இன்பமுடன் வாழ்த்துகிறோம் (கவியரசர் பிறந்தநாளுக்கான கவிதை)

0

எம். ஜெயராமசர்மா.. மெல்பேண் .. அவுஸ்த்திரேலியா 

 

kannadashan

திரையுலகில் புகுந்தாலும் திறலுடைய சொற்கொண்டு 

       பலருடைய மனமுறையப் பாடியவர் நின்றாரே

       நிலைநிற்கும் பலகருத்தை சுமந்துவந்த அவர்பாட்டு

       நெஞ்சமதில் எப்போதும் நிலைத்துமே நிற்கிறது !

      காதலவர் கைபட்டால் காமனுமே கலங்கிடுவான்

      தேவர்கூட அவர்பாட்டை திறமென்றே பகர்ந்திடுவார்

      சாதிமதம் காதலுக்கு தடையாதல் தகாதென்று

      சேதிசொன்ன பாடலைநாம் தினமுமே ரசித்துநிற்போம் !

      பட்டினத்தார் தத்துவத்தைப் பலபேரும் அறிவதற்குப்

      பலபாட்டில் தந்துநின்ற பாவேந்தன் கண்ணதாசன்

      இஷ்டமுடன் தமிழ்தந்தான் எமையென்றும் மகிழ்வித்தான்

      கஷ்டம்பல பெற்றிடினும் காலமெலாம் வாழுகிறான் !

      கருவிலே கற்பனையை காவிவந்த கண்ணதாசன்

      உருவிலே கம்பனாய் காளிதாசன் போலானான்

      துருவியே தமிழ்கற்றான் துணிவுடனே கவிதந்தான்

      அருமைமிகு கண்ணதாசன் அகமெங்கும் வாழுகிறான்!

      வேதக்கருத்தை எல்லாம் மிகச்சிறப்பாய் தமிழாக்கி

      காதினுக்குள் செலுத்துதற்கு காரணமாய் இருந்தானே 

      கீதைதனைப் படிப்பதற்கும் பாதைதனை அமைப்பதற்கும்

      போதனையாய் பாவெழுதி போதித்தான் கண்ணதாசன் !

      இந்துமதம் இதயத்தில் யேசுமதம் கவனத்தில் 

      எல்லோர்க்கும் ஏற்கும்படி இயற்றினான் நூலிரண்டை 

      எவர்மனமும் நோகாமல் இறைகருத்தைப் பகர்ந்ததனால்

      எல்லோரும் போற்றுகின்றார் என்றும் கண்ணதாசனையே !

      காலத்தால் அழியாத கவிதந்த கண்ணதாச

      உன்பிறந்த நாளதனை உயர்வுடனே பார்க்கின்றோம்

      அன்புநிறை உள்ளமுடன் அகம்நிறைந்த தமிழ்கொண்டாய்

      இன்பமுடன் வாழ்த்துகிறோம் என்றும்நீ எம்கவியே !

கவியரசர் கண்ணதாசன் பற்றிய விவரங்கள்:

கண்ணதாசன் (நன்றி: விக்கிபீடியா)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *