தியூப்ளே வீதி அழைக்கிறது. 

எழுபதுகளுக்கு என்னுடன் வாருங்கள்.

இரா.முருகன்

கவிதாயினி உமா சக்தி தியூப்ளே வீதி குறித்து –

உமா ஷக்தி எழுதிய கடிதம்

வியாக்கிழமையை அழகிய தினமாக எனக்கு ஆக்கித் தந்த உங்களுக்குத் தான் நான் நன்றி சொல்ல வேண்டும். இலக்கிய உலகில் எழுத்து எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான சர்ச்ச்கையும் விவாதமும் அடிக்கடி நடைபெறும்.

என்னைப் பொருத்தவரையில் ஒரு வாசகனை நட்புடன் கரம் பிடித்து பக்கத்தில் உட்கார வைத்து அப்படியே அந்த எழுத்துக்குள் ஐக்கியமாக வைத்துவிடுவது தான். தங்கள் மேதமையை எழுத்தாக்கி வார்த்தைகளை வலிந்து திணித்து வாசகரை ஓரங் கட்டச் செய்யும் எழுத்து எனக்கு உவப்பானதல்ல.

தவிர தன்னுடைய சொந்த சோகங்களையும் துக்கங்களையும் படைப்பாக்கி, படிப்பவன் கசந்தும் வெறுத்துப் போகும் அளவிற்கு வாசனுக்குள் எதுவும் நிகழ்த்தாத எழுத்தையும் என்னால் ஒரு போதும் ரசிக்க முடியாது.

மாறாக எழுத்தை ஒரு ஊற்றாக்கி, மையில் தன் உயிரில் உணர்வில் கலந்தவற்றை மொழியின் துணையோடு முடிந்த வரையில் தன் ஆன்மாவை படிப்பவனுக்கு கடத்தச் செய்கிறவனே நல்ல எழுத்தாளன். இரா முருகன் அத்தகைய ஒரு எழுத்தாளர். அவர் படைப்புக்களைப் படிப்பவர் யாருக்கும் இதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

வாழ்வை நுட்பமாக ரசித்து, உணர்ந்து, கற்று, கற்றதை மேலும் கற்பனை சேர்த்து சுய அனுபவம் கலந்து எழுதும் போது அந்த எழுத்து அமரத்துவம் பெறுகின்றது. தத்துவமும், தேடலும், ஆழமும் அழகியலும், நவீனத்தன்மையும் கொண்ட எழுத்து முருகனுடையது.

தினமணியில் கடந்த 33 வாரங்கள் வெளிவந்து கொண்டிருந்த தியூப்ளே வீதி அதற்கு மிகச் சிறந்த சான்று.

மனத்தை எப்படி கையாள்வது என்பது பெரிய வித்தை. ஞானிகளுக்கே அது சிரமம். பதின்வயதில் ஒருவன் தீர்மானிக்கும் சில விஷயங்களே அவன் ஒட்டுமொத்த வாழ்க்கையை நிர்ணயிக்கும் என்பதை இதை விட தெளிவாக ஒருவரால் எப்படி புனைவாக்க முடியும்?

தியூப்ளே வீதியில் அந்த அன்பின் உள்ளங்கள் இட்ட முத்தங்கள் காற்றில் கலந்திருக்கலாம். அவர்கள் மனத்தில் அந்நினைவு என்றென்றும் ஈரம் காயாதிருக்கும். அதன் சாரத்தை எழுத்தாக்கித் தருகையில் படிக்கும் ஒவ்வொருவரின் மனங்களிலும் அன்பின் வெளிச்சம் பரவும்.

இத்தகைய மாயங்களைச் செய்ய முருகனால் முடிந்திருக்கிறது. ஒவ்வொரு கதாபாத்திரமும் இதோ என்னுடன் தான் இருக்கிறார்கள். கதையில் அவர்களின் பங்களிப்பு முடிந்துவிட்டாலும், கண்ணுக்குப் புலப்படாத தோழமைகளாக தொடர்கிறார்கள்.

மேகலா ஒரு அழகிய கவிதையாக நிஜத்திலும்…

தவிர கதை நாயகன் எனக்கு பத்து வருட காலமாக எனக்கு நல்ல நண்பர், மிகப் பிரியமான எழுத்தாளர். அவருடைய சில நாட்களில் உலவி வந்தது எனக்குக் கிடைத்த பேறு. இக்கதை நாவலாகும் போதும் முதல் வாசகியாகப் படிக்க ஆசை. நிச்சயம் இதை திரைப்படமாக எடுத்தால் மிகப் பெரிய கவனம் பெரும். உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி Merci Beaucoup Era.Murukan இரா.முருகன்.

                               முன்னுரை  

இரா.முருகன்

குறுநாவலுக்கு என்ன இலக்கணம் என்று தெரிந்து கொள்ளாமல் நான் எழுத ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட இங்கே குறுநாவல் எழுதிய எல்லோருமே அப்படித்தான் என்று சொல்லலாம்.

1990-களில் தமிழ் இலக்கியச் சூழல் இன்றைக்கு இருப்பதை விடச் சற்றே மாறுபட்டு இருந்தது. எப்போதும் போல் கவிதை நிறைய உண்டு. கணிசமாகச் சிறுகதைகளும் வந்து கொண்டிருந்தன. நாவல் அத்தி பூத்தாற்போல் வரும்.  ஒரு நாவல் எழுதினால் அது அல்டிமேட் சாதனை. அடுத்த பத்து வருடம் ஓய்வெடுத்து விட்டு அடுத்ததை யோசிக்கலாம். இந்த சூழலில் தான் தமிழுக்குப் புது இலக்கிய வடிவமாக, ஆனால் பரபரப்பின்றிக் குறுநாவல் வந்து சேர்ந்தது.  மேற்கில் இருந்து வந்த ’நல்லனவெல்லாம்’ பட்டியலில் குறுநாவலைக் காணலாம்.

இடைக்காலத்தில் இருந்தே ஐரோப்பிய மொழிகளில் குறுநாவல் உண்டாம். பதினான்காம் நூற்றாண்டில் பொகாசியோ எழுதிய டெக்கமரான் கதைகள் நூலில் இருக்கும் ஒவ்வொரு கதையும் ஒரு குறுநாவலாம். இந்தப் பாரம்பரியம் தொடர்ந்து, பத்தொன்பதாம் நூற்றாண்டு ஜெர்மன், பிரஞ்சு இலக்கியத்தில் குறுநாவலுக்குத் தனியானதோர் இடம் அளிக்கப் பட்டதாக அறிகிறோம். இருபதாம் நூற்றாண்டு, ஆங்கில இலக்கியத்தில் குறுநாவல் செழித்த காலம் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

’உமக்குத் தெரிந்த ஆங்கிலக் குறுநாவல் வகை சார்ந்த இலக்கியப் படைப்பு ஒன்றைப் பெயர் குறிப்பிடுக’ என்று அரை மரியாதையோடு யாராவது கேட்டு எனக்கும் சொல்ல இஷ்டம் இருந்தால், நான் உடனே சொல்வேன் – ட்ரூமன் கபோட் எழுதிய ப்ரேக்ஃபாஸ்ட் அட் டிப்பனி (Breakfast at Tiffany’s by Truman Capote). ஆட்ரி ஹெப்பன் நடித்து 1960-களின் சூழலில் நிகழும் சினிமாத்தனம் சற்றே கூடிய திரைப்படமாகத் தான் முதலில் இந்தப் புனைவு மனதில் படிந்திருந்தது. ட்ரூமன் கபோட் பற்றிப் பிரகு கேள்விப்பட்டு முதலில் நான் வாசித்த, 1940-களின் சூழலில் இயல்பாக நடைபெறும் குறுநாவல் இது.

காஃப்காவின் ‘வளர்சிதை மாற்றம்’, கார்சியா மார்க்வெஸின் ‘கர்னலுக்கு யாரும் கடிதம் எழுதுவதில்லை’, ‘அறியாப் பெண் ஆந்த்ரியா’, எர்னஸ்ட் ஹெமிங்க்வேயின் ‘கடலும் கிழவனும்’, யாசுநாரி கவாபாத்தாவின் ‘உறங்கும் கன்னியர் வீடு’, ப்ரிமோ லெவியின் ‘நிக்கல்’, சார்லஸ் டிக்கன்ஸின் ‘கிறிஸ்துமஸ் கரோல்’, ஜியார்ஜ் ஆர்வெலின் ‘விலங்குப் பண்ணை’, ஆஸ்கார் ஒயில்டின் ‘காண்டர்வில்லி பிசாசு’  இதெல்லாம் என் மனம் கவர்ந்த மற்ற குறுநாவல்கள். பஷீரின் ‘பால்ய கால சகி’  கூட என் ப்ரிய குறுநாவல் தான்.

உலகின் முதல் குறுநாவல் எது? எந்த மொழியில் எழுதப்பட்டது?

தெரியாது. அடுத்த கேள்வி.

தமிழ்ல் எழுதப்பட்ட முதல் குறுநாவல் எது?

தெரியாது. அடுத்த கேள்வி? கேள்விகள் ஏதும் இல்லை. நன்றி.

இதெல்லாம் தெரியாமல் போனது போலவே தான் குறுநாவல் இலக்கணமும்.

குறுநாவலுக்குப் பக்க அளவு கிடையாது. சிறுகதையை விடக் கொஞ்சம் பெரிசு. நாவலை விடச் சிறியது. இப்படி ஒரு விளக்கம் இணையப் பெருவெளியில் காணக் கிடைக்கிறது. இதன் மற்றொரு எல்லையில், பெரிய குறுநாவலை நாவல் என்றே அழைக்கலாம் என்ற அபத்தமாகத் தோன்றக் கூடிய, தீர யோசித்தால் பொருள் விளங்கும் இன்னொரு விளக்கமும் உண்டு!

இந்தக் குறுநாவல் இலக்கணம் மட்டும் தமிழில் குறுநாவல் எழுத வந்தவர்களுக்குக் காணாப் பாடம் படிக்காமல்  அடிப்படையில் தானே படிந்து வந்தது.

சிறுகதையை விட இன்னும் கொஞ்சம் பரந்த அளவில் யோசித்து எழுதக் கை கொடுத்த இலக்கிய வடிவம் குறுநாவல் என்பதால் குறுநாவல் எழுதித்தான் பார்ப்போமே என்று இதைக் கையாண்டவர்கள் 90-களில் சற்றே அதிகம்.

குறுநாவல் வடிவம் மட்டுமில்லை, அதைப் பற்றிய இன்னொரு நிதர்சனமும் யாரும் சொல்லிக் கொடுக்காமலேயே கற்றுக் கொண்டாயிற்று. குறுநாவல்கள் கண்டிப்பாக இலக்கியப் பத்திரிகைகளுக்கு, அதாவது சிற்றிதழ்களுக்கு மட்டுமே அனுப்பப்பட வேண்டியவை. வெகுஜனப் பத்திரிகைகள் இப்படி ஒரு இனம் தமிழ் இலக்கியத்தில் இருக்கிறது என்ற பிரக்ஞையே இல்லாமல், அல்லது தெரிந்தும், இப்ப என்னங்கிறே என்கிற அலட்சியத்தோடு சிறுகதையை மட்டும் கலர்ப் படங்களோடு பிரசுரித்து தமிழ் கூறும் நல்லுலகத்துக்குக் கதை சொல்லும் கடமையாற்றிக் கொண்டிருந்தன. அது தமிழ்ச் சிறுகதையின் பொற்காலம் என்று சொல்லலாமா? தாராளமாகச் சொல்லிக் கொள்ளலாம்.

குறுநாவல் இலக்கணமாகப் பயின்று வரும் மற்றக் கூறுகள் யாவை? சொல்வோம்.

குறுநாவலுக்குப் பரபரப்பான முடிவு இருக்க வேண்டும். ஒரே ஒரு ஒற்றை இழையாகத் தான் கதை ஓட வேண்டும். சப் ப்ளாட் என்று கதைக்குள்ளே கதையாகக் குறுக்குச் சால் போட அனுமதி இல்லை. அத்தியாயங்களாகப் பிரித்து நம்பர் போட்டு எழுதக் கூடாது. போனால் போகிறது, இரண்டு அடுத்தடுத்த பகுதிகள் இடையே போதிய இடைவெளி கொடுத்துப் பிரிவினையை ஊக்குவிக்கலாம்.

இதெல்லாம் தெரியாததால் எல்லா இலக்கணத்தையும் மீறிக் குறுநாவ்ல எழுதப் போனோம். அத்தியாயங்களுக்கு நம்பர் போடுவதை மட்டும் பத்திரிகை கம்பாசிட்டர்களும் உதவி ஆசிரியர்களும் கவனித்துக் கொண்டார்கள்.

எல்லா இலக்கியப் பத்திரிகைகளும் குறுநாவல்களைக் கேட்டு வாங்கிப் பெற்று மகிழ்ந்து பிரசுரம் செய்தன என்று சொல்ல முடியாது. முப்பத்திரெண்டு பக்கமுள்ள பத்திரிகையில் குறுநாவல் முப்பது பக்கத்தை அடைத்துக் கொண்டு விட்டால், சந்தா அனுப்புங்கள் கோரிக்கையும் ’போன மாதம் வந்த எந்தக் கவிதையும் நன்றாக இல்லை’ என்ற வாசகர் கடிதமும் பிரசுரிக்க மீதி ரெண்டு பக்கம் மட்டும் இருக்கும்.. அபூர்வமாக கோல்ட் கவரிங் விளம்பரம் கிடைக்கும் பத்திரிகையாக இருந்தால் இந்த ஏற்பாடும் அலங்கோலமாகி விடக் கூடும்.

தமிழ் இலக்கிய இதழ்களில் குறுநாவலை மிகத் தீவிரமாக ஆதரித்து வந்த பத்திரிகைகளில் கணையாழிக்கு முக்கிய இடம் உண்டு. 1990-களில் ஆண்டு தவறாமல் குறுநாவல் போட்டி நடத்தித் தேர்ந்தெடுத்துப் பிரசுரித்த கணையாழியும் கஸ்தூரிரங்கன் சாரும் இல்லாமல் இருந்திருந்தால் நான் முதல் குறுநாவலான ‘விஷம்’ எழுதி இந்த இலக்கியப் பகுப்பில் அடியெடுத்து வைத்திருப்பேனா என்று சந்தேகம் தான்.

அந்தக் காலகட்டத்தில் என்னோடு ஆண்டு தோறும் கணையாழிப் போட்டிக்கு எழுதிய நண்பர்களான ஜெயமோகன், பாவண்ணன், எஸ்.ராமகிருஷ்ணன் மற்றும் நானும் நாவலுக்குப் போய்விட்டோம்  அழகியசிங்கர் விருட்ச் நிழலில் அமர்ந்திருக்கிறார். மற்றவர்களும் குறுநாவலுக்குத் திரும்பும் உத்தேசத்தில் இருப்பதாகத் தெரியவில்லை.

குமுதத்துக்கு சுஜாதா ஆசிரியராக இருந்த ஆண்டில் அவர் அந்த லட்சச் சுழற்சி வெகுஜன இதழில் புகுத்திய மாற்றங்களில் குறுநாவ்லும் உண்டு. அந்த அத்தி அவருக்குப் பின் பூக்கவில்லை.

இனியும் ஒரு முறை நீராட முடியாத நதியாகக் குறுநாவல் தோன்றுகிறது. என் இந்தக் குறுநாவல்களை பாசத்தோடு பார்க்கிறேன். மறு வாசிப்பிலும் இவை எனக்கு நல்ல வாசக அனுபவத்தையே தருகின்றன. முதல் வாசகனான எழுத்தாளனுக்குக் கிடைத்த அதே அனுபவம் இவற்றை நூல் வடிவில் இப்போது படிக்கும் வாசகர்களுக்கும் கிட்ட விழைகிறேன்.

இந்தத் தொகுப்பில் இடம் பெறும் குறுநாவல்களில், தகவல்காரர் ‘முன்றில்’ பத்திரிகையிலும், ‘மனை’, ‘முத்தம்மா டீச்சர் பார்த்து முடிக்காத தமிழ்ப் படம்’  ஆகியவை புதிய பார்வையிலும், ‘பகல் பத்து ராப்பத்து’ குமுதத்திலும் பிரசுரமான்வை. மற்றவை கணையாழியில் வெளிவந்தவை. இந்தப் பத்திரிகைகளுக்கு என் நன்றி. கணையாழியில் இடம் பெற்ற என் இன்னொரு குறுநாவலான ‘வீதி’, ‘சற்றே நீண்ட சிறுகதை’யாக வரையறுக்கப்பட்டு என் சிறுகதைத் தொகுப்பில் சேர்க்கப் பட்டதால் இங்கே இடம் பெறவில்லை. ’திண்ணை’ இணைய இதழில் வெளியான  ‘வாயு’ என்ற குறுநாவலும் இதே காரணத்தால் இங்கே இல்லை. குறுநாவலுக்குக் கறாரான இலக்கணம் இல்லை என்பதையும் நான் கறாரான இலக்கியவாதி அல்லன் என்பதையும் இதன் மூலம் தமிழ் கூறும் நல்லுலகம் அறியத் தருவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *