எழுவகைப்பெண்கள்: 3. ஐயகோ! ஆணுடன் ஒப்பிடும்போது பெண்ணின் நடைவேகம் குறைவே

1

அவ்வை மகள்

3. ஐயகோ! ஆணுடன் ஒப்பிடும்போது பெண்ணின் நடைவேகம் குறைவே

ஆண் -பெண் வேறுபாட்டில் இடுப்பெலும்பைபற்றிக் குறிப்பிட்டாக வேண்டும் என்றேன். உயரத்தில் குறைந்தும், அகலத்தில் மிகுத்து சற்றேறக்குறைய வட்ட வடிவத்தில் இருப்பது பெண்ணின் இடுப்பெலும்பு (காண்க படம் – 1). மேலும், பெண்ணின் இடுப்பெலும்பானது சற்று முன்னோக்கித். தள்ளப்பட்டிருக்கும். சற்றே பின்புறம் சாய்ந்தார்ப் போன்ற நடுமுதுகும் , சிறிதேனுமாவது வயிறு கொஞ்சம் முந்தித் தள்ளப்பட்டிருக்கும் தன்மையும் பெண்ணுக்கு இயல்பாய் அமையும் காரணம் பெண்ணின் இடுப்பெலும்பின் தன்மைதான்.

இடுப்பெலும்பின் மைய எலும்பு, திருவெலும்பு (sacrum) எனப்படும். திருவெலும்பு இடுப்பெலும்பின் மிகமுக்கியமான பகுதியாகும். இடுப்பெலும்பின் பின் மேற்பகுதியில், முதுகெலும்பின் தொடர்ச்சியாக அமைவதே திருவெலும்பு. ஆணின் திருவெலும்புடன் ஒப்பிடும்போது, பெண்ணின் திருவெலும்பு அகலமாகவும் அரைகுறையாய் முடிந்தாற்போன்றும் இருக்கும்.

இடுப்பெலும்பின் இருபுறமும் கீழ்ப்பக்கவாட்டில் இருக்கும் கிண்ணக் குழிகள் (acetabula) தொடை இடுப்புடன் சேரும் இணைப்புக்கானவை. இக்குழிகளுக்கு இடையே உள்ள தூரம், ஆணுக்குக் குறைவாகவும், பெண்ணுக்கு அதிகமாகவும் உள்ளது. பொதுவாக, பெண்களின் மறையுறுப்புச் சந்தி ஆணின் மறையுறுப்புச் சந்தியைக் காட்டிலும் அகலமாக இருப்பதன் காரணம் இதுதான் (விவரங்களை, படம்-2 ல் காண்க).

pasted image 0

படம் 1 – பெண் மற்றும் ஆணின் இடுப்பெலும்பு; விற்பனையல்லா பொது அறிவுப்பயன்பாட்டுக்காக அனுமதியுடன் வெளியிடப்படுகிறது; படத்தின் மூலம்: https://cnx.org/contents/U6HolX6c@3/The-Pelvic-Girdle-and-Pelvis

இடுப்பின் அமைப்பு

920e2cbe-fb3b-49a6-acb3-0dd3505708b9

படம் 2- பெண்ணுக்கும் ஆணுக்கும் இடுப்பின் அமைப்பில் உள்ள வேறுபாடுகள்

ஆண் -பெண் வித்தியாசம் இடையோடு நின்று விடுவதில்லை. தொடை- இடையுடன் சேரும் வாகில் கூட ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபாடு உள்ளது என்பதை நாம் உற்று நோக்கலாகிறோம். பெண்ணின் உடலில், இடுப்பெலும்புடன் வந்து சேரும் தொடை எலும்பு (femur) நெட்டுக்குத்திலிருந்து கிடை மடையாய் அகன்று விரிநதவாறு இடையை வந்தடைகின்றது. இதனால், பெண்ணின் இடை -தொடை- சந்திக்கோணம் ஆணுக்கு இருப்பதைக்காட்டிலும் மிகவும் அகன்ற கோணமாக இருக்கிறது (படம் – 2). தொடையின் பிட்ட வெளிவிளிம்புகள் பெண்ணுக்கு விரிந்தவாகில் இருப்பதும் இந்தகாரணத்தால் தான். சொல்லப்போனால் பெண்ணின் தொடை-இடைச்சந்தி, கீல் வைத்த பெட்டகக் கதவுகள் போல் இலகுவாக அகலவாட்டில் விரியும் தன்மையதாய் இருக்கின்றது. முதுகால் மல்லாந்து படுக்கும்போதும், நின்ற நிலையிலிருந்து குனியும்போதும் இந்தக் கீல் அமைப்பின் சௌகரியத்தை அனுபவிக்க முடியும். இவ்வமைப்பு உடலுறவிலும், வளரும் கருவைத் தாங்குவதிலும், குழந்தையைப் பிரசவிப்பதிலும் பெண்ணுக்கு ஒத்தாசை செய்வதற்காக இயற்கை செய்துள்ள ஏற்பாடாகும் .

ஆனால் இத்தனை சௌகரியமாய் அமைந்ததான அகன்ற இடையும் விரிந்த தொடையும், பெண்ணுக்கு, காலெடுத்து நடக்கும், ஓடும் திறனைக் குறைக்கின்றன. ஐயகோ! ஆணுடன் ஒப்பிடும்போது பெண்ணின் நடைவேகம் குறைவே.

சொல்லப்போனால், இயற்கை அமைப்பிலேயே பெண்ணுக்கு நடை என்பது விருப்பமான, எளிதான செயலாக அமைக்கப்படவில்லை. ஏனெனில், நடையை இலகுவாக்கும் தொடையும் இடையும் அவளுக்கு இல்லை. ஆனால் ஆணுக்கு அந்த பாக்கியம் உண்டு. கருத்தரித்து, கருவைத்தாங்கி வளர்த்து, சிசுவைப் பிரசவிக்கும் சிறப்புப் பணிக்காக, உரியமுறையில் வடிவமைக்கப் பட்டிருக்கிற பெண்ணின் சௌகரிய இடுப்பு, அவளது நடைக்கும் ஓட்டத்திற்கும் ஒத்தாசை செய்ய மறுத்து கொஞ்சம் மக்கர் பண்ணுகின்றது. இது இயற்கைப் பிறழ்வு அல்ல, ஒரு அனுசரிப்பு விதி (Law of Compensation). ஒன்று மிகும்போது ஒன்று குறைவுபடுவது இயல்பல்லவா? அது போன்றதே இதுவும். பல பெண் விலங்குகளில் இவ்வாறான அனுசரிப்பு விதியைக் காணமுடியும். மனிதப்பெண் இவ்விதிக்கு விலக்கல்லவே . ஆனால், மனித இனத்திலே தான், ஆணின் நடை அல்லது ஓட்ட வேகத்திற்கும் பெண்ணின் நடை அல்லது ஓட்ட வேகத்திற்கும் மிக அதிக வித்தியாசம் இருக்கிறது. இருகால் உயிரியாக, தரையில் நடக்கவேண்டிய விலங்காக இருப்பதாலும் பன்னெடுங்காலமாக பால்-சார் (gender-specific) பணிகளுக்க்கெனவே மனித உடல் உருவாக்கப் பட்டிருப்பதாலும் நடை மற்றும் ஓட்டத்தில் மற்ற விலங்குகளைக் காட்டிலும் அதிக ஆண் -பெண் வித்தியாசத்தைப் பார்க்கலாகிறது. ஆக, பெண் நடக்கச் சிரமப்படுவதன் உண்மைக் காரணம் பெண்ணால் இயற்கையாகவே வேகமாக நடக்க முடியாது என்பது தான் என்பது புரிகின்றது அல்லவா?.

ஆனானப்பட்ட விளையாட்டுப் போட்டிகளிலே கூட ஆண் -பெண் பாகுபாடு வைத்தே போட்டிகள் நடைபெறும்போது நம் வீட்டுப் பெண்கள் ஓட மறுப்பதும் – நடக்க மறுப்பதும் ஒன்றும் புதிதல்ல. உங்கள் வீட்டுப் பெண்மணி நடக்கப் பால்மாறினால் அதற்காய் நீங்கள் இனியும் கொதிக்க மாட்டீர்கள் அல்லவா?

இது நிற்க.

எந்த ஒரு உறுப்பும் இரு இயந்திரம் போன்றது. எனவே பெண்ணின் நடை சிரமத்தைப் பொறியியல் ரீதியாக விளக்குவது சிறப்பு. பெண்ணின் வட்ட இடை வடிவுமும் அகன்ற கோணத்துடன் உள்ள தொடையும், அவளது கால்கள் இலகுவாக இயங்குவதில் இடையூறு செய்கின்றன என்றோம். இவ்வாறு நிகழ்வது ஏனெனில், இடை-தொடையால் அவளது கால் முட்டிக்கு மேலே ஒவ்வா விசை யையும் பாரமும் உண்டாகின்றன. இதனால் முட்டியின் இயக்கத்தை எதிர்க்கும்படியான ஒரு சுழ்ற்சிவிசை பெண்ணின் முட்டிக்கு மேலே உருவாகி நிலைக்கின்றது. ஒவ்வொருமுறை காலை எடுத்துவைக்கும்போதும் – பெண்ணின் விரிந்த தொடையானது அவளது முட்டியை உள்புற மாகத்த்திருப்புகிறது. இயந்திர இயங்கு சக்தியில் இது ஒரு விரயமே, தடையே!

இருகால் நடைப் பிராணியான மனிதரது உடலில், தசைநார் மற்றும் எலும்பிழைகள் முட்டியில் சங்கமித்திருப்பதைப்போல வேறு எந்த உறுப்பிலும் சங்கமிக்கவில்லை. பெண்ணுக்கு பலவீனமான தசைநார் மற்றும் பலவீனமான எலும்பிழைகள் உள்ளன என ஏற்கனவே கண்டோம். இந்த பலவீனம், இடை-தொடை சுழல் விசையோடு கைகோர்த்துக் கொள்கின்றது – பெண்ணின் கால் முட்டியின் இயக்கத்தை அது வலுவாய் எதிர்க்கிறது. ஒட்டுமொத்தத்தில், ஆற்றலின் பீடமான பெண்ணுக்குப் பீடமே பலவீனம் எனவானது. என்னதான் முட்டினாலும் பெண் முட்டி ஆணின் முட்டியைவிட மட்டம்தான் என்பது இயற்கை விதித்த விதி! பெண்களுக்கு இயற்கையிலேயே உள்ள இந்த முட்டியின் மட்டத்தை நம் முன்னோர்கள் அறியாதவர்கள் இல்லை. எனவே பெண்களுக்கென அன்று அவர்கள் ஏற்பாடு செய்திருந்த விளையாட்டுக்கள் எல்லாம் பெண்களுக்கு ஏற்ற விளயாட்டுக்களாக மட்டுமே இருந்தன.

பெண்ணின் இடை -தொடை-முட்டி அமைப்பின் இடைஞ்சலைக் கருத்தில் கொண்டு இந்த உறுப்புக்களில் அல்லது இந்த உறுப்புக்களின் பலவீனத்தால் உடலில் வேறெந்த இடத்திலும் எவ்விதக் காயமும் பெண்களுக்கு ஏற்படாதவாறு அன்றைய விளையாட்டுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. ஆண்கள் விளையாடும் எல்லா விளையாட்டுக்களையும் பெண்களால் விளையாடமுடியாது என்கிற தெளிவான விவேகம் அன்றைய மக்கட்பிரதிநிதிகளுக்கு இருந்தது. ஆனால், 1970-71ல் விளையாட்டில் ஆணுக்கு நிகராய்ப் பெண்களை இறக்குவது – உத்வேகிப்பது என்ற புரட்சி உலகெங்கும் பிறந்தது. இதனால் எண்ணிறந்த பெண் விளையாட்டு வீராங்கணைகள் களத்தில் இறங்கினார்கள் – இறக்கப் பட்டார்கள். ஆனால், இவர்களில் விளையாட்டில் தொடர்ந்து தங்கியவர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு அல்லது இல்லை என்றே ஆனது. விட்டில் பூச்சியைப்போல பெண்கள் விளையாட்டில் வந்து போயினர். காரணம்? அவர்களுக்கு ஏற்பட்ட (ஏற்பட்டு வரும்) வரும் மிகவும் மோசமான முட்டி மற்றும் கால் தொடர்பான காயங்கள்! இதிலே மிக-மிக மோசமாக பாதிக்கப்பட்டவர்கள் மட்டைப்பந்து, கூடைப்பந்து, காற்பந்து, நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் ஆகியவற்றில் ஈடுபட்ட மாதர் திலகங்கள். விளையாட்டுப்போட்டிகளில் பெண்ணின் இடை-தொடை-முட்டி கட்டமைப்பு மட்டுமல்ல – மாதவிடாய்த் தொடர்பாய் எழும் உடலின் இரசாயன மாற்றங்களும் அவளுக்கு எதிராய் செயல்பட்டு அவளை விளையாட்டுகளில் மிக மோசமாக வீழ்த்துவதையும் விளையாட்டு மருத்துவ உலகம் தொடர்ந்து பதிவு செய்துவருகிறது

(ஒரு எளிய கட்டுரையை இங்கே காணலாம்:

http://www.pharmacytimes.com/publications/issue/2014/june2014/sports-injuries-are-women-more-at-risk).

இவ்வகையில் அன்றைய தமிழ்ச்சமுதாயம் பெண்களின் இடை-தொடை-முட்டி அவதியைப் புரிந்துகொண்து அவர்களை அரவணைத்து அவர்கள் நலனுக்கான ஏற்பாடுகளைச் செய்த பாங்கு நம்மை வியக்கவைக்கிறது.

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “எழுவகைப்பெண்கள்: 3. ஐயகோ! ஆணுடன் ஒப்பிடும்போது பெண்ணின் நடைவேகம் குறைவே

  1. அருமையான விவரங்கள அடங்கிய அலசல்

    ஆணின் நடைக்கும் பெண்ணின் நடைக்குமுள்ள வித்யாசம்

    இடுப்பெலும்பின் வித்யாசங்கள் மேலும் குறிப்பாக ஆணுக்கும் பெண்ணுக்கும்

    இடுப்பெலும்பின் மைய எலும்பு, திருவெலும்பு (sacrum) எனப்படும். திருவெலும்பு இடுப்பெலும்பின் மிகமுக்கியமான பகுதியாகும்.

    என்னும் விளக்கம் விஞ்ஞான மற்றும் மெய்ஞ்ஞான விளக்கமாக அமைகிறது ( திருவெலும்பு (sacrum) )

    அன்புடன்
    தமிழ்த்தேனீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *