எம் . ஜெயராமசர்மா … மெல்பேண் .. அவுஸ்திரேலியா 

கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையெல்லாம் மனிதற்கு அரணாகின – அவனோ
அழித்தான் எரித்தான் ஆனமட்டும் பயன்படுத்தி
முடித்தானே காட்டினை இன்று.

தானாக வளர்ந்தமரம் தன்வாழ்வை மனிதனுக்காய்
தானீந்து நிற்கின்ற தன்மையினை காணுகிறோம்
தானாக வளர்ந்தமரக் காட்டினிலே வளர்ந்துவிட்டு
வீணாகக் காடழித்து விபரீதம் தேடுவதேன் !

மாடுவெட்டி நிற்கின்றான் ஆடுவெட்டி நிற்கின்றான்
அத்தோடு நின்றிடாமால் அநேகமரம் வெட்டுகின்றான்
மரம்வளர்க்கும் எண்ணமின்றி மரம்வெட்டி நின்றுவிடின்
மாநிலத்தின் பசுமையெலாம் வாழ்விழந்தே போயிடுமே !

நாட்டின்வளம் காடதனை நாமழித்து நின்றுவிடின்
நல்லமழை பெய்வதனை நாம்பார்க்க முடியாது
நீரில்லா வாழ்க்கைதனை யாருமெண்ண மாட்டார்கள்
பாரில்மழை மழைவேண்டிமெனில் பாதுகாப்போம் காடதனை !

சுவாசிக்கக் காற்றும் பசிபோக்க உணவும்
சுத்தமான இடமும் அத்தனையும் அவசியமே
சூழல்பற்றிப் பேசுகிறோம் சூழலைநாம் பார்ப்பதில்லை
சூழல்நிலை மாசுபடின் வாழ்வுநிலை என்னாகும் !

நகரமய மாக்கலினால் நம்சூழல் என்னாச்சு
நச்சுத்தன்மை சூழலினை தன்வசமாய் வைத்திருக்கு
பெருந்தெருக்கள் பேருந்து பெருமளவில் வந்தாச்சு
அருந்திநிற்கும் குடிநீரும் அசுத்தமுடன் கலந்தாச்சு !

மேல்நாட்டு வண்டியொடு கீழ்நாட்டு வண்டியுமாய்
பாதையிலே விடும்புகையால் பலநோய்கள் வருகிறது
கவனிப்பார் கவனிக்கா நிலையிவை இருந்துவிடின்
கண்டிப்பாய் கஷ்டகாலம் காலனென வந்துநிற்கும் !

இயற்கைவழி அத்தனையும் இலாபம்தரா எனவெண்ணி
செயற்வழி கையாண்டு சேர்க்கின்றார் பலநோய்கள்
விளைகின்ற பயிரனைத்தும் வேகமாய் வளர்ந்தாலும்
விரும்பியுண்ணும் யாவருக்கும் வில்லங்கம் விளைக்குதல்லோ !

தொழிற்சாலைக் கழிவுகளால் தூய்மையுடை நீர்நிலைகள்
அழுக்கேறி நிற்கையிலே அதைப்பருகும் மக்கள்தமை
கணப்பொழுதும் நினையாமல் காசையெண்ணும் கயமையெனும்
குணம்மாறி நின்றுவிடின் கொண்டிடுமே தூய்மையங்கு !

மரம்வெட்ட நினைக்கின்றார் மரம்வளர்க்க வாருங்கள்
நிலம்காக்க நினைக்கின்றார் செயற்கைமுறை தவிருங்கள்
உரமான வாழ்வினுக்காய் உள்ளமதைத் திருப்புங்கள்
தரமான நற்சூழல் தானமைக்க வந்திடுங்கள் !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *