க. பாலசுப்பிரமணியன் 

 

பொதிகையிருந்து பூத்துவரும் புதுப்புனலே

பொழிந்துவிடும் பொலிவுடனே குற்றாலத்தில் ..

பொங்குதமிழில்  புன்சிரிக்கும் கவிதையென

புதுமணமே முகர்ந்துவிடும் மலைச்சாரல் !

 

எதுகையின்றி மோனையின்றி தாளமின்றி

இசைபாடும் இலையசைத்து மரங்கள் !

கலையரசி யாழிசையைக் கவர்ந்துவந்து

காதருகே கவிபாடும் கருவண்டுகளே !

 

மங்குஸ்தான் பழம்பறித்து மகிழ்ந்திருக்கும்

மந்தியெல்லாம்  மலையோர மரங்களிலே !

மலைச்சாரல் நீர்நனைந்து மலர்களெல்லாம்

மண்வீழ்ந்து மாலைதன்னை கோர்க்கும் !

 

வானமுதம் வழிந்ததுபோல் வளைந்துவரும்

வாசமுடை மூலிகையுடன் தேனருவி !

வான்தெறிக்கும் நீர்திவலையில்  வானவில்லாட

வள்ளலென பெருகிவரும் ஐந்தருவி !

 

கைநனைத்துக் கால்நனைத்துத் தலைநனைத்து

உடல்நனைக்க உளம்நனைத்திட ஓடும் !

கடுகெண்ணை நல்லெண்ணெய் தலையூரக்

களைப்பெல்லாம் நீரினிலே கரைந்தோடும் !

 

தூதுவளை  வல்லாரை  நெல்லிப்பொடியோடு

தூக்கம்வர நல்லதொரு ஜாதிக்காயும்

தூயமனம்காண  மோனமுடன் யோகத்தையும்

முதுகலையாய் ஓதிவிடும் யோகியர்கள் !

 

மேகங்களைத் தலைசுமந்த மோகத்திலே

புவியரசி காதலிலே மலையரசன்  !

வேழங்கள் அசைந்தாடி நடப்பதுபோல்

வேகமின்றி அரவணைக்கும் தென்றல் !

 

கண்திறந்து பார்த்தோருக்கு காட்சியங்கே

கயிலைநாதன் கயல்விழியின் திருக்கோலம் !

கண்மூடி மலையருவி முன்னிருந்தால்

காலம்மறந்து ஞாலம்மறக்கும் நல்யோகம் !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *