-மேகலா இராமமூர்த்தி

மண்ணில் தோன்றிய உயிர்கள் அனைத்தும் ஒருநாள் மடியவேண்டியவையே; அதுவே இயற்கையின் நியதி. வாழ்வின் தன்மையை நன்குணர்ந்த சான்றோர் இதனையே ‘நிலையாமை’ (Impermanence; This concept is known as Anicca in Buddhism, and Anitya in Hinduism) என்ற பெயரால் சாற்றினர். இளமையும் செல்வமும் யாக்கையும் (உடல்) அழிவற்றது என்றெண்ணி இறுமாப்புக் கொள்வது பேதைமையுள்ளெல்லாம் பேதைமை!

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்திவ் வுலகு
என்றார் பொய்யில் புலவர்.

நேற்றிருந்தவனை இன்றில்லை என்று ஆக்குவது உலகுக்குப் பெருமையளிக்கும் ஒன்றாக இருக்கலாம்; ஆனால் அவனையே நம்பியிருக்கும் அவனுடைய குடும்பத்தின் அவலநிலை பெருமைக்குரியதா…? இல்லை…அது வார்த்தைகளில் வடிக்கவியலாக் கொடுமையானது!

தூணென நின்று தன்னைச் சார்ந்தோரைக் காத்தவன், படுக்கையில் படுத்தான்; தன்கேள் அலற இவ்வுலகையே விடுத்தான் என்று கூறும்படியான நிலையற்ற தன்மையுடையதுதானா இவ் வாழ்க்கை? ஆம்…என்கிறது நாலடியார். புல்லின்மேல் நிற்கும் நீர்த்துளியை யொத்ததே மானுட வாழ்க்கை என்பது நாலடியார் நவிலும் உண்மை. 

புல்நுனிமேல் நீர்போல் நிலையாமை என்றெண்ணி
இன்னினியே செய்க அறவினை – இன்னினியே
நின்றான் இருந்தான் கிடந்தான்தன் கேள்அலறச்
சென்றான் எனப்படுத லால்
. (நாலடியார் – 29)

நாளது சின்மையும் இளமையது அருமையும் கருதித்தான் வாழ்வில் செய்யவேண்டிய நல்லறங்களையெல்லாம் உடனடியாகச் செய்துவிடச் சொல்லுகின்றனர் அறவுணர்வுடைய ஆன்றோர். நாளைக்குப் பார்த்துக்கொள்ளலாம் என்று நற்காரியங்கள் ஆற்றுவதை நாம் தள்ளிப்போட்டால் அவற்றைச் செய்வதற்கு நாளை நாமிருப்போம் என்பது என்ன நிச்சயம்? ’இன்னினியே (இப்பொழுதே) செய்க அறவினை’ என்று நாலடியார் நம்மை துரிதப்படுத்துவதுபோலவே, சிலப்பதிகாரக் கதை மாந்தனான மாடல மறையோனும் சேரன் செங்குட்டுவனிடம்,

நாளைச் செய்குவம் அறமெனில் இன்றே
கேள்வி நல்லுயிர் நீங்கினும் நீங்கும்
இதுவென வரைந்து வாழுநா ளுணர்ந்தோர்
முதுநீர் உலகில் முழுவது மில்லை
(சிலப்: நடுகல்: 179-182)

என்று கூறி நல்வினையாற்றலின் அவசரத்தை – அவசியத்தை வலியுறுத்துகின்றான்.

மரணம் என்றவுடனேயே நாம் எண்ணுவது மீளமுடியாத அல்லது மீண்டுவாராத வாழ்வின் இறுதிப்பயணம் ஒன்றைத்தான்! ஆனால் அதுமட்டுந்தானா சாவு? இல்லை! வாழ்வில் ஒவ்வொரு பருவத்தின் இறுதியுமே சாவுதான். குழந்தைப் பருவம் செத்துத்தான் நமக்கு வாலிபப் பருவம் பிறக்கின்றது. வாலிபம் செத்துத்தான் வயோதிகம் வருகின்றது. ஆனால் நாமோ உடலை உயிர்நீங்கிச் செல்லும் நிலை ஒன்றுக்குத்தான் அழுகிறோமேயன்றி தினந்தோறும் நாம் ஒவ்வொருவரும் செத்துக்கொண்டிருப்பதை அறியவுமில்லை; அதற்காக அழவுமில்லை என்று நம் அறியாமையைச் சுட்டிச்செல்கின்றது பௌத்தக் காப்பியமான குண்டலகேசி!

பாளையாம் தன்மை செத்தும் பாலனாம் தன்மை செத்தும் 
காளையாம் தன்மை செத்தும் காமுறும் இளமை செத்தும்
 
மீளும்இவ் இயல்பும் இன்னே மேல்வரும் மூப்பும் ஆகி
 
நாளும் நாள் சாகின்றாமால் நமக்குநாம் அழாதது என்னோ?
(குண்டலகேசி – 9)

சாவு குறித்த இப்பாடலின் சிந்தனை புதிதாய் மட்டுமின்றிப்  பொருத்தமானதாகவுமே எனக்குப் படுகின்றது.

புவியில் பிறந்து, இன்பத்திலும் துன்பத்திலும் உழன்று, சலித்துப்போகும் மன்னுயிர்களுக்கு நிரந்தர விடுதலையளிக்கும் நாயகன் ஒருவன் இருக்கின்றான். அவனே யமபுரிக்குத் தலைவனான காலன். காலம் பார்த்திருந்து உயிர்களின் கதையை முடிப்பதில் வல்லவன் அவன். ’காலனும் காலம் பார்க்கும்’ என்று அவனுடைய பண்பைக் குவலயத்துக்கு உணர்த்தினார் கோவூர்கிழார் எனும் புலவர்பெருந்தகை. வேந்தனின் உயிரும் சாதாரண மாந்தனின் உயிரும் மறலிக்கு ஒன்றுதான்! கொல்லுவதில் சமரசத்தைப் பேணுவதில் அவனை வெல்லுபவர் யார்?

கணக்கற்ற மனித உயிர்களைப் போரிலே கொன்றுகுவித்துக் காலனுக்குப் படையலிட்டுவந்த சோழவேந்தன் கிள்ளிவளவன் ஒருநாள் மாண்டுபோனான். அதனைக் கண்டார் ஆவடுதுறை மாசாத்தனார் எனும் அருந்தமிழ்ப் புலவர். மறலியிடம் மண்டியது சீற்றம் அவருக்கு! நனிபேதையும், (அடிமுட்டாள் என்று மக்கள்வழக்கில் சொல்லலாம்!) அறனற்றவனுமான மறலியே! யாரேனும் பசிக்கிறது என்று விதைநெல்லைச் சமைத்து உண்பார்களா? உன் உறுபசிக்கு உயிர்களைத் தட்டாது தந்துவந்தானே எங்கள் வளவன்! அவனையுமா உன் கோரப்பசி கொன்று புசித்தது? என்னே உன் விரகின்மை! பகைவர்க்குக் கூற்றாய்த் திகழ்ந்த எம் கொற்றவனைக் கொண்டனையே…இனி நின்னுடைய அழிபசி தீர்ப்போர் ஆர்? என்று சீறுகின்றார்.

நனிபே தையே நயனில் கூற்றம்
விரகின் மையின் வித்தட்டு உண்டனை
இன்னுங் காண்குவை நன்வாய் ஆகுதல்
ஒளிறுவாள் மறவரும் களிறும் மாவும்,
குருதியும் குரூஉப்புனற் பொருகளத்து ஒழிய
நாளும் ஆனான் கடந்தட்டு என்றுநின்
வாடுபசி அருத்திய பழிதீர் ஆற்றல்
நின்னோர் அன்ன பொன்னியற் பெரும்பூண்
வளவன் என்னும் வண்டுமூசு கண்ணி
இனையோற் கொண்டனை ஆயின்,
இனியார் மற்றுநின் பசிதீர்ப் போரே?  
(புறம் – 227: ஆவடுதுறை மாசாத்தனார்)

ஈதொப்ப, தம்முடைய அருமைத்தலைவன் பெருஞ்சாத்தன் மறைந்தான் என்றறிந்து அவன் ஊர்நோக்கி விரைந்தார் ஓர் வண்டமிழ்ப்புலவர். வளமிகு அவ்வூரில் வழியெங்கும் முல்லைமலர்கள் கொள்ளையாய் கொள்ளையாய்ப் பூத்துக்கிடந்ததைக் கண்டு உள்ளம் நொந்தார். அம் மணமலரை நோக்கி, ”முல்லையே! இல்லோரைப் புரந்துவந்த நல்லோனான எம் தலைவன் ஒல்லையூர் பெருஞ்சாத்தன் இறந்துவிட்டான். அதனால் ஒல்லையூரே ஆற்றொணாத் துயரில் அமிழ்ந்து கிடக்கின்றது. துயர்க்கடலில் தத்தளித்துக்கொண்டிருக்கும் இவ்வூரின் இளையோரும், வளையோரும் (பெண்கள்) உன்னை இப்போது பறித்துச் சூடப்போவதில்லை; மன்னனை நாடிவரும் பாணனும், பாடினியும் அவர்தமைப் புரப்போர் இன்மையால் உன்னைச்சூடி மகிழப்போவதில்லை. இந்நிலையில் நீ வீணே மலர்ந்திருப்பது யாருக்காக?” என்று மனங்கவன்று பேசுகின்றார் முல்லையிடம்!

இளையோர் சூடார் வளையோர் கொய்யார்
நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்
பாணன் சூடான் பாடினி யணியாள்
ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த
வல்வேற்
சாத்தன் மாய்ந்த பின்றை
முல்லையும் பூத்தியோ வொல்லையூர் நாட்டே.
(புறம் – 242: குடவாயிற்கீரத்தனார்)

அமங்கலமான வேளையிலே மங்கலப் பொருள்களைக் காணும்போது மனிதமனத்தின் வேதனை மீதூருவது இயற்கையே போலும்!

மனிதரின் வாழ்நாள் என்பது அவர் வாழுங்காலத்தை வைத்துக் கணக்கிடப்படுவது. காலம் என்பது நாள்களின் தொகுப்பால் நிர்ணயிக்கப்படுவது. வாழ்வில் புதிதாய் மலரும் ஒவ்வொரு நாளையும் மனிதர் உற்சாகத்தோடு தொடங்கவேண்டும் எனும் எண்ணங்கொண்டவன் பாரதிப் புலவன். அதனால்தான்,

இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நெஞ்சில் 
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்று விளையாடி இன்புற் றிருந்து வாழ்வீர் என்றான்.

வாழ்வியல் அறிஞரான வள்ளுவரின் பார்வையோ வேறுவிதமானது. புதிதாய்ப் பிறக்கின்ற ஒவ்வொரு நாளும் நம் வாழ்நாளில் ஒன்றைக் கழித்துக்கொண்டே – அறுத்துக்கொண்டே வருகின்ற வாள்போன்றது என்பது அவரது எண்ணம்.

நாளென ஒன்றுபோல் காட்டி உயிர்ஈறும்
வாளது உணர்வார்ப் பெறின்.
(334)

ஊக்கத்தோடு ஒவ்வொரு நாளையும் எதிர்கொள்ள பாரதியின் வரிகளும், வாழ்வின் நிலையாமையை உணர்ந்து மனஅடக்கத்தோடு வாழ வள்ளுவமும் நமக்கு வழிகாட்டுகின்றன எனலாம்.

அறிவியல் வளர்ச்சியும், மருத்துவச் சாதனங்களின் பயன்பாடுகளும் மிகுந்துவிட்ட இந்தத் தொழில்நுட்ப யுகத்தில்கூட மரணமிலாப் பெருவாழ்வை மானுடர்க்கு நல்கவல்ல மருந்துகள் ஏதும் இதுவரைக் கண்டுபிடிக்கப்படவில்லை.

ஆதலால், மாந்தர் செய்யவேண்டியதெல்லாம் வரையறைக்குட்பட்ட தம் வாணாளை வீணாளாகக் கழிக்காமல், பயனுள்ளதாய்க் கழிப்பதும், வாழ்ந்து மறைந்தபின்னும் தம் பீடும் பெயரும் நிலைக்கும்வண்ணம் வையத்தில் அருஞ்செயல்கள் ஆற்றிச்செல்வதுமே ஆகும். ’மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் தம்புகழ் நிறீஇத் தாமாய்ந் தனரே’ என்ற வழுதியின் வாக்கும் இதனையே உறுதிசெய்கின்றது.

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *