நறுக்..துணுக்...

’நான்’

சேசாத்ரி பாஸ்கர்

என்னுள் இருக்கும் “நான்” போக வேண்டும்.சரி.அதை சொல்வது யார்.இந்த நான் தான். சரி நான் போய் விட்டது எனில் மிச்சமிருப்பது என்ன ? அதுவும் நான் தான்.போக சொல்வதும் அது தான்.போவதும் அது தான் எனில் விஞ்சியிருப்பது என்ன ? நானற்ற பெருநிலை எனில் அது போனதை மனதுக்கு உணர்த்தியது யார்? நான் வெளியே செல்லும் சுவாசம் அன்று.அது உணர்தல்.-உணர்தலில் வண்ணம் இல்லை. கசடு இல்லை. நினவு தகட்டின் கீறல் இல்லை.அப்படியே அது இருப்பினும் பெரு உணர்தலில் அது கரைசலுக்கு உட்பட்டது.நான் அகற்றும் புத்தி பின்னால் ஓடும் குதிரை-.இது உயிரில் கலந்தது.ஞானிகள் வாழ்க்கை பாதை தான் சொல்ல முடியும்.அவர் வாழ்க்கை அவர் அனுபவம்.ரமணரை போல உடை துறந்து குகை புகுந்து கௌபீனம் தரித்தால் கூட நமக்கு பக்கத்துக்கு வீட்டுக்காரன் பற்றிய சிந்தனை தான் உள்ளே புகும்.இது ஆழ் மனதை கிண்டி கடையும் செயல்.கும்பல் சமாசாரம் இல்லை. சறுக்கு மரத்தில் நாம் தான் சறுக்கி செல்கிறோம்.சறுக்கு மரம் அப்படியே.இது அவஸ்தை .பெருந்துயரம்.இதில் கலக்க வேண்டும்.கலங்க கூடாது. வானம் முட்டும் அளவு இலைகள் துளிர்த்தாலும் நீர் என்னவோ வேருக்கு தான்.வாழ்க்கை பிரம்மாண்டம்.-பிரம்மாண்டத்தில் கனவும் இல்லை. ஏழ்மை இல்லை.செல்வாக்கு இல்லை. செழிப்பு இல்லை.வாழ்வு ஜெயிக்க அல்ல. தோழமை கொள்ள.அது கூடவே சென்று திரும்பினால் பக்கத்தில் எதுவும் இல்லை—-.இங்கு தோற்று போவது கம்பீரம்.

Comment here