Featuredஇலக்கியம்கவிதைகள்நுண்கலைகள்படக்கவிதைப் போட்டிகள்வண்ணப் படங்கள்

படக்கவிதைப் போட்டி … (67)

பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

13315611_1025713060816226_4364786465585856721_n

வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

123121007@N08_rஆதித்ய நாகராஜ் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (11.06.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான முனைவர் காயத்ரி பூபதி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

முனைவர். காயத்ரி பூபதி கும்பகோணத்தில் பிறந்தவர். தற்போது ஐதராபத்தில் வசித்து வருகிறார். இவர் “குறள் கூறும் குற்றங்களும் அவற்றின் தண்டனைகளும்” என்ற தலைப்பில் இளம் முனைவர் பட்டமும் “சங்க இலக்கியத்தில் கருப்பொருளாட்சி” என்ற தலைப்பில் முனைவர் பட்டமும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்திலிருந்து பெற்றவர். தனது ஆராய்ச்சிக் காலத்தில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்திலும் பின்னர் தனலட்சுமி கல்லூரியிலும் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். மேலும் பன்னாட்டு மற்றும் உள்நாட்டுக் கருத்தரங்குகளில் தனது ஆய்வுக் கட்டுரைகளை சொற்பொழிவு மூலம் திறம்பட வெளிப்படுத்தி உள்ளார். இவர் இந்தி மொழியில் இளங்கலை பட்டமும் பெற்றவர்.

Share

Comments (3)

 1. உம்மில் வந்த எம் இனம்,

  எட்டு திசையெங்கும் பிரிந்து கிடக்க,

  மனித குலம் மாண்பை மறந்து,
  பணத்தாசைக்கு அடிமை யானோம்!

  அங்கொரு கூட்டம் காணுகிறேன்,
  அது உன் இனம் அல்ல , நம் இனம்!

  அவர்களுக்கோ நாம் கேளிக்கை,
  கவலை வேண்டாம்.

  பசியை மறந்து சிரிக்க வைப்போம்,
  அவன் கவலைகளை மறக்க வைப்போம்!

  வாடா என் சகோதரனே! -நாமக்கல் முருகேசன்.

 2. குரங்காய்…

  குரங்கி லிருந்து பிறந்ததாலே
  குரங்கு புத்தி போகாது,
  குரங்கை வைத்துப் பிழைக்குமிந்த
  குணமது கெட்ட மனிதனிடம்
  குரங்காய்க் குனிந்தே வாழாமல்,
  கிடைத்த அவன்தன் தோளமரும்
  குரங்கது கொண்ட குணத்திற்கும்
  குறைந்து விட்டான் மனிதனுமே…!

  -செண்பக ஜெகதீசன்…

 3. தோள்மீது
  தோழனாக
  குரங்கு

  குரங்கின் உழைப்பே
  குரங்காட்டியின் பிழைப்பு
  குரங்கை விட்டால்
  அவனுக்குபிழைப்பில்லை
  அவனை விட்டால்
  குரங்கிற்கிற்கும் கதியில்லை
  அடிக்குப்பயந்தும்
  ஆகாரத்திற்காகவும்
  அவன்
  ஆணைப்படி ஆடும்
  அந்தரத்திலும் தொங்கும்
  வித்தைகாட்டியின் விரலசைவுக்கு
  இன்றைய பெற்றோர்களுமே
  வித்தை காட்டிகள்தான்
  பிள்ளைகளை
  அதைப்படி இதைப்படி
  டான்ஸ் ஆடு பாட்டுப்பாடுன்னு
  கோலில்லாமல்
  ஆட்டி வைக்கின்றனர்
  குரங்கு எப்படி குரங்காட்டியின்
  சொல்லுக்கு உடன் படுகிறதோ
  அதேபோல் பிள்ளைகளும்
  பெற்றோரின் செயலாக
  வெளிப்படுமேயன்றி
  தானாக எதுவும் செய்வதில்லை
  என்பதே தெளிவு
  சூழ் நிலையும் சந்தர்ப்பங்களும்
  மக்களையும் குரங்காட்டியாகத்தான்
  காட்டுகின்றன இன்றைய
  அரசியலுக்கும் இது பொருந்தும்
  எல்லாமே வயத்து பாட்டுக்குத்தான்
  எல்லாருமே குரங்காட்டித்தான்

Comment here