தமிழ்த்தேனீ

திருமுல்லைவாயிலிலிருந்து திருவான்மியூர்

திரு சுந்தரராஜன் அவர்களும் திரு கிருபாநந்தன் அவர்களும் இணைந்து நடத்தும் குவிகம் இலக்கியவாசல் என்னும் அமைப்பில் திருவான்மியூரில் உள்ள பனுவல் புத்தகாலயத்தில் எழுத்தாளர் சுஜாதா அவர்களின் நினைவுப் பெட்டகங்களை திரு சுஜாதா தேசிகன் திரு ரகுநாதன் இருவரும் பேசுகிறார்கள் அவசியம் வாருங்கள் என்று அன்போடு அழைத்தார்கள் . நானும் என் துணைவியாரும் இந்த சந்திப்பிலே கலந்து கொண்டோம்.

de3f7094-6408-458d-9c5b-27ced59df879

திரு சுஜாதா அவர்களின் பன்முகத் திறமை சிலாகிக்கப்பட்டது . திரு சுஜாதா தேசிகன் திரு ரகுநாதன் இருவரும் திரு சுஜாதா அவர்களின் வாழ்க்கையில் தாங்களும் எப்படி பின்னிப்பிணைந்தார்கள் என்பதை மிகுந்த நகைச்சுவை உணர்வோடும் பொறுப்பாகவும் சிலாகித்தார்கள், திரு சுஜாதா அவர்களே இவர்கள் இருவருக்கும் கதை எழுதக் கற்றுக் கொடுத்த அனுபவங்களை கூறினார்கள் .திரு சுஜாதா தேசிகன் திரு ரகுநாதன் இருவரும் திரு சுஜாதா அவர்கள் தங்கள் வாழ்க்கையில் பின்னிப்பிணைந்த அனுபவங்களை நகைச்சுவையோடு கூறினார்கள் . ஆனாலும் திரு சுஜாதா அவர்களின் மறைவு இவர்களைப் பாதித்த ஏக்கம் இழையோடிக்கொண்டே இருந்தது . இருவர் பேசியதைக் கேட்டதும் ஒரு ஏக்கம் பிறந்தது நமக்கும் இப்படி ஒரு சந்தர்ப்பம் அமையவில்லையே என்று.

மேலும் திருமதி சுந்தரராஜன் அவர்கள் சிறுவர்களை வைத்து சுஜாதா அவர்களின் நாடகம் ஒன்றை அரங்கேற்றினார். சிறுவர் சிறுமியர்கள் வசனங்களை திருத்தமாகப் பேசிய விதம் ஆச்சரியப்படுத்தியது. . நானும் பல மேடைகளில் நடித்திருந்தாலும் இந்தக் குழந்தைகளிடமிருந்து உட்கார்ந்த இடத்திலேயே நடிக்க முடியும் குரல் ஏற்ற இறக்கங்களாலும் முக பாவனைகளாலும் என்பதை கற்றுக் கொண்டேன் .

திரு நகுபோலியன் அவர்கள் ஒரு கதை படித்தார் கதை எழுதுவது ஒரு கலை என்றாலும் அதைப் படிக்கும் பாவனையில் அந்தக் கதை இன்னும் மிளிரும் என்பதை அவருடைய அனுபவம் பேசிற்று.

074ef34f-3cf6-4bca-a11e-72dcbae904e8
நானும் சுஜாதா அவர்களின் பல கதைகளைப் படிந்து ரசித்தவன்தானே

அதனால் சுருக்கமாக

விடைக்கு எழுதுவார்கள் சில எழுத்தாளர்கள்
கடைக்கும் எடைக்கும் எழுதுவார்கள் சில எழுத்தாளர்கள்
பண முடைக்கென்றே எழுதுவார்கள் சில எழுத்தாளர்கள்
ஆனால்
நடைக்கென்றே எழுதியவர் திரு சுஜாதா என்று கூறிவிட்டு
தாய்மை என்னும் ஒரு கவிதை படித்தேன்
இதோ அந்தக் கவிதை
தாய்மை
பத்தியமாயிருந்து பத்திரமாயப் பாதுகாத்து
பத்து மாதம் சுமந்திருந்து, இடைநோகப் பெற்றெடுத்து
மடியிலுன்னைத் தவழவிட்டு இடுப்பிலுன்னை
அரவணைத்து கட்டிமுத்தம் நான் கொடுத்தேன்,
–அப்போது தெரியவில்லை
முட்டி முட்டிப் பால் குடித்தாய்,நகத்தால் என்னைக்
கிள்ளி விட்டாய், கீழிறக்கி விடவில்லை,கடிந்துன்னைப்
பேசவில்லை,தோளில் உன்னை தூக்கி வைத்தேன்,
இடுப்பில் வைத்து நான் சுமந்தேன்
–அப்போது தெரியவில்லை
பிஞ்சுக்கையால் அடித்தபோதும்,பற்களால்
கடித்தபோதும்,எட்டி எட்டி உதைத்தபோதும்
முடிபிடித்து இழுத்தபோதும் ஏறி என்னை
மிதித்தபோதும், சுமந்தே இருந்தேன்
-அப்போது தெரியவில்லை
தள்ளாத வயதிலென்னை தாங்கும் வேராய்
நினைத்திருந்தேன்,நீயும் நானும் வேறு வேறாய்
தனிமையிலே இருக்கவிட்டாய், இனி தாங்க
முடியாதென்றாய், இனி தேவையில்லை என்றெண்ணி
முதியோரில்லத்திலே தங்கவைத்தாய்,
வேறெதுவும் தேவையில்லை, அன்பாக ஒரு வார்த்தை
‘அம்மா” என்றே ஒருமுறை தான் சொல் என்றேன்
அதுகூட முடியாமல் மௌனமாய் நீ…..
தவறென்ன செய்திட்டேன்? இப்போதும் தெரியவில்லை…!
அப்போது தெரியவில்லை…ஏனோபுரியவில்லை
..வலிக்கிறது வலிக்கிறது

என்ன செய்வது அப்பாக்களைப் பற்றிக் கவிதை எழுதினால் யாரும் ரசிப்பதில்லை

அன்புடன்
தமிழ்த்தேனீ

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *