கிரேசி மோகன்
——————————————————————–

’’கூறிடும் கீதை குரான்பைபிள் எல்லாமே
போரிட ஐம்புலன் போகுமென்று -சாறான்மா
விட்டிந்த சக்கையாம் கட்டையைப் பேணுகிற
மட்டிங்கு ஜீவனுக்கு மண்’’….(25)

’’மண்ணோடு மண்ணாகும் மேனியை மெய்யென்று
உன்னோடு சேர்த்து உழலாதே -பெண்ணோடு
ஆணாகும் பேரின்ப ஆன்மா அசலாம்
நானாகும் தோற்றம் நகல்’’….(26)

’’நகிலைப் புகழ்ந்து முகில்குழலைப் பாடி
துகிலணி மாதர் துணையே -புகலென்று
வீழ்ந்து வணங்காதே தாழ்ந்து துதிக்காதே
ஆழ்ந்திரு ஆன்மாவில் வாழ்ந்து’’….(27)

’’வாழ்க்கையில் வென்றென்ன வாரிக் குவித்தென்ன
சீழ்க்கை அடித்து சிலிர்த்தென்ன -ஊழ்பையன்
எள்ளி நகையாடி ஏய்ப்பது கேட்கிலையோ
பள்ளி எழுந்திருப் பாய்’’….(28)

’’பாயில் படுத்து பணியாய் புணர்ந்திட
நோயாய் வயோதிகம் நேர்ந்ததே -காயை
தனியாய்த் தவத்தில் பிணிமூப்(பு) இராது
கனியாக்கும் வித்தையைக் கல்….(29)

’’கல்வியா செல்வமா கேட்போர்க்கு வீரமாய்
சொல்லுவாய் ஆன்ம சுதந்திரத்தை -அல்லலாய்
பாரமாகி மூப்பில் பிணியுற்ற வேளையில்
வீரமா கோழைக்கு வாய்ப்பு’’!….(30)….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *