க. பாலசுப்பிரமணியன்

 

ஒரு நாளும்  இரு விழியும்  போதுமோ உனைக்காண,

ஒரு குரலும் ஒரு மொழியும் போதுமோ உனைப்பாட,

ஓருயிரும் ஒருலகும்  போதுமோ உன்னருள்நாட,

உலகாளும் அபிராமியே ! உளமாளும் எழில்ராணியே !

 

நிறைஞானி நிலைமறந்து நிறைநிலவாய் நினைந்திடவே

காரிருளில் ஒளிர்நிலவாய் வலம்வந்த ஓங்காரியே !

பிறைதன்னை தலைசூடி பித்தான பரமேசன்

பிணிதீர்க்க சரிபாதி உடல்கொண்ட சாம்பவியே !

 

குலம்காத்து நலம்காத்து மனம்காத்து உயிர்காத்து

விடையீசன் துணைகாத்து வினைதீர்க்கும் விசாலாட்சியே !

மலையரசன் மகளாகி கலையரசன் துணையாகி

அருளரசின் தாயான மாமேரு மலைவாசியே !

 

விடியாத பிறவிக்கும் விதிமுடிக்கும் கூற்றுக்கும்

இடையான வாழ்விற்கு வழிகாட்டும் இசைஞானியே!

சிலையாக நீயிருந்தும் கலைக்கரும்பாக இனிக்கின்றாய் !

விளையாட என்னைவைத்து விதியென்று சொல்கின்றாய்!

 

வித்தாக வினையாக சொத்தாக சுகமாக

விளையாத கனியாக வாசலில் நிற்கின்றாய்!

அறியாத அறிவுக்கும் புரியாத புதிருக்கும்

நினையாத நினைவுக்கும் அப்பாலே அழைக்கின்றாய்!

 

பூவாகக் கனியாகப்  பொழிலாக எழிலாக

பூங்காற்றின் இதமாக அறிகின்றேன் பூங்குயிலே !

பொலிவாக நடைபயின்று பூபாரம் இறக்கிடவே

புதுநிலவாக ஒளிதந்து புலன்காப்பாய் அபிராமியே!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *