3fe93a6a-d258-421a-a507-fe2ca51594dc

மாம்பழக் கதுப்பு மருங்கில் கட்டிய
தாம்புக் கயிறால் உரலை இழுத்து
கூம்பிய ஆம்பலாய்க் களைத்தவன் ஐம்புலப்
பாம்பை அடக்கத் தூங்க வருகவே….

மீண்டும் உரலிழுத்து மாமருதம் சாய்த்தரவத்
தாண்டவம் ஆடித் தயிருண்டு -வேண்டிய
ராதையை காதலித்து போதனையாய் கீதையை
யாதவா வந்திங்(கு) எழுது….

மத்தினால் மாதாவால் மொத்துண்ட மைந்தனை
பத்திலோர் பாகவதப் பிள்ளையை -ஒத்தனாய்
மண்ணினைக் காக்க மகாபா ரதம்செய்த
கண்ணனை நெஞ்சே கருது….

ஆயர்தம் சேயனாய் ஆசையோ(டு) ஆய்ந்திட
ஆயிரம் பேருண்டு, ஆயினும் -மாயிருள்
சாயலான் கட்டுண்டு சாதுவாய் நிற்பது
தாயுரை தாமோ தரன்….

கண்ணிநுண் தாம்பினால் கட்டுண்ட காரணம்
அன்னையின் அன்பினாலா அல்லது -கண்ணனே
ஓயாத லீலையின் மாயா வசப்பட்டு
ஆயாசம் ஆனதா லா….
கன்னிப்பெண் ராதைகைத் தாம்பால் கட்டுண்டு
பின்னிப் பிணைந்த கண்ணனவன் -முன்னம்
உரலிழுத்த ந்யாபகம் உந்த உருள
மருள முழித்தனள் மாது….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *