தமிழக முதல்வராக ஆறாவது முறையாக ஜெயலலிதா பதவியேற்பு!

0

பவள சங்கரி

தலையங்கம்

நவீனமயமாக்கினால் வருமானமும் பெருகும் ….

a-109

சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடந்த விழாவில் இன்று 23-05-2016 திங்கட்கிழமையன்று தமிழக முதல்வராக, 6-வது முறையாக ஜெயலலிதா அவர்கள் பதவியேற்றுள்ளார். அவருடன் 28 அமைச்சர்களுக்கும் ஆளுநர் ரோசய்யா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

download-2-18முதல்வராகப் பதவியேற்றவுடன் ஜெயலலிதா தம் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி, ஒவ்வொரு வீட்டிற்கும் முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசம், விசைத்தறியாளர்களுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் 750 யூனிட் ஆக உயர்வு, கூட்டுறவு வங்கிகளின் மூலம் வழங்கப்பட்ட விவசாயப் பயிர்கடன் தள்ளுபடி. தொடக்கப்பள்ளிகளில் குழந்தைகளுக்கு காலையில் சிற்றுண்டி மற்றும் டாஸ்மாக் கடைகள் இனி மதியம் 12 மணி முதல் இரவு 10 மணிவரை மட்டுமே செயல்படும், தமிழகம் முழுவதும் 500 டாசுமாக்கு கடைகள் மூட உத்தரவு , தாலிக்கு தங்கம் 8 கிராமாக உயர்வு போன்ற திட்டங்களுக்கான கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார் என்கிறது அரசு செய்திக் குறிப்பு.

தமிழகக் கருவூலத்தின் இன்றைய பொருளாதார நிலையை வைத்துப் பார்க்கும்போது இத்திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றுவது மிகக்கடினமான ஒன்றே.

இன்று பீகாரில் நிதீசு குமார் அரசு பரிபூரண மதுவிலக்கைக் கொண்டுவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. அதோடு பான் மசாலா என்னும் குட்கா பொருட்கள் போன்றவற்றிற்கும் ஒரு ஆண்டிற்கு முழு தடை விதித்துள்ளனர். அவருடைய ஆட்சிக்காலம் வரை இத்தடை நீடிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலமான கேரளாவிலும் மது விலக்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் பூரண மதுவிலக்கு விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்ற நம்பிக்கையும் முதல்வரின் அறிக்கையின் மூலம் ஏற்படுகிறது.

பெருவாரியாக வாக்களித்துள்ள மேற்கு மண்டலத்தில், தொழிலாளர்கள் தாங்கள் வாங்கும் ஊதியத்தின் பெரும்பகுதியை மதுவிற்கு செலவிடுவதால் அவர்தம் குடும்பம் பாதிப்படைவதோடு, அவர்கள் ஒழுங்காக பணிக்கு வராததால் தொழிலும் பாதிக்கப்படுகிறது. ஆனால் டாசுமாக் கடைகளின் மொத்த வருமானத்தில் 60 சதவிகிதம் மேற்கு மண்டலத்திலிருந்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆகவே அரசு இதற்குத் தக்க நடவடிக்கை எடுத்து தொழில்வளம், மனைவளம் பெருக வழியமைக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகமாகவே உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இல்லங்கள், சிறு, குறு தொழிலகங்களுக்கும் இலவசமாக மின்சாரம் வழங்குவது என்பது நல்ல செய்தி என்றாலும், இலவசமாக மின்சாரம் அளிப்பதற்குப்பதிலாக சோலார் எனர்ஜி என்கிற சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் முறையைக் கட்டாயப்படுத்துவதன் மூலம் நமது தமிழ் மாநிலத்தை மின்மிகை மாநிலமாக மாற்றுவது எளிதாகக்கூடும். மக்களுக்கு இலவச மின்சாரத்திற்குப் பதிலாக சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பு உபகரணங்களை மத்திய உதவித் தொகையோடு மாநில உதவித் தொகையும் இணைத்து 70 விழுக்காடு அளிப்பதன் மூலம், நாடு முழுவதும் இவை நிறுவப்பட்டால் ஒரு முறை செலவோடு தொடர் பலன் அளிக்கக்கூடிய செயலாக இருக்கும். அதுமட்டுமின்றி இந்த சூரிய சக்தி உபகரணங்களை அரசு, அரசின் எல்காட் மூலமாகவே தயாரித்தால் அதற்குரிய வருமானமும் பெருகும்.

பெண்களுக்கு இரு சக்கர வாகனங்கள் வாங்குவதற்காக 50 % மானியம் அளிப்பதற்குப் பதிலாக தமிழக அரசின் சொந்தத் தொழில் நிறுவனங்கள் மூலமாக உற்பத்தி செய்து தரமான இரு சக்கர ஊர்திகளை வழங்கும்போது வேலை வாய்ப்பும் பெருகும், வருமானமும் கூடும்.

மாசுக்கட்டுப்பாடு தொடர்பாக மத்திய மற்றும் அனைத்து நாடுகளும் பல்வேறு முயற்சிகள் எடுத்து பல ஆயிரம் கோடி பணங்களை செலவிட்டு வருகின்றன. நமது போக்குவரத்துத் துறையிலும், அரசு பயன்படுத்தும் அனைத்து வாகனங்களிலும் எல்.பி.ஜி., என்.பி.ஜி என்று சொல்லக்கூடிய திரவ பெட்ரோலியப் பொருட்கள், மற்றும் இயற்கை எரிவாய்வுகளையும் கட்டாயமாக்கினால் அரசின் வருமானம் கூடுவதோடு இயற்கைச் சூழலும் காப்பாற்றப்படும். நகரெங்கும் நிறைந்துள்ள ஆட்டோக்கள் அனைத்தும் எல்.பி.ஜியில் இயக்கப்பட்டால் இயற்கை சூழல் பாதுகாக்கப்படுவதோடு பொருளாதாரமும் நிலைப்படும். அந்த வகையில் நவீன முறையில் தமிழக அரசு இத்திட்டங்களை செயல்படுத்தினால் பொருளாதார பற்றாக்குறையும் தீர்ந்து, வாக்குறுதிகளும் காப்பாற்றப்படும் என்பது உறுதி.

தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் மீது ஆய வரி விதிக்கப்படுகிறது. இது உற்பத்தியைக் குறிக்கும் வரி. அதாவது உற்பத்தியின் அளவைப்பொறுத்தே வரி வருமானத்தின் அளவு இருக்கும். தமிழகத்தில் 2011 – 12இல், 10,000 கோடி ரூபாயாக இருந்த ஆய வரி வருமானம், 2015 – 16இல், 7,300 கோடியாக குறைந்துவிட்டது. அதாவது தமிழகத்தில் உற்பத்தித் திறன் குறைந்துவிட்டது என்றுதானே இதன் பொருள்? உற்பத்தி குறையும்பொழுது பொருளாதார வளர்ச்சி, வேலை வாய்ப்பு, தனிநபர் வருமானம் அனைத்துமே குறையும் என்பதுதானே நிதர்சனம்? 2015-16இல் 10 சதவீத பொருளாதார வளர்ச்சிக்கு 7.19 சதவீத சொந்த வரி வருமான வளர்ச்சி என்ற அளவில் குறைந்து உள்ளது. இப்படி வருவாய் கணக்கில் உள்ள பற்றாக்குறை ஏற்கனவே கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. மத்திய அரசிடம் கேட்டுப் பெறப்படும் உதவித்தொகையும், கடன் சுமையும் அதிகரித்துக்கொண்டு வருகிறது. இந்த நிலையில் இதுபோன்ற அறிவிப்புகளால் கடன் சுமை மேலும் கூடத்தானே செய்யும்? இதை எப்படி சரி செய்யப்போகிறார்கள்? அதற்கான எந்தத் திட்டமும் இன்னும் அறிவிக்கப்படவில்லையே? கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி 2016-17 ஆம் நிதி ஆண்டுக்கான இடைக்கால நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசியபோது தமிழக நிதி அமைச்சர், 2017 மார்ச் மாத முடிவில் தமிழக அரசின் மொத்த கடன் நிலுவை ரூ 2,47,031 கோடியாக இருக்கும் என்று அறிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *